Chapter 17
ஆகாஷ் மெதுவாக நடந்து அனுராதாவின் அருகில் சென்று அமர்ந்தான்.. அவள் மனதில் ஆசுவாசப் பெரு மூச்சு எழுந்தது.. இந்த மையிருட்டில் தன்னந்தனியாய் அவள் மொட்டை மாடியில் அமர்ந்திருந்த கோலம் அவன் இதயத்தைக் கசக்கிப் பிழிந்தது.. தன்னையே நொந்து கொண்டான்.. ‘இன்றைக்கென்று ஏன் அவனுக்கு இப்படி ஒரு காட்டுத்தனமான கோபம் வந்ததோ..’
“அனு.. என்னை மன்னித்து விடு..”
அவன் காலடியோசையை உணர்ந்ததும் இறுகிப்போய் அமர்ந்து இருந்தவளின் உடலில் இந்த வார்த்தைகளைக் கேட்டதும் லேசான அசைவு வந்தது.. ஆனாலும் அவளிடமிருந்து பதில் வரவில்லை..
“நான் இப்படிக் கோபப்படுபவன் இல்லை அனு.. நீ என்னை என்ன வேண்டுமானாலும் பேசலாம்.. திட்டலாம்.. ஏன் அடிக்கக் கூட செய்யலாம்.. அதற்கு உனக்கு உரிமையிருக்கிறது.. நீ என்னில் ஒரு பாதி என்பதை விட நீயே நான்.. நானே நீ.. அப்படித்தான் நான் நினைக்கிறேன்.. நாம் இருவரும் வேறு வேறு அல்ல.. அந்த உரிமையில்தான் நான் உன்னை கை நீட்டி அடித்தேன்.. இப்போது மன்னிப்பு கேட்பது கூட உன்னை நான் அடித்ததற்காக இல்லை.. நான் பேசின.. அதிகப்படி வார்த்தைகளுக்காக.. நான் உன்னை அப்படிப் பேசியிருக்கக் கூடாது.. நீ என்னை எவ்வளவோ முறை அவமானப் படுத்தியிருக்கிறாய்.. வெளியே போகச் சொல்லியிருக்கிறாய்.. ஏன் இன்று கூட என்னைப் பெண் பித்தன் என்பது போல் பேசினாய்.. அதெல்லாம் மேட்டரே இல்லை.. பேசுவது நீ தானே.. நான் கேட்டுக் கொண்டு போயிருப்பேன்.. அடுத்த வீட்டுப் பெண்ணைப் பேசலாமா..? நீ சொன்னது போல் அந்தப் பெண் செய்ததும் தவறுதான்.. காரில் என் அருகே உட்கார்ந்திருக்கக் கூடாது.. நீ வந்த பின்னாலாவது பின் சீட்டிற்கு இடம் மாறியிருக்கலாம்.. அவள் செய்யவில்லை.. அதற்காக இப்படிப்பட்ட வார்த்தைகளையெல்லாம் நீ பேசலாமா..? உன் வாயிலிருந்து இந்த வார்த்தைகள் வந்திருக்கக்கூடாது அனு..”
அவளிடமிருந்து ஏளனச் சிரிப்பு ஒன்று வந்தது.. ஆகாஷிற்கு ஏன் அவள் அப்படிச் சிரிக்கிறாள் என்று புரியவில்லை..
“ஏன் அனு இப்படிச் சிரிக்கிறாய்..?”
“இப்போதும் மற்றவர்கள் மேல்தானே பழி போடுகிறீர்கள்.. ராகினி வந்தவுடன் தாத்தாவும்.. நானும் ஒதுங்கினது போல் நீங்களும் ஒதுங்கிப் போயிருக்கலாமே.. அதை விட்டுவிட்டு அவள்தானே என் கையைத் தொட்டு இழுத்தாள்.. நானும் அவள் இழுத்த இழுப்புக்கு போனேன் என்று கதை சொன்னீர்கள்.. அவளைப் போன்ற குணம் படைத்த பெண்கள் முகத்தையே நிமிர்ந்து பார்த்து நான் பேசமாட்டேன்.. ஆண்கள் என்றால் நான் சொல்லவே வேண்டியதில்லை.. இவ்வளவு பேசுகிறீர்களே இன்றைக்கு மட்டும் நீங்கள் என்ன செய்தீர்கள்.. அந்தப் பெண்ணிடம் பின் சீட்டில் உட்காரு என்று சொல்ல என்ன தயக்கம்..? நான் வந்த பின்னால் நீ என் மனைவியுடன் பின் சீட்டில் உட்காரலாமே என்று நாசுக்காய் சொல்லியிருக்கலாமே.. சும்மா சொல்ல வேண்டாம்.. என் வொய்பிற்கு கம்பெனி கொடு என்று சொல்லியிருக்கலாம்.. ஏன் செய்யவில்லை..?
வீட்டுக்கு வந்தவுடன் சோர்ந்து உட்காரப் போன என்னை சமையலறைக்கு விரட்டி விட்டுவிட்டு நீங்கள் இருவரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தீர்களே.. அது மட்டும் சரியா..? சின்ன வயதில் முதல் வகுப்பு தமிழ் பாடத்தில் படங்களைப் போட்டு கீழே வாக்கியங்களைப் போடுவார்கள்.. அதில் அப்பா சாய்வு நாற்காலியில் படுத்திருப்பார்.. அம்மா சமையலறையில் காய் நறுக்கிக் கொண்டிருப்பாள்.. தம்பி விளையாடி கொண்டிருப்பான்.. அக்கா வீடு பெருக்கிக் கொண்டிருப்பாள்.. அதே ஆணாதிக்க மனப்பான்மைதானே உங்களுக்கும் இருக்கிறது..”
“அது.. இது என்ன இப்படிப் பேசுகிறாய்..? நான் இப்படியெல்லாம் நினைத்துக் கூடப் பார்த்தவன் அல்ல..”
“ஏனென்றால் இதெல்லாம் உங்களுக்கு இயல்பான விசயமாய் போய்விட்டது.. ஏன் உள்ளே கிச்சனில் என்னுடன் ஹெல்ப் பண்ண வந்திருக்கலாமே..”
“சொப்னா தனியாக உட்கார்ந்திருப்பாளே..”
“இருக்கட்டுமே.. அவளுக்கு நீங்கள் ஏன் கம்பெனி கொடுக்க வேண்டும்..? நீங்கள் அவளுக்கு கம்பெனி கொடுக்க… நான் சமையலறைக்குள் வெந்து கொண்டிருக்க.. எனக்கு எப்படி இருந்திருக்குமென்று ஓர் நிமிடம் என்னிடத்தில் உங்களை வைத்து யோசித்துப் பாருங்கள்.. வேலை செய்வது எனக்குப் பிரச்சனை இல்லை.. உங்களுக்கு செய்வதில் அத்தை மாமாவிற்கு செய்வதில்.. ஆனந்திக்கு செய்வதில்.. எனக்கு விருப்பம்தான்.. நான் சந்தோசமாக செய்வேன்.. பட், நீங்கள் ஒரு பெண்ணுடன் அரட்டையடிக்க நான் உங்களிருவருக்காக டிபன் ரெடி பண்ணுவது என்பது கொடுமை.. நான் தெரியாமல் தான் கேட்கிறேன்.. அந்த சொப்னா எதற்காக நம் வீட்டிற்கு வந்தாள்..?”
“அது.. உன்னைப் பார்த்துப் பேசத்தான்..” சொல்லும் போதே அதிலிருந்த அபத்தத்தை உணர்ந்து ஆகாஷிற்கு வார்த்தைகள் தடுமாறின..
அனுராதாவைப் பார்க்க வந்தவள் அவள் பக்கத்தில் காரிலும் உட்காரவில்லை.. அவளுடன் பேச வேண்டுமென்று வீட்டிலும் சொல்லவில்லை.. ஆகாஷின் அருகே அனுராதா உட்கார வேண்டிய இடத்தில் உட்கார்ந்து கொண்டு வந்தாள்.. வீட்டிலும் அவளைப் போலவே அனுராதாவும் வேலை முடிந்து களைப்பாக வந்திருப்பாளேயென்ற எண்ணமில்லாமல் ‘என்ன ஆகாஷ்.. உங்கள் வீட்டிற்கு முதன் முதலாய் வந்திருக்கிறேன்.. ஸ்வீட், காரம் கிடையாதா.. ஊஹூம் கடையில் வாங்கியது வேண்டாம்.. வீட்டில் செய்ததுதான் எனக்கு பிடிக்கு’மென்று கேட்டு வைத்தாள்.. திரும்பிப் போக என்ன செய்வோமென்ற எண்ணமில்லாமல்.. ‘ஆகாஷ் என்னை வீட்டில் டிராப் பண்ணி விடுவீர்கள்தானே..’ என்று அவளாகவே அவளுடைய பொறுப்பை ஏற்க வைத்து விட்டாள்.. நேற்று வரை ஆகாஷ் தனி.. இன்று அவனுடைய வாழ்வில் பங்கேற்க அவனுக்கு என்று ஒருத்தி வந்துவிட்டாள்.. இப்போதும் பழையபடியே இயல்பாய் இருக்கிறேன் பேர்வழியென்று இதுபோன்ற செயல்களைச் செய்துவிட்டு அனுராதாவின் மேல் குற்றம் சொல்வது சரியில்லைதான்..
“அனு அப்போதும் சொல்கிறேன்.. இப்போதும் சொல்கிறேன்.. ராகினியுடன் பேசும்போதும் என் மனதில் சலனம் இல்லை.. இன்றைக்கு சொப்னாவுடன் பேசும் போதும் என் மனதில் கல்மிஷம் இல்லை..”
“அவர்கள் மனதில் இல்லையென்று சொல்ல முடியுமா..?”
பதில் சொல்ல முடியாமல் திகைத்துப் போனான் ஆகாஷ்.. ராகினியின் நடவடிக்கைகள் அவள் நோக்கத்தை பட்டவர்த்தனமாக தெரிவித்தன.. சொப்னா ராகினியைப் போன்று தரமில்லாமல் பேசியதில்லை.. ஆனால் ஆகாஷை திருமணம் செய்து கொள்ள விரும்பி தன் விருப்பதை நாசூக்காய் தெரிவித்தவள்.. ஆகாஷ் மறுத்து விட்ட போதும் இயல்பாய் பழகினாள்.. அந்த மன இளக்கத்தாலேயே அவள் அனுராதாவை பார்க்க வீட்டுக்கு வருகிறேன் என்று சொன்னபோது ஆகாஷால் மறுத்துப்பேச முடியவில்லை..
“என்ன பதிலையே காணோம்..”
“இது பற்றிய வாக்குவாதத்தை இத்தோடு நிறுத்திக் கொள்ளலாம்.. இனிமேல் இப்படிச் செய்ய மாட்டேன்.. வா போகலாம்..”
“எங்கே..?”
“நம் வீட்டிற்குத்தான்..”
“இது உங்கள் வீடு.. நான் போக வேண்டிய இடம் லேடிஸ் ஹாஸ்டல்.. அப்போதே போயிருக்க வேண்டியவள் ஏன் போகாமல் உட்கார்ந்து இருந்தேன் தெரியுமா..? இப்போது நான் கேட்ட கேள்விகளையெல்லாம் கேட்டு விட்டுப் போவதற்காகத்தான்.. உங்கள் மேல் என்ன தவறு என்று தெரியாமலே இருந்தீர்கள் இல்லையா..? உங்கள் தவறை உணர்த்திவிட்டுப் போகத்தான் உட்கார்ந்து இருந்தேன்.. வருகிறேன்..”
அனுராதா கையில் பெட்டியுடன் எழுந்தாள்.. அவ்வளவு நேரமும் அவளது பெட்டி அருகில் இருந்ததை இருட்டில் கவனிக்காமல் இருந்த ஆகாஷ் பதறிவிட்டான்..
“பொறு அனு.. என்னைத் தண்டிக்காதே..”
“உங்களுக்கு மட்டுமல்ல.. எனக்கும் இந்த தண்டனை தேவைதான்.. உங்கள் குணம் தெரிந்திருந்தும் தாத்தாவிடம் வாக்குக் கொடுத்தேனே.. அவசரத்திற்கு வேண்டிய உடைகளுடன் போகிறேன்.. மீதியை என் அப்பா அம்மாவுடன் வந்து எடுத்துப் போகிறேன்..”
“அத்தை மாமாவிடம் சொல்லப் போகிறாயா..?”
“வேறு என்ன செய்வது..? கல்யாணம் என்பது உங்களுக்கு விளையாட்டாகப் போய்விட்டது.. போனவாரம் பால் காய்ச்சி புதுக்குடித்தனம் வந்தவளை வீட்டை விட்டு வெளியே போ என்பீர்கள்.. நானும் போய் விடுவேன்.. ஊரறிய.. உலகறிய.. நமக்குக் கல்யாணம் பண்ணி வைத்த உங்களைப் பெற்றவர்களுக்கும் என்னைப் பெற்றவர்களுக்கும் யார் பதில் சொல்வது..? நானே அதைச் செய்கிறேன்..”
ஆகாஷ் அவள் கையிலிருந்த பெட்டியைப் பிடுங்கினான்..
“தவறு செய்தால் சொல்லித் திருத்து.. விட்டுவிட்டுப் போக நினைக்காதே..”
“ஹலோ சார்.. நீங்கள்தான் உங்களை விட்டுவிட்டு ஒழியச் சொன்னீர்கள்..”
“அதுதான் மன்னிப்புக் கேட்டுவிட்டேனே..”
“உங்களையும்.. நீங்கள் பேசிய வார்த்தைகளையும் மன்னித்தால் மன்னிப்பு என்ற சொல்லுக்கே மதிப்பு இல்லாமல் போய்விடும்..”
அனுராதா பெட்டியை பிடுங்கிக் கொண்டு விறுவிறுவென மாடிப்படியில் இறங்கினாள்.. ஆகாஷ் அவளைப் பின் தொடர்ந்து இறங்கினான்.. வீட்டு வாசலுக்கு வந்ததும் அனுராதா எதிர்பாராத ஒன்றைச் செய்தான் ஆகாஷ்..
Reviews — Idhayathini Salaram / இதயத்தின் சாளரம்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.