Chapter 08

0Shares

நான் இறப்பதற்கு முன் ஒரேயொரு வார்த்தை..

      என்னைக் காதலிப்பதாய்.. நீ சொல்லிவிடு..

  என் காதருகே நீ சொல்லும் அவ்வார்த்தை..

     என் கடைசிப் பயணத்திலாவது என்துணையாய் வரட்டும்…

காதலாகி… கசிந்துருகி…

இருள் மெல்லிய படலமாய் சூழ ஆரம்பித்து விட்ட போதிலும் கடற்கரையில் கூட்டம் குறையவில்லை.. தூரத்தில் தெரிந்த விவேகானந்தர் பாறையில் ஜொலித்த மின்விளக்குகள்.. கடலின் நடுவில் அழகாய் தெரிந்தன.

அந்த அழகை கண்களால் பருகியும்.. மனதிற்குள் செலுத்த முடியாத துர்ப்பாக்கியசாலியாக ஜீவா படகோரமாய் சரிந்து கிடந்தான்..

அன்று கையை ரணமாக்கிக் கொண்டு கிடந்தவனைக் கடிந்து கொண்ட.. டேனியல்.. மருத்துவமனைக்கு அவனை இழுத்துக் கொண்டு போனான்..

“நீ மெச்சூரிட்டியான ஆள்ன்னு நினைத்துக் கொண்டிருந்தேன் ஜீவா.. இப்படிப் பைத்தியக்காரத்தனம் பண்ணிவிட்டாயே.. வெளியில் யாரிடமும் இதைச் சொல்லி விடாதே.. கேட்டால் கைகொட்டி சிரித்து விடுவாங்க..”

“சிரிக்கிறவங்க.. சிரித்து விட்டுப் போகட்டும்.. உண்மையில் இந்தக் காயம் எனக்கு வலிக்கவேயில்லை டேனியல் என் மனது வலிக்கிற வலி இருக்கிறதே.. அது என்னைக் கொல்கிறதுடா.. யார் மேலும் அளவு கடந்த அன்பை வைத்து விடக்கூடாது டேனியல் அந்த அன்பு நிராகரிக்கப்படும் போது ஏற்படும் மன வேதனை இருக்கிறதே.. அப்பப்பா.. அதைத் தாங்கிக் கொள்ளவே முடியாதுடா டேனியல்.. என் எதிரிக்குக் கூட இப்படிப்பட்ட கொடுமை நடந்து விடக்கூடாது..”

டேனியல் பதில் சொல்லவில்லை.. ஜீவாவின் துயரம் அவனை மிகவும் பாதித்தது.. பக்குவப்பட்ட மனதையுடைய ஒருவன் தன் கையைத் தானே சுட்டுப் பொசுக்கிக் கொள்ளும் கொடூரத்தைச் செய்கிறானென்றால்.. காதல் என்பது கொடுமையான ஒன்றாக அல்லவா இருக்கிறது..?

தெளிந்த அறிவுடையவன் இத்தகைய செயலைச் செய்திருக்கிறான் அவனுக்கு மனநோய் என்று மன நோயாளியைப் போல அவனைக் கருத முடியுமா..? இல்லை மனநோய் மருத்துவரால்தான் இந்த நோய்க்கு சிகிச்சை தர முடியுமா..

பாத்திரம் அறிந்து பிச்சை போட வேண்டும் என்று பெரியவர்கள் அந்தக் காலத்தில் தெரியாமலா சொல்லி வைத்தார்கள்..?

இப்படி உயிரைக் கொடுக்கும் அளவுக்கு காதலை ஒருத்தியின் மேல் வைப்பதற்கு முன் ஜீவா யோசித்துப் பார்த்திருக்கக் கூடாதா என்று டேனியலுக்கு ஆற்றாமையாக இருந்தது..

இதை ஜீவாவிடம் கேட்டபோது..

“யோசித்து வருவதற்குப் பெயர் காதல் இல்லை டேனியல்..” என்று பதில் சொன்னான்.

“நல்லது.. கெட்டது.. நான்கையும் யோசித்து விட்டு ஒரு செயலில் இறங்க வேண்டும்ன்னு பெரியவங்க சொல்லியிருக்கிறாங்க ஜீவா..”

“காதல் என்பது செயல் இல்லை.. அது ஒரு உணர்வு.. சொந்தம்.. ஏழேழு ஜென்மத்திற்கும் நினைவிலிருந்து அகலாமல் தொடர்ந்து வரும் பந்தம்.. சிலரைப் பார்க்கும் போது இவங்களை எங்கேயோ பார்த்திருக்கிறோமே என்று நினைப்போம்.. அது போலத்தான் இதுவும்.. யாராவது ஒருவரிடம்தான் நமக்கு ஜென்ம.. ஜென்மமாய் தொடர்பு இருப்பது போல ஒரு அன்பு ஏற்படும்.. அதுதான்டா சந்தியாவின் மேல் எனக்கு ஏற்பட்டு இருக்கிறது..”

டாக்டருக்காக காத்திருந்த வரவேற்பு ஹாலில்.. டிவி பொருத்தப்பட்டிருந்தது.. அதில் கறுப்பு வெள்ளைப் படம் ஒன்று ஓடிக் கொண்டிருக்க.. டேனியல்.. ஜீவா கூறிய வார்த்தைகளின் கனம் தாங்காதவனாய் கனத்த மனத்துடன் டிவியைப் பார்த்தான்..

“சொந்தம் எப்போதும்

தொடர் கதைதான்..

முடிவே இல்லாதது..

எங்கே போனாலும்

தேடியழைத்து..

இணைக்கும் கதை இது..”

சிவாஜியும்.. சாவித்ரியும் பாடிக் கொண்டே காரில் செல்ல.. ஜீவாவின் முறை வந்து.. அழைப்பு வந்தது.. டேனியல்.. ஜீவாவுடன் டாக்டரின் அறைக்குள் சென்றான்.

“இந்த இடத்தில் எப்படி நெருப்புக் காயம் பட்டது..?” டாக்டர் புருவம் உயர்த்தினார்..

“இவன் தானாய் சமைத்துச் சாப்பிடுவான் டாக்டர்.. சமையல் பண்ணும் போது.. பாத்திரம் சுட்டுவிட்டது..” டேனியல் ஜீவாவை முறைத்துக் கொண்டே பொய் சொன்னான்..

“சமையல் பாத்திரம்.. புறங்கையில் சுடுமா..” அப்போதும் டாக்டர் விடாமல் கேள்வி கேட்டார்..

“இவன் சமைக்கும் லட்சணத்திற்கு.. புறங்காலிலேயே சுடும் டாக்டர்..” என்று டேனியல்.. ஜீவாவைப் பார்த்துப் பல்லைக் கடித்தான்..

“என்னவோ போங்க.. எனக்கு ஒன்றும் புரியவில்லை..” என்றார் டாக்டர்..

‘புரியாத வரைக்கும் நல்லது.. நீங்க தப்பிச்சீங்க..’ என்று மனதில் நினைத்துக் கொண்டான் டேனியல்..

டாக்டர் ஊசி போட்டு விட்டு.. மாத்திரை மருந்துகளை எழுதிக் கொடுத்தார்.. அவர் கேட்ட பீஸைக் கொடுத்து விட்டு.. மாத்திரை மருந்துகளை வாங்கிக் கொண்டு ஜீவாவின் அறைக்கு அவனைத் தள்ளிக் கொண்டு சென்றான் டேனியல்..

“முதலில் சாப்பிடு..” என்று கையோடு கொண்டு வந்திருந்த பார்சலைப் பிரித்து.. ஜீவாவை சாப்பிட வைத்தான்..

“கையைக் காட்டு..” என்று கைப் புண்ணுக்கு மருந்தை தடவி விட்டான்..

“மாத்திரை சாப்பிடு.. தூக்க மாத்திரையைச் சொல்லவில்லை.. புண்ணை ஆற்ற டாக்டர் கொடுத்த மாத்திரையைச் சொல்கிறேன்..” என்று அதட்டி.. ஜீவாவை மாத்திரையைச் சாப்பிட வைத்தான்..

“நீ உன் வீட்டிற்குப் போகவில்லையா டேனியல்..?”

“எங்கே போய் தொலைவது..? நீ இப்படி பினாத்திக்கிட்டு.. சட்டையைக் கிழிக்காத குறையாய்.. கையில் சூடு வைத்துக் கொண்டு கிடக்கும் போது.. நான் என் பிழைப்பைப் பார்க்க எப்படிப் போவது..?”

“ஸாரிடா டேனியல்.. என்னால் உனக்கும் தொல்லை.. என் சந்தியாவிற்கும் தொல்லை..”

‘என் சந்தியாவா..! இவன் திருந்தவே மாட்டானா..’

டேனியல் கொலை வெறியோடு ஜீவாவைப் பார்த்தான்..

“ஏன் டேனியல்.. அப்படிப் பார்க்கிற..”

“உன்னை அடித்தே கொன்று விடுவேன்.. இவ்வளவு நடந்திருக்கு.. அவள் என்னவோ பேரழகி போல் உன்னைத் திரும்பிப் பார்க்க மாட்டேன்னு சொல்லிவிட்டு போயிருக்கிறா.. நீ கையைப் புண்ணாக்கிக்கிட்டு தூக்க மாத்திரைகளை வாங்கிக் கொண்டு புலம்பிக் கொண்டு இருக்கிறாய்.. உன்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கி விட்டு.. அவள் ஹாயாக இருக்கிறாள்.. இன்னும் அவளை உன் சந்தியான்னு சொல்லிக்கிட்டு இருக்கிறாயா..?”

“திட்டாதே டேனியல்..”

“உன்னைக் கொல்லனும்டா..”

“கொன்று விடு டேனியல்.. என்னைக் கொன்று புதைத்துவிடு அப்படிப் புதைக்கும் போது.. என் கல்லறையில் சிறு ஜன்னலை மட்டும் வை..”

“அது எதுக்குடா..?”

“அந்த ஜன்னல் வழி அவளை நான் பார்ப்பேனில்லையா..?” டேனியலுக்கு தலையைப் பிய்த்துக் கொள்ள வேண்டும் போல இருந்தது.. முன்பெல்லாம் ஜீவாவிடம் பேச வருவது என்றாலே உற்சாகமான ஒரு விசயமாக டேனியலுக்கு இருக்கும்.. இப்போது அந்த நிலைமை மாறிவிட்டது.. எப்போது பார்த்தாலும் சாவு.. கல்லறை.. கைக்கு நெருப்புக்காயம்.. என்று ஜீவா ஆகிப் போனதில்.. டேனியல் அதிக மனப்பாதிப்புக்கு ஆளானான்..

0Shares

Reviews — Kadalaki Kasinthuruki / காதலாகி கசிந்துருகி

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link