Chapter 24
எதற்கும் கட்டுப்படாதவள் தொண்டைமானுக்கு கட்டுப்பட்டு வாக்குக் கொடுத்தாள்.. அதுவும் எப்படி..?
‘நான் அவரைத் தவிர வேறு யாரையும் கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன் தாத்தா..’
அப்போதும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கத் துணிந்தவளாயத்தான் அனுராதா இருந்தாள்.. ஆகாஷை திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஓர் வார்த்தை கூறவில்லை..
ஆகாஷ் டைரியில் ஆழ்ந்தான்.. அவன் தேடிய பக்கம் வந்துவிட்டது.. இதயம் படபடக்க படிக்க ஆரம்பித்தான்..
‘…. யார் அது..? பெயர் ஆகாஷாம்.. பெரிய மன்மதன் போல ஓர் பார்வை பார்த்துக் கொண்டு வீட்டிற்குள் வந்தான்.. அவன் என்னை விழுங்கி விடுவதைப் போல பார்த்ததைக் கண்டு பெண்களையே முன்னே.. பின்னே பார்த்திருக்காத பிறவியென்று தான் முதலில் நினைத்தேன்.. அப்புறம் பார்த்தால்.. ஆள் காலேஜ் லெக்சரராம்.. காலேஜ் வேறு கோ-எஜூகேஷனாம்.. அவன் பார்த்திராத பெண்களா..? அப்புறம் ஏன் என்னை அப்படிப் பார்த்தான்..? டாக்டரேட் பண்ணப் போகிறானாம்.. வாராவாரம் குறிப்புகள் எடுக்க இங்கு வருவானாமே.. ஆனால் ஒன்று.. ஆள் ஜம்மென்றுதான் இருக்கிறான்..’
ஆகாஷின் இதழ்களில் முறுவல் மலர்ந்தது.. அன்று அப்படி முறைத்துவிட்டு சைட் வேறு அடித்திருக்கிறாள்.. ‘கள்ளி..’
‘….. நாளைக்கு அவன் வருவானா..? என்று மில்லாமல் இன்று அன்னலட்சுமிபுரம் இவ்வளவு அழகாய் மாறிவிட்டதே.. எதனால்..? ஊஹூம்.. நான் சொல்ல மாட்டேன்..’
ஆகாஷின் உடல் சூடேறியது.. ‘என்னை எதிர்பார்த்திருக்கிறாள்..’ அவன் பார்வை டைரியில் விழுந்தது..
‘….. அவன் வந்தே விட்டான்.. அவனுடன் வம்பிழுக்க என் உள்ளம் விரும்பியது.. வம்பும் இழுத்தேன்.. அவனோ.. நான் இழுத்த.. இழுப்பிற்கு வளைந்தும் கொடுத்தான்.. என்னை வெட்கமில்லாமல் சைட்டும் அடித்தான்.. ‘வா போ’ வென்று கூப்பிடுகிறான்.. தாத்தா வந்து விட்டால் அறியாப் பிள்ளை போல் முகத்தை வைத்துக் கொண்டு என் பக்கம் பார்வையையே திருப்பாமல் என்ன ஒரு பவ்யமாய் பேசுகிறான்.. நடிகன்.. மகாநடிகன்.. பெண்கள் வாடையே ஆகாத மாதிரி ஓர் பாவனை.. தாத்தாவின் முன்னாலேயே அவர் அறியாமல் என்னைப் பார்த்து கண்களை வேறு சிமிட்டுகிறான் அந்தத் திருடன்.. என் மனதை என்னவோ செய்கிறதே.. அவன் திருடன்தான்.. திருடியது எதை..? என் இதயத்தையா..? எனக்குத் தூக்கம் வரவில்லையே.. என் தூக்கத்தையும் அல்லவா அவன் திருடிவிட்டான்..’
ஆகாஷ் டைரியின் மேல் உதடுகள் படிய முத்தமிட்டான்.. டைரியின் அந்தப் பக்கத்தை தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்.. ஒன்றை நனைத்து.. ஒன்றிலேயே வாழ்பவள்.. அவனை நினைத்தாளா..? அதனால் தான் என் இதயத்தை அறிந்து கொண்டு என்னைத் தொடு என்று பதறினாளா..? ‘அனு.. என் அனு..’
மீண்டும் டைரியை படிக்க ஆரம்பித்தான் அவன்..
‘…… அவனுக்கு என்ன பிடிக்கும் என்று தாத்தாவிடம் கேட்டுக் கொண்டு சமைத்தேன்.. தாத்தாவே ஆச்சரியப் பட்டார்.. ஒரு குழம்பு.. காய் வைக்கவே எனக்கு உடம்பு வணங்காது.. இன்று விருந்து சமைக்கிறேனே என்று.. அவனுக்காக நாள் முழுவதும் அடுப்படியில் தணலில் வெந்தாலும் அது எனக்கு பரம சுகம்தான்.. இது அவனுக்காக.. ஆகாஷ்.. ஆகாயம் போல் பரந்தவன்.. என் மனதில் நிறைந்தவன்.. அவனை நான் காதலிக்கிறேனா..? என்னை நானே கேட்டுக் கொள்கிறேன்.. அந்த விடை என்ன தெரியுமா.? ஆமாம்..!’
அனுபவித்து அந்தப் பக்கத்தைப் படித்தான் ஆகாஷ்.. ஆகாஷ் தொண்டைமானிடம் அவனது காதலைச் சொல்வதற்கு முன்னரே டைரியின் தன் காதலை சொல்லியிருக்கிறாள் அனுராதா..
அவ்வளவு தூரம் தன்னை நேசித்தவள் ஏன் அவன் மேல் வெறுப்பை வாரிக் கொட்டினாள்..? புரியவில்லை ஆகாஷிற்கு..
புரிந்து கொள்ள வேண்டுமென்றால் டைரியைத்தான் படிக்க வேண்டும்.. அவன் நெஞ்சம் படபடக்க படிக்க ஆரம்பித்தான்..
‘….. இன்று அவன் என்னை என்னவென்று அழைத்தான் தெரியுமா..? மேனகையென்று அழைத்தான்.. அவன் தவத்தை கலைக்க வந்த மேனகையாம்.. குறிப்பு எழுதிக் கொண்டிருந்தான்.. கால் கொலுசுகளால் சப்தமெழுப்பி அவன் கவனத்தைக் கலைத்தேன்.. திரும்பி என்னைப் பருகுவது போல் ஓர் பார்வை பார்த்தான்.. அந்தப் பார்வைக் கொன்றும் குறைவில்லை.. ஆனால் மேனகை போல் தவத்தை கலைத்துவிட்டேன் என்று கூறிக் கொண்டே பார்த்து வைத்தான்.. அதுதான் கொஞ்சம் இடிக்கிறது.. எந்த தவத்தை கலைத்தேன்.. கல்வி தவத்தையா.. இல்லை அவன் ஆத்ம தவத்தையா..? அவன் கண்கள் என்னிடம் எதையோ கூற விரும்புகின்றன.. சொந்தம் பாராட்டுகின்றன.. அவன் விழியால் என்னை வளைக்கப் பார்க்கிறான்.. நான் வளைந்து விடாதவள் போல் பிலிம் காட்டினேன்.. மேனகையாமே.. மேனகை ஒரு குழந்தையைப் பெற்றதும் விசுவாமித்திரன் கை விட்டு விட்டாரே.. அது போல் இவனின் மோகமும் என்னைக் கைவிடுமா..? இவனுக்கு என் மேலிருக்கும் தாகத்திற்கு பெயர் என்ன காதலா.. இல்லை மோகமா..? எனக்கு அழ வேண்டும் போலிருக்கிறது.. நான் நானாக இருந்தால் அழ நினைப்பேனா..? நான்தான்.. நானாக இல்லையே..’
ஆகாஷின் புருவங்கள் கேள்வியாய் மேலேறின.. இது பெண்மையின் தவிப்பு.. தன் இதயம் கவர்ந்தவனின் இதயத்தில் தானிருக்க வேண்டுமே.. தன்மேல் அவன் கொண்டுள்ளது காதலாக இருக்க வேண்டுமே.. அது காலம் பூராவும் நிலைக்க வேண்டுமே.. என்ற ஆவேசம்.. ஆற்றாமை.. வேண்டுதல்.. இவை அத்தனையும் அவளது எழுத்தில் தெரிந்தது..
ஆகாஷ் தன்னையே நொந்து கொண்டான்.. அவள் மனதில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லையென்று தலையைப் பிய்த்துக் கொண்டேனே.. ஒரு வினாடியாவது அவள் மனதில் தன் மீது காதல் இருக்கிறதா.. என்று யோசித்துத் தொலைத்தேனா.. அதை விட்டு விட்டு அவளை ஏதோ விலங்கியல் பூங்காவில் வைக்க வேண்டிய பிராணி போல் பார்த்துக் கொண்டு பயந்து விலகி.. அவளை நினைக்கவும் முடியாமல்.. அவளை மறக்கவும் முடியாமல் தவித்துக் கொண்டு கிடந்தேனே.. அவன் மட்டும் அன்னலட்சுமிபுரத்தில் தன் காதலை அவளிடம் சொல்லியிருந்தால் வீணாக இத்தனை வருடங்களை வெம்மையில் கழித்திருக்க வேண்டாமே..
ஓர் பெருமூச்சோடு அடுத்த பக்கத்தைப் புரட்டினான்..
‘….. இன்று அந்த ஆள் காட்டி மோகினி.. வித்தாரக்கள்ளி.. ராகினி வந்திருந்தாள்.. ஆகாஷை விழுங்கி விடுவது போல் பார்த்தாள்.. வெட்கமில்லாமல் பேசினாள்.. என் மனம் பதறியது.. அவனின் பதில் நடவடிக்கை என்னவாக இருக்குமென்று அவன் முகம் பார்த்தேன்.. அவனும் வெட்கமில்லாமல் அவளையும் பார்க்கிறான்.. ஊடே ஊடே என்னையும் பார்த்துக் கொள்கிறான்.. கடைசியில் இவனும் இவ்வளவுதானா.. ராகினி போன்ற ஓர் பெண்ணிடம் இழையுமளவிற்கு இவன் தரமில்லாதவனா.. அவளைப் பார்த்த கண்ணால் என்னையும் பார்ப்பதா..? அவளும்.. நானும் ஒன்றா..? என் மேனி பற்றியெரிந்தது.. என் இதயம் வலித்தது.. அவன் முகத்தில் விழிக்க விருப்பமில்லாமல் என் அறைக்குள் போய் விட்டேன்.. அவனது கார் கிளம்பும் ஓசை
கேட்டதும் வெட்கம் கெட்டு என் கண்ணில் கண்ணீர் வழிந்தது.. வரலாமா.. இந்த அனுராதா அவனுக்காக அழலாமா..?’
ஆகாஷ் திக்பிரமை அடித்ததுபோல் உறைந்து விட்டான்.. அவன் விளையாட்டாய் செய்தது.. எப்படியெல்லாம் வினையாக மாறியிருந்திருக்கிறது.. அதை அறியாமல் அவளை விழியால் துழாவி ஏமாந்தானே.. வெளியே கடுமை காட்டும் அந்தப் பூவின் பேதை இதயம் எவ்வாறெல்லாம் வருந்தியிருக்கிறது..
ஆகாஷிற்கு தன் மேலேயே கோபம் வந்தது.. எவ்வளவு கிராதகனாய் இருந்திருக்கிறான்.. அவளை சின்னஞ்சிறு பெண்ணாக நினைத்து அவள் உணர்வுகளோடு விளையாடிப் பார்க்க நினைத்து அவள் இதயத்தை உடைத்துவிட்டானே.. அனுராதாவின் பொறாமைத் தீயை தூண்டிவிட்டு அதில் குளிர் காய விரும்பியவன்.. அந்தத் தீயில் அவளது மெல்லிதயம் பொசுங்கிப் போனதை அறிந்து அதிர்ந்தான்..
Reviews — Idhayathini Salaram / இதயத்தின் சாளரம்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.