Chapter 03
கை தொடும் தூரத்தில் நீயிருந்தும்..
என்மனம் தொட முடியாமல் விலகிச் சென்றாய்..
கல்லறைக்குள் என் உயிர்மறைந்து சென்றாலும்
அதில் ஒரு ஜன்னலை வைத்து உனைப்பார்ப்பேன்..
காதலாகி.. கசிந்துருகி..
காலடியில் பொன்னிற மணல் துகள்கள் மின்னின இவ்வகையான மணல் துகள் கன்யாகுமரிக் கடற்கரைக்கே சொந்தமானது.. அந்தி நேரத்தில் சூரிய அஸ்த மனத்தின் போது ஒரு பக்கம் சூரியன் மறைய இன்னொரு பக்கம் நிலவு உதிக்கும் அபூர்வக் காட்சியும் கன்னியாகுமரி கடற்கரைக்கே சொந்தமானது.. சூரிய அஸ்தமனத்தைப் பார்க்க.. டூரிஸ்ட் பஸ்களில் இருந்து உதிர்ந்த மக்கள்.. கடற்கரை மணலில் கும்பல்.. கும்பல்களாக.. நின்று கொண்டும்.. அமர்ந்து கொண்டும்.. காத்திருந்தார்கள்..
இளம் வயதுக்காரர்கள்.. கடலோரம்.. அலையில் நனைந்து விளையாட நடுத்தர வயதில் இருந்தவர்கள்.. கடலோரம் நடந்தபடி கடலை ரசிக்க.. வயோதிகப் பருவத்தில் இருந்தவர்கள்.. கடற்கரை மணலில்.. காலார அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்..
“இந்தக் கடற்கரையில் மட்டும்.. மணல் ஏன்.. இப்படி தங்கத் தூள் போல் மின்னுதுன்னு உனக்குத் தெரியுமா..?”
வயோதிகர் ஒருவர் மனைவியிடம் வினவ.. அவள் திருதிருவென்று விழித்தாள்..
மனைவியை விட தான் பெரிய அறிவாளியாகி விட்ட மகிழ்வில் பெருமையாக புன்னகைத்து கொண்ட அந்தப் பெரியவர்.. மனைவிக்கு விளக்கம் சொல்ல ஆரம்பித்தார் “கன்யாகுமரி அம்மனுக்கு.. ஏன் இந்தப் பெயர் வந்ததுன்னாவது உனக்குத் தெரியுமா..?”
“தெரியாது..”
“உனக்கு என்னதாண்டி தெரியும்..?”
“இருபத்தி நாலு மணி நேரமும்.. உங்களுக்கும்.. உங்கள் பிள்ளைகளுக்கும்.. ஆக்கிப் போட்டுக்கிட்டு.. அடுப்படியில் அடைந்து கிடந்தால்.. வேறு என்னதான் தெரியும்..?”
அந்தப் பெண்மணி சரியாகப் பதிலடி கொடுக்கவும் அவர் அடக்கி வாசித்தார்..
“சரி.. சரி.. விடு.. பார்வதி தேவி.. கன்னியாகுமரி அம்மனாக அவதாரம் எடுத்தது.. ஒரு அரக்கனை அழிப்பதற்காக..”
“ஊம்..”
“அந்த அரக்கனுக்கு… சாவு… கன்னிப் பெண்ணொருத்தியின் கையால் கிடைக்க வேண்டும்.. என்பது அவன் வாங்கி வந்த வரம்..”
“ஊம்..”
“குமரி அம்மனுக்கும்.. பரமேஸ்வரனுக்கும் கல்யாணம் நிச்சயம் ஆகிவிட்டது.. இங்கே மணவறையில்.. இந்தக் கடற்கரையில்.. குமரி அம்மன்.. கல்யாணக் கோலத்திலே காத்திருக்க.. வரவேண்டிய நேரத்திற்கு.. மணமகன் வரவில்லை..”
“ம்ஹும்.. ஆம்பளைப் புத்தி.. நமக்குப் படியளக்கிற அந்த பகவானையும் விட்டு வைக்கலை போல..”
“அதுக்கு நீ ஏண்டி.. இப்படி நொடிச்சுக்கறே..”
“அம்மனை நினைச்சு.. ஆதங்கப் பட்டுட்டேன்..”
“சரி.. கதையைக் கேளு..”
“நீங்க சொல்ல ஆரம்பிங்க..”
“கல்யாணம் நின்று போன கோபத்தோடு.. எழுந்த அம்மன்.. தன் நகைகளை நொறுக்கி.. இந்த மணலில் வீசி எறிஞ்சாங்களாம்.. இந்தக் கடற்கரை மணலெல்லாம்.. தங்க மணலாக மாறிவிட்டதாம்..”
“நிசமாவா..?”
“பின்னே பொய்யா சொல்கிறேன்…? இது புராணம்டி..”
“தப்புத்தப்பு.. பகவானே.. மன்னித்துவிடு..”
“கன்னத்தில் போட்டுக்கிட்டது போதும்.. மீதிக் கதையைக் கேளு.. கோபத்தோடு இருக்கும் அம்மனிடம்.. விவரம் தெரியாமல் அந்த அரக்கன் வந்து மாட்டிக் கிட்டான்.. அம்மன் அவனை வதம் செய்துட்டாங்க..”
“அப்புறம்..?”
“கல்யாணம் நேரம் தவறி வந்த மாப்பிள்ளையிடம் கல்யாணம் வேண்டாமென்று சொல்லிவிட்டு.. கன்னியாகவே இந்த குமரிக் கடற்கரையில் அமர்ந்து விட்டாங்க..”
“கன்னியாகுமரி அம்மனே.. காப்பாற்று..”
பக்தி பரவசமான இந்த உரையாடல் காதில் விழுந்தும் அதை உணராமல் பொம்மை போல் கரையோரமாய் இருந்த படகில் சாய்ந்து நின்று கொண்டான் ஜீவா.. மனமெல்லாம் சந்தியா மட்டுமே வியாபித்திருந்தாள்..
“நீங்க ஒரு தோழனாகத்தானே என்னிடம் பழகினீங்க ஜீவா.. காதல் எப்படி நமக்குள் வர முடியும்..?”
அன்று சந்தியா கேட்ட கேள்வி.. இன்று அவன் காதுகளில் எதிரொலித்தது..
“சந்தியா என்னவோ.. ஒரு தோழியாகத்தான் அவனிடம் அறிமுகம் ஆனாள்.. ஆனால் ஜீவா அவளிடம் ஒரு பரிவோடுதான் ஆரம்பம் முதலே பழகி வந்தான்.. அவள் மேல் அவனுக்கிருந்த சொந்தத்தை.. ‘நட்பு’ என்று எந்தக் காலத்திலும்.. அவன் குறிப்பிட்டுச் சொன்னதில்லை..”
“சந்தியா எப்படியிருக்கிறாள் குமார்..” என்றுதான் பொதுவாக விசாரிப்பான்..
ஜீவாவுக்கும்.. அவனுடைய நண்பர்களுக்கும் இருந்த உறவு.. அசைக்க முடியாத ஒரு பந்தத்தைப் போன்று மிக இறுகியது..
அன்பான அம்மா.. அப்பா.. அண்ணன்.. தங்கையென்று மிக அருமையான குடும்பம் கிடைக்கப் பெற்றவன் ஜீவா.. பட்டப்படிப்பு முடித்தவனை.. தொழில் பயிற்சியில் ஈடுபடச் சொன்னது.. அவனுடைய குடும்பம்..
அவன் உடற்பயிற்சியைக் கற்றுக் கொண்டான்.. எங்கு தொழில் கற்றுக் கொண்டானோ.. அதே ஜிம்மில் பயிற்சியாளராக பணிபுரிந்தான்.. அவனுடைய பயிற்சி முறையில் மனம் வைத்த உறுப்பினர்கள்… அவனைத் தனியாக ஜிம் ஆரம்பிக்கச் சொல்லி ஊக்கப்படுத்தினார்கள்.. திறமைசாலிகள் எங்கு சென்றாலும்.. மதிப்பும்.. உயர்வும் தேடி வரும்..
அப்போது கை கொடுத்து உதவியவர்கள் அவனுடைய நண்பர்கள்.. கடுமையான உழைப்பையும்.. நண்பர்களின் உதவியையும் மூலதனமாகக் கொண்டு.. ஜிம் ஒன்றைத் தனியாக ஆரம்பித்தான் ஜீவா.. அதற்கு ‘கிரேட் ஜிம்..’ என்று பெயரும் வைத்தான்..
கடவுள் நேரடியாக வர முடியாததால்.. அவருக்குப் பதில் நண்பர்களை அனுப்பி வைத்தார்.. என்ற கூற்று ஜீவாவின் நண்பர்களைப் பொறுத்த வரை மிகவும் பொருந்தும்.. அவர்கள் ஜீவாவின்.. ‘கிரேட் ஜிம்..’ ஆரம்பிக்க பலவகைகளிலும் உறுதுணையாக இருந்தார்கள்.. ஜீவா அடிக்கடி இத்தகைய நண்பர்களைக் கொடுத்ததற்காக கடவுளுக்கு மானசீகமாக நன்றி
சொல்லிக் கொள்வான்..
விடுமுறை நாள்களில் ஜீவா.. குடும்பத்தில் உள்ளவர்களுடன் நேரத்தை செலவளித்ததில்லை.. நண்பர்கள்.. நண்பர்கள்.. நண்பர்கள்தான்.. கோயில்கள்.. திருவிழாக்கள்.. வெளியூர் பயணம் என்று சிறகில்லாத சிட்டுக் குருவிகள் போல் அவனும் அவனுடைய நண்பர்களும் பறந்து கொண்டிருந்தனர்..
அவர்களுக்குள்.. சின்னச் சின்ன சண்டைகள் வரும்.. அடித்துக் கொள்பவர்களை பிரித்து விட்டு.. இரண்டு பக்கமும் அதட்டி.. ஒன்று சேர்த்து வைப்பது.. மற்ற நண்பர்களின் வேலையாக இருக்கும்..
அதற்கு குழுவில்.. யாருக்குமே.. தனிப்பட்ட இன்பமோ.. துன்பமோ இருக்காது.. எல்லாமும் பங்கிடப்படும்.. காலம் போவதே அவர்களுக்குத் தெரியாது.. அவர்கள் காலத்தை கணக்கெடுத்துக் கொண்டதுமில்லை..
பாரதியார் அன்று.. பாரதத்தின் ஒற்றுமையைப் பற்றி பாடலில் வடித்தார்..
‘முப்பது கோடி முகமுடையாள் – உயிர்
மொய்ம்புற ஒன்றுடையாள் – அவள்
செப்புமொழி.. பதினெட்டுடையாள் – எனில்
சிந்தனை ஒன்றுடையாள்..’ என்று
அது போல்தான்… ஜீவாவும்… அவனுடைய நண்பர்களும் ஒற்றுமையாக இருந்தனர்.. அவர்கள் ஒவ்வொருவரின் குண இயல்புகளும்.. விருப்பு.. வெறுப்புகளும் வேறாக இருந்தது.. ஆனால் அவர்களின் சிந்தனை ஒன்றாக இருந்தது..
“அவர்கள் ‘நட்பு..’ எனும் இரும்புச் சங்கிலியில் இறுக்கமாக பிணைக்கப்பட்டிருந்தனர்..”
இந்த நட்பு வட்டத்திற்குள்.. சந்தியா நுழைந்தபின் அனைத்தும் ஜீவாவிற்கு தலைகீழாய் மாறிப் போயின..
நண்பர்களுடன் கூடிக் களித்திருந்தவன்.. மனதளவில் தனிமைப்பட்டு ஒதுங்கினான்.. எதிரிகள் நூறு பேர் வந்தாலும் அடித்துப் பந்தாடும் வல்லமை பெற்றவன் அவளின் ஒரு வார்த்தையில் மனம் நொறுங்கிப் போனான்.. எதையும் தாங்கும் இதயம் கொண்டவன் அந்த இதயத்திற்குள் கூரிய முள்ளாக அவளது நினைவுதான் குத்திக் கொண்டிருக்கும் ரண வலி தாங்காமல் துடித்துப் போனான்.. அவள் உண்டாக்கிய மனக் காயங்களை ஆற்றிவிட அவளால் மட்டுமே முடியும் என்பதால்.. ஆற்றுவாரின்றி தேற்றுவாரின்றி மனம் குலைந்து சரிந்து போனான்..
புறக்கணிப்பு என்பது மிகவும் கொடுமையானது.. அதிலும் காதலித்தவர்களின் புறக்கணிப்பு.. தாங்கிக் கொள்ள முடியாதது.. அந்தக் கொடுமையை சந்தியா அவனுக்குச் செய்தாள்..
சந்தியா.. ஜீவாவின் மனமார்ந்த அன்பை.. பாசத்தை நேசத்தை காதலை புறக்கணித்தாள்..
கடலை விட ஆழமான நேசம் காணக் கிடைக்காத வைரம் போன்றது.. விலை மதிப்பில்லாதது என்பதை உணராதவளாய் ஜீவாவின் மனதை தன் காலடியில் போட்டு மிதித்து நசுக்கினாள்.. அவனைக் குற்றுயிராய் ஆக்கினாள்..
தந்தையில்லை.. தாய் இருந்தும் இல்லை.. என்று தனிமையிலே மனம் குமுறியவள்.. ‘துணை வருகிறேன்..’ என்று கரம் நீட்டிய காதலை ஒதுக்கித் தள்ளினாள்..
ஆஜானுபாகுவாய்.. முரட்டுத் தோற்றத்துடன்.. இருக்கும் அந்த முழுமையான ஆண்மகனின் காதல் கடவுள் கொடுத்த வரம் என்பதைப் புரியாதவளாய் துயரக் கடலைக் கடக்க துணை செய்ய வந்தவனின் கரம் பிடிக்க மறுத்து.. அவன் மனத்தை கத்தியின்றி.. இரத்தமின்றி.. குத்திக் கிழிக்கவும் செய்தாள்..
சிங்கத்தை தன் சிறு கம்மலில் சிறை பிடித்து விட்ட அந்தப் புள்ளிமான்.. சிங்கம் பணிவது மான் மேல் கொண்டுள்ள கரை கடந்த காதலுக்காக என்பதை உணராமல் அலட்சியப் படுத்திப் போவது.. காலத்தின் கோலம்தான் வேறென்ன சொல்ல..?
Reviews — Kadalaki Kasinthuruki / காதலாகி கசிந்துருகி
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.