Chapter 30
“அனு.. அவள் என்னிடம் வந்து பேசும்போது நான் ஒன்று சொன்னால் அவள் அதற்கு சம்பந்தமேயில்லாதது போல் வேறு ஒன்றைச் சொல்வாள்.. நான் வெறுப்புடன் காரைக் கிளப்புவேன்.. அவள் எதுவுமே நடக்காதது போல் டாட்டா காட்டுவாள்.. அனு எனக்கு என்ன தோன்றுகிறது என்றால்.. நீ என்னைப் பார்க்க மொட்டை மாடிக்கு
வந்து நின்றிருந்ததை அவள் பார்த்திருக்க வேண்டும்.. அதனால்தான் நீ என்னை தவறாக நினைக்க வேண்டு மென்று அப்படிச் செய்திருக்கிறாள்..” ஆகாஷின் முகம் கோபத்தில் சிவந்தது..
“அவளெல்லாம் ஏமாற்றும் அளவிற்கு நான் மக்காய் இருந்திருக்கிறேனே..” அனுராதா வேதனையுடன் சொன்னாள்..
“நீ ஏண்டி இதற்குப் போய் வேதனைப்படுகிறாய்..? கோபம் இருக்குமிடத்தில்தான் குணம் இருக்கும்.. குணம் இருப்பவளிடத்தில் தான் காதல் பிறக்கும்.. அவள் குணம் கெட்டவள்.. அவளை நான் வெறுப்பாகத்தான் பார்ப்பேன்.. அவளால் ஒரு போதும் என்னைக் கவர முடியாது என்பதை அவள் நன்கு அறிவாள்.. அவளது நோக்கம் உன்னையும் என்னையும் பிரிப்பதாகத்தான் இருந்திருக்க வேண்டும்.. அவள் ஒரு முறை என்னிடம் ‘அனுராதா தான் உங்கள் கண்ணுக்கு தெரிகிறாளா..? நான் தெரியவில்லையா..?’ என்று கேட்டாள்.. நான் முறைத்துக் கொண்டே போய் விட்டேன்.. உன்மேல் எனக்கிருந்த காதலையும் ஆர்வத்தையும் உன்னைவிட அவள் நன்கு அறிவாள்.. அதனால்தான் திட்டம் போட்டு நம் நிம்மதியை கெடுத்து விட்டாள்..” ஆகாஷ் பெருமூச்சு விட்டான்..
“சரியாகச் சொன்னீர்கள் அத்தான்..” அனுராதா ஆமோதிக்க..
“ஏய்.. என்னவென்று என்னை அழைத்தாய்.. திரும்பச் சொல்லு..” என்று ஆகாஷ் அவளைக் கொஞ்ச ஆரம்பித்து விட்டான்..
முகம் சிவக்க அனுராதா அவன் மார்பில் புதைந்து கொண்டாள்.. சற்று நேரம் அவளிடம் கொஞ்சிக் கெஞ்சி அவள் முகம் விலக்கிப் பார்த்த ஆகாஷ் காதலுடன் அவளைப் பார்த்தான்..
“என் பெயர் ஆகாஷ்.. அத்தானா..?” ஆகாஷ் வம்பிழுத்தான்..
“நான் அப்படித்தான் கூப்பிடுவேன்..” அனுராதா அவனது சட்டையின் பட்டனைத் திருகினாள்..
“இப்ப ஏண்டி பட்டனைப் பிய்க்கிறாய்..?”
“ம்ம்.. சும்மாயிருங்கள்..”
“நான் சும்மாதானே இருக்கிறேன்..”
“அத்தான்.. ப்ளீஸ்..”
“சரி அதை விட்டுவிட்டேன்.. ராகினி ஒரு ஸாடிஸ்ட்.. அவளது திட்டத்திற்கு நாம் பலியாகிவிட்டோம்.. உனக்கு என்னைப் பார்க்கவே பிடிக்காமல் போய்விட்டது.. இதை உன் தாத்தாவிடம் நீ சொல்லி கொண்டிருப்பதை நான் கேட்டுவிட்டேன்.. இதில் என்ன ஸ்பெசாலிட்டின்னா.. நான் கேட்டுவிட்டதை உன் தாத்தா பார்த்து விட்டார்..” ஆகாஷ் அன்றைய நாளின் நினைவிற்கு போனான்..
“எப்போது..” அனுராதா விழி மலர்த்திக் கேட்டாள்..
“நீ எனக்கு காபி கொண்டு வர மறுத்தாயே அப்போது..”
“ஸாரி அத்தான்..”
“சரிடி பெண்டாட்டி.. அவரே எனக்கு அன்று காபி கொண்டு வந்து கொடுத்தார்.. உன் பேச்சுக்கு சமாதானம் சொன்னார்.. அப்போதுதான்.. நான் அவரிடம் உன்
மீது எனக்கிருந்த காதலைக் கூறினேன்.. நீ உன் காதலை சொல்லலாமேயென்று கேட்டார்.. என்னை வெறுப்பவளிடம் எனது விருப்பத்தை எப்படிச் சொல்வது ஐயாவென்று கேட்டேன்.. உன் மேலிருந்த கரை காணாத காதலை அவரிடம் சொல்லிவிட்டு அதை உன்னிடம் சொல்லக் கூடாது என்று வேறு சத்தியம் வாங்கிக் கொண்டேன்..”
“நானும் அப்படித்தான் அத்தான்.. உங்கள் மேலிருந்த காலைச் சொல்லிவிட்டு உங்களிடம் சொல்லக் கூடாதென்று சத்தியம் வாங்கினேன்..”
“நமக்குள் எதில் ஒற்றுமை இருந்ததோ இல்லையோ.. இந்த விசயத்தில் எவ்வளவு ஒற்றமை பார்த்தாயா..? நீ என்னை வெறுக்கிறாயாம்.. உன்னிடம் என்னுடைய காதலைச் சொல்வது எனக்கு பிரஸ்டீஜ் இஷ்யூவாம்..”
“அடபோங்கத்தான்.. நீங்க வேற..”
“என்னடி கதையை மாத்துக்கிறாய்.. இப்போது தானே நீயும் நானும் ஒன்று.. இது காதல் பிறந்த மண்ணுன்னு சொன்னேன்.. இப்போது என்னடாவென்றால் நான் வேறு என்கிறாயே..”
“அடடா.. நானும் உங்களைப் போல்தான் கேணத்தனமாய் நினைத்தேன் என்று சொல்ல வந்தேன்..”
“சந்தடி சாக்கில் என்னை கேணை என்கிறாய்..”
“ஸ்ஸ்.. நீங்கள் என்னைக் காதலிக்காதபோது என் காதலை நான் சொல்வதை கௌரவ குறைச்சலாக நினைத்தேன்..”
“ஒன்றுபட்ட மனம் கொண்ட புருசன் பெண்டாட்டி.. நல்லவேளை தொண்டைமான ஐயா தலையிட்டாரோ.. நாம் பிழைத்தோமோ.. அன்று காலையில் போன் வந்தவுடன் அடித்து பிடித்துக் கொண்டு ஓடி வந்து அன்னலட்சுமிபுரத்து வீட்டிற்குள் நுழைந்தவுடன் நான் உன்னைத்தான் தேடினேன் தெரியுமா..?”
“நான் ஒளிந்து நின்று கொண்ட பார்த்தேன் தெரியுமா..?”
“உன் தாத்தா கடைசி நேரத்தில் அந்த வாக்குறுதியைக் கேட்டதும் எனக்கு ஆனந்தத்தில் பேசவே வாய் வரவில்லை.. ஒரு வழியாய் வாக்குக் கொடுத்து விட்டேன்..”
“என்மேல் அவ்வளவு கோபத்தையும் வெறுப்பையும் வைத்துக் கொண்டு எப்படித்தான் என் கழுத்தில் தாலி கட்டினீர்களோ..”
ஆகாஷ் அனுராதாவின் கழுத்தில் மூக்கை உரசினான்.
“கோபத்தை விட தாபம்தான் அதிகமாக இருந்தது.. உன் மேலிருந்த வெறுப்பை விருப்பம் ஜெயித்து விட்டது..”
“நான் நல்லவள் தெரியுமா..?”
“நான் இல்லையென்று சொன்னதே இல்லையே.. நீ கோபக்காரியென்ற பயம்தான் எனக்கு.. வேறு குறையில்லை..”
ஆகாஷ் அனுராதாவின் தோள் பற்றி இழுத்துக் கொண்டான்..
Reviews — Idhayathini Salaram / இதயத்தின் சாளரம்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.