Chapter 28
ஆகாஷின் தழுவலில் வேகம் இருந்தது.. ‘உன்னைப் புரிந்து கொள்ளாமல் போய் விட்டேனே..’ என்ற தாபம் இருந்தது.. அவளுடைய மனதில் தான் மட்டும்தான் இருக்கிறோமென்ற கர்வம் இருந்தது.. இவை எல்லா வற்றிற்கும் மேலாக அவளின் இதயத்தின் சாளரக் கதவுகளை திறந்து உண்மை உணர்ந்து விட்ட நெகிழ்வு இருந்தது..
அனுராதா அவனுடைய அணைப்பிலிருந்து விடுபட விரும்பவேயில்லை.. ஆண்டுக் கணக்கில் அடக்கி வைத்திருந்த தவிப்பை அவன் உணர்ந்துவிட்டதால் எழுந்த எல்லையற்ற நிம்மதியுடன் அவனின் தோள் தழுவி முகம் புதைத்தாள்.. ஆகாஷ் அவளின் கூந்தல் கோதி அவளது உச்சந்தலையில் முகம் புதைத்தான்.. அனுராதாவின் உடல் லேசாய் நடுங்கியதே ஒழிய அவள் விலகவில்லை.. அவளது பின்னங்கழுத்தில் முத்தமிட்டான்.. அவள் இசைந்தே நின்றாள்.. அனுராதாவின் முகம் விலக்கி அவள் விழிகளை ஊடுருவிப் பார்த்தான் ஆகாஷ்..
எப்போதும் விழி திருப்பிக் கொள்ளும் அனுராதா அவன் விழியோடு விழி கலந்தாள்.. அவளது விழிகளில் எல்லையற்ற காதல் இருந்தது..
‘கரையில்லாக் காதல் என்பது இதுதானோ..’ ஆகாஷ் அவளை மீண்டும் அணைத்து அவள் கன்னத்தில் முத்தமிட்டு தழுவிக் கொண்டான்.. அவள் அவனது அணைப்பில் அடங்கிக் கிறங்கி நின்றாள்.. ஆகாஷின் வாய் பாரதியாரின் பாடலைப் பாடியது..
“கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளம்தான்
கள்வெறி கொள்ளுதடி..
உன்னைத் தழுவிடிலோ – கண்ணம்மா
உன்மத்தம் ஆகுதடி..”
அனுராதாவை அணைத்த வண்ணம் கட்டிலில் சரிந்தான்.. அவள் அவன் மார்பில் முகம் புதைத்தாள்.. அவள் கண்களில் நீர் வழிந்தது.. ஆகாஷ் அதைத் துடைத்தவாறு பாடினான்..
“உன் கண்ணில் நீர் வழிந்தால்..
என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என் கண்ணில் பாவையன்றோ – கண்ணம்மா
என்னுயிர் நின்னதன்றோ..”
அனுராதா விம்மலுடன் அவன் மார்பை இறுக்கித் தழுவிக் கொண்டாள்.. ஆகாஷ் அவளது முடிகோதியவாறு வினவினான்..
“இன்னும் ஏன் கண்ணீர் விடுகிறாய்..? நீயும் நானும் அழுத காலமெல்லாம் மலையேறி போயே போயாச்சு.. இனிச் சிரி..”
“எப்படிச் சிரிக்க..? நான் உங்கள் மேலுள்ள காதலால் அழுதேன்.. நீங்கள் எங்கே அழுதீர்களாம்..”
“இது வேறா..? ஏண்டி ஆண்பிள்ளை வாய்விட்டு அழுவானா..? நான் மனதிற்குள்ளேயே அழுதேன்டி..”
“எதற்கு.. என் தாத்தா வாக்குக் கேட்டு என்னை உங்கள் தலையில் கட்டி வைத்து விட்டாரென்று தானே..”
“உன் புத்தி உன்னை விட்டு எங்கே போகும்..? ஏண்டி.. உன் தாத்தாவிடம் மரியாதையும் அன்பும் பாசமும் வைத்தவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள்.. அவர்களில் யாரும் இப்படி ஓர் வாக்குறுதியைக் கேட்டால் உடனே கொடுத்து விடுவார்களா..?”
“நான் உங்களைத்தானே காதலித்தேன்.. உங்களைத் தவிர வேறு யாரையும் கல்யாணம் பண்ணிக் கொள்ள மாட்டேனென்று தாத்தாவிடம் சொல்லிவிட்டேன்.. அதனால் அவர் உங்களிடம் வாக்குறுதி கேட்டார்.. உங்கள் பாஷையில் சொல்வதாக இருந்தால்.. உங்களிடம் கேட்காமல் வேறு யாரிடம் கேட்பார்..?”
“அடி என் புத்திசாலி பெண்டாட்டியே.. உன் பார்வையில் நான் ஒரு தீராத விளையாட்டுப் பிள்ளை.. ராகினி போன்ற பெண்களிடம் பல்லைக் காட்டுபவன்.. அவர்களது சாகஸப் பேச்சுக்களில் மயங்கி.. அவர்கள் ‘தோ..தோ..’வென்று அழைத்தால் வாலை ஆட்டிக் கொண்டு அவர்கள் பின்னால் பக்கத்து வீட்டு ஜிம்மி மாதிரி போய் விடுபவன்..”
“நான் உங்களை அப்படிச் சொன்னேனா..?”
“சொல்லவில்லை நினைத்தாய்..”
“ச்சு.. என்ன நீங்கள்.. நாய்.. பேயென்று சொல்கிறீர்கள்..”
“நாயென்று என்னை நினைத்து பேய் போல நீ மாறிப்போனாய்..”
“ச்சு.. என்னை விடுங்கள்..”
“விடுவதா.. உன்னையா.. இனிமேலா.. ஊஹூம்.. கடைசிவரை உன்னை விடுவதாக இல்லை என் கண்மணியே..”
“இந்தக் கொஞ்சலில் ஒன்றும் குறைச்சல் இல்லை..”
“மற்றவற்றிலும் குறைச்சல் இல்லை.. இனி நீ பார்க்கத்தானே போகிறாய்.. அதுதான் உன் இதயத்தில் என்ன இருக்கிறது என்பதை அறிந்துவிட்டேனே.. இனி உன்னால் தடை சொல்லவும் முடியாது.. நீ தடுத்தாலும் நான் கேட்கவும் மாட்டேன்..”
அவன் அவள் தோளை இறுக்கிப் பிடித்தான்.. அனுராதாவின் முகம் சிவந்தது.. அவன் பிடி இரும்புப் பிடியாய் இருந்தது.. இன்பமான வலியை அவள் உணர்ந்தாள்.. ஆயினும் பேச்சை வளர்த்தாள்..
“ஆயிரம்தான் சொல்லுங்கள்.. என் தாத்தா கேட்டுக் கொண்டதால் தான் நீங்கள் கல்யாணத்திற்கு ஒப்புக் கொண்டீர்கள்..”
“அது என்னவோ உண்மைதான்.. ஆனால் உன் தாத்தா கேட்டுக் கொள்ளாமல் இருந்திருந்தால்.. நான் காலமெல்லாம் பிரம்மச்சாரியாய் இருந்திருப்பேன்.. அதுவும் உண்மைதான்..”
“என்னது..?” விழிகளை அகல விரித்தாள் அனுராதா.
“ஏண்டி இப்படித் தெறித்து விழுந்து விடுவதைப் போல் கண்களை உருட்டி விழிக்கிறாய்.. உன் தாத்தா கேட்டுக் கொண்டாலும்.. உன் அபிப்ராயப்படி ஓர் உல்லாசியான.. ஊர் சுற்றுகின்ற ஆகாஷ் எனப்படும் நான்.. அகங்காரி.. அடங்காப்பிடாரி.. என்று மனதார நான் நம்பிக் கொண்டிருக்கும் உன்னைத் திருமணம் செய்து கொள்ள எப்படி சம்மதம் தருவேன்..?”
அனுராதா விழித்தாள்.. புரியாமல் அவனிடமே கேட்டாள்..
“அதுதானே.. ஏன் சம்மதம் சொன்னீர்கள்..?”
புரியாமல் சிறு குழந்தைபோல் அவள் கேட்ட விதம் அவனுக்கு சிரிப்பை வரவழைத்தது.. செல்லமாக அவளின் பின்னந்தலையில் ஒரு தட்டுத் தட்டினான்..
“ம்ம்.. உணக்கையாய் இப்போது இந்தக் கேள்வியைக் கேளு.. இதை முதலிலேயே நீ கேட்டிருந்தால்.. உன் இதயத்தை நான் அறிந்து கொள்வதற்கு முன்.. என் இதயத்தை நீ அறிந்து கொண்டிருப்பாய்..”
“இப்போது தான் சொல்லுங்களேன்..”
“நீ மட்டும் சொன்னாயா..?”
“அது ஒன்று இருக்கின்றதா..? அப்போச்சரி.. நானாய் கண்டுபிடித்து விட்டு அதன் பின்னால் உங்களுடன் பள்ளி கொள்கிறேன்.. இப்போது என்னை விடுங்கள்..”
“அடிப்பாவி.. முதலுக்கே மோசம் செய்கிறாயே.. நீ இதிலேயே குறியாக இரு.. விளங்கிவிடும்.. விலகுவதைப் பற்றி நீ நினைத்தாலே அடித்துவிடுவேன்.. ஒழுங்காய்.. மரியாதையாய்.. இப்படியே இரு..”
“அப்படியென்றால் சொல்லுங்கள்..”
“பிளாக்மெயில் பண்ணுகிறாயா..?”
“அப்படித்தான் வைத்துக் கொள்ளுங்களேன்..”
“நீ என் பெண்டாட்டிடீ.. வேறு மாதிரி சொல்கிறாய்..”
ஆகாஷ் பலமாய் சிரித்தான்.. அனுராதா அவன் கையைப் பிடித்து பலமாய் கிள்ளினாள்..
“ஆண்பிள்ளைப் புத்தி இப்படித்தான் குதர்க்கமாய் நினைக்கும்.. பேசுகிற பேச்சைப் பார்.. இது என்னவோ நல்ல பிள்ளையாம்.. நான் நம்ப வேண்டுமாம்..”
“நம்பாவிட்டால் போ.. உன் தாத்தா ஏன் என்னை நம்பி வாக்குறுதி கேட்டார்.. அதை முதலில் தெரிந்து கொள்..”
“அதைத்தானே நானும் கேட்கிறேன்..”
அவன் புன்னகை மலரச் சொன்னான்.. சொல்லச் சொல்ல அனுராதாவின் இதயத்தின் சாளரக் கதவுகள் மகிழ்வுடன் திறந்து கொண்டன..
Reviews — Idhayathini Salaram / இதயத்தின் சாளரம்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.