Chapter 15

0Shares

கல்லைச் செதுக்கினால்..

  சிற்பம் வரும்..

       என் மனதைச் செதுக்கினால்..

  நீதான் வருவாய்..

    காதலாகி.. கசிந்துருகி..

குளுமையான அந்த இரவு நேரத்தில் கடல் காற்று அவர்களின் உடலைத் தழுவிச் சென்றது.. சந்தடி அதிகமில்லாத அந்த அகன்ற சாலையில் வெளிச்சத்தை உமிழ்ந்த மெர்க்குரி விளக்கின் ஒளியில் சந்தியா ஒரு தேவதையைப் போல் இருந்தாள்..  அவனைப் பார்க்க முடியாமல் பேச முடியாமல் தவித்துப் போயிருந்த ஜீவா அவளுடைய அழகால் ஈர்க்கப்பட்டான்..

‘ஒளியிலே.. தெரிவது.. தேவதையா..?’ அவன் மனம் கேட்டது..

சந்தியா அவனுடைய விழிகளை நேருக்கு நேராக பார்க்காமல் தவிர்ப்பதை புரிந்து கொண்டவனின் மனதில் மெல்லிய சாரல் அடித்தது..

‘ஏன் இவள் என்னை நேராக கண்ணோடு கண் பார்க்க மாட்டாளாமா..? இவள் மனதில் என்மேல் காதல் இல்லையென்றால் என் கண் பார்த்துப் பேச வேண்டியது தானே..’

அவன் மனதின் வெம்மை மறைந்து பனிபோல் ஒரு ஜில்லென்ற உணர்வு மனதில் பரவுவதை உணர்ந்தான்.

“என்னைப் பார் சந்தியா..”

“நான் ஏன் உங்களைப் பார்க்க வேண்டும்..?”

“நீயேன் என்னைப் பார்க்காமல் இருக்க வேண்டும்..?”

“அவசியமில்லை.. அதனால் நான் பார்க்கவில்லை..”

“ஏய்ய்.. பொய் சொல்லாதே..”

“பொய் சொல்கிறேனா.. நானா..? ஹ..”

“சும்மா அலட்டிக் கொள்ளாதே சந்தியா.. உனக்குத்தான் என்மேல் காதல் இல்லையே.. அப்புறம் ஏன் என் முகத்தைப் பார்த்துப் பேசப் பயப்படுகிறாய்..?”

“பயமா.. எனக்கா..? ஹ..”

“சும்மா.. இந்த ‘ஹ..’ போடுவதை நிறுத்து.. நீ இப்படி தோளைக் குலுக்கி ‘ஹ..’ சொல்லி விட்டால் நான் நம்பி விடுவேனாக்கும்..”

“நீங்க நம்பினால் எனக்கென்ன.. நம்பாவிட்டால் எனக்கென்ன..?”

“இப்படிச் சொல்லி விட்டால் எப்படி..? நான் நம்பவேண்டியது உனக்கு அவசியம்மா..”

“அம்மாவா நானா உங்களுக்கா..? இந்த அம்மா போடும் வேலையையெல்லாம் வேறு யாரிடமாவது வைத்துக் கொள்ளுங்க.. என்னிடம் வேண்டாம்..”

“நீயே சொல்லி விட்ட பின் நான் உன்னிடம் இதைச் சொல்வேனா..? என் அம்மாவிடம் சொல்லிவிட்டுப் போகிறேன்..”

“ஹலோ…”

“கையில் போன் இல்லாமலே ஹலோ போடுகிறாயே.. யாரிடம் பேசுகிறாய்..?”

“என்னிடம் பேசுகிறாயா..? என் பெயர் ‘ஹலோ’ இல்லையே.. ஜீவா என்ற ஜீவானந்தமாச்சே..”

“வழியை மறித்து வம்பு இழுக்கறீங்களா..”

“இல்லைன்னு உனக்கே தெரியும்..”

“லேடிஸ்கிட்ட கலாட்டா பண்ணுகிறீங்களா..?”

“இங்கே நீ மட்டும்தானே இருக்க.. லேடிஸ்ன்னு ஏன் பன்மையில் சொல்கிற..?”

“இப்ப நான் ஒரு சத்தம் கொடுத்தேன்னு வையுங்க.. இந்த ஊரே கூடி உங்களை மொத்தி விடும்..”

“அப்படியொரு ஆசை உன் மனதில் இருக்கா..? இதுவரை அது எனக்குத் தெரியாமல் போச்சே.. உன் ஆசையை தெரிந்து கொண்ட பின்னால் அது நிறைவேற என்னாலான ஒத்துழைப்பை தராமல் இருப்பேனா..? நீ சத்தம் போட்டு ஊரைக் கூட்டு.. நான் தாராளமாய் தர்ம அடியை வாங்கிக் கொள்கிறேன்.. ம்ம்.. சத்தம் போடு..”

ஜீவா ஊக்குவிக்க பொறியில் மாட்டிய எலிபோல் சந்தியா திருதிருவென விழித்தாள்..

அதுநாள் வரை நட்பாகப் பழகிய ஜீவாவை தர்ம அடி வாங்க வைப்பதா..? அவளால் அதை நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை..

இப்போது அவளெதிரில் நிற்கும் ஜீவா புதியவனாக அவள் கண்ணுக்குத் தெரிந்தான்.. இதுவரை அவளறிந்த ஜீவா.. இப்படி நிமிர்வாக அவளெதிரில் நின்று சவால் விட்டதில்லை..

ஜீவாவிடம் தெரிந்த இந்த இன்னொரு முகம் அவளைத் தடுமாறச் செய்தது.. இந்த ஜீவா கெஞ்சுதல் இல்லாத ஜீவா..

‘ஆமாம்.. நான் அப்படித்தான்.. இப்ப அதுக்கு என்னாங்கிற..’ என்று தெனாவெட்டாக பேசும் ஜீவா..

இவனை எப்படிக் கையாள்வது என்று திகைத்து நின்று விட்டாள் சந்தியா..

“என்ன மேடம் அசையாமல் நிற்கறீங்க.. ஊரைக் கூட்டும் உத்தேசமில்லையா..?” ஜீவா கிண்டலாக வினவினான்..

“எப்படி உங்களால் இப்படி எதுவுமே நடக்காதது போல் பேச முடிகிறது..?” சந்தியா தன் வெறுப்பை இழுத்துப் பிடித்துக் கொண்டு கேட்டாள்.. 

“எதுவுமே நடக்காவிட்டால் எதுவுமே நடக்காதது போல்தானே பேச முடியும்..? உனக்கும் எனக்கும் இடையில் என்ன நடந்து விட்டது..?”

“ஒன்றுமே நடக்கவில்லையா..?”

“அதைத்தானே நானும் சொல்கிறேன்.. என்னை நீ காதலித்தாயா..? இந்த கன்யாகுமரியை என்னுடன் சுற்றி வந்தாயா..? கடற்கரையில் உட்கார்ந்து நேரம் போவது தெரியாமல் பேசிக் கொண்டிருந்தாயா..? அந்தப் பேச்சுக்கள் மட்டும் போதாதுன்னு.. விடிய.. விடிய செல்போனில் பேசி என் உயிரை எடுத்தாயா..? என்னைப் பார்க்க முடியாமல் தவித்துப் போய் தாபத்தில் கை வளையல்கள் உருவி விழ.. இளைத்துப் போனாயா..? பசி தூக்கம் மறந்து பித்துப் பிடித்தவள் போல் பிதற்றினாயா..? இன்னும்..”

“ஐயோ.. போதும் போதும்..”

சந்தியா கையெடுத்துக் கும்பிடாத குறையாய் அலறிய பின்னால்தான் ஜீவா அவள் பிழைத்துப் போகட்டுமென்று பேச்சை நிறுத்தினான்..

“ஏங்க.. உங்களிடம் நான் என்ன கேட்டேன்.. நீங்க என்ன பதிலைச் சொல்லிக் கொண்டிருக்கீங்க.. விட்டால் வீரபாண்டிய கட்டபொம்மன் வசனத்தைப் போல் 

மஞ்சள் அரைத்துத் தந்தாயா..? நாற்று நட்டாயா.. களை வெட்டினாயான்னு.. நீங்கள் பாட்டுக்கு வரிந்து கட்டிக் கொண்டு வசனம் பேச ஆரம்பித்து விட்டீங்களே..”

“நான் சொன்னதை நீதான் புரிந்து கொள்ளவில்லை..”

“என்ன.. என்ன புரிந்து கொள்ளவில்லை..”

“இதையெல்லாம் நீ செய்திருந்தால், நமக்குள் ஏதாவது நடந்திருக்குன்னு நான் நினைத்துக் கொள்ளலாம்.. இங்கேதான் ஒன்றுமே நடக்கவில்லையே.. நீ செய்ய வேண்டிய இத்தனை வேலைகளையும்.. ஆம்பளையான நான் செய்து கொண்டிருந்தேன்.. நீ திரும்பிப் பார்க்காமல் ராணி ரங்கம்மாபோல திமிராய் போய் கொண்டிருந்தாய்.. இப்பப் போய் என்னிடம் வந்து நமக்குள் நடந்ததை மறந்து விட்டாயேன்னு கேட்டால் நான் என்னன்னு பதிலைச் சொல்வது..?”

சந்தியா உண்மையிலேயே பதிலைச் சொல்ல முடியாமல் உதட்டைக் கடித்தாள்.. ஜீவா வெற்றிப் பார்வையுடன் பேச்சைத் தொடர்ந்தான்..

“இதோ பார் சந்தியா.. என் மனதில் கள்ளம் இல்லை.. காதல் இருந்தது.. அதை உன்னிடம் சொன்னேன்.. நீ பிகு பண்ணிக் கொண்டு மறுத்து விட்டாய்.. ஓ.கே.. நமக்குள் காதல் வேண்டாம்.. உன் மனதில் கள்ளம் இல்லாவிட்டால் தைரியமாக பழையபடி என்னுடன் பேசிப் பழக வேண்டியது தானே..”

சந்தியாவை இந்த வார்த்தைகள் தாக்கின..

0Shares

Reviews — Kadalaki Kasinthuruki / காதலாகி கசிந்துருகி

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link