Chapter 29

0Shares

“அனு.. உன் தாத்தா ஏன் என்னை அவரது கடைசி நேரத்தில் அழைத்து அந்த வாக்குறுதியைக் கேட்டாரென்று உன்னை விட எனக்கு நன்றாகத் தெரியும்.. உன் தாத்தாவைப் பற்றி நீ அறிந்தது இவ்வளவு தானா..? அவர் ஒரு பக்கா ஜென்டில்மேன்.. பேத்தி மீது எவ்வளவுதான் பிரியமும், கனிவும் இருந்தாலும் அவள் வீட்டை விட்டு வெளியேற்றியதால் மனதில் வலியோடு விலகிப்போன என்னை அழைத்துப் பேத்தியின் விருப்பத்தை நிறைவேற்ற வாக்குறுதி கேட்கமாட்டார்.. இதை நீ முதலில் புரிந்து கொள்..”

“நீங்கள் தாத்தாவின் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தவர் என்பதால் இருக்கலாம் அல்லவா..?”

“உன் தாத்தாவிடம் எனக்கு இருந்தது மதிப்பும், மரியாதையும் தான் நன்றிக்கடன் இல்லை.. என் வாழ்வை பணயம் வைக்கும் வாக்குறுதியை ஒருவர் மீது வைத்திருக்கும் மரியாதையின் பொருட்டு நான் கொடுப்பவன் அல்ல.. இதை நீ இரண்டாவதாய் புரிந்து கொள்..”

“அப்புறம் ஏன் வாக்குக் கொடுத்தீர்கள்..?”

ஆகாஷ் அவளை அணைத்து அவளது நெற்றியில் முத்தம் இட்டான்.. அவளது கன்னம் தடவி உச்சி முகர்ந்தான்.

“அனு.. மைடியர் அனு..” என்று கொஞ்சினான்..

“என்னங்க..” அவள் புரியாமல் வினவினாள்..

“நான் உன்னைத்தான் காதலித்தேண்டி என் முட்டாள் பெண்டாட்டியே.. உன்னை என் உயிருக்குயிராய் காதலித்தேன்..”

“பொய்..” அனுராதா நம்ப மறுத்தாள்..

“எது பொய்..? அன்னலட்சுமிபுரத்திற்கு நான் வந்த வேலை முதல் வாரத்திலேயே முடிந்துவிட்டது.. அது தெரியுமா உனக்கு..? என் படிப்பிற்கு தேவையான குறிப்பு களை எடுத்துவிட்டேன்.. அதன் பின்னாலும் குறிப்பெடுக்க நான் அன்னலட்சுமிபுரத்திற்கு வருகிறேனென்று காரணம் சொன்னதுதான் பொய்.. அதை நீயும் புரிந்து கொள்ளாமல் என் காதலையும் தெரிந்து கொள்ளாமல் என்னிடம் வெறுப்பைக் காட்டி விரட்டினாய்..”

“அது.. எதனால்.. என்றால்..” அனுராதா தவித்தாள்..

அவளது பூவிதழ்களின் மீது கை வைத்து அவள் பேசுவதை தடுத்த ஆகாஷ்..

“வேண்டாம்டி.. சிரமப்பட்டுக் கொள்ளாதே.. எனக்குத் தெரியும்.. உன் டைரிகளை படித்துவிட்டேன்.. பொதுவாக அடுத்தவரின் டைரிகளை.. அது கட்டின மனைவியாக இருந்தாலும் படிக்கக் கூடாதென்ற கொள்கையுடையவன்தான் நான்.. ஆனால் உன் இதயத்தை அறிந்து கொள்ள எனக்கு வேறு வழி தெரியவில்லை.. அனு.. ஸாரி..” என்று கூறினான்..

அனுராதா செல்லமாய் அவன் மார்பில் குத்தினாள்.

“நான் அதைப்பற்றி எதுவும் கேட்டேனா..?”

“கேட்காவிட்டாலும் நான் விளக்கம் சொல்ல வேண்டுமில்லையா..? அனு.. நான் அன்னலட்சுமிபுரத்தில் முதன் முதலாய் கண்டபோதே என்னை நீ கவர்ந்து விட்டாய்.. உன் இயல்பான தோற்றமும்.. வெடுக் வெடுக்கென்றே பேச்சும்.. தேவையில்லாமல் வழியாத குணமும்.. நிமிர்வும் என்னை வசீகரித்து விட்டது.. உன்னைப் போல் ஒருத்தியை நான் அதற்கு முன்பும் கண்டதில்லை.. பின்பும் கண்டதில்லை..”

ஆகாஷ் சொல்லச் சொல்ல அனுராதா நெகிழ்ந்து போய் அவனது கரத்தில் முத்தமிட்டாள்.. மனைவியை ஆசையுடன் அணைத்துக் கொண்ட ஆகாஷ் தொடர்ந்தான்.. 

“நீ என்னை வசீகரித்து விட்டாய்.. உன்னைக் காணவே என் படிப்பை சாக்காய் சொல்லி.. நான் அன்னலட்சுமி புரத்திற்கு வந்தேன்.. உன்னிடம் வம்பிழுக்க எனக்கு பிடிக்கும்.. அப்போதுதான்.. அவள் நம் வாழ்வில் குறுக்கிட்டாள்..”

அனுராதாவின் முகம் வெறுப்பை பிரதிபலித்தது..

“அவளைப் பற்றிப் பேசாதீர்கள்.. அவளை நினைத்தாலே எனக்கு கொலை வெறி வருகிறது.. 

அன்று அவளை அடிக்கவே போய்விட்டேன்.. தாத்தா தடுத்துவிட்டார்..”

“விடுடி.. நீயெல்லாம் கோபப்படும் அளவிற்கு அவள் பெரிய ஆளா..? அனு.. அவளை மையமாக வைத்து உன்னை வம்பிழுக்கவே நான் ஆசைப்பட்டேன்.. சத்தியமாய் அவள் என்ன பேசினாள் என்பதைக் கூட நான் கவனிக்கவில்லை.. அனு..”

“அவளை ஆர்வமாய் பார்த்தீர்களே..”

“உன் பொறாமையைத் தூண்டிவிடத்தான் அப்படிப் பார்த்தேன்.. அடிக்க வராதே.. நான் பாவம்டி.. உன் புருசன்.”

“திருடன்..”

“திருடன்தான்.. அவளை ஓர் விநாடி ஆர்வமாய் பார்ப்பதுபோல் நடித்துவிட்டு உன் முகம் மாறுவதைப் பார்த்துக் கொண்டே இருப்பேன்.. உன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும்.. அதைப் பார்க்க எனக்குப் பெருமையாய் இருக்கும்.. என் பார்வை லேசாய் திசை மாறினால் கூட நீ பொறுத்துக் கொள்ளாமல் கோபம் கொள்வாய் என் மனதிற்குள் தென்றல் அடிக்கும்..”

“ஆனால் என் மனதில் புயல் அடித்ததே..”

“அதுதான் எனக்கு வருத்தம் அனு.. என் விளையாட்டு விபரீதமாய் போய்விடும் என்பதை நான் அறியவில்லை.. நீ மட்டும் பொறுமையாய் இருந்திருந்தால் நான் உன்னிடம் என் காதலைச் சொல்லியிருப்பேன்.. உனக்கு ஒன்று தெரியுமா..? நீதான் என் காதலை உணர்ந்து கொள்ளவில்லை.. அந்த ராகினிப் பேய் நன்று உணர்ந்திருந்தாள்..”

“அவள்தான் விவரமானவளாயிற்றே..”

“அதுவேதான்.. அவளைப்போய் என்னுடன் இணைத்து எப்படி நீ நினைத்தாய் அனு.. நான் காரில் ஏறும்போது அவள் அருகே வந்து வேண்டுமென்றே பேசுவாள்.. நான் அவளுக்கு உறைப்பது போல் காட்டமாய்த்தான் பேசுவேன்.. எதுவுமே நடக்காதது போல் முகத்தை வைத்துக் கொண்டு அவள் டாட்டா சொல்லும் போதே எனக்கு யோசனைதான்..”

அவன் சொல்லவும் அனுராதா புரியாமல் அவன் முகம் பார்த்தாள்.. அவன் முகம் தீவிரமான சிந்தனையில் இருந்தது..

0Shares

Reviews — Idhayathini Salaram / இதயத்தின் சாளரம்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link