Chapter 13

0Shares

நீ சிந்துகின்ற கண்ணீர் துடைப்பேன்..

  உன்நிழலாக என்றும் இருப்பேன்..

நீ சுமக்கும் மனச் சுமையிறக்க..

  உன் சுமைதாங்கியாய் துணையிருப்பேன்..

காதலாகி.. கசிந்துருகி..

இரவு நேரம் வந்து விட்டதால் கடற்கரையில் ஜன நடமாட்டம் நின்று போயிருந்தது.. ஏதோ ஒரு டூரிஸ்ட் பஸ் வந்து நிற்க அதிலிருந்து இறங்கிய ஜனங்கள் இருட்டில் கடலருகே போகப் பயந்து.. கன்யாகுமரி அம்மனின் கோயில் நோக்கி நடந்தார்கள்..

ஒரு இளஞ்ஜோடி மட்டும் கை கோத்துக் கொண்டு கிசுகிசுப்பாய் பேசியபடி கடலருகில் சென்றது.. திரும்பிவரும் போது படகிற்கு பக்கத்தில் இருட்டில் படுத்திருந்த ஜீவாவைப் பார்த்து அந்தப் பெண் பயந்து அலறிவிட ஜீவா எழுந்து அமர்ந்தான்.

“ஸ்ஸ்.. யாரோ ஒருத்தர் இருட்டில் படுத்திருக்கிறார்.. அவரைப் பார்த்து நீ பயப்படலாமா..”

அந்தப் பெண்ணுடன் வந்தவன் இதுதான் சாக்கென்று அவளை அணைத்து தைரியம் கொடுக்கும் சாக்கில் தன்னோடு இறுக்கிக் கொள்ள ஜீவா ஒரு பெரு மூச்சுடன் அவர்களுக்கு தனிமையைத் தந்துவிட்டு கோயிலை நோக்கி நடந்தான்..

‘இவன் யாரோ, எவரோ.. காதல் இவனுக்கு கை கூடியிருக்கிறது.. இவன் காதலிப்பவள் இவனைக் காதலிக்கிறாள்.. இவன் சந்தோசமாக இருக்கும் தனிமையை நான் ஏன் கெடுக்க வேண்டும்..?’

ஜீவா அங்கிருந்து அகன்றதும் அந்த ஜோடியின் நெருக்கம் அதிகமானது..

கோயிலின் உள்ளே தீபாராதனை காட்டிக் கொண்டிருக்க.. ஜீவா அம்மனின் முகத்தைப் பார்த்துக் கொண்டே.. கண்களில் நீர் மல்க நின்றான்.

‘என் மனம் துடிக்கும் துடிப்பு உனக்குக் கேட்கவில்லையா.. என் வேண்டுதல் உன் செவியை எட்டவில்லையா.. நான் அப்படியென்ன பெரிதாக கேட்டுவிட்டேன்.. என் வாழ்க்கைப் பாதையில் ஒருத்தியைச் சந்தித்தேன்.. ஏனோ அவள் என்னை மிகவும் வசீகரித்தாள்.. அவளை எனக்கு ரொம்ப.. பிடித்துப் போய் விட்டது.. ஆனால் அவளுக்கு ஏன் என்னைப் பிடிக்காமல் போனது..? என்னிடம் என்ன குறையை அவள் கண்டாள்..? ஒரு தாயாக அவளை என் மடி தாங்குவேனே.. ஒரு தோழனாக அவள் மனச் சுமையை இறக்குவேனே.. ஒரு காதலனாக அவள் என் கண்ணுக்குள் வைத்துக் காப்பேனே.. இத்தனையும் செய்ய நானிருக்கும் போது என்னை ஏன் அவள் பிரிந்து சென்றாள்..? நீ வரம் கொடுத்தால் அவள் திரும்பி வருவாள்.. நீ மனது வைத்தால் அவள் தன் மனதைத் தருவாள்.. நீ வரம் கொடுத்துவிடு தாயே.. என் காதலை நிறைவேற்ற மனம் வைத்துவிடு..’

மனமுருகி பிரார்த்தனை செய்தவன் கண்திறந்த போது.. கற்பூர ஆரத்தியுடன் அர்ச்சகர் எதிரே நின்று கொண்டிருந்தார்..

“அம்பாள் மனசு வைப்பாள்.. மனம் கலங்காம வீட்டுக்குப் போங்க.. குங்குமப் பிரசாதம் வாங்கிக்கங்க..”

மனம் சிலிர்த்தது.. பேசும் தெய்வத்தைப் பார்த்துக் கன்னத்தில் போட்டுக் கொண்டவன்.. கற்பூர ஆரத்தியை தொட்டு கண்ணில் ஒற்றிக் கொண்டான்.. குங்குமம் வாங்கிக் கொண்டு திரும்பியவன் அப்படியே நின்று விட்டான்..

அவனருகில் டேனியல் நின்று கொண்டிருந்தான்..

“டேனியல்..”

“மதியமிருந்து உன்னைக் காணோமாமே.. உன் ஜிம்மின் ஆள்கள் உனக்குப் போன் பண்ணினார்களாம்.. ஸ்விட்ச் ஆப் பண்ணியிருந்தாயாம்.. பயந்து போய் எனக்குப் போன் பண்ணினாங்க.. ஊரெல்லாம் தேடிவிட்டு.. கடற்கரைக்கு தேடிவந்தேன்.. நான் நினைத்தது சரியாகத்தான் இருக்கிறது.. நீ இங்கேதான் இருக்கிறாய்.. வா.. போகலாம்..”

மதத்தால் கிறிஸ்தவன்.. அன்பால் நண்பன்.. எந்தவித வேறுபாடும் இல்லாமல்.. ஜீவாவைத் தேடி கோயிலுக்கு வந்திருக்கிறான்.. ஜீவா நெகிழ்ந்து போனான்..

‘கடவுள் நம் அருகில்

இருக்க நினைத்தார்..

நண்பனின் வடிவில்..

நம் அருகில் வந்தார்..’

அவன் மனம்.. அவசரக் கவிதையை எழுதியது..

“சாப்பிட்டாயா ஜீவா.. இப்போது சாப்பிட்டிருக்க மாட்டாய்.. அது எனக்குத் தெரியும்.. மதியம் சாப்பிட்டாயா..”

ஜீவா மௌனமாக நடந்ததில் இருந்தே.. அவன் நாள் முழுவதும் பட்டினி கிடந்தது புரிந்து விட டேனியல் கோபமானான்..

“உன்னிடம் படித்துப் படித்துச் சொல்லி விட்டேன்.. வயிற்றை வாடப் போடாதேன்னு.. நீ கேட்கிற வழியாய் இல்லை.. வா முதலில் ஹோட்டலுக்குப் போகலாம்.. உன் டூவீலர் எங்கே..”

கடற்கரையோரமாக நிறுத்தப்பட்டிருந்த தன் வண்டியில் ஏறியபடி டேனியல் வினவினான்..

“ஜிம்மில் இருக்கிறது..”

“ஜிம்மிலா.. அப்போ அங்கேயிருந்து இதுவரை எப்படி வந்தாய்..?”

“சும்மா யோசித்துக் கொண்டே நடந்து வந்தேன்..”

“கால் போன போக்கில் வந்தேன்னு சொல்லு.. ம்ப்ச்.. உனக்கும் புத்தி சொல்லி, புத்தி சொல்லி எனக்கும் அலுத்து விட்டது.. எப்படியோ போன்னு விட்டு விடவும் முடியவில்லை.. வா வந்து வண்டியில் ஏறு..”

ஹோட்டலுக்குப் போகும் வழியெல்லாம் டேனியல் ஜீவாவைத் திட்டித் தீர்த்தான்..

ஜீவாவின் கம்பீரத்திற்கும் பணத்திற்கும் அழகான பெண்கள் ஆயிரம் பேர் வரிசையில் வருவார்கள்.. இவன் இருக்க மாட்டாமல் அந்த சந்தியாவைக் காதலித்து விட்டு அவதிப்படுகிறான்.. இதற்கு ஜீவாவிற்கு தலையெழுத் தில்லை.. டேனியல் சொன்னால் கேட்காத பிறவியாக ஜீவா போய்விட்டான்.. அந்த சந்தியாவிற்கு மனம் என்பதே இல்லை.. மனது என்று ஒன்று இருந்திருந்தால் அவள் ஜீவாவின் அன்பை நினைத்துப் பார்த்திருப்பாள்.. அலட்சியப் படுத்தியிருக்க மாட்டாள்.. அவளுக்காக 

தன் வாழ்வையே ஜீவா பாழடித்துக் கொண்டிருப்பது முட்டாள்தனம்..

ஜீவா பொறுமையாக டேனியல் திட்டுவதைக் கேட்டுக் கொண்டான்..

“இறங்கு.. என்னவோ.. உன்னை நான் கொஞ்சிக் கொண்டிருப்பதைப் போல சந்தோசமாய் என் திட்டுக்களை கேட்டுக் கொண்டிருக்கிறாயே.. நான் உன்னைத் 

திட்டிக் கொண்டிருப்பது உன் மரமண்டையில் ஏறுச்சா இல்லையா..?”

“யார் என்னைத் திட்டுகிறாங்க.. நீதானே திட்டுகிறாய்.. எவ்வளவு திட்டனுமோ.. அவ்வளவு திட்டு.”

“எனக்குத்தான் வாய் வலிக்கும்.. நீ திருந்தவே போவதில்லை.. வந்து இப்போதாவது வயிற்றுக்குள் எதையாவது போடு.. ஃபுட் கிவ் அஸ் எனர்ஜின்னு சின்ன வயதில் சயின்ஸ் பாடத்தில் படித்த ஞாபகம் இருக்கா, இல்லையா..?”

ஜீவா லேசாக சிரித்தான்.. நண்பனின் முகத்தில் சிரிப்பை வரவழைத்து விட்ட நிம்மதியுடன் டேபிள் தேடி அமர்ந்த டேனியல் எதிரில் அமர்ந்த ஜீவாவைக் கனிவுடன் பார்த்தான்.

“நேரா நேரத்திற்கு சாப்பிட்டு விடு ஜீவா..”

“சரிடா..”

“ஏன் இன்றைக்கு இப்படி பிஹேவ் பண்ணி விட்டாய்..”

“ம்ச்ச்..”

“எது நடந்தாலும் எதிர்த்து நிற்பவன் நீ ஜீவா.. உன் வீரத்தை குறைத்துக் கொள்ளாதே.. கடமையிலிருந்து தப்பித்து ஓட நினைக்காதே.. புரிந்ததா..”

“ம்ம்ம்..”

ஜீவா சாப்பிட ஆரம்பித்தான்.. இப்படி நோயாளி போல் ஆகிவிட்டானே என்ற மனவருத்தத்துடன் டேனியலும் சாப்பிட ஆரம்பித்தான்.

“அடி எல்லாம் எல்லாம்..

உனக்கும் பிடிக்க..

என்னை ஏன் பிடிக்காதென்றாய்..?”

ஹோட்டலின் மூலையில் போடப்பட்டிருந்த மெல்லிசை கச்சேரி மேடையில் மைக்கைப் பிடித்துக் கொண்டிருந்தவர் பாடிக் கொண்டிருக்க ஜீவா சாப்பிடுவதை நிறுத்திவிட்டு.. பாட்டைக் கவனிக்க ஆரம்பித்து விட்டான்.

“இந்தப் பாட்டுப் பாடுகிறவன் வேற.. நேரம் காலம் தெரியாமல் இந்தப் பாட்டைப் பாடி வைக்கிறான்.. டேய் ஜீவா.. இப்ப நீ தட்டைப் பார்த்துச் சாப்பிடுகிறாயா.. இல்லையா..”

டேனியல் அதட்டி மிரட்டி ஜீவாவைச் சாப்பிட வைத்து எழுப்பி கூப்பிட்டுக் கொண்டு போனான்..

0Shares

Reviews — Kadalaki Kasinthuruki / காதலாகி கசிந்துருகி

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link