Chapter 19

0Shares

அனுரதாவை முதன் முதலில் பார்த்த வினாடியிலிருந்து இன்றுவரை ஆகாஷிற்கு அவளைப் பற்றித் தோன்றும் ஒரே வார்த்தை ‘திமிர் பிடித்தவள்’ ஆகாஷைப் பற்றி அவள் நினைப்பதேயில்லை என்பதே அவனது பெரும் குறை.. அவனை அவளுக்குப் பிடிக்கவே பிடிக்காது என்று தீர்மானமாய் நம்புகிறவன் அவன்.. தொண்டைமான் தாத்தாவின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு தனக்குக் கழுத்தை நீட்டியவள்.. தாலியின் மகிமைக்கு கட்டுப்பட்டு தன்னுடன் வாழ ‘ஓகே’ சொன்னாள் என்பது தான் அவனது எண்ணம்..

இன்று என்னடாவென்றால் அந்தக் திமிர் பிடித்தவளின் கண்களில் கண்ணீர் தழும்புகிறது.. சுயமரியாதையைப் பற்றி அவள் பேசுவதில் ஆச்சரிய மில்லை.. அவள்தான் ‘சுயமரியாதை சுந்தரி’யாயிற்றே.. ஆனால் இதயத்தைப் பற்றி ஏன் பேசுகிறாள்..?

ஆகாஷிற்கு கோபம் வந்தால் மனதிற்குள் அவளை ‘இதயமேயில்லாத ராட்ஸஸி’ என்றுதான் திட்டுவான்.. இவளெல்லாம் இதயத்தைப் பற்றிப் பேசுவதும் இல்லாமல் இதயம் சொல்லட்டும் என்று வேறு சொல்கிறாள்.. இதுதான் ஆகாஷிற்கு சுத்தமாய் பிடிபடவில்லை.. அவளிடம் கேட்கலாமென்றால் காலையிலிருந்து அவன் பண்ணி வைத்த ஏடாகூடா வேலைகளால் ஏற்கனவே கோபமாயிருப்பவள் மொத்தமாய் பிய்த்துக் கொண்ட போய்விட்டால் என்ன செய்வது என்று மனச்சாட்சி மிரட்ட பயந்து போய் வாயை மூடிக் கொண்டான்..

‘நீ எனக்கு மட்டும் சொந்தமென்று என் இதயம் சொல்லட்டும்..’

ஏன் இப்படிச் சொல்கிறாள்..? அவன் சொந்தமாக வேண்டுமென்று அவள் ஆசைப்பட்டாளா..? ஆகாஷின் மனம் ‘அது இருக்காது’ என்று திட்டவட்டமாய் மறுத்தது.. அவளாவது.. அவனது காதலை விரும்பியிருப்பதாவது.. விரும்பியிருந்தால் அன்னலட்சுமிபுரத்திலேயே தெரிவித்திருக்க மாட்டாளா..? ராகினி உரிமை கொண்டாடிய போது.. அவளுடன் உரிமைப் போராட்டம் நடத்தி அவளை வெளியேற்றி இருக்க மாட்டாளா..? அதை விட்டு விட்டு ஆகாஷைத்தானே வெளியேற்றினாள்.. இன்று மாலை அந்த சொப்பன சுந்தரி அவன் அருகே உட்கார்ந்து வந்தபோது அவளை இறங்கச் சொல்லி உடனடியாய் சத்தம் போட்டிருக்க மாட்டாளா..? இவள் அப்படிச் செய்யவில்லையே..

‘நான் உன் மனைவி.. என் கண் முன்னால் அவள் உன்னருகில் அமரக்கூடாது.. அது என் மரியாதைக்கு இழுக்கு.. அவர்கள் சரியில்லாத பெண்கள்.. அவர்களை வீட்டுக்கு அழைத்து வராதே..’ இதுதானே அவள் கொண்ட கோபத்தின் சாராம்சம்..

எது எப்படியே.. அனுராதாவின் மனதில் வேதனை இருப்பதைக் கண்டு கொண்ட ஆகாஷின் உணர்வுகள் மாயமாய் மறைந்தன.. அவள் இன்னும் டிபன் காபி கூட சாப்பிடவில்லை என்பது உறைக்க அவன் எழுந்து கொண்டான்..

“ஓகே.. லீவ் திஸ் மேட்டர்.. நீ சொல்வதற்கு நான் கட்டுப்படுகிறேன்.. இப்போது எழுந்து சாப்பிட வா..”

“வேண்டாம்.. எனக்குப் பசியில்லை..”

“எப்படி இல்லாமல் போகும்..? செம டேஸ்டாய் செய்த வடைம் கேசரியும் ஆறிப்போய் கிடக்கிறது.. காபி கூடக் குடிக்கவில்லை..”

“ரொம்பத்தான் அக்கறை..” அவள் வாய்க்குள் முணுமுணுத்தாள்..

“அக்கறைதாண்டி.. நீதான் அவகாசம் கேட்டிருக் கிறாய்.. நான் கேட்கவில்லை.. விட்டால் இப்போதே உன்னுடன் குடும்பம் நடத்தத்தான் பறந்து கொண்டிருக்கிறேன்.. உன் மேல் எனக்கு அக்கறையில்லாமல் எப்படிப் போகும்..? வாய்க்குள் முணுமுணுத்தால் எனக்குக் கேட்காதா..? நீ மனதுக்குள் நினைப்பதைக் கூடச் சொல்லுவேன்.. நீ எப்போது எப்படி நினைப்பாயென்று எனக்கு நன்றாகத் தெரியும்.. இதற்கு மைன்ட் ரீடிங்கெல்லாம் படித்துவிட்டு வரவேண்டிய அவசியமில்லை..” ஆகாஷ் சமையலறைக்கள் நுழைந்து கொண்டே கூறினான்..

அவன் எதையாவது பண்ணி வைக்கப் போகிறான் என்ற பயத்தில் அவனைப் பின் தொடர்ந்த அனுராதா..

“ஆமாம்.. பெரிதாய் என் மனதைப் படிக்கத் தெரிந்தவர் தான்.. ராகினியோடு வழியும்போதும் சொப்னாவிடம் அரட்டை அடிக்கும் போதும் என் மனது என்ன நினைக்குமென்று படித்து தெரிந்திருக்க வேண்டியதுதானே..” என்று கூறினாள்..

“அது மட்டும்தாண்டி தெரியவில்லை.. இனிமேல் பாரேன்.. பெண்களின் நிழல் கண்டால் கூட தூர விலகி விடுவேன்.. நான் ‘ஏகபத்தினி விரதன்..’ என்று உன் வாயாலேயே ஒப்புக் கொள் வைக்கிறேன் பாரேன்..”

“யார்.. நீங்கள்.. ஏகபத்தினி விரதன்..? ஏகப்பட்ட பத்தினிகளின் விரதன் என்று பெயர் வாங்கமாலிருந்தால் தான் ஆச்சர்யம்..”

“இப்படியே என்னைப் பற்றி உயர்வாய் நினைத்துக் கொண்டிருந்தால் இந்த ஜென்மம் பூராவும் நீ அவகாசம் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டியதாகி விடும்.. நல்லதாய் என்னைப்பற்றி நாலு வார்த்தை சொல்லிப் பழகு.. நினைத்துப் பழகு.. அவகாசம் எதற்குக் கேட்டோம் என்று உருகி.. மறுகி..” ஆகாஷ் அனுராதாவைப் பார்த்துக் கண் சிமிட்டினான்..

“ஊம்.. சொல்லுங்கள் உருகி.. மறுகி..” அனுராதா தூண்டினாள்..

“அணை உடைந்த வெள்ளமாய் என்னிடம் ஓடி வந்து கட்டிப்பிடித்து அனலில் பட்ட மெழுகாய் கரைந்து விடுவாய்.. ச்சூ.. ச்சூ.. இது என்ன வாடை.. ஏதோ தீயும் வாசனை வருகிறதே..” ஆகாஷ் சுற்று முற்றும் பார்த்தான்..

அனுராதா தலையில் அடித்துக் கொண்டு அடுப்பை அணைத்தாள்..

“அனலில் பட்ட மெழுகு மட்டும் உருகாது.. பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றாமல் அனலில் வைத்தாலும் அது உருகும்.. இப்போது எதற்கு அடுப்பை பற்ற வைத்தீர்கள்..?”

“உனக்கு ஏதாவது செய்து கொடுக்கலாமே என்று தான்..”

“ஒன்றும் வேண்டாம் நகருங்கள்.. வடை.. சட்னி இருக்கிறது.. ஈவினிங்கே இட்லி ஊற்றி வைத்து விட்டேன்.. அது போதும்.. சாப்பிட வாங்க..” அனுராதா டைனிங் டேபிளில் தட்டைப் போட்டாள்..

“கேசரி இருக்கிறதா.. முறைக்காதே.. அது செம டேஸ்டாய் இருந்தது தெரியுமா..? என் தட்டிலிருப்பதையும் அந்த சொப்னா நொட்டை விட்டுக் கொண்டு சாப்பிட்டு விட்டாள்..” என்று கூறிக் கொண்டிருந்தவன் அனுராதாவிடம் பதில் வராததைக் கண்டு அவளை ஏறிட்டுப் பார்த்தான்..

அவள் விறைப்பாய் நின்று கொண்டு ஆகாஷை முறைத்துக் கொண்டிருந்தாள்..

‘ஏன் இப்படி முறைக்கிறாள்..’ காரணம் புரிய நாக்கைக் கடித்துக் கொண்டு அவசரமாய் கூறினான்..

“உனக்கு என்மேல் நம்பிக்கையே வராதா அனு..? என் தட்டில் இருப்பதையும் முதலிலேயே அவள் தட்டில் கவிழ்த்து விட்டாள்.. என்னவோ நான் சாப்பிட்ட மீதத்தை அவள் சாப்பிட்டதாய் நினைக்கிறாயா..? இல்லைம்மா.. இது நேரம் வரை போட்ட சண்டை போதாதா..? நான் மனதில் சூது வாது இல்லாத பச்சைப்பிள்ளை அனு.. என் வாயாலேயே நான் கெட்டுப் போகிறேன்.. கொஞ்சம் கருணைகாட்டும்மா..”

அவன் கையெடுத்துக் கும்பிட்டுக் கெஞ்சவும் அனுராதாவிற்கு சிரிப்பு வந்து விட்டது..

‘நடிகன்.. என்னமாய் நடிக்கிறான்..’

ஆகாஷின் தட்டில் கேசரியை பரிமாறியவாறே கூறினாள்..

“சரி.. சரி.. சாப்பிடுங்கள்.. அதற்காக பச்சைப்பிள்ளை யென்று பிலிம் காட்ட வேண்டாம்.. இந்தப் பச்சைப் பிள்ளை கொஞ்ச நேரத்திற்கு முன்னால் என்ன பாடு படுத்தியது என்பதை நான் மறக்கவில்லை..”

ஆகாஷ் அவளைக் காதலாய் பார்த்தான்..

“மறக்காதே அனு.. நான் உன்னுடையவன்.. அதையும் மறக்காதே..”

அனுராதா பதில் பேசாமல் சாப்பிட ஆரம்பித்தாள்..

“இதற்கு மட்டும் பதில் சொல்ல மாட்டாயே..”

“பேசாமல் சாப்பிடுங்கள்..”

அன்று இரவு அனுராதா படுத்ததும் உறங்கி விட்டாள்.. ஆகாஷ் வழக்கம்போல நடை பழகிவிட்டுத் தூங்கப் போனான்.. இரவு விளக்கின் ஒளியில் ஒயிலாய் உறங்கிக் கொண்டிருந்தவளின் அழகில் லயித்து அவளது முகத்தையே பார்த்தான்.. தூக்கத்திலும் பிடிவாதம் தெரிந்த முகம்..

‘ம்ம்.. போயும்.. போயும் இந்தப் பிடிவாதக்காரியைப் போய் காதலித்தேனே..’

தன்னைத்தானே நொந்து கொண்டு உறங்கி விட்டான் ஆகாஷ்..

படுக்கையில் மட்டும் விலகி நின்ற அனுராதா மற்றவற்றில் சிறந்த மனைவியாகவே இருந்தாள்.. காலையில் அவன் கண் விழிக்கும் போது மணக்க மணக்கக் காபி வந்தது.. குளித்து விட்டு வரும் போது சூடாய் டிபன் இருந்தது.. அவன் அலுவலகம் கிளம்பும்போதே அவனுக்கும் தனக்கும் மதிய உணவுக் கேரியர்களை தயார் பண்ணிவிட்டு அவளும் கிளம்பி விடுவாள்..

ஆனால் ஒன்றில் அவள் பிடிவாதமாய் இருந்தாள்.. ஆகாஷ் பக்கத்தில் உட்காராமல் பின்சீட்டில்தான் உட்காருவாள்..

“ஏய்ய்.. நாலு பேர் பார்த்தால் என்னடி நினைப்பார்கள்..?”

“மற்றவர்கள் நினைப்பைப் பற்றி கூட நீங்கள் கவலைப்படுகிறீர்களா..? அன்றைக்கு சொப்னாவை பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டு என்னை பின்சீட்டிற்கு அனுப்பும்போது அந்த நாலு பேரைப் பற்றி நீங்கள் கவலைப்பட்டீர்களா..? இன்னொருத்தி உட்கார்ந்த இடத்தில் இனி நான் உட்கார மாட்டேன்..”

அனுராதாவின் கோபம் கண்டு ஆகாஷின் உடல் நடுங்கியது.. நல்லவேளையாக சொப்னா காரில்தான் அவன் பக்கத்தில் உட்கார்ந்தாள்.. எசகுபிசகாக கட்டிலில் அவன் அருகே உட்கார்ந்திருந்தால்..?

0Shares

Reviews — Idhayathini Salaram / இதயத்தின் சாளரம்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link