Chapter 18
என்ன குறை.. என்னிடம் கண்டாய்..?
என்னை வெறுக்க.. காரணமென்ன..?
உன்னிடத்தில் எனைக் கொடுத்தேன்..
வேறு என்ன தவறு செய்தேன்..?
காதலாகி.. கசிந்துருகி..
எது வேண்டுமென்று கடவுளிடம் மனப்பூர்வமாக வேண்டிக் கொள்கிறோமோ அது கட்டாயம் நடக்கும் என்பது உண்மைதான் என்று ஜீவா நினைத்து கொண்டான்.
சில நாள்களுக்கு முன்னால் ஒரு நாள் முழுவதும் கன்யாகுமரியின் கடற்கரையில் பித்துப் பிடித்தது போல் அவன் சுற்றினான்.. அன்று இரவு கன்யாகுமரி அன்னையிடம் மனமுருக அவன் வேண்டிக் கொண்டபோது.. ‘நீ கேட்டது கிடைக்க.. அம்மன் அருள் செய்வாள்..’ என்று அர்ச்சகர் அருள்வாக்குச் சொன்னார்..
இன்று அது உண்மையாகி விட்டது.. என்று ஜீவா கண்கள் பனிக்க நினைத்துக் கொண்டான்.. எந்தவித கோபதாமும் இன்றி அவளும்.. ஜீவாவும் பழையபடி பழக ஆரம்பிக்க வேண்டுமென்று அவன் ஏங்கினான்.. அந்த ஏக்கம் நிறைவேறி விட்டதாய் உணர்ந்தான் அவன்..
சந்தியா ஜீவாவின் அருகில் மௌனமாக நடந்து வந்தாள்.. ஜீவாவும் பேச்சுக் கொடுக்க முனையவில்லை.. வார்த்தைகள் தேவைப்படாத மௌனம் அவர்களைச் சூழந்து கொண்டது..
‘இது மௌனமான நேரம்..
இளம் மனதில் என்ன பாரம்..
மனதின் ஓசைகள்.. இதழின் மௌனங்கள்..
ஏனின்று கேளுங்கள்..’
ஜீவாவின் மனதில் பாடல் வரிகள் தோன்றின.. அவன் இது போதும் என்று நினைத்துக் கொண்டான்..
சந்தியாவிடம் காதல் மொழி பேச வேண்டாம்.. தொட்டுத்தழுவ வேண்டாம்.. கூடல் வேண்டாம்.. இப்படியே எதுவும் பேசாமல் இப்படியே நடந்து கொண்டிருந்தால் போதும் என்று அவனுக்குத் தோன்றியது.. அவள் தலையில் சூடியிருந்த மல்லிகையின் மணம் காற்றோடு கலந்து வந்து அவனது நாசியை.. வருட அதை முகர்ந்தபடி.. காற்றில் அவளது சேலையின் முந்தானை பறந்து வந்து அவன் மேல் பட அந்தத் தொடுகையை ரசித்தபடி.. முடிவில்லாமல் நடந்து கொண்டே இருக்க வேண்டும் போல ஜீவா ஆசைப்பட்டான்.
ஆனால் சந்தியாவின் ஹாஸ்டல் வந்து விட்டது.. எதுவும் பேசாமல் தன் காதலை வற்புறுத்தாமல் துணையாக மட்டுமே ஜீவா கூட வந்தது சந்தியாவிற்கு மிகப் பெரும் ஆறுதலாக இருந்தது..
“தேங்க் யு ஜீவா..” சந்தியா விடை பெற்றாள்..
மௌனமாகவே ஜீவா தலையசைத்தான்.. சந்தியா ஹாஸ்டலுக்குள் சென்று.. மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்து விட்டு மெதுவாக தன் அறையை நோக்கி நடந்தான்..
சந்தியாவைப் பார்ப்பதற்கு முன்னால் வரை அவன் மனதில் பாரமாய் அழுத்திக் கொண்டிருந்த சுமை விலகி விட்டது போல் லேசாக உணர்ந்தான் ஜீவா..
லேசான சீழ்க்கையொலியுடன்.. அறைக்குள் வந்த ஜீவாவைக் கண்டதும்.. டேனியல் ஆச்சரியப்பட்டான்..
“என்னடா.. இது.. இப்போப் போகும் போது அழுது வடிந்து கொண்டே போனாய்.. வரும்போது சிரித்த முகமாய் வருகிறாயே.. என்ன விசேஷம்..?”
“சந்தியாவைப் பார்த்தேன்..” ஜீவா கண் சிமிட்டினான்..
“உன் காதலை ஏற்றுக் கொண்டாளா..?” டேனியல் ஆவலுடன் வினாவினான்..
“அவளென்ன ஏற்றுக் கொள்வது..? நான் அவளை ஏற்றுக் கொள்ள வைக்கிறேனா இல்லையா என்று பார்..” ஜீவாவின் வார்த்தைகளில் உறுதியும் நம்பிக்கையும் இருந்தன..
“பேசினாயா..?”
“பேசினேன்..”
“உன் காதலைச் சொன்னாயா..?”
“அதைத்தான் ஏற்கனெவே நான் அவளிடம் சொல்லி விட்டேனே..”
“பின்னே.. வேறு என்னதான் சொன்னாய்..”
“அவள் மனதில் கள்ளம் இருக்கிறதுன்னு சொன்னேன்..” டேனியலுக்கு தூக்கி வாரிப் போட்டது.. அவன் திகைத்தான்..
“ஏண்டா.. அவளைப் பார்க்க வேண்டும்.. பார்க்க வேண்டும்ன்னு துடித்துவிட்டு கடைசியில் அவளிடம் வம்பிழுத்து விட்டு வந்திருக்கிறாயே..”
“வம்பிழுத்தால்தான் வேலையாகும்.. கலகம் பிறந்தால்தான் எனக்கான நியாயம் கிடைக்கும்..”
“என்னடா சொல்கிற..? நீ சொல்வது சுத்தமாய் எனக்குப் புரியவில்லை..”
“டேனியல் மயிலே மயிலே இறகு போடுன்னு சொன்னால் எந்த மயிலும் இறகு போடாதுடா.. நான் காதலை அவளிடம் சொல்லி விட்டு மூலையில் புதைந்து கதறிக் கொண்டிருந்தால் ஒருநாளும் அவள் இரக்கப்பட்டு என்னைத் தேடிவரப் போவதில்லை.. இதெல்லாம் வேலைக்கு ஆகாதுடா மச்சான்..”
“அப்பாடா.. இப்போதாவது அதைப் புரிந்து கொண்டு சந்தியாவை தலை முழுகி விட்டாயே.. இப்போதுதான் எனக்கு நிம்மதியாக இருக்கிறது..”
“அவளை யார் தலை முழுகியது..?”
“நீதான்.. அதற்குத்தானே அவளிடம் வம்பிழுத்தாய்..”
“இவன் ஒருத்தன் விடிய விடிய மகாபாரதம் கேட்டுவிட்டு விடிந்தபின் சுபத்திரைக்கு அர்ஜீனன் என்னவாக வேண்டும்ன்னு கேட்டு வைப்பான்..?”
“ஏண்டா.. இதை வேறு மாதிரியில்ல சொல்வாங்க..?”
“இது மாத்தி யோசிக்கிற காலம்டா மாப்பிள.. இப்படித்தான் இருக்கும்.. எப்போப் பார்த்தாலும்.. இராமாயணத்தையே சொல்லி சீதைக்கு ராமன் என்னவாகனும்னு அவங்களையே வம்புக்கு இழுக்கனுமா என்ன..? மகாபாரதமும் நம்ம இதிகாசம் தானே.. அதை ஏன் விட்டு வைக்க வேண்டும்.. அதையும் கொஞ்சம் தொட்டு வைக்கலாமே..”
“தூள் கிளப்பறடா ஜீவா.. கீப் இட் அப்..”
“அதில பாரு டேனியல்.. ராமாயணத்தில் ராமன் சீதைக்கு மட்டும் தான் இம்பார்ட்டன்ஸ் இருக்கும்.. அதுவே மகாபாரதத்தில் ஏகப்பட்ட கேரக்டர்ஸ்.. காட்டில் இருக்கும் குருவிகூட ஒரு கேரக்டராய் வரும்.. அதில் எத்தனை பேரை நாம் சொல்லலாம்ன்னு நினைத்துப் பாரு..?”
ஜீவா உற்சாகமாய் சொல்லிவிட்டு.. மீண்டும் கண்சிமிட்டினான்..
Reviews — Kadalaki Kasinthuruki / காதலாகி கசிந்துருகி
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.