Chapter 05

0Shares

ஒருநாள் இரவில்

      ஓர்கனவு கண்டேன்..

  அதை உன்னிடம் சொன்னேன்

    நீ அனலைத் தந்தாய்..

    காதலாகி கசிந்துருகி..

ஒரு பக்கம் சூரியன் மறைய.. மறுபக்கம் நிலவு எழுந்தது.. கடற்கரையில் குழுமியிருந்த மக்கள் ஆர்ப்பரித்தனர்.. சிலர் அங்கேயே அமர்ந்து.. அந்த அற்புதமான அனுபவத்தை மனதின் உள்ளே சேகரித்துக் கொண்டிருந்தனர்.. சிலர் செல் போனிலும்.. வீடியோவிலும் அந்தக் காட்சியை சிறைபிடித்துக் கொண்டிருந்தனர்..

அழகான அந்த தருணத்தை அனைவரும் ரசிக்க.. ஜீவா மட்டும்.. மணலை வெறித்துக் கொண்டு படகில் சாய்ந்து அமர்ந்திருந்தான்..

அவன் மனதில் சுழல் ஒன்று சுழன்று கொண்டிருந்தது.. “அந்தச் சுழலில் இருந்து விடுபடும் வழி தெரியாமல் அவன் தவித்துக் கொண்டிருந்தான்..”

சந்தியாவிடம் அவன் கொண்டிருந்தது காதலாக இருக்குமோ என்ற சந்தேகம் அவனுக்குள் ஏற்கனவே ஏற்பட்டு விட்டிருந்தது..

அவளிடமிருந்து போன் வந்தால்.. ஜீவாவிடம் ஒரு சந்தோசம் ஏற்பட ஆரம்பித்திருந்தது.. அவளின் குரலைக் கேட்டதும் பரவசப் பட ஆரம்பித்திருந்தான்.. அவளுடன் மணிக் கணக்கில் பேசிக் கொண்டிருந்தாலும் அவனுக்கு அலுக்கவே இல்லை..

இதெல்லாம் காதலின் அடையாளங்கள் என்று அவனுக்கு தோன்ற ஆரம்பித்திருந்தது.. அதே சமயம்.. ஒரு தோழியாக பழகிக் கொண்டிருப்பவளிடம் காதலைச் சொல்லவும் அவனுக்குத் தயக்கமாக இருந்தது..

ஒன்று மட்டும் ஜீவாவிற்கு தெளிவாகப் புரிந்தது.. சந்தியாவிடம் பேசிப் பழகாமல் அவனால் இருக்க முடியாது.. அவள் மட்டும் பிரிவைச் சொல்லி விட்டால்.. அவனால் அதைத் தாங்கிக் கொள்ள முடியாது.. உழைக்க சக்தியின்றி சோர்ந்து விழுந்து விடுவான்..

“நான் தோற்றுப் போவேன்..

என்று அஞ்சியே..

என் வார்த்தைக் கடல்

வற்றிப் போனதே..”

ஜிம்மின் உள்ளே பொருத்தப்பட்டிருந்த எப்.எம்.மில். பாடல் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது.. ஜீவா கண்மூடி அந்தப் பாடலை ரசித்தான்.. அவன் மனதிலிருப்பதை அந்தப் பாடல் அப்படியே சொல்வதைப் போல அவனுக்கு இருந்தது..

ஜீவா சந்தியாவை உண்மையாக நேசித்தான்.. மனதாரக் காதலித்தான்.. ஆனால்.. மனதை மறைத்துக் கொண்டு அவளிடம் பேசிப் பழகினான்..

ஜீவாவின் அந்த அர்த்தமுள்ள மௌனத்தை உடைத்தது சந்தியாதான்.. எப்போதும் போல ஒருநாள்.. அவள் அழுது கொண்டே ஜீவாவிற்கு போன் பண்ணினாள்.. ஜீவா.. உயிர்த்தெழுந்து போனை எடுத்துப் பேசினான்.

“ஜீவா..” சந்தியா பேச முடியாமல் அழுதாள்..

“என்ன சந்தியா.. என்ன ஆச்சு..” ஜீவா பதறினான்..

“எனக்குச் செத்து விடலாம் போல இருக்கு ஜீவா..”

“ச்சீ பைத்தியம்.. எதுக்கு இப்படியெல்லாம் உளறுகிற.. வாயைக் கழுவு.. இது வாழ வேண்டிய வயது..”

“வாழ வேண்டிய வயதில் வாழ முடியாத வாழ்க்கை என்ன வாழ்க்கை ஜீவா..”

“புரியாமல் பேசாதே.. மனது சரியில்லாவிட்டால்.. யாராவது ஒரு பிரண்டிடம் பேசு..”

“அதுதான் உங்களுடன் பேசிக் கொண்டிருக்கிறேனே..”

“ஜீவா, உதட்டைக் கடித்துக் கொண்டான்..”

என்மேல் நம்பிக்கை வைக்காதே சந்தியா.. நான் உன் நண்பனில்லை.. அதற்கும் மேலே.. காதலன்.. கணவன்..! என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டான்..

“இப்போ.. என்ன பிரச்சினை உனக்கு..” என்று பேச்சை மாற்றினான்..

“என்னுடன் வேலை பார்க்கும் ஒருவன்.. அதிகப் படியாய் பேசுவான் பழகுவான்..”

“இதெல்லாம் எனக்குப் பிடிக்காதுன்னு முகத்தில் அடித்தாற்போல் சொல்லிவிட வேண்டியதுதானே..”

“இன்றைக்கு சொல்லி விட்டேன்..”

“அப்புறம் என்ன.. கவலையை விடு..”

“எனக்கு கவலை ஓயாது போல் இருக்கு ஜீவா.. அவன் என்னை மோசமாக பேசிவிட்டான்..”

சந்தியா தொடர்ந்து பேசின எதுவுமே ஜீவாவின் தலையில் ஏறவில்லை.. அவன் ஒன்றை மட்டுமே கவனத்தில் கொண்டு அதிலேயே நின்றான்..

“யார் அவன்..?”

“த்சு.. அவன் பெயர் எதற்கு..?”

“நீ சொல்லப் போகிறாயா இல்லையா..?”

“பிரச்சினை வேண்டாம் ஜீவா.. விட்டுவிடுங்கள்..”

“அவன் பல்லைக் கழட்டினால்தான் என் மனம் அறும்..”

“இவன் ஒருவனை மட்டும் அடக்கி வைத்தால் போதுமா..? இவனைப் போல எத்தனை பேர்..? அவர்கள் அத்தனை பேரையும் தேடிப் பிடித்து பந்தாட முடியுமா..?”

“என்னால் முடியும்..”

“நீங்கள் இப்படிப் பேசுவது ஒன்றே போதும்.. எனக்கு ஆறுதலாக இருக்கிறது.. எனக்காகவும் பரிந்து பேச ஒரு ஜீவன் இருக்கிறதே என்று நெகிழ்ச்சியாக இருக்கிறது..”

“உனக்காக பரிந்து பேசும் ஜீவன் தானா நான்..? உன் ஜீவா இல்லையா நான்..?”

“தேங்க்ஸ் ஜீவா..”

“எதற்காக இந்த தேங்க்ஸ்..?”

“எல்லாவற்றுக்கும் தான்..”

“எல்லாத்துக்கும்னா.. எது எதற்கு..? இனம் பிரித்துச் சொல்ல வேண்டாமா..?”

“இனம் பிரிக்க முடியாத உணர்வுகள்.. வாழ்க்கையில் எத்தனையோ உண்டு ஜீவா.. இது அவற்றில் ஒன்று..”

சந்தியா இப்படித்தான் அறிவாகப் பேசுவாள்.. நிறைய யோசிப்பாள் அவளுடைய பேச்சும்.. சிரிப்பும்.. ஜீவாவை கட்டிப் போடும்.. தொண்டை வரை.. ‘உன்னைக் காதலிக்கிறேன்’ என்ற வார்த்தை வந்து விடும்.. அவன் அதைச் சொல்ல முயற்சிக்கும் போது அவள் போனை வைத்து விடுவாள்..

ஜீவா சந்தியாவை தொல்லை செய்தவனை கண்டு பிடித்து விட்டான்.. அவனைப் பின்தொடர்ந்து மடக்கிய போது..

“நீ யார் அதைக் கேட்க..?” என்று அவன் முறைத்தான்.

அவளுடைய புருசன்டா.. என்று மனதில் நினைத்தபடி அவனை நொறுக்கி.. சாலையில் போட்டுவிட்டு வந்தான் ஜீவா..

“அன்றைக்கு ஒருவன் என்னிடம் கலாட்டா பண்ணினான்னு சொன்னேனில்லையா..” சந்தியா போன் செய்தாள்..

“ஆமாம் அவனுக்கென்ன..” ஒன்றும் தெரியாதவன் போல் கேட்டான் ஜீவா..

“அவன் ரோட்டில் அடிபட்டுக் கிடந்தானாம் ஜீவா.. கடவுள் இருக்கிறார்.. அவனுக்கு சரியான கூலி கொடுத்து விட்டார்..” சந்தியா சந்தோசப்பட்டாள்..

அன்று டேனியலுக்கு.. விருந்து கொடுத்தான் ஜீவா.. “என்ன விசேஷம்மா.. ட்ரீட்டெல்லாம் பலமாயிருக்கு.” என்று வினவியவனிடம்..

“நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன்.. அதுக்குத்தான் இந்த ட்ரீட்..” என்று விளக்கம் சொன்னான் ஜீவா..

“ஓ.. இன்றைக்கு சந்தியா உன்னிடம் சந்தோசமாக இரண்டு வார்த்தை பேசி விட்டாளாக்கும்..” என்று கிண்டலாக வினவினான் டேனியல்..

‘கண்டு பிடித்து விட்டானே..’ என்ற ரகசியப் புன்னகை ஜீவாவின் இதழ்களில் உதித்தது..

“பாவம் சந்தியா பாட்டுக்கு தேமேன்னு இருக்கிறாள்.. நீயேன்டா சந்தியாவையே வம்புக்கு இழுக்கிறாய்..? சந்தியா ஒரு நாளாவது உன்னைப் பற்றிப் பேசியிருக்கிறாளா.. நீ மட்டும் ஏன் சந்தியாவையே பேசுகிறாய்.. சந்தியா எது பேசினாலும் உனக்குக் குத்தம்தான்.. சந்தியா உட்கார்ந்தாலும் குத்தம்.. நின்றாலும் குத்தம்..” ஜீவா பொரிந்து தள்ள..

“ஆறு..” என்றான் டேனியல் அமைதியாக..

“ஆறா..?” ஜீவா திகைத்தான்..

“ஆமாம்..”

“என்னடா.. உளறுகிறாய்..? ஆறுன்னா என்ன அர்த்தம்..?”

“நீ சந்தியா.. சந்தியான்னு அவள் பெயரைச் சொன்னது ஆறு தடவை.. உனக்கு அவள் பெயரை ஜெபித்துக் கொண்டேயிருக்க வேண்டும்.. அதற்கு எதையாவது சாக்கைக் கண்டுபிடிப்பாய்..”

“டேய்..”

ஜீவா.. டேனியலை முறைக்க.. சளைக்காமல் அவன் பதிலுக்கு முறைத்தான்.. ஒரு கட்டத்தில் இருவரும் வாய் விட்டுச் சிரித்துக் கொண்டே.. உள்ளங்கைகளை மோதிக் கொண்டார்கள்..

“ஏண்டா.. இப்படி மனதில் கவலை எத்தனை நாள்தான் ஒளித்து வைத்துக் கொண்டிருக்கப் போகிறாய்.. அவளிடம் சொல்லி விட வேண்டியதுதானே..”

“எப்படிச் சொல்வதுன்னுதான் தெரியலை டேனியல்..”

“இது கூடத் தெரியாதா..? வாயால்தான் சொல்லணும்..”

“ஜோக்கு..?”

“ஆமாம்.. சிரிப்பு வருதா..?” 

“சகிக்கலை..”

“உனக்கு சிரிக்கத் தெரியலைன்னு சொல்லு..”

“அவள் என்னை நண்பனாக நினைக்கிறாள்டா..”

“நண்பன்.. காதலனாக மாறக் கூடாதா..?”

“இந்தப் பிரச்சினையெல்லாம் அவளுக்குத்தான்.. நான் எப்போதுமே அவளை என் தோழியாக நினைத்தது கிடையாது..”

“அதுதான்.. எனக்குத் தெரியுமே.. நீதான்.. உருகித் தவிக்கிறாயே.. இந்த அளவுக்கு பாசம் வைக்கக் கூடாதுடா ஜீவா.. உன் பாசத்தை அவள் உணர்ந்து கொள்வாள்ன்னு எனக்கென்னவோ தோன்றவில்லை..”

“நீ ஆரம்பித்திலிருந்தே சந்தியாவை குறைவாகத்தான் நினைத்து பேசுகிறாய்.. அவள் நல்ல பொண்ணுடா.”

“நான் இல்லைன்னா சொன்னேன்.. ஆனால் ஜீவா.. சந்தியா ஒருவகையில் சுயநலவாதி..”

“டேனியல்..”

“கத்தாதேடா.. அவள் தனிமையில் இருக்கிறாள்.. மனக்கஷ்டத்தில் இருக்கிறாள்.. எல்லாம் சரி.. அவளுடைய சுமையை இறக்கி வைக்கும் சுமைதாங்கியாய்தான் அவள் உன்னைப் பயன்படுத்திக் கொள்கிறாள் என்று எனக்குத் தோன்றுகிறது..”

“சேச்சே.. அப்படியிருக்காது..”

“இதுவரை அவளாகத்தான் உனக்குப் போன் பண்ணியிருக்கிறாள் ஒரு தடவையாவது உன்னிடம் சாப்பிட்டியா.. என்று அன்பாய் ஒரு வார்த்தை பேசியிருப்பாளா..? அவள் சோகக் கதையைத்தான்..

என் சோகக்கதையைக்

கேளு ஜீவானந்தமே..

அதைக் கேட்டால்தான் தாங்காது

உங்க மனமே.. 

என்று உன்னிடம் கொட்டியிருக்கிறாள்.. அவளுக்கு சொல்லி அழுக ஒரு ஆண் வேண்டும்.. அதற்கு ஏமாளியான நீ கிடைத்து விட்டாய்.. அவள் சோக ரசத்தை பிழிந்து விட்டு போனை வைத்து விடுவாள்.. நீ விடிய விடிய தூங்காமல் கிறுக்கனைப் போல் அவள் நிலைமையை நினைத்து கவிதை எழுதிக் கொண்டிருப்பாய் எனக்கு உன்னைப் பார்த்தால் எரிச்சல் எரிச்சலா வருகிறதுடா ஜீவா..”

டேனியல் கோபமாய் பேசிக் கொண்டிருக்கும் போது ஜீவாவின் போன் ஒலித்தது.. எடுத்துப் பார்த்தான்.. சந்தியா அழைக்கிறாள் என்றது போன்.. காதில் வைத்தான்..

“எனக்குக் கஷ்டமாக இருக்கு ஜீவா..” என்று சந்தியா போனில் அழுதாள்.. ஜீவா டேனியலைப் பரிதாபமாக பார்த்தான்..

0Shares

Reviews — Kadalaki Kasinthuruki / காதலாகி கசிந்துருகி

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link