Chapter 22

0Shares

“அவங்களை ஏன் திட்டுகிறீர்கள் ஆகாஷ்.. அவர்கள் பாவம் நீங்கள் தூங்குகிறீர்கள் என்றுதான் சொன்னார்கள்.. திட்ட வேண்டுமானால் என்னைத் திட்டுங்கள்.. நானாகத்தான் மாடிக்கு வந்தேன்..” சொப்னா கொஞ்சும் குரலில் கூறினாள்..

“நீங்கள் இதில் தலையிடாதீர்கள் சொப்னா.. இது எனக்கும் அவளுக்குமான பிரச்சனை.. அவளுக்கு வரவர பொறுப்பில்லாமல் போய்விட்டது.. எனக்கு மட்டும் மூன்றாம் மனிதரின் முன்னால் அவளைத் திட்ட வேண்டுமென்ற ஆசையா..? அப்படித் திட்டினாலாவது அவளுக்கு புத்தி வராதா என்று தான் திட்டுகிறேன்.. அனு.. முதலில் சொப்னா மேடத்தை அழைத்துக் கொண்டு போய் ஹாலில் உட்கார வை.. குடிக்க ஏதாவது கொடு..” ஆகாஷ் சொப்னாவைப் பார்ப்பதைத் தவிர்த்து அனுராதாவிடம் அதட்டினான்..

சொப்னா அடிபட்ட பார்வை பார்த்தாள்.. என்றுமே சிரித்த முகத்துடன் பேசும் ஆகாஷா இது..?

“நான் மூன்றாம் மனுஷியா ஆகாஷ்..”

“நிச்சயமாய்..! சொப்னா தவறாய் எடுத்துக் கொள்ளாதீர்கள்.. நீங்கள் என்னுடன் வேலை செய்கிறவர்கள்.. என்னுடைய நல்ல சிநேகிதி.. நாம் 

வேலை செய்யும் இடத்தில் சகஜமாய் பேசிக் கொள்ளலாம்.. அதற்காக என் பெட்ரூம் வரை வருவதென்றபது சரிவராதது.. உங்களுக்கு பால் போன்ற வெள்ளை மனது.. இந்தப் பழக்கமெல்லாம் தெரிந்திருக்காது.. ஆனால் இவளுக்கு தெரிய வேண்டாமா..? என்னடா.. நமக்குத் தாலி கட்டின புருசன் காய்ச்சலில் கண் திறக்காமல் கிடக்கிறானே.. இந்த நேரத்தில் யார் வந்தாலும் தொந்தரவு செய்ய விடாமல் உட்கார வைத்துவிட்டு தகவல் சொல்ல வேண்டுமே என்ற எண்ணம் இவளுக்கு இருக்க வேண்டாமா..? நீங்கள் பெட்ரூம் வரை வருவது தவறு என்று இவள் உங்களுக்கு உணர்த்தியிருக்க வேண்டாமா..? யாராவது பார்த்தால் என்ன நினைப்பார்கள் என்ற கவலை இவளுக்கு கொஞ்சமாவது இருக்க வேண்டாமா..?” ஆகாஷ் பேசப் பேச சொப்னாவின் ஆர்வம் அடங்கி விட்டது..

“விட்டு விடுங்கள் ஆகாஷ்.. அவர்கள் உங்கள் பிரண்ட்தானே என்று நினைத்திருப்பார்கள்..” சொப்னா சமாதானமாய் கூறினான்..

“அப்படி நினைக்கலாமா சொப்னா.. பெண்களிடம் மனம் புண்பட பேசுவது என் வழக்கம் கிடையாது.. அதனால் எப்படிச் சொல்வது என்று தெரியாமல் நான் மென்று விழுங்கிக் கொண்டு விழிப்பேன்.. இவள் பெண்ணுக்கு பெண் புத்தி சொல்வது போல் சொல்லியிருக்க வேண்டமா..? அன்றைக்கும் அப்படித்தான்.. நீங்கள் பாட்டுக்கு இயல்பாய் காரில் என் பக்கத்தில் உட்கார்ந்து விட்டீர்கள்.. நானும் எப்படிச் சொல்வது என்று தெரியாமல் இவள் வந்து சொல்லட்டும் என்று வந்தால் இவள் கூலாய் பின் சீட்டில் ஏறி உட்கார்ந்து விட்டாள்..”

“நீங்கள்தானே ஆகாஷ் அவர்களை பின்சீட்டில் உட்காரச் சொன்னீர்கள்..” சொப்னா இடைமறித்தாள்..

“நான் சொல்வேனுங்க.. நீங்கள் பக்கத்தில் இருக்கிறீர்கள் என்ற தர்ம சங்கடத்தில் சொல்லியிருப்பேன்.. இவள் என்ன செய்திருக்க வேண்டும்..? ஒன்று உங்களை பின்சீட்டிற்கு போகச் சொல்லிவிட்டு என் பக்கத்தில் உட்கார்ந்திருக்க வேண்டும்.. இல்லாவிட்டால் உங்களையும் அவள் பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டிருக்க வேண்டும்.. இவள் செய்தாளா..?”

“ஏன் நீங்கள் சொல்லியிருக்கலாமே..”

“சொன்னால் தெரிந்து கொள்கிற ஆளாக நீங்கள் இருந்திருந்தால் நானும் சொல்லியிருப்பேன்.. ஆனால் நீங்கள் அப்படியில்லையே..” ஆகாஷ் எரிச்சலுடன் கூற சொப்னா விக்கித்து விட்டாள்..

ஆகாஷ் அதைக் கண்டு கொள்ளாதவனாய் கருமமே கண்ணாய் அனுராதாவின் பக்கம் திரும்பி தன் அர்ச்சனையை தொடர்ந்தான்..

“இவள் பாட்டுக்கு பின் சீட்டில் உட்கார்ந்து விட்டாள்.. நீங்களும் இறங்கி அவள் பக்கத்தில் உட்காரும் எண்ணமில்லாமல் இருந்தீர்கள்.. யாராவது அதை பார்த்துவிட்டால் என்ன செய்வது என்று நான் பதட்டத்துடன் காரை ஓட்டியது எனக்குத்தான் தெரியும்..” என்று சொப்னாவிடம் கூறியவன் மீண்டும் அனுராதாவின் பக்கம் திரும்பிக் கொண்டான்..

‘இவ்வளவு பேசுகிறேன் அசைகிறாளா இவள்..?’ “அனு.. இப்போது சொப்னாவை ஹாலுக்கு கூட்டிக் கொண்டு போகப் போகிறாயா இல்லையா..” கண்கள் சிவக்க உரத்த குரலில் அவன் கூறவும் அனுராதா மௌனமாய் சொப்னாவை ஓர் பார்வை பார்த்தான்..

அந்தப் பார்வையை தாங்க முடியாத சொப்னா மாடிப்படி இறங்கினாள்.. அனுராதா அவளைத் தொடர்ந்தாள்.. அவமானத்தில் சொப்னாவின் முகம் கன்றியிருந்தது.. அனுராதாவிற்கு அவளைப் பார்க்க இரக்கமாக இருந்தது..

“உட்காருங்கள்..” அனுராதா சோபாவைக் காட்டினாள்..

“இருக்கட்டும் மிஸஸ் ஆகாஷ்.. நான் வந்த வேலை தான் முடிந்து விட்டதே.. ஆகாஷைப் பார்த்துவிட்டேன்.. போய் வருகிறேன்..” சொப்னா வாசலை நோக்கி நடந்தாள்..

“நன்றாயிருக்கிறது.. அவர் ஏதோ என் மேலிருக்கிற கோபத்தில் என்னைத் திட்டினால் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்வதா..? அவருக்கு உடம்பு சரியில்லை.. அதனால் சுள்ளென்று கத்திவிட்டார்.. எங்களுக்குள் இதெல்லாம் சகஜம்.. நீங்கள் கெஸ்ட்.. இதைக் கண்டு கொள்ளாமல் உட்காருங்கள்.. ஒன்மினிட்டில் காபியோடு வருகிறேன்.. உங்களுக்கு நான் கலக்கும் காபி பிடிக்கும் தானே.. அப்புறம் என்ன அவசரம்..?” அனுராதா சொப்னாவின் கைபற்றி அமர வைத்தாள்..

சொன்னபடி ஒரே நிமிடத்தில் காபியோடு வந்தவள் சொப்னாவின் எதிரே அமர்ந்து சிரிக்கச் சிரிக்க பேசிக் கொண்டு இருந்தாள்.. மெல்ல.. சொப்னாவின் மனநிலையும் மாறியது.. அவளும் அனுராதாவுடன் கலகலப்பாய் பேச ஆரம்பித்து விட்டாள்..

ஆகாஷ் முகம் கழுவி சட்டையை போட்டுக் கொண்டு கீழே வந்தபோது சொப்னாவும் அனுராதாவும் அவன் வந்ததைக் கூடக் கவனிக்காமல் பேச்சில் ஆழ்ந்திருந்தனர்..

‘என்னடா.. இது.. கனவு ஏதும் காண்கிறேனா..’ ஆகாஷ் சந்தேகத்துடன் அமர்ந்து தொண்டையைக் கனைத்தான்..

“நான் சொல்லவில்லை.. இவர் வந்துவிடுவார்ன்னு.. என்னங்க நீங்க சொப்னாவிடம் பேசிக்கிட்டு இருங்க.. நான் உங்களுக்கு சூடாய் காபி கொண்டு வருகிறேன்..”

அவனுடைய பதிலுக்காக காத்திராமல் அனுராதா சமையலறைக்கு ஓடினாள்.. ஆகாஷ் ஆச்சர்யத்தில் மூழ்கினான்..

“ஷி இஸ் வெரி கியூட் ஆகாஷ்.. யு ஆர் ஸோ லக்கி..” சொப்னாவின் குரல் கேட்டு அவள் பக்கம் திரும்பியவன்,

“யெஸ் யு ஆர் கரெக்ட்..” என்று பெருமையாய் சிரித்தான்..

“என்ன கப்ஸா விடுகிறார் சொப்னா..?” அனுராதா சொப்னாவிடம் வினவியபடி ஆகாஷிற்கு காபியை நீட்டினாள்..

“உங்களைக் கல்யாணம் பண்ணிக்க அவர் கொடுத்து வைத்திருந்தாராம்..” சொப்னா சிரித்தாள்..

“எதைக் கொடுத்து வைத்திருந்தாராம்..” அனுராதா கிண்டலடித்தாள்..

“என் மனதை..” ஆகாஷ் ஆழமாய் அவளைப் பார்த்தபடி கூறினான்..

சொப்னா விடைபெற்றுச் சென்றபின் கதவை மூடிவிட்டு உள்ளே வந்த அனுராதாவைப் பார்த்து,

“இப்படி உட்கார்..” என்றான் ஆகாஷ்..

அனுராதா உட்கார்ந்தாள்..

“ஏண்டி.. நான் அவளை உட்காரச் சொல்லி காபி கொண்டு வரச் சொன்னால் என்னை எரிக்கிற மாதிரி ஓர் பார்வை பார்த்துவிட்டு உள்ளே போய் ஒரு மணி நேரமாய் காபி போடுவ.. இப்ப என்னடாவென்றால் ஒன்மினிட்டில் காபின்னு அசத்துற.. என்னடி விசயம்..? இதில வேற மூழ்காத சிப்பே பிரண்ட்சிப்புதான்னு அவள் பாட்டுப்படாத குறையாக உனக்கு டாட்டா சொல்லி விட்டுப் போகிறாள்.. என்னதாண்டி இங்கே நடக்குது..? எப்படி நீயாய் மலை இறங்கின..?”

“நானாய் ஒன்றும் இறங்கவில்லை.. நீங்கள்தான் மலை இறக்கி விட்டீர்கள்..” அனுராதா கண்கள் பளபளக்க கூறினாள்..

“நானா..?” ஆகாஷ் புருவம் உயர்த்தினான்..

“யெஸ்.. நீங்கள்தான்.. நீங்கள் சொப்னாவிடம் பேசிய முறைதான் என்னை இளக்கிவிட்டது.. 

ஒரு கணவன் அவன் மனைவிக்கு காட்டும் முக்கியத்துவத்தையும்.. மரியாதையும் வைத்துத்தான் மற்றவர்களும்  அவளுக்குத் தருவார்கள்.. இனி மறந்தும் கூட சொப்னா உங்கள் பக்கத்தில் உட்கார மாட்டாள்.. வீட்டுக்கு வந்தால் ஹாலில் உங்களுக்காக வெயிட் பண்ணுவாள்.. எனக்கு அது போதும்.. இப்போது அவள் அவளுடைய லிமிட்டை உணர்ந்து விட்டாள்.. நானும் என் கணவருக்கு ஏற்ற மனைவியாக அவருடைய சிநேகிதிக்கு உபசரணை செய்தேன்..” அனுராதா மூச்சுவிடாமல் பேச ஆகாஷ் வாய் பிளந்தான்..

இதுதான் அனுராதாவா..?

0Shares

Reviews — Idhayathini Salaram / இதயத்தின் சாளரம்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link