Chapter 21

0Shares

“அனு..” பரிமாறியவளின் கரம்பிடித்து நிறுத்தினான் ஆகாஷ்..

“ம்ம்..” அவன் முகம் பார்க்கத் தடுமாறி நிலம் பார்த்தபடிக் கூறினாள் அனுராதா..

“என்னைப் பார்த்தால் பாவமாக இல்லை..?” ஆகாஷின் குரலில் தாபம் இருந்தது..

“நானும் பாவம்தான்..” அனுராதா மோகத்தீயில் மூழ்கும் வேதனையுடன் பேசினாள்.. அவனுடைய கரங்களில் சிக்கியிருந்த அவள் தளிர் விரல்கள் நடுங்கின.

அவள் பதிலைக் கேட்ட ஆகாஷின் உணர்வுகள் கட்டவிழ்ந்தன.. எழுந்து அவளை நெருங்கினான்.. அவள் அவன் மார்பில் கை வைத்துத் தள்ளிவிட்டாள்.. சிரித்துக் கொண்டே விலகி சமையலறைக்குள் ஓடினாள்.. ஆகாஷ் பின் தொடர்ந்தான்.. அவள் அவனுக்கு முதுகுகாட்டி சமையலறை ஜன்னலில் முகம் புதைத்து நின்றாள்.. ஆகாஷின் கரங்கள் அவள் தோள் மேல் படர்ந்தன.. அவளது பின்னங்கழுத்தில் குனிந்து முத்தமிட்டான்.. அனுராதா ஜன்னல் கம்பிகளை இறுகப் பிடித்துக் கொண்டு விழிகளை மூடிக் கொண்டாள்.. அவளைத் தன்புறமாய் திருப்பி அவள் முகம் பார்க்க முயன்றான் ஆகாஷ்.. விழி மூடிக்கிறங்கி நின்றாள் அனுராதா.. அவளது விழிகளில் இதழ் பதித்தான் ஆகாஷ்.. தாளாத பெண்மை அவனது மார்பில் தஞ்சம் புகுந்தது.. மனநிறைவோடு அவளைக் கட்டித் தழுவி உச்சி முகர்ந்து நின்றான் ஆகாஷ்..

பிரிய மனமில்லாமல் பிரிந்தாள் அவள்..

“ஏண்டி..”

“சாப்பிட வாங்க..”

“அப்புறம் சாப்பிடுகிறேன்.. நீ ஏன்னு சொல்லு..”

அவன் குரல் கண்டிப்புடன் ஒலித்தது..

“இப்போது வேண்டாம்..”

அவள் குரல் நலிந்து ஒலித்தது..

“அதுதான் ஏன்..? உனக்கு என்னைப் பிடிக்க வில்லையா..? எங்கே என் முகம் பார்த்துச் சொல்லு..”

அனுராதா துயரத்துடன் முகத்தை திருப்பிக் கொண்டாள்..

“என்னைக் கேள்வி கேட்காதீர்கள்.. இப்போது வேண்டாம் விட்டு விடுங்கள்.. தயவு செய்து என் உணர்வுகளுடன் விளையாடாதீர்கள்..”

“யார்..? நான் உன் உணர்வுகளுடன் விளையாடுகிறேனா..? கொல்லாதேடி.. அனு.. இங்கே வா.. என் முகத்தைப் பார்..”

ஆகாஷ் நெருங்க அனுராதா அவன் முகம் பார்க்காமல் பின் வாங்கினாள்.. ஆகாஷ் முரட்டுத்தனமாய் அவள் முகம் பற்றி தன் பக்கம் திருப்பினான்..

“என்னைப் பார்..”

அவள் பிடிவாதமாக கண்களை மூடிக் கொண்டாள்.. அவள் முகத்தில் தவிப்புத் தெரிந்தது.. உடலில் மெலிதான நடுக்கம் ஓடியது.. ஆகாஷ் அவளுடைய உணர்வு போராட்டங்களைக் கண்டு கொண்டான்..

“ஏன்.. என் முகத்தைப் பார்ப்பதற்கு என்ன..?”

“என்னால் முடியவில்லை..”

“அதுதான் ஏன் என்கிறேனே..”

“அதுதான் என்னால் முடியவில்லை என்கிறேனே..”

ஆகாஷ் அவளை விட்டுவிட்டான்.. அவள் முகம் பார்க்காமல் சாப்பிட்டு முடித்தான்.. மௌனமாக மாடியேறிவிட்டான்.. சற்று நேரம் கழித்து அனுராதா வந்த போது முகச்சுளிப்புடன் அவன் கண்களை இறுக மூடிக் கொண்டு படுத்திருப்பதைக் கண்டாள்.. தயக்கத்துடன் விளக்கை அணைத்து விட்டுப் படுத்து விட்டாள்..

மறுநாள் காலையில் ஜாகிங் போன ஆகாஷ் மழையில் சொட்ட சொட்ட நனைந்து போய் வீடு திரும்பினான்.. அனுராதா பதறிப்போய் டவலுடன் ஓடி வந்தாள்..

“என்ன இப்படி நனைந்து விட்டீர்கள்..?”

“மழை..”

ஒற்றைச் சொல்லுடன் பேச்சை கத்தரித்துக் கொண்டு அவள் நீட்டிய டவலைக் கண்டு கொள்ளாமல் குளியலறைக்குள் போய்விட்டான் ஆகாஷ்..

“இன்னும் ஒரு இட்லி போட்டுக் கொள்ளுங்கள்..”

வேண்டாமென்று வாயால் சொல்லாமல் கைநீட்டித் தடுத்தவன் அவள் முகம் பார்க்காமல் கை கழுவச் சென்றான்.. அனுராதாவிற்கு துக்கம் பொங்கியது..

‘என் முகத்தைக் கூடப் பார்க்க மாட்டானா..?’

அவளை அவளது அலுவலக வாயிலில் இறக்கி விட்டு விட்டு கல்லூரிக்குச் சென்றவன் மாலையில் அவளைக் கூப்பிட வரும்போது காய்ச்சலோடு வந்தான்..

சுணங்கிய அவன் முகத்தைக் கண்டு யோசனையுடன் காரில் ஏறினாள் அனுராதா..

‘ஏன் சோர்ந்து தெரிகின்றான்..?’

வீட்டிற்குப் போனதும் அவன் படுக்கையில் விழுந்து விடப் பதறிப்போய் அவன் நெற்றியில் கை வைத்துப் பார்த்தாள்.. உடல் அனலாய் கொதித்தது..

“சொன்னால் கேட்காமல் மழையில் நனைந்து கொண்டே ஜாகிங் போனீர்களே.. இப்போது என்ன ஆயிற்று பார்த்தீர்களா..? காய்ச்சலை இழுத்துக் கொண்டு வந்து விட்டீர்கள்..?”

அனுராதா சுடச்சுட காப்பியுடன் வந்து அவனை எபப்பி மாத்திரை கொடுத்துப் படுக்க வைத்துக் கொண்டே கடிந்து கொண்டாள்..

“காய்ச்சலைத்தானே இழுத்துக் கொண்டு வந்தேன்.. சொப்னா மாதிரி யாரையும் அழைத்துக் கொண்டு வந்து விடவில்லையே.. எதற்கு இப்படிக் கோபித்து கொள்கிறாய்..?”

காய்ச்சல் வேகத்திலும் கிண்டலாய் அவன் கூற அனுராதாவின் இதழ்களில் துயரப் புன்முறுவல் தோன்றியது.

இவன் மட்டும் அவள் இதயத்தை அறிந்து கொண்டவனாக இருந்திருந்தால் இந்தத் துன்பம் இல்லையே.. அவள் பெருமூச்சுடன் எழுந்து வெளியில் சென்றாள்..

மறுநாள் அனுராதா அலுவலகத்திற்கு விடுப்புச் சொல்லிவிட்டு ஆகாஷின் அருகிலேயே இருந்து கவனித்துக் கொண்டாள்.. ஆகாஷ் கல்லூரிக்கு போனில் தகவல் சொல்லிவிட்டான்..

பிற்பகல் மூன்று மணி அளவில் வாசலில் காலிங்பெல் ஒலித்தது.. அனுராதா போய் கதவைத் திறந்தாள்..

“ஹாய்..” என்றவாறு சொப்னா நின்றிருந்தாள்..

‘இவள் எங்கே வந்தாள்..?’ என்று எண்ணமிட்டபடி அனுராதா தலையை மட்டும் அசைத்தாள்..

“ஆகாஷ் எங்கே..?”

“அவருக்கு உடல்நிலை சரியில்லை.. காய்ச்சல்..”

“தெரியும்.. அதனால்தான் பார்க்க வந்தேன்..”

“அவர் டேப்லெட் சாப்பிட்டுவிட்டு அயர்ந்து தூங்குகிறாரே..”

“ஈஸிட்..? எங்கே தூங்குகிறார்..? மாடியில்தானே..”

அவளாகக் கேள்வியையும் கேட்டுப் பதிலும் சொல்லிக்கொண்டவள் ஒயிலாக மாடிப் படியேற ஆரம்பித்தாள்.. அனுராதா திகைத்து விட்டாள்..

‘இவளென்ன ராகினியை விட மோசமாக இருக்கிறாளே.. அவர் பெட்ரூம் வரை போகிறாளே..’

கோபத்துடன் அவளும் பின் தொடர்ந்தாள்.. வெகு சுவாதீனமாய்,

“ஆகாஷ்..” என்று அழைத்தபடி பெட்ரூம் கதவைத் திறந்தாள் சொப்னா.. அவளது குரல் கேட்டு உடல் தூக்கிப் போட கண்விழித்த ஆகாஷ்..

‘என்னடா.. இது சொப்னாவின் குரல் போல இருக்கிறதே..’ என்று திகைத்தபடி எதிரே பார்க்க அவள் நிஜமாய் நின்று கொண்டு,

“உடம்பு சரியில்லையா..?” என்று கேட்டுக் கொண்டிருந்தாள்..

அவ்வளவுதான் திடுக்கிட்டு வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்த ஆகாஷ் கோபத்துடன் சொப்னாவின் பின்னால் நின்று கொண்டிருந்த அனுராதாவைப் பார்த்துக் கத்தினான்..

“வாட் இஸ் திஸ் அனு..? உனக்கு கொஞ்சம் கூ மேனர்ஸ் என்பதே தெரியாதா..? இல்லை அது சுத்தமாய் கிடையாதா..? வீட்டுக்கு வந்த விருந்தாளியை பெட்ரூம் வரை வர விடுவார்களா..? ஹாலில் உட்கார வைத்து விட்டு என்னை எழுப்பிச் சொல்ல வேண்டும் என்ற அறிவு கூடவா உனக்கு இல்லாமல் போய்விட்டது..? இடியட்..”

ஆகாஷிற்கு அவ்வளவு கோபம் வரும் என்பதை சொப்னாவும் அனுராதாவும் அன்று தான் உணர்ந்தார்கள்.. அவனது கோபம் கண்டு சொப்னாவின் முகம் சுருங்க அனுராதாவின் முகம் பூவாய் மலர்ந்தது..

அவளுடைய கணவன் பண்பாடு மிக்கவன்.. அவனுடன் பணிபுரியும் பெண்ணின் நாகரிகமில்லாத நடவடிக்கையை அவன் ஜாடையாகக் கண்டிக்கிறான் என்பது அனுராதாவிற்கு புரிந்து விட்டது..

‘இவனுக்கு இது கூடத் தெரிகின்றதே..’

0Shares

Reviews — Idhayathini Salaram / இதயத்தின் சாளரம்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link