Chapter 14
ஓர் பார்வை நீ தந்தால் போதும்-என்
உயிர் பூ தானே மலரும்..
ஓர் வார்த்தை உன் இதழ் உதிர்த்தால் போதும்-என்
ஜீவன் தானே வளரும்..
காதலாகி.. கசிந்துருகி..
ஜீவாவைச் சுற்றிப் பலர் இருந்தனர்.. அவனுக்கு ஒன்று என்றால் ஓடிவர உற்றாரும் உறவினரும் நண்பர்களும் தயாராக இருந்தனர்.. ஆனால் அவன் தனிமையாக உணர்ந்தான்.. யாருமற்ற அநாதை போல் தனக்குள்ளேயே ஏங்கினான்..
டேனியல் மட்டும் அவன் மனதைப் புரிந்து கொண்ட வனாக அவனுடனேயே இருந்தான்.. வேலை நேரம் போக மற்ற நேரத்தில் ஜீவாவை விட்டு அவன் நகர்வதில்லை.
“அவளைப் பார்க்க வேண்டும் போல் இருக்குடா..” என்றான் ஜீவா, ஒரு நாள் சொன்னான்..
“ஆரம்பித்து விட்டாயா..? ஏண்டா குடிகாரன்களைக் கூட குடியை மறக்க வைக்க மருத்துவம் கண்டுபிடித்து விட்டார்கள்.. இந்த கருமம் பிடித்த காதலை மறக்கடிக்க ஒரு மருத்துவத்தையும் யாராலேயும் கண்டுபிடிக்க முடிய வில்லையே..”
“தயவு செய்து என்னைப் புரிந்து கொள் டேனியல்.. அவளை ஒரு முறை பார்த்து விட்டால் போதும். என் வேலைகளைச் செய்து விட தெம்பு வந்து விடும்..”
“ஜீவா.. இந்தப் பெண்கள் இருக்கிறார்களே.. அவர்கள் பின்னாலேயே நாம் அலைந்தால் முறுக்கிக் கொள்வார்கள்.. இவர்களையெல்லாம் விட்டுப் பிடிக்க வேண்டும்.. நீ கொஞ்ச நாள் அவளைக் கண்டு கொள்ளாமல் வேலையைப் பார்.. உன் பின்னால் அவள் தானே வருவாள்..”
டேனியல் தீவிரமாய் ஜீவாவுக்கு உபதேசம் பண்ணிக் கொண்டிருக்க… அவன் விழிகள் இலக்கில்லாமல் சூன்யத்தை வெறித்துக் கொண்டிருந்தன..
‘ம்ஹீம்.. இவனுக்கு புத்தி சொல்வதற்கு பதில் செவிடன் காதில் சங்கை ஊதிவிடலாம்..’
ஓங்கி ஜீவாவின் முதுகில் ஒரு அறை கொடுத்தான்.
“ம்ம்.. என்னடா சொன்னாய்..?”
“சுரைக்காய்க்கு உப்பில்லைன்னு சொன்னேன்.. உன்னிடம் பேசுவதற்கு பதில் அந்தக் குட்டிச் சுவரில் தலையை மோதிக் கொள்ளலாம்.. ஏதோ மீட்டிங் இருக்குன்னு சொன்னாயே..”
“ம்ம்.. ஹெச். ஆர். மீட்டிங்..”
“போகனுமா.. வேண்டாமா..?”
“கட்டாயம் போக வேண்டும்..”
“அப்போ எழுந்திரு.. கிளம்பிப் போய் மீட்டிங்கை அட்டெண்ட் பண்ணும் வழியைப் பாரு.. மசமசன்னு நிற்காதே..”
டேனியல் முடிக்கி விடவும் ஜீவாவும் மீட்டிங்கிற்கு கிளம்பினான்.. ஹெச்.ஆர்.மீட்டிங்கை முடித்து விட்டு அவன் திரும்பிய போது இரவு மணி எட்டாகி விட்டது.. சாலையோர மெர்க்குரி விளக்குகள் ஒளி வெள்ளத்தைப் பாய்ச்சிக் கொண்டிருந்தன.. யோசனையுடன் நடந்து கொண்டிருந்த ஜீவா ஆனந்தத்துடன் நின்று விட்டான்.
அவனுக்கு எதிரே சந்தியா வந்து கொண்டிருந்தாள்.. அவள் அவனைப் பார்க்கவில்லை..
எவளைப் பார்க்க வேண்டும் என்று அல்லும் பகலும் ஜீவா துடித்தானோ.. அவள் கண்ணெதிரே நடந்து வரவும் ஜீவா ஒரு கணம் உறைந்து நின்று விட்டான்.
அந்த நேரத்தில் அவளை அந்த வழியில் அவன் எதிர்பார்க்கவே இல்லை.. எந்த நேரமும் அவளை நினைத்துக் கொண்டிருந்த காரணத்தினாலோ என்னவோ அன்று அவன் அந்த இரவு வேளையில் சந்தியாவை எதிரில் பார்த்துவிட்டான்..
அமைதியாக நடந்து வந்து கொண்டிருந்தவளின் முகம் ஜீவாவைப் பார்த்ததும் மாறிவிட்டது..
‘மன்னிக்க மாட்டாயா.. கொஞ்சம் மனமிரங்கி..’ ஜீவாவின் பார்வை இறைஞ்சியது..
சந்தியா வேகமாக ஜீவாவைக் கடக்கப் போனாள்.. “நில் சந்தியா..” என்றான் ஜீவா..
அவள் நின்றாள்.. முகத்தை திருப்பிக் கொண்டு சாலையை பார்த்தாள்.. ‘நில்’ என்றதும் அவள் நின்று விட்டதே ஜீவாவிற்குப் போதுமானதாக இருந்தது..
“கடவுள் இருக்கிறார் சந்தியா.. அவர் என்னைக் கைவிடவில்லை.. உன்னை ஒரு தரமாவது பார்த்து விடனும்னு தவித்தேன்.. இப்போது பாரேன்.. நான் எதிர்பார்க்காமல் உன்னைச் சந்தித்து விட்டேன்..” ஜீவா பரவசப்பட்டான்..
“என் ரூம் மேட்டிற்கு காய்ச்சல், அவசரமாய் அவளுக்கு டேப்லெட் வாங்க வேண்டியிருந்தது.. வெளியில் வந்தேன்.. வழியில் உங்களைப் பார்ப்பேன்னு தெரிந்திருந்தால் வந்திருக்கவே மாட்டேன்..” சந்தியா வெறுப்பை உமிழ்ந்தாள்..
“ஏன் சந்தியா, ஏன் என்னை வெறுக்கிறாய்..?”
“காரணத்தைச் சொல்லி விட்டேனே..”
“இல்லை.. அது சரியான காரணமில்லை..”
“வேறு எது காரணம்..?”
“உன் பிடிவாதம், வெறும் பிடிவாதம் இல்லை.. வறட்டுப் பிடிவாதம்..”
ஜீவா அதுவரை சந்தியாவிடம் அப்படிப் பேசியதே இல்லை.. மிகவும் தன்மையாகப் பேசுவான்..
முதன் முதலாக குரலை உயர்த்தி அவன் அப்படிப் பேசவும் சந்தியா அயர்ந்து விட்டாள்..
“என்னது.. வறட்டுப்பிடிவாதமா..?”
“ஆமாம், வறட்டுப் பிடிவாதம் தான்.. வேறு என்ன..? உன் மனதில் நான் இல்லையா..? உன் மனச்சாட்சியைக் கேள்.. அது உண்மை சொல்லும்..”
“அப்போ.. நான் பொய் சொல்கிறேனா..?”
“ஆமாம்.. பொய்தான் சொல்கிறாய்..”
ஜீவாவின் முகத்தில் என்றுமில்லாத கடுமை அன்று நிலவியது.. காதல் நினைவுகள் துரத்த ஓடிக் கொண்டிருந்தவன் ஓட்டத்தை நிறுத்தி சந்தியாவை எதிர்த்து நின்று விட்டான்..
Reviews — Kadalaki Kasinthuruki / காதலாகி கசிந்துருகி
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.