Chapter 26
அடுத்துப் படிக்க ஆகாஷிற்கு நடுக்கமாய் இருந்தது.. என்ன எழுதியிருப்பாள் என்பது அவனுக்குத் தெரிந்தது தானே.. ஒரு வழியாய் படிக்க ஆரம்பித்தான்..
‘….. வெயிலில் களைத்து வந்திருந்தான்.. எனக்கு மனம் தாங்கவில்லை.. அவசரமாய் மோரைக் கலக்கி தம்ளரில் ஊற்றி ரெடியாக வைத்துக் கொண்டேன்.. தாத்தாவின் குரலுக்காக காத்திருந்தேன்.. அவரும் குரல் கொடுத்துவிட்டார்.. மோரை எடுத்துக் கொண்டு போனால்.. ராகினி ஜூஸுடன் வந்து நிற்கிறாள்.. மனம் வலிக்கத் திரும்பினால் இவன் விட மாட்டேன் என்று மோரைக் கேட்டான்.. கொடுக்கப் போகையில் ராகினி அதைத் தட்டிவிட்டு விட்டாள்.. அவன் உடலெல்லாம் மோர் கொட்டி நனைத்து விட்டது.. அவன் ராகினியை பார்த்த பார்வை அவளை சுட்டெரிப்பதாய் இல்லை.. தாத்தா சின்ன அண்ணனின் சட்டையைக் கொடுக்கச் சொன்னார்.. கொடுத்தேன்.. அவனுடைய சட்டையை பாத்ரூமிலேயே விட்டுவிட்டு வந்துவிட்டான்.. ஆனால் அதற்குப் பின்னால் நடந்தது.. ராகினி அவன் கையைப் பிடித்து இழுக்க.. இவன் அவள் கைக்குள் தன் கையை விட்டுக் கொண்டு கெஞ்ச.. அவள் கொஞ்ச.. என்னால் அதற்கு மேல் தாங்க முடியாமல் போய்விட்டது.. வெடித்து விட்டேன்.. அவன் வேண்டுமா.. இல்லை நான் வேண்டுமா என்று தாத்தாவிடம் கேட்டேன்.. அவன் போய் விட்டான்.. என்னை விட்டு.. என் வாழ்வை விட்டு.. என் காதலை அறியாமல்.. என் வேதனை புரியாமல்.. போயே விட்டான்.. இனி வரமாட்டான்.. அவன் நடந்த இடங்களில் நடந்து பார்க்கிறேன்.. அவன் அமர்ந்த இடங்களில் அமர்ந்து பார்க்கிறேன்.. அவன் விட்டுச் சென்ற சட்டையில் அவன் வாசனை.. என்று தணியும் என் வேதனை.. அவன் தொட்ட கையேடும் பேனாவும்.. அவனின்றி தனியே மாடியறையில் கிடக்கிறது.. இனி இவைதானே என் நினைவுச் சின்னங்கள்..’
அவனை வெளியேற்றிவளின் இதயத்தில் புதைந்திருந்த எண்ணங்கள் டைரியில் சிதறிக்கிடந்தன.. அவளின் காதலின் கதையை அவை கூறின.. கண்கள் பனிக்க அதை படித்து முடித்தவன் கைகளில் முகம் புதைத்து அழுதான்.. பின் முகத்தை துடைத்துக் கொண்டு அவளின் காதலைச் சொன்ன அடுத்த வருட டைரியைப் பிரித்துப் படித்தான்..
‘….. அன்னலட்சுமிபுரம் வெறிச்சிட்டு விட்டது.. அவனில்லாத இந்த வீட்டிற்கு.. அவனை நான் வெளியேற்றிய இந்த வீட்டிற்கு.. தாத்தாவிற்காக மட்டுமே வருகிறேன்.. அவன் அமர்ந்திருந்த இடத்தில் அமர்ந்து வேப்பமரத்துடன் உரையாடிக் கொண்டிருக்கிறேன்..’
ஆகாஷ் அடுத்த பக்கத்தைப் புரட்டினான்..
‘…… டிகிரி முடித்து விட்டேன்.. வேலையும் கிடைத்துவிட்டது.. இனிக் கல்யாணம் செய்து கொள் என்கிறார்கள்.. எப்படி..? என்னால் அவனை மறந்து இன்னொருவனுக்கு கழுத்தை நீட்ட முடியுமா..?’
ஆகாஷ் மனம் சிலிர்க்க பக்கங்களைத் தாண்டினான்.
‘….. இன்று தாத்தாவிடம் பஞ்சாயத்து வந்து விட்டது.. யாரோ ஒரு கஸ்டம்ஸ் ஆபிசராம்.. சென்னையில் பெரிய குடும்பமாம்… ஒற்றைப் பிள்ளையாம்.. என்னை ஏதோ ஒரு கல்யாணத்தில் பார்த்தார்களாம்.. என்னைக் கேட்டால் நான் என்ன சொல்வேன்..? முடியாதென்றேன்.. தாத்தாவிடம் புகார் பண்ணிவிட்டுப் போனார்கள்.. தாத்தா மௌனமாய் இருக்கிறார்..’
ஆகாஷ் ஆவலுடன் அடுத்த பக்கத்தைப் பார்த்தான்..
‘… தாத்தாவிடம் சொல்லிவிட்டேன்.. வேறு என்ன செய்வது..? இந்த உலகில் அவர் ஒருவர்தானே எனக்கு ஆறுதல்.. என் மனதை அவர்தானே புரிந்து கொள்வார்.. அதனால்தான்.. எல்லாவற்றையும் கொட்டிவிட்டேன்.. என் பேச்சில் குறுக்கிடாமல் பொறுமையாக எல்லாவற்றையும் கேட்டார்.. கடைசியில் அவசரப்பட்டுட்டியே ராதா.. பொறுமையாய் இருந்திருக்கலாமே.. என்னிடம் சொன்னால் நான் ஏதாவது வழி செய்வேனே.. ஏன் மறைத்தாய் என்றார்.. ஏன் மறைத்தேன்.. அவன் மனதில் தீவிரம் இல்லாதபோது நான் மறைக்காமல் என்ன செய்வது..? அவன் தீராத விளையாட்டு பிள்ளை.. என்னைப் பற்றி அவனுக்கு நினைவு இருக்கிறதோ என்னவோ.. நான் எப்படி இதைச் சொல்ல முடியும்..? எனக்கு கல்யாணமே வேண்டாம் தாத்தா என்று அழுதேன்.. அவர் எதுவும் பேசாமல் மௌனமாய் இருக்கிறார்..’
ஆகாஷ் தலையை உலுக்கித் தன் வேதனையைத் துரத்த முயன்றான்.. அனுராதாவின் காதல் பட்ட துயரங்களைப் படிக்க அவனுக்கு சகிக்கவில்லை.. தன்னைவிட அந்தஸ்தில் உயர்ந்த மாப்பிள்ளையை மறுத்துவிட்டு அவனுடைய கையை பிடித்தவளை எத்தனை முறை ‘உன் அப்பா தேடிப்பிடித்து என் தலையில் உன்னைக் கட்டினார்’ என்று சொல்லியிருப்பான்..
அடுத்து அனுராதாவின் டைரி சொல்லும் விவரங்களை அறிய பக்கங்களைப் புரட்டினான்..
‘….. தாத்தாவிற்கு உடல்நிலை மோசமாகிவிட்டது.. தந்தி வரவும் அன்னலட்சுமிபுரத்திற்கு பறந்து வந்தேன்.. தாத்தா படுத்த படுக்கையாய் ஆகிவிட்டார்.. என்னைக் கண்டதும் கண்களில் ஒளி வந்து விட்டது.. என் கையை இறுகப் பற்றிக் கொண்டு தட்டிக் கொடுத்தார்..’
டைரியின் அடுத்த பக்கங்கள் தொண்டைமானின் உடல்நிலையைப் பற்றியே பேசியது.. பதினைந்தாம் பக்கத்தில் ஆகாஷின் பெயர் வந்தது..
‘….. இன்று அவன் வந்தான்.. தாத்தா கடைசியய் பார்க்க வேண்டுமென்று சொன்னாராம்.. அப்பா வரச் சொன்னாராம்.. வீட்டில் பேசிக் கொண்டார்கள்.. தாத்தாவைப் பார்த்து கண்கலங்கினான்.. வீட்டிலிருப் பவர்களை தாத்தா வரச்சொன்னார்.. நானும் போனேன்.. அத்தனை பேரின் மத்தியிலும் தாத்தா அவனிடம் வாக்குறுதி கேட்டு விட்டார்.. என்னால் தை ஜீரணிக்க முடியவில்லை.. வாழ்நாளெல்லாம் தலை நிமிர்ந்து வாழ்ந்து பழக்கப்பட்ட என் தாத்தா.. வயோதிகக் காலத்தில் மகனிடம் கூட வந்து தங்காமல் சிங்கம்போல் தனித்து வாழ்ந்த என் தாத்தா.. எனக்காக அவனிடம் கை நீட்டி வாக்குறுதி கேட்டார்.. அதை விட அதிசயமாய் அவன் உடனே வாக்குக் கொடுத்தான்.. தாத்தா என்னிடமும் கேட்டார்.. நான் என் மனதிலிருந்த முடிவைக் கூறினேன்.. அவனுடைய கையுடன் என் கையை சேர்த்துப் பிடித்து முத்தம் கொடுத்த என் தாத்தாவின் உயிர் பிரிந்துவிட்டது.. கடைசியில் கண்மூடும் முன்னர் என் மனதுப்பிரகாரம் என் கல்யாணத்தை நிச்சயம் பண்ணி விட்டுப் போய் விட்டார் என் தாத்தா.. அவர் பின்னாலேயே சுற்றி வந்து வளர்ந்தவள் நான்.. என் மனமறிந்த வாழ்க்கையை எனக்குக் கொடுத்துவிட்டுப் போய் விட்டார் என் தாத்தா.. ஒரு வார்த்தை கூட என்னைக் கடிந்து சொல்லாமல்.. ஒருவரிடமும் என் மனதிலிருப்பதை வெளிக்காட்டாமல்.. யாரிடமும் என்னை விட்டுக் கொடுக்காமல்.. வாக்குறுதி என்ற பெயரில் அவனைக் கட்டிப்போட்டு விட்டு காற்றோடு கலந்து விட்டார் என் தாத்தா.. என் கண்ணீர் நிற்க மறுக்கின்றது.. தாத்தாவின் கருணைக்கு முன் என் பிடிவாதம் தோற்றுவிட்டது.. நான் அவனை ஏற்றுக் கொள்ள சித்தமாகிக் கொண்டிருக்கிறேன்.. அவன் என் தாத்தாவை மதித்து வந்தான்.. அவர் கேட்ட கடைசி நொடி வாக்குறுதியைக் கொடுத்து அவர் கண்மூடும் நேரத்தில் அவருக்கு மனநிம்மதியைக் கொடுத்தான்.. அதற்காகவாவது அவன் என்ன செய்தாலும் சகித்துக் கொண்டு அவன் காலடியில் வாழ்ந்து விடுவேன்.. நன்றி தாத்தா..’
ஆகாஷின் விழிகளில் சுரந்த கண்ணீர் வற்ற வெகு நேரமாயிற்று..
Reviews — Idhayathini Salaram / இதயத்தின் சாளரம்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.