Chapter 16
“ராதா.. பால்போன்ற வெள்ளை மனம் அம்மா உனக்கு.. யாருக்கும் கனவிலும் தீங்கு நினைக்காத பிறவியம்மா நீ.. நீ நடந்து செல்லும் பாதையிலே பூ மலரும்.. உன் கையில் ஒரு பிடி நெல் அள்ளிக் கொடுத்தால் அது நூறு மூட்டை நெல்லுக்கு குறையாமல் விளைந்து விளைச்சல் தரும்.. உன் மனம் மலரினும் மென்மையானது தாயி.. அதைப் புரிந்து கொள்ளவும் ஓர் தகுதி இருக்க வேண்டும்..”
பேத்தியின் தலைகோதி தொண்டைமான் தாத்தா அடிக்கடி சொல்லும் வார்த்தைகள் இவை..
அந்தத் தகுதி ஆகாஷிற்கு இல்லாமல் போய் விட்டதா..? இவள் மனதிலிருப்பதை அறிய முடியாதவனாய் அவனிருக்கிறானா..? தன் மனதை உணராத காதலனைப் பெற்ற பெண்ணுக்கு அதை விடத் துன்பம் வேறு எதுவாக இருக்க முடியும்..?
“ஏண்டி முகம் திருப்பிக் கொள்கிறாய்..? என்னைப் பார்க்கப் பிடிக்கவில்லையா..?”
“ஆமாம்.. பிடிக்கவில்லை.. பிடிக்கவில்லை.. பிடிக்கவில்லை..” வெறிபிடித்தவள் போல் கத்தினாள் அனுராதா.. கட்டுப்படுத்திய உணர்வுகள் கட்டவிழ்த்துக் கொண்டு வெளியே வந்தன..
“என் கண் முன்னாலேயே இன்னொருத்தியுடன் குழாவும் உங்களைக் கண்டால் எனக்குப் பிடிக்கவில்லை.. ராகினியை நான் மறந்து விட்டேனென்று நினைத்தீர்களா..? அவளிடமெல்லாம் நின்று ஓர் வார்த்தை நான் பேச மாட்டேன்.. அவள் உங்களைத் தேடிவந்து என்னையும், என் தாத்தாவையும் படுத்தியபாடு.. அப்பப்பா.. இதெல்லாம் யாரால் வந்தது.. உங்களால் வந்தது.. உங்களைக் காணவே.. இன்னும் சொல்லப் போனால் வசதியான மாப்பிள்ளையை வலை வீசிப் பிடிக்கவே அவள் எங்கள் வீட்டிற்கு வந்தாள்.. நீங்களும் அவளுடன் சரசமாடினீர்கள்..”
“அடித்துப் பல்லைக் கழட்டி விடுவேன்.. ராஸ்கல்.. நான் அவளுடன் சரசமாடினேனா..? அவள் என்னைத் தேடி வந்ததற்கு என் மேல் குற்றப் பத்திரிக்கை வாசிக்கிறாயா..?”
“அடேங்கப்பா.. இவர் பெரிய நியாயவாதி.. உங்கள் மனதில் கள்ளம் இல்லாமலா அவள் இழுத்த இழுப்பிற்கு எல்லாம் போனீர்கள்..? இல்லை தெரியாமல்தான் கேட்கிறேன்.. என்னைப் பார்த்த அன்றே உங்கள் நிம்மதி போய் விட்டது என்றீர்களே.. எனக்கு மட்டும் உங்களைப் பார்த்த பின்னால் வாழ்க்கை வண்ண மயமானதாக இருந்ததா..? அதுவும் கருப்பு வெள்ளைத் திரைப்படம் போல் கந்தல்கோலமாகத்தான் ஆகிவிட்டது.. கொஞ்சமாவது மனச்சாட்சியென்று உங்களுக்கு இருந்தால் அதனிடம் கேட்டுப்பாருங்கள்.. என் முன்னேயே.. ராகினியுடன் ஒற்றுமை பாராட்டி என்னை அவமானப்படுத்தி பேசினீர்களே.. அப்போது எனக்கு எப்படி இருந்திருக்கும்..? அன்றிலிருந்து இன்று வரை நீங்கள் மாறவே இல்லை..”
ஆகாஷின் தன்மானம் கொதித்தது.. இவன் மாறவேயில்லையென்றால் என்ன அர்த்தம்..? இவன் என்ன பெண் பித்துப் பிடித்தவனா..? ஒருத்தியையே நினைத்து.. அவள் வெறுப்பிற்கும் ஆளாகி.. அவள் வெறுத்தாலும் பரவாயில்லை.. அவளை மனைவியாகக் கிடைக்கும் வாய்ப்பை தவற விடக்கூடாது என்று அவள் கழுத்தில் தாலியைக் கட்டி கூட்டி வந்திருக்கிறானே.. இவனைப் பார்த்தா.. ‘நீ மாறவே இல்லை’ என்கிறாள்..
“அன்றிலிருந்து இன்று வரையென்றால் என்ன அர்த்தம்..? அன்று ராகினியிடம் சரசமாடினேன் என்றாய்.. இன்று..?”
“ஏன் அதை என் வாயால் சொல்ல வேண்டுமா..?”
“ஆமாம் என்றுதான் வைத்துக் கொள்ளேன்.. நீ பேசும் தேனினும் இனிய மொழிகளைக் கேட்க உன்னைத்தேடி சாயந்திரம் எப்போது வருமென்று காத்திருந்து ஓடி வந்தேனில்லையா..? என்னை நீ ஏமாற்றினால் எப்படி..? பேசுடி.. பேசு..”
“ஏன்.. இப்போது உங்களிடம் சல்லாபம் பேச ஆள் இல்லையா..? போய் விட்டுவிட்டு வந்து விட்டீர்களா..?”
ஆகாஷ் ரௌத்ராமானான்.. துடிக்கும் கரங்களை அடக்க முயன்று பான்ட் பாக்கெட்டில் நுழைத்துக் கொண்டவன்..
“யோசித்துப் பேசு.. அடுத்த வீட்டுப் பெண்களை அவதூறு பேச உனக்கு எந்த உரிமையும் இல்லை..” என்று கூறினான்..
“ஆனால் அடுத்தவள் கணவனின் அருகே உட்கார்ந்து கொண்டு கட்டின மனைவியை பின்சீட்டுக்கு அனுப்ப மட்டும் அவளுக்கு உரிமை இருக்கிறதா..?”
“ஏய்.. காரை அங்கே கிளப்பும்போது இயல்பாய் என் பக்கத்தில் அமர்ந்து விட்டாள் அவள்..” ஆகாஷின் வேகம் கொஞ்சம் தணிந்தது..
இதை ஏன் அவன் யோசிக்கவில்லை.. ஆவலுடன் வந்த அனுராதா காரின் முன்பக்கத்தை எட்டிப் பார்த்தது நினைவில் ஆடியது..
‘தவறு செய்து விட்டேனா..?’
ஆகாஷ் மனதிற்குள் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கும் போது மனம் பொறுக்காமல் அனுராதா பொறுமிக்கொண்டிருந்தாள்..
“இயல்பாம்..? எது இயல்பு..? அவள் இயல்புதான் அப்படியே தெள்ளத் தெளிவாய் தெரிகிறதே.. பெண்களிடம் பேசச் சகிக்காத இயல்பு.. ஆண்களைக் கண்டால் மட்டும் ஈஷிக்கொள்ளும் இயல்பு..”
இன்னும் விட்டால் பேசித் தீர்த்திருப்பாள்.. அதற்குள் ஆகாஷ் ‘பளார்’ என்று அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டான்.. அப்படியே திக் பிரமை பிடித்துப் போனவளாய் நின்றுவிட்டாள் அனுராதா..
பிறந்ததில் இருந்து எல்லோரும் கொஞ்சி வளர்த்த பெண்.. தாத்தாவின் செல்லப் பேத்தி.. இன்று இவனிடம் அறை வாங்கிக் கொண்டு நிற்கிறாள்.. அன்று யாரோ ஒருத்தியுடன் சேர்ந்து கொண்டு கேலி பேசிச் சிரித்தான்.. இன்று வேறு ஒருத்திக்காக அவளை கைநீட்டி அடித்து விட்டான்.. இந்த உரிமைக்காகவா தாலி கட்டினான்..?
அவள் அசையாமல் அடித்து வைத்த சிலை போல் நின்றிருக்க ஆகாஷ் குமுறிக் கொண்டிருந்தான்..
“பொறுத்துப் பொறுத்துப் பார்த்து விட்டேன்.. நீ திருந்துவதாக இல்லை.. இப்படி வார்த்தைகளை பேசக்கூட உன்னால் முடியுமா..? என்னையே எடுத்தெறிந்து பேசியவள்தானே நீ… எதையும் பேசக்கூடியவள்.. இதைப் பேச மாட்டாயா..? போய்விடு.. உன் லேடிஸ் ஹாஸ்டலுக்குப் போய்விடு.. இந்த வீட்டில் ஒரு கணம் கூட நீ தங்கக் கூடாது.. இங்கு உனக்கு இடமில்லை.. நான் திரும்ப வரும்போது நீ இங்கே இருக்கக் கூடாது.. ஒழிந்து போ..”
கத்தித் தீர்த்து விட்டு கோபத்துடன் காரைக் கிளப்பிக் கொண்டு போய்விட்டான் ஆகாஷ்.. எங்கெங்கோ சுற்றி அலைந்து விட்டு வீடு திரும்ப காரைத் திருப்பினான்.. மனம் கனக்க சாலை ஓரமாய் காரை நிறுத்தி விட்டு ஸ்டிரியங்கில் முகம் புதைத்துக் கொண்டான்.. மனதின் ஓரமாய் அனுராதா வெட்கப் புன்னகை பூத்தாள்..
‘இந்தப் பாட்டை இந்நேரமா கேட்பது..?’
‘வேறு எப்போது கேட்பது..’
‘இரவு நேரம்..’ என்று கூறி கைகளால் முகத்தை மூடிக்கொண்டாள்..
ஆகாஷ் தலை தூக்கி தன்னைச் சுற்றிலும் பார்த்தான்.. மையிருட்டு கவிழ்ந்திருந்தது..
இப்போது இரவாகி விட்டது.. ஆனால் அவள்..? வீட்டில் இருப்பாளா..? அவன்தான் அரக்கத்தனமாய் அடித்ததும் இல்லாமல் வெளியே போ என்று சொல்லியும் விட்டானே.. மாலையில் எவ்வளவு ஆவலாய் காரருகே ஓடிவந்தாள்..
‘நான் பாவி..’ ஆகாஷ் தலையில் அடித்துக் கொண்டான்..
‘அன்றும் அவளது பொறாமையை தூண்டி விடுகிறேன் பேர்வழியென்று அவள் கண்முன்னே ராகினியுடன் சிரித்துப் பேசினேன்… இன்றும் விருந்தோம்பல் பண்ணுகிறேன் பேர்வழியென்று அனுராதாவை விட்டுவிட்டு சொப்னாவுடன் அளவளாவினேன்.. நான் செய்த இச்செயல்களை அவளால் எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்..?’
ஆகாஷ் வீட்டை நோக்கி வேதனையுடன் காரைச் செலுத்தினான்.. வீட்டிற்குள் காரை நிறுத்தி காம்பவுண்ட் கேட்டை பூட்டிவிட்டு வாசல்படி ஏறினபோது வீடு இருளாக இருப்பது மனதில் உறைத்தது..
‘உண்மையிலேயே போய்விட்டாளா..?’ மனம் பரி தவித்தது..
‘அனு.. என்னைவிட்டுப் போய்விடாதே..’ வீட்டுக் கதவின் மேல் கை வைத்தான்.. திறந்து கொண்டது.. உள்ளே போய் விளக்குகளைப் போட்டுவிட்டு ஒவ்வொரு அறையாகத் தேடினான்.. அவள் இல்லை.. ‘ஒரு வார்த்தை கோபத்தில் சொன்னால் அதை உடும்புப் பிடியாய் பிடித்துக் கொண்டு இதுதான் சாக்கென்று போய் விட்டாளா..’
பீரோவைத் திறந்து பார்த்தான்.. அவளது உடைகள் அப்படியே இருந்தன.. சுவர் அலமாரியைத் திறந்து பார்த்தான்.. அவளது சேலைகள் பிளவுஸ்களுடன் ஹேங்கரில் தொங்கிக் கொண்டிருந்தன.. அவளது ஹேண்ட் பேக் அங்கேயே கிடந்தது..
‘போகவில்லை.. இங்குதான் இருக்கிறாள்..’
எல்லா இடங்களிலும் தேடிப்பார்த்து விட்டான்.. அவளில்லை.. மனதில் பயம் குமிழ் விட்டது..
‘ஒருவேளை தப்பான முடிவு எடுத்து விட்டாளோ..’ மனம் பதறியது.. நெஞ்சம் கடவுளை வேண்டியது..
‘என் இதயத்தில் அவள் ஒருத்தி தான் இருக்கிறாள்.. அவளை என்னிடமிருந்து பிரித்து விடாதே..’
ஏதோ யோசனை தோன்ற மொட்டை மாடிக்குச் சென்று பார்த்தான்..
மொட்டை மாடியின் மூலையில் சுவரில் சாய்ந்து அமர்ந்து கொண்டிருந்த அவள் நிழலோவியமாய் தென்பட்டாள்..
Reviews — Idhayathini Salaram / இதயத்தின் சாளரம்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.