Chapter 06

0Shares

‘வாழ்வதற்காக பிறந்துவிட்டு

சாவை ஏன் நினைத்தாய்..?

வாழ்ந்து பார்க்கலாம் வந்துவிடு

உன் மனதை என்னிடம் தந்துவிடு

காதலாகி கசிந்துருகி..’

விவேகானந்தர்.. பாறையிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்த போட்டில் ஆரவாரக் கூச்சல் கேட்டது..

“காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் போல..” என்று அருகிலிருந்த பெண்.. அவளுடைய கணவரிடம் கூறினாள்..

“சத்தத்தைப் பார்த்தாலே தெரியுதே..” என்று சிரித்தான் கணவன்..

“ம்ஹூம்.. வால் ஒன்னுதான் இல்லை.. மத்தபடி வானரம்தான்..” என்றாள் அந்தப் பெண்..

“அந்தக் காலத்தில் நாங்கள் செய்யாத கலாட்டாவா..” மலரும் நினைவுகளுக்குப் போனான் கணவன்.

ஜீவா.. கால்களை நீட்டி சரிந்து அமர்ந்து கொண்டான்.. இது போன்ற மலரும் நினைவுகள் அவனிடமும் ஏராளமாய் உண்டு.. அவை எல்லாமே.. சந்தியாவை அவன் சந்திப்பதற்கு முன் நிகழ்ந்தவை என்பதுதான் துயரம்..

“அவளுடைய துயரத்தை உன்மேல் ஏற்றி விடுகிறாள்..” என்று டேனியல் சந்தியாவின் மேல் குற்றம் சாட்டினான்..

அதற்கு தகுந்தாற்போல்.. டேனியலின் முன்னால் ஜீவா அமர்ந்திருக்கும் போது.. போனில் அழைத்து சந்தியா அழுதுவிட.. ஜீவாவிற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை..

“சொல்லு சந்தியா..”

“எனக்கென்று யார் இருக்கிறாங்க ஜீவா..”

“நீங்கள் ஒரு பிரண்ட்தானே.. உங்களுக்கும் ஒரு எல்லை இருக்கிறது இல்லையா..? நான் தனிதான் ஜீவா..”

“இப்போது ஏன் இப்படிப் பேசுகிறாய்.. அதை முதலில் சொல்லு..”

“என் கூட வேலை பார்க்கும் பெண்ணொருத்தி.. கணவன் குழந்தைன்னு.. குடும்பமாக இருக்கிறாள்..”

“ம்ம்ம்..”

“அவள் என்னை ஜாடை பேசுகிறாள் ஜீவா..”

“உன்னிடம் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன்.. மத்தவங்க சாதாரணமாக பேசுவதைக் கூட நீ உன்னைப் பற்றிப் பேசுவதாக எடுத்துக் கொள்ளக் கூடாதுன்னு..”

“அவள் என்னைத்தான் பேசினாள்..”

“அப்படி என்னதான் பேசினாள்..?”

“அவளுக்கு ஒன்று என்றால் அவளுடைய ஹஸ்பெண்ட் துடித்துப் போய் விடுவாராம்.. பிள்ளைகள் அம்மா.. அம்மான்னு அவளையே சுற்றிச் சுற்றி வருமாம்..”

“அவள் பெருமையை அவள் சொல்லிவிட்டுப் போகிறாள்.. இதில் உனக்கென்ன நஷ்டம் வந்து விடப் போகிறது..?”

“நான் தனியாக இருப்பதை அவள் குத்திக் காட்டுகிறாள்..”

ஜீவாவுக்கு சந்தியாவின் ஏக்கமும்.. மன வேதனையும் நன்றாகப் புரிந்தது.. கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு இவள் ஏன் நெய்க்க அலைகிறாள் என்று அவன் நினைத்துக் கொண்டான்..

“தண்ணீரில் நிற்கும் போதே..

தாகம் என்பாய்..”

ஏதோ ஒரு பாடலின் இடையில் வரும் வரிகளை நினைத்துப் பார்த்தான் ஜீவா.. சந்தியாவும் இதைப் போலத்தான் என்று அவனுக்குத் தோன்றியது..

அவள் தனிமையில் தவித்தாள்.. அவளுடைய தனிமையை போக்கும் துணையாக அருகிலிருந்த ஜீவாவை திரும்பிப் பார்க்கவும் மறுத்தாள்.. அவளைத் தவறாகப் பேசுகிறார்களே என்று மனம் துடித்தாள்.. ஒரு தாலியைக் கட்டி என் மனைவியாக்கிக் கொள்கிறேன்.. அப்புறம்.. யார் உன்னைத் தவறாகப் பேசுவார்கள் என்று பார்ப்போம் என்று கரம் நீட்டும் ஜீவாவின் கரத்தைத் தவிர்த்தாள்..

நேசம்.. அது கடையில் வாங்க முடியாத பொருள்.. விலை மதிப்பில்லாதது.. உண்மையான நேசம் கிடைக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்..

காதலிப்பதை விட.. காதலிக்கப்படுவது பரம சுகமான விசயம்.. அது சந்தியாவுக்கு கிடைத்தது.. ஆனால் அவள் அதை உணர மறுத்தாள்..

சந்தியாவை விட அழகான பெண் அந்த ஊரில் இல்லையா..? இத்தனைக்கும் சந்தியாவைப் பற்றித் தவறாக பேசுகிறார்கள் என்று அவளே ஜீவாவிடம் சொல்லி அழுதிருக்கிறாள்..

ஆனானப் படட் ராமனே.. சந்தேகத்துக்கு இடம் வந்த போது சீதையை காட்டுக்கு அனுப்பி வைத்த பூமி.. நம்ம பூமி..

இதில்.. தன்னைப் பற்றி அவதூறு நிறைய இருக்கிறது என்று சொல்லும் பெண்ணை.. ஒருவன் உயிருக்குயிராய் காதலிக்கிறான் என்று சொன்னால்.. அவன் மனதை என்னவென்றுதான் சொல்வது..?

அவன் மனிதருள் மாணிக்கம் அல்லவா..? கிடைப்பதற்கு அரிய வைரம் அல்லவா..? அவனால் மனதார நேசிக்கப் படுவதற்கு சந்தியா கொடுத்து வைத்திருக்க வேண்டும் அல்லவா..?

ஆனால் சந்தியா கொடுத்து வைக்க விரும்பாமல் விலகிப் போனதுதான் கொடுமை.. அதை விட.. அவன் வார்த்தைகளால்.. முரட்டுத் தோற்றம் கொண்ட ஜீவாவின் மென்மையான இதயத்தைக் குத்திக் கிழித்தது.. கொடுமையிலும் கொடுமை.. அன்று சந்தியா போனில் அழுதபோது..

“கவலைப்படாதே சந்தியா.. உனக்கு நான் இருக்கிறேன்..” என்று சொன்னான் ஜீவா..

அவள் போனை வைத்ததும்.. டேனியல் புருவம் தூக்கினான்..

“அவள் பதிலுக்கு என்ன சொன்னாள்..?”

“பாவம்.. அழுதாடா..”

“பாவமா..? அவளா..? போடா முட்டாள்.. நீ தான் பாவம்.. அவள் இன்றைக்கென்ன புதிதாகவா அழுதாள்.. தினமும் தான் அழுகிறாள்.. நீ சொன்னதுக்கு என்ன சொன்னாள்..?”

“ஒன்று சொல்லவில்லை..”

“என்னடா இது.. அவளோ கல்யாணமாகாத பெண்.. அவளிடம் போய்.. கவலைப்படாதே.. உனக்கு நான் இருக்கிறேன்னு சொல்லியிருக்கிறாய்.. அவள் பதில் பேசாமல் இருந்தால் என்ன அர்த்தம்..?”

“என்ன அர்த்தம்..?”

டேனியல் என்ன சொல்லப் போகிறான் என்று ஜீவானந்தத்திற்கு தெரிந்துதான் இருந்தது.. ஆனாலும்.. அதை அவன் வாயால் கேட்க வேண்டும் என்று விரும்பினான்..

“அவள் உன் காதலை ஏற்றுக் கொள்கிறாள்ன்னு அர்த்தம்..”

“அதை எப்படிடா.. நிச்சயமாக சொல்ல முடியும்.. அவள் நண்பன் என்ற முறையில் நான் சொல்வதாய் நினைத்திருக்கலாமில்லையா..”

“டேய்.. ஆணுக்கு ஆணும்.. பெண்ணுக்கு பெண்ணும்.. இப்படிச் சொல்லிக்கொண்டால் தப்பில்லைடா.. அதுவே ஒரு ஆண்.. பெண்ணிடம்.. கவலைப்படாதே.. உனக்கு நான் இருக்கிறேன்னு சொன்னால்.. நிச்சயம் அங்கே நட்பு இருக்காதுடா.. காதல்தான் இருக்கும்.. இதைக் கூடத் தெரிந்து கொள்ளாமலிருக்க.. சந்தியா என்ன.. உன்னைப் போல முட்டாளா..? அவள் புத்திசாலி..”

“இப்ப நீ என்னடா சொல்கிற..?”

“சந்தியாவிடம் உன் காதலைச் சொல்லு..”

“டேனியல்.. உனக்கே நல்லாத் தெரியும்.. நான் சந்தியாவை உண்மையாக நேசிக்கிறேன்.. அவள் கூட ஒருநாள் பேசாவிட்டாலும் எனக்குப் பித்துப் பிடித்தது போல் ஆகிவிடுகிறதுடா..”

“அதுக்குத்தான் அவளிடம் பேசு என்கிறேன்..”

“அவளிடம் என் காதலைச் சொல்லி.. அவள் மொத்தமாய் என் உறவை முறித்துக் கொண்டு விட்டால்.. உள்ளதும் குறைந்து போய் விடாதா..?”

“ஏண்டா.. கவலைப்படாதே.. உனக்கு நானிருக்கிறேன்னு நீ சொல்லுவ.. அதை அவள் கேட்டுக் கொள்கிறாள்.. இதுக்கு மேல.. வேற என்னடா வேணும்..?”

ஜீவாவிற்கும் டேனியல் சொல்வது சரியென்றுதான் மனதிற்குப் பட்டது.. அவன் சந்தியாவிடம் அந்த வார்த்தைகளைச் சொன்னபோது.. அவள் பேசாமல்தானே கேட்டுக் கொண்டாள்..

அந்த தைரியத்தில்தான் அடுத்த முறை கண்ணீரோடு சந்தியா வந்த போது.. ஜீவா.. பட்டென்று தன் மனதிலிருந்த காதலை வெளிப்படுத்தி விட்டான்..

“இது எப்போதுதான் முடிவுக்கு வரும் ஜீவா..” என்று அழுதாள் சந்தியா..

“நான் ஒன்று சொல்லவா சந்தியா..”

“ஒன்றென்ன.. ஓராயிரம் சொல்லுங்க..”

“முதலில்.. இந்த ஒன்றுக்கு நீ உண்மையான பதிலைச் சொல்லு.. அதற்குப் பின்னால் ஓராயிரம் என்ன ஒரு கோடி கூட நான் பேசுகிறேன்..”

“என்ன ஜீவா.. ஏதோ சொல்லணும்னு சொல்லி விட்டுப் பேசாமல் இருக்கீங்க..”

“உன் கவலைகளும்.. கஷ்டங்களும் முடிவுக்கு வர வேண்டுமானால் ஒரே வழிதான் இருக்கு..”

“என்ன வழி..?”

“நீ கல்யாணம் பண்ணிக் கொண்டால் உன்னை யாரும் தவறாய் பேசவோ.. நினைக்கவும் மாட்டாங்களே..”

“த்சு.. கல்யாணத்தைப் பற்றியெல்லாம் நான் நினைத்துக் கூடப் பார்த்தது இல்லை ஜீவா..”

“இனி நினைத்துப் பார்க்கலாமே..”

“நடக்கக் கூடியதைப் பேசுங்க..”

“ஏன் இப்படி விரக்தியாய் பேசறே..?”

“தாய்.. தகப்பன் இருந்து மாப்பிள்ளை பார்த்தாலே.. ஆயிரத்தெட்டு சீர்வரிசை கேட்கிறாங்க.. நான் தனியாக நிற்கிறேன்.. எனக்குப் போய் கல்யாணமா.. வேறு பேசலாம் ஜீவா..”

“நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக் கொள்கிறேன் சந்தியா..”

படபடக்கும் இதயத்தோடு இந்த வார்த்தைகளைக் கூறிவிட்டு பரிட்சை முடிவை எதிர்பார்க்கும் மாணவன் போல சந்தியாவின் முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றான் ஜீவா..

சந்தியாவின் முகம் மாறியது.. அவள் ஜீவாவை முறைத்தாள்.. “ஸோ.. இப்படியொரு எண்ணத்தை மனதில் வைத்துக் கொண்டு தான் என்னிடம் இத்தனை நாளும் பேசிப் பழகினீங்களா..?”

“இது மோசமான எண்ணமா..?”

“என் விருப்பத்தைத் தெரிந்து கொள்ளாமல் நீங்களாக ஆசைப்பட்டால்.. அது மோசம்தான்..”

“உனக்கு என் மேல் விருப்பமில்லையா..?”

“இல்லை..”

முகத்தில் அடித்தது போல் சந்தியா பேசிய வார்த்தைகளின் குரூரம் தாங்காமல் கண்களை மூடி நின்றான் ஜீவா..

“ஓகே.. என் மனதில் உன் மேல் காதல் இருந்தது கேட்டுவிட்டேன்.. தவறாக இருந்தால் மன்னித்து விடு..”

“இதை எப்படி என்னால் மன்னிக்க முடியும்..?”

“காதலிக்கும் பெண்ணிடம் காதலைச் சொல்வது பெரிய குற்றமா..?”

“சும்மா.. கீறல் விழுந்த ரிகார்டு போல.. சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லாதீங்க.”

“கீறல் விழுந்தது என் இதயத்தில்தான் சந்தியா.. அது உனக்குப் புரியவில்லையா..?”

“நான் புரிந்து கொள்ளணும்னு எந்த விதக் கட்டாயமும் இல்லை.. நான் போகிறேன்.. இனி என்னுடன் பேசாதீங்க..”

“பொறு சந்தியா.. உன் விருப்பத்தைத்தானே கேட்டேன்.. நீ மறுத்த பின்னால்.. நான் ஏன் அதைப் பிடித்துக் கொண்டு தொங்கப் போகிறேன்..? அதற்காக ஏன் என்னுடன் பேச மாட்டேன்னு சொல்கிறாய்..? நீ எப்போதும் போல் என்னிடம் பேச வேண்டும் சந்தியா..”

“இனி என்னால் அது முடியாது.. குட்பை..”

சந்தியா கூப்பிடக் கூப்பிடத் திரும்பிப் பார்க்காமல் போய் விட்டாள்.. ஜீவா இடிந்து போய் நின்று விட்டான்.

0Shares

Reviews — Kadalaki Kasinthuruki / காதலாகி கசிந்துருகி

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link