Chapter 20

0Shares

ஒருமுறை ஆகாஷிற்கு டைபாயிடு ஜூரம் வந்திருந்தது.. அப்போது அவன் மாடியறையில் தனியாக இருந்தான்.. கீழ்வீட்டில் குடியிருந்தவர்கள் வேளா வேளைக்கு கஞ்சி வைத்துக் கொடுத்தார்கள். அவனுக்கு உடல் நலம் சரியில்லையென்று கேள்விப்பட்ட சொப்னா அவனைக் காண அவனது அறைக்கே வந்துவிட்டாள்.. சோர்வுடன் படுத்திருந்த ஆகாஷிடம் நலம் விசாரித்தபடி கட்டிலில் அவனருகே அமர்ந்து கொண்டு அவன் நெற்றியை வேறு தொட்டுப் பார்த்தாள்..

கஞ்சியை எடுத்துக் கொண்டு வந்த கீழ்வீட்டுக்கார பெண்மணி அன்று பார்த்த பார்வை இன்றும் ஆகாஷின் நினைவில் இருக்கிறது.. கஞ்சியை அவளிடமிருந்து வாங்கிய சொப்னா அவள் முன்னிலையிலேயே ஆகாஷிற்கு ஸ்பூனில் கஞ்சியை எடுத்துப் புகட்ட ஆரம்பித்து விட்டாள்..

நல்லவேளையாக கீழ்வீட்டிலிருந்தவர்களை திருமணத்திற்கு முன்னரே காலி பண்ணச் சொல்லிவிட்டான்.. ஒருவேளை அவர்கள் குடியிருந்து அந்த அம்மாள் யதார்த்தமாய் சொப்னா அவனுடைய கட்டிலில் அமர்ந்து நெற்றியைத் தொட்டுப் பார்த்தாள் என்று அனுராதாவிடம் சொல்லியிருந்தால் என்ன ஆகியிருந்திருக்கும்..? நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் நடுங்கியது..

அவனையே தொட்டுப் பார்க்க விரும்பமாட்டாள்.. ‘கடவுள் காப்பாற்றினார்..’ என்று கன்னத்தில் போட்டுக் கொண்டான் ஆகாஷ்..

“என்ன தலைவரே.. பால்கனியில் உட்கார்ந்து கொண்டு சாமி கும்பிடுகிறீர்கள்..?” அனுராதா அவன் எதிரே வந்து அமர்ந்தாள்..

“உன்னைப் போல ஒரு புண்ணியவதிக்கு தாலி கட்டினால் ரோடெல்லாம் சாமி கும்பிட்டுக் கொண்டே போக வேண்டியதுதான்..” ஆகாஷ் அவளை நோட்டம் விட்டவாறே கூறினான்..

“நல்ல காரியம்தானே செய்கிறீர்கள்.. அதற்கு எதற்கு இவ்வளவு சலிப்பு..” என்று கூறியவள் சிவப்பு நிற நைட்டியில் இருந்தாள்.. தலைமுடியை தளர்வாய் பின்னலிட்டு பின்னலை வேறு முன்புறம் தூக்கிப் போட்டிருந்தாள்.. நெற்றியில் சிகப்பு நிற ஸ்டிக்கர்.. அவளது வெளிர் மஞ்சள் நிற மேனிக்கு சிகப்புக் கலர் எடுப்பாக இருந்து தொலைத்தது..

“என்ன இங்கே பார்வை..?”

“பார்க்கக் கூடக் கூடாதா..?”

“ஏன் கூடாது..? உங்கள் பெண்டாட்டி நீங்கள் பார்க்கிறீர்கள்.. தாராளமாய் பாருங்கள்.. நான் என்ன தடையா சொல்லப் போகிறேன்..?”

“ரொம்ம்ம்பத் தாராள மனசு உனக்கு.. ம்ஹூம்..”

ஆகாஷ் பெருமூச்சு விட்டபடி இந்தியா டுடேயைப் பிரித்தான்.. ஜேசுதாஸின் படம் அட்டையை அலங்கரித்தது..

“இங்கே கொடுங்கள் பார்க்கலாம்..” அனுராதா வாங்கிப் பார்த்தாள்..

“அவருக்கு ஏதோ அவார்டு கிடைத்திருக்கும்போல.. கவர் ஸ்டோரி போட்டிருக்காங்க..” என்றான் ஆகாஷ்..

“அவார்டு வாங்கத் தகுதியானவர்..”

“உனக்கு அவர் வாய்ஸ் பிடிக்குமா.. ஆக்சுவலா நீ பி.சுசிலாவின் ரசிகை என்றில்லையா நினைத்தேன்..”

“சுசிலாம்மாவை பிடித்தால் மற்றவர்கள் குரலும் பிடிக்கக் கூடாது என்று அர்த்தமா..? பி.சுசிலாவின் குரல் தேன் குரல்.. அவர்களது குரல் பாடலுக்கு ஏற்றபடி மாறி வித்தை காட்டும்..

‘அம்மம்மா.. காற்று வந்து ஆடைதொட்டுப் பாடும்..’ என்று பதினாற வயதுப் பெண்ணொருத்தியின் துள்ளலோடு பாடுகிறவர்கள்..

‘தன்னந்தனிமையிலே.. உடல் தள்ளாத வயதினிலே..’ என்று அறுபது வயதுப் பெண்மணியின் முதிர்ந்த பக்குவப்பட்ட தொனியிலும் பாடுவார்கள்.. அவங்க வாய்ஸ் ஸ்வீட் வாய்ஸ்..”

“சுசிலாவுடைய குரல் தேன்குரல் என்கிறாய்.. ஜேசுதாஸ் சாரின் குரலை என்னவென்று சொல்லுவாய்..”

“தெய்வீகக் குரல்..!”

“தெய்வீகக் குரல்..? எவ்வளவு அழகாய் சொல்கிறாய்..”

“உண்மையைத்தான் சொல்கிறேன்.. பி.சுசிலாவின் குரல் தேன் குரல் என்றால் ஜேசுதாஸின் குரல் தெய்வீகக் குரல்.. நான் சொல்வதைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்களேன்..”

“நீ சொல்லேன்..”

“ஒரு அழகான தாமரை மலர்கள் நிரம்பிய குளம்.. குளக்கரையில் பூக்கள் பூத்திருக்கும் மரம்.. அந்த மரத்தின் பூக்களில் ஒன்று உதிர்ந்து குளத்தில் விழுந்தால் எழும்புமே.. ஒரு ஓசை.. அதைப் போன்ற மென்மையான குரல்தான் ஜேசுதாஸின் குரல்..”

ஆகாஷ் ஆச்சர்யத்துடன் அனுராதாவைப் பார்த்தான்.. அவனுடைய மூக்கு நுனியில் கோபமிருக்கும் முசுட்டு மனைவிக்குள் இத்தனை ரசனையா..? அவனது வியப்பான பார்வையைக் கண்டு அவள் புருவம் உயர்த்தினாள்..

“என்ன ஆச்சு..?”

“கலக்குறியேடி.. இன்னும் என்ன சொல்லப் போகிறாய்..”

“இது விளையாட்டில்லைங்க.. ஜேசுதாஸ் ஒரு இசை உபாஸகர்.. அவர் மேடைக்கச்சேரி பாடும்போது ஏதாவது சத்தம் வந்தால் பாடுவதையே நிறுத்தி விடுவார்.. உங்களுக்கு ஒன்று தெரியுமா..?”

“தெரியுமே.. ஒன்று.. இரண்டு.. மூன்று..”

“போதுமே.. ஜேசுதாஸின் பாடல்களை நான் கேட்பதாக இருந்தால் எந்த வேலையும் செய்யாமல் அமைதியாய் கண்மூடி சேரில் சாய்ந்து கொண்டுதான் கேட்பேன்.. அது இரவு நேரமாக இருந்தால் இன்னும் பெட்டர்..”

அவள் தலையில் சூடியிந்த மல்லிகையின் நறுமணம் காற்றில் கலந்து அவன் நாசியை வருடியது.. இயல்பாய் சேரில் கால்களை சம்மணம் கட்டி அமர்ந்து கொண்டு அவள் உரையாடியது அவன் மனதிற்கு இதமாக இருந்தது.. இவ்வாறு இருவரும் அமர்ந்து மனம் விட்டுப் பேசியிருந்தால் எத்தனையோ மோதல்களைத் தவிர்த்திருக்கலாமே என்று அவனுக்குத் தோன்றியது.. அவ்வாறு இருவரும் பேச முடியாமல் போனது யார் செய்த குற்றம்..?

தான் செய்த குற்றமென்றே இப்போது ஆகாஷிற்கு தோன்றியது.. அவள் மனதில் என்ன இருக்கிறது என்பதை அறிய முயற்சி செய்யாமல், அவள் சொன்னது போல் தன் மனதில் என்ன இருக்கிறது என்பதை அவள் அறியவில்லையே என்று அவள் மேல் குற்றம் சொல்லிக் கொண்டு இருந்தது, தான் செய்த பெரிய குற்றமென்று ஆகாஷ் நினைத்தான்..

திடீரென்று அவர்கள் இருவர் மீதும் மழைச்சாரல் தெறித்தது..

“ஸ்ஸ்சூ.. மழை பெய்கிறதே..” அனுராதா குதூகலத்துடன் எழுந்து பால்கனி கைப்பிடியோரம் போய் நின்று கொண்டாள்..

“என்னடி செய்கிறாய்..” ஆகாஷ் அவளருகே போய் நின்று பார்த்தான்.. கொட்டும் மழையில் கைநீட்டி மழைத்துளிகளை உள்ளங்கையில் பிடிக்க முயன்றாள் அனுராதா.. மேற்கூரையில் விழுந்து தெறிக்கும் மழைத்துளிகள் அவள் முகமெங்கும் சிதற..

“ஸ்ஸ்.. ஆ..” என்று அந்த சிலிர்ப்பை ரசித்துச் சிரித்தாள்..

மழையில் சின்னஞ்சிறு மழலை போல் மகிழ்வாய் விளையாடும் அவளை ரசித்தவாறே நின்று கொண்டிருந்தான் ஆகாஷ்.. மழை வலுத்தது.. அனுராதாவின் உடல் நனைய ஆரம்பித்தது..

“உள்ளே வா அனு.. ஜூரம் வந்துவிடப் போகிறது..”

“இன்னும் கொஞ்ச நேரம் விளையாடுகிறேன்.. ப்ளீஸ்..”

“சொன்னால் கேள்.. உள்ளே வா..”

மனமில்லாமல் உள்ளே வந்தவளிடம் டவலை எடுத்து நீட்டினான்..

“சின்னக் குழந்தை போல் நனைந்து விட்டு வந்திருக்கிறாயே.. துவட்டிக் கொள்.. இல்லாவிட்டால்..”

“ஜூரம் வந்துவிடும்..”

கலகலவென்று நகைத்தபடி டவலை வாங்கி துடைத்துக் கொண்டவளின் நனைந்த நீர்த்திவலைகள் ஆங்காங்கே தெறித்திருந்த முகத்தைக் கண்டதும் முத்தமிடும் ஆசை ஆகாஷிற்குள் குமிழ்விட்டது..

“அனு.. அது என்ன…” அவள் முகம் நோக்கி கரம் நீட்டினான்..

“என்னது..” புரியாமல் முகம் காட்டியவளின் முகம் பிடித்து இமைக்கும் பொழுதில் இதழோடு இதழ் பதித்து விட்டான்..

விலக முயலாமல் அவள் பிடிக்குள் அடங்கி அவள் நின்றது ஒரு நிமிடம்தான்.. அந்த ஒரு நிமிடத்திற்குள் ஒரு யுகம் கடந்தது போல் உணர்ந்தான் ஆகாஷ்..

அனுராதா முகம் விலக்கிக் கொண்டு கீழே விரைந்து விட்டாள் சற்று நேரம் கழித்து இரவு உணவு உண்ண டைனிங் டேபிளுக்கு வந்தவனின் முகம் பார்க்காமல் பரிமாறினாள் அனுராதா.. தன்முன் இருந்த உணவில் பார்வையைப் பதிக்காமல் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த ஆகாஷின் கவனத்தில் அவள் முகச் சிவப்பு பட்டது..

நாணம்..! ஆகாஷின் மனம் குளிர்ந்தது..

0Shares

Reviews — Idhayathini Salaram / இதயத்தின் சாளரம்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link