Chapter 02
நீ சாய்ந்து கொள்ள என் தோளிருக்க..
நீ சோர்ந்து விழ என் மடியிருக்க..
உனை வரவேற்க என் வீடிருக்க..
உனக்கு வருத்தமெதற்கு.. என் காதலை ஏற்க..?
காதலாகி.. கசிந்துருகி..
கடலையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த ஜீவாவின் மேல் ஊர் சுற்றிப் பார்க்க வந்த பெண்ணொருத்தி மோதி விட்டாள்..
“ஸாரி.. ஸாரி.. என் பிரண்ட்ஸுடன் ஓடிப் பிடித்து விளையாடியதில் நீங்கள் நிற்பதைக் கவனிக்கவில்லை..”
பரபரப்பாய் மன்னிப்புக் கேட்ட அந்தப் பெண் அழகாக இருந்தாள்.. அவள் கூட வந்த தோழிகள்..
“ஏய்ய்.. இவர் ஹேண்ட்சம்மாக இருக்கிறார்ன்னு நினைத்து வேண்டுமென்றுதானே மோதினாய்..?” என்று கலாட்டா பண்ணிச் சிரித்தார்கள்..
“ஸாரி எகௌன் ப்ளீஸ்.. அவர்கள் என் பிரண்ட்ஸ்.. என்னைக் கிண்டல் பண்ணுவதாக நினைத்துக் கொண்டு உளறுகிறார்கள்.. நீங்கள் தவறாய் எடுத்துக் கொள்ளாதீங்க..”
அந்தப் பெண்ணின் முகம் வெட்கத்தில் சிவந்து விட்டதையோ.. அவள் பார்க்க வெகு அழகாய் இருந்தாள் என்பதையோ.. ஜீவா கவனிக்கவே இல்லை..
அவளது பேச்சை சட்டை செய்யாமல்.. அவன், தன் ஜீன்ஸ் பேண்டில் கை விட்டபடி.. கடலோரம் நடக்க ஆரம்பித்து விட்டான்..
“உன் ஹீரோ ஏமாத்திட்டார்டி.. கிடைச்சது சாக்குன்னு உன்னிடம் பேச்சை வளர்த்திருக்க வேண்டாமா..? ஜொள்ளு விடக்கூட இந்தளவுக்கு யோசிக்கிற ஆளை இப்போது தாண்டி பார்க்கிறோம்..”
அவனது முதுகிற்குப் பின்னால் அந்தப் பெண்களின் கலகலத்த குரல்கள் கேட்டன… ஓங்கி வந்த பேரலையொன்று ஜீவாவின் அருகே வந்து விழுந்தது.. அவனை முழுவதும் நனைத்து விட்டுத் திரும்பிச் சென்றது.
இது எதனாலும் பாதிக்கப் படாதவனாக.. நடந்து கொண்டிருந்த ஜீவாவின் மனதில்.. சந்தியாவைப் பற்றிய நினைவுகளே சுறாவளி போல்.. சுற்றிச் சுழன்று வந்து கொண்டிருந்தன..
“இனி, நாம் பேசிக் கொள்ள ஏதுமில்லை ஜீவா.. என் நிழலைப் பார்க்கக் கூட உங்களுக்கு உரிமையும்.. தகுதியும் இல்லை.. விலகி விடுங்கள் இனி நீங்கள் யாரோ.. நான் யாரோ..”
எப்படி அவளால் அப்படிச் சொல்ல முடிந்தது.. அவளின் நிழலை நெருங்க.. அவனுக்கு உரிமையில்லாமல் போகலாம் தகுதியில்லாமல் எப்படிப் போனது..? அவளின் நிழலை நெருங்க.. சந்தியா விதித்திருக்கும்.. தகுதிதான் என்ன..?
‘நீ யாரோ.. நான் யாரோ..’ ஜீவா பெருமூச்சு விட்டான்..
நீ வேறு.. நான் வேறு என்று நான் நினைத்தும் பார்த்ததில்லையே.. நீ மட்டும் ஏன் பிரித்துப் பார்த்தாய் சந்தியா..? ஏன் பிரித்து போனாய்..?
சந்தியா.. முகம் சிவக்க அன்று பேசினாள்..
“நட்புக்கும்.. காதலுக்கும் இடையில்.. ஒரு நூலளவு தான் வித்தியாசம் இருக்கும் ஜீவா.. அது நூல்தானேன்னு நீங்க எளிதாக நினைத்து விட்டீங்கல்ல..? அது வெறும் நூல் இல்லை ஜீவா.. பெண்களது நம்பிக்கை.. அந்த நூல் வேலிதான் இரும்பு வேலின்னு நினைத்து நீங்க அந்தப் பக்கம் நின்றிருந்தால் நான் உங்களை எவ்வளவோ மதித்திருப்பேன் ஜீவா.. ஆனால் நீங்கள் நூல் வேலியை அறுத்து விட்டிங்க.. அதன் மூலம் என் நம்பிக்கையையும் அறுத்துட்டிங்க.. இனி என்னால்.. பழையபடி உங்களுடன் முகம் பார்த்துப் பேசிப் பழகமுடியாது..”
“அபத்தமாக பேசாதே சந்தியா..”
“எது அபத்தம் ஜீவா.. ஆண்.. பெண் நட்பு புனிதமானதுன்னு நான் நினைத்தேனே.. அது அபத்தமா..?”
“நட்பாக பழகினால்.. காதலிக்கக் கூடாதா..?”
“அதற்கு நட்பு என்ற போர்வை எதற்கு..?”
“நான் எந்தப் போர்வையின் பின்னாலும் ஒளிந்து கொள்ளவில்லை.. உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும் சந்தியா.. உன்னைப் பார்க்காமல் என்னால் ஒருநாள் கூட இருக்க முடியவில்லை.. உன்னிடம் பேசாத நாள்களில் பைத்தியம் பிடித்தவன் போல ஆகிப் போகிறேன்.. நானாக நானில்லை சந்தியா.. இதைத்தானே நான் உன்னிடம் சொன்னேன்..? வேறு என்ன தவறாக சொன்னேன்..?”
“இதுவே தவறில்லையா..?”
“மனதில் நினைத்த நினைவுகளை.. உன்னை என் அருகிலேயே.. வைத்துக் கொள்ள வேண்டும்.. என்று என் உயிர் துடிக்கும் துடிப்பை.. உன்னிடம் நான் வெளிப்படுத்தியது ஒரு தவறா..?”
“என் விருப்பம் என்னன்னு தெரியாமல்.. நீங்கள் உங்கள் விருப்பத்தை சொன்னது தவறுதான்..”
‘என் விருப்பத்தைச் சொன்னேன்தான்.. அதை உன் மேல் திணிக்கப் பார்த்தேனா..? உன்னை வற்புறுத்தினேனா.. உன்னைப் பிடித்திருந்தது.. தனிமையில் இத்தனை சொல்லடிகளுக்கு மத்தியில் தனியாக போராடுகிறாயேன்னு மனது துடித்தது.. உன்னை என் மனைவியாக்கிக் கொண்டு பாதுகாக்க நினைத்தேன்.. அது தவறா..?’
“தவறுதான்.. தவறுதான்.. தவறுதான்..” சந்தியா உணர்ச்சி வசப்பட்டுக் கத்தினாள்.
ஜீவா தங்களை யாராவது பார்க்கிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்தான்.. நல்ல வேளையாக.. அவர்கள் நின்று பேசிக் கொண்டிருந்த பூங்காவில் கூட்டம் அதிகமில்லை.. அங்கொன்றும்.. இங்கொன்றுமாக அமர்ந்திருந்த காதல் ஜோடிகள் இதைவிட பலத்த விவாதத்தில் இருக்க.. நிம்மதிப் பெருமூச்சுடன் சந்தியாவைப் பார்த்தான்.
“எதுக்கு இப்படிச் சத்தம் போடுகிறாய் சந்தியா..? நான் என் விருப்பத்தைச் சொன்னேன்.. உனக்கும் பிடித்திருந்தால் ஏற்றுக் கொள்.. இல்லையென்றால்,
விட்டு விடு.. நாம் எப்போதும் போல் நட்புடன் பழகிவிட்டுப் போகலாம்.. அதை எதற்கு நிறுத்தப் பார்க்கிறாய்..?”
“இல்லை ஜீவா.. உங்கள் முகம் பார்த்துப் பேசிப் பழக.. என்னால் எப்படி முடியும்..?”
“ஏன் முடியாது..? நான் உன் கையைப் பிடித்தா இழுத்தேன்..? காதலைத்தானே சொன்னேன்..?”
கோபத்தில் ஜீவா வார்த்தைகளை சிதற விட்டான்.. அவ்வளவுதான் சந்தியா பொங்கி விட்டாள்..
“கையைப் பிடித்து இழுப்பீங்களா..? இழுத்துத்தான் பாருங்களேன்.. அப்போது தெரியும்.. இந்த சந்தியா யாரென்று.. ஏன் என்று கேட்பதற்கு யாருமில்லாத தனி ஆள் என்ற தைரியம்தானே உங்களுக்கு..?”
“என்ன வார்த்தை பேசி விட்டாய் சந்தியா..? உன்னைப் போய்.. நான் அப்படி நினைப்பேனா..?”
“ஏன் நினைக்க மாட்டீங்க.. நேற்றுவரை நட்பாக பழகி விட்டு இன்றைக்கு.. கல்யாணம் பண்ணிக் கொள்ளலாமான்னு கேட்கிற ஆள்தானே நீங்க..?”
“ச்சு.. சும்மா அதையே சொல்லாதே.. என்றைக்கு இருந்தாலும்.. யாராவது ஒரு ஆண்மகனை நீ கல்யாணம் பண்ணிக் கொண்டுதானே ஆக வேண்டும்..? அது நானாக இருந்தால் என்னன்னுதானே கேட்டேன்..”
“ஓஹோ.. நீங்க கேட்டீங்க.. உடனே நான் சம்மதம்ன்னு தலையை ஆட்டி விட்டு.. உங்க பின்னாடியே வரணும்..? நினைப்புத்தான் உங்களுக்கு..”
ஜீவாக்கு சுருசுருவென்று கோபம் பொங்கி வந்தது.. சந்தியா இரக்கமில்லாமல் அவனுடைய மன உணர்வுகளை காலில் போட்டு மிதிக்கிறாள் என்று அவன் நினைத்தான்.
“அப்படி என்ன பெரிதாக நான் நினைத்து விட்டேன் சந்தியா..? டிகிரி படித்திருக்கிறேன்.. தொழில் கல்வியையும் சேர்த்து படித்திருக்கிறேன்.. அடுத்தவரிடம் கைகட்டி நிற்காமல் சொந்தமாக தொழில் தொடங்கி நடத்திக் கொண்டிருக்கிறேன்.. கை நிறைய சம்பாதிக்கிறேன்.. என்னை நம்பி வருபவளைக் காப்பாற்றும் வசதி எனக்கு இருக்கிறது.. நான் உன்னிடம் என்ன வரதட்சணையாக கேட்டுவிட்டேன்..? உன் மனதைத்தானே கேட்டேன்..?”
சந்தியாவின் தன்மானம் குமுறி எடுத்துவிட்டது.. தன் ஏழ்மையை ஜீவா சுட்டிக் காட்டுவதாக அவர் நினைத்து விட்டாள்..
“நீங்கள் வரதட்சணை கேட்டால்.. என்னால் கொடுக்க முடியாதுன்னு குத்திக் காட்டுகிறீங்களா..? என் ஏழ்மையைச் சொல்லிக் காண்பிக்கிறீங்களா..? சீர் செய்ய யாருமில்லாத என் நாதியற்ற நிலைமையை என்னை நினைத்துப் பார்க்கச் சொல்றீங்களா..?”
“ஐயோ.. சந்தியா.. நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை..”
“வேறு எந்த அர்த்தத்தில் சொன்னீங்க..?”
“நீ குதர்க்கமாகவே.. எல்லாவற்றையும் அர்த்தப் படுத்திக் கொண்டால்.. நான் என்னதான் செய்வது..?”
“செய்ய வேண்டியதை நான் சொல்லி விட்டேன்.. இனி என் முகத்தில் விழிக்க வேண்டாம்..”
“ஓ.கே.. சந்தியா.. நான் உன் வழிக்கே வருகிறேன்.. நான் பேசியது தப்புத்தான்.. மன்னித்து விடு..”
“உங்களை மன்னிக்க நான் யார்..?”
“இப்படிப் பேசினால் எப்படி சந்தியா.. தவறுன்னு நினைத்தால் தண்டனை கொடு.. பிரிவை மட்டும் கொடுக்காதே..”
“ஐ ஆம் ஸாரி ஜீவா.. என்னால் பழையபடி உங்களோடு பழக முடியாது..”
அவள் போய் விட்டாள்.. அவள் விட்டுச் சென்ற வாசனை.. ஜீவாவைச் சுற்றி வியாபித்து இருந்தது.. அவன் மனம் வலித்தது..
அவளை மறக்க முடியும் என்று அவனுக்குத் தோன்ற வில்லை.. மனதை ஒரு நிலைப்படுத்த.. அங்கிருந்த செயற்கை நீருற்றின் பக்கத்தில் அமர்ந்தான்.
இது பெரும் துயரம்.. மனதார நேசிப்பவளின் வெறுப்பை சம்பாதித்துக் கொள்வது.. அவளின் பதில் நேசத்தை பெற முடியாதது.. அவளைப் பற்றிய நினைவுகள்.. வாழ்க்கை முழுவதும் நிழல் போல் அவனைப் பற்றிக் கொண்டு பின் தொடரும் என்பதை புரிந்து கொள்ளாதவளாய் அவள் பிரிந்து சென்றது.. அவள் உண்டாக்கிய மரண வலிக்கு அவள்தான் மருந்து.. இதை என்றேனும் ஒருநாள் அவள் அறிவாளா..?
Reviews – Mannavan Vandhanadi Thozhi! / மன்னவன் வந்தானடி தோழி!
Write a Review
What others Say about this book!
Amazing Book! Fun and Enjoyable to read
Fun book to read
Response from MR Novels
Glad that you liked it!