Chapter 22

0Shares

உனைப் பார்த்த அந்நொடியில்..

    உயிர்த்தெழுந்தேன்.. கண்மணியே..

நீ பிரிந்து சென்ற அந்நொடியில்..

    உயிர் குறைந்தேன்.. பொன் மணியே..

காதலாகி.. கசிந்துருகி..

இமை கொட்டி விழித்துப் பார்த்த சந்தியாவை வெற்றிப் பெருமிதத்துடன் பார்த்து ‘எப்படி..?’ என்ற பாவனையுடன் புருவம் உயர்த்தினான் ஜீவா..

‘ஆஹா.. இவன் கண்டுபிடித்து விட்டானே..’ என்ற எச்சரிக்கை உணர்வுடன் சந்தியா முகத்தை கடுமையாக்கிக் கொண்டாள்..

“என்ன.. பெரிய ஒலிம்பிக்கில் லாங் ஜம்ப் பண்ணி விட்டது போல இப்படிக் காலரை தூக்கி விட்டுக்கறீங்க..?”

“தோடா.. என்னையே நீ கலாய்க்கறியா..? இந்நேரம் வரைக்கும் ஈ வாயில் போவது கூடத் தெரியாமல் வாயைப் பிளந்து நான் தாவி கோலத்தைக் கடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு என்னமாய் பல்டி அடிக்கிற.. சூப்பர் பல்டி சந்தியா..”

“பல்டி அடித்து கோலத்தைக் தாண்டியது நீங்கள்தான்.. நானில்லை..”

“எப்படியோ கோலத்தில் என் கால்விரல் நகம் கூடப் படாமல் தாண்டி விட்டேனில்ல.. அதைப் பாராட்டுவாயா.. அதை விட்டுவிட்டு வம்பு இழுக்கறே..”

“அனுமார் கூடத்தான் கடலைத் தாண்டினார்.. வானரம் தாண்டுவது இயற்கையான விசயம்தானே.. அதற்குப் போய் யாராவது பாராட்டுவிழா நடத்துவாங்களா..?”

“வானரமா..? நானா..?”

“வேறு யார் மரத்துக்கு மரம் தாவுவதைப் போல கோலத்தைத் தாண்டியதாம்..?”

“ஆக.. என்னைக் குரங்காக்கிட்ட..”

ஜீவா.. எந்தவித உணர்ச்சியையும் காட்டாமல் வினவ.. சந்தியாவினால் இப்போது சிரிப்பை அடக்க முடியவில்லை..

அவள் அரிசிப் பற்கள் தெரிய சிரித்தவாறு கோலத்தைத் தொடர்ந்தாள்.. சந்தியாவிற்கு காபியை எடுத்துக் கொண்டு வாசலுக்கு வந்த கவிதா ஜீவாவைப் பார்த்ததும்..

“வாங்கண்ணா..” என்று வரவேற்றபடி, காபியை அவன் கையில் கொடுத்து விட்டாள்..

“ஏண்டி கை வலிக்கக் கோலம் போடுவது நான் காபியை நீ கொடுப்பது உன் அண்ணனிடமா..? இது உனக்கே அநியாயமாய் தோணலையாடி..” சந்தியா கவிதாவிடம் சண்டைக்குப் போனாள்..

“அண்ணனைப் பார்த்ததும் எனக்கு எல்லாமே மறந்து போச்சு.. நீ கோலம் போட்டு முடிச்சாச்சா..? உள்ளே வா.. நாம ரெண்டு பேரும் சேர்ந்தே காபி சாப்பிடலாம்..” என்று சந்தியாவை சமாதானப்படுத்தினாள் கவிதா..

“ம்ம்..” என்று காபியை வாசனை பிடித்த ஜீவா சந்தியாவை ஜாடையாகப் பார்த்துக் கொண்டே கவிதாவிடம்..

“என்ன மணம்.. என்ன மணம்.. காபின்னா இதுதான் காபி..” என்றான்..

“அதைக் குடித்து விட்டுச் சொல்லச் சொல்லு கவிதா.. வெறுமனே வாசம் பிடித்துவிட்டுச் சொல்ல வேண்டாம்ன்னு சொல்லு..” சந்தியா நொடித்துக் கொண்டே கூறினாள்..

“ஸ்..ஆ..” காபியை ரசித்துக் குடித்தான் ஜீவா..

“ம்ம்.. அப்படியே மாடு கழனித் தண்ணியைக் குடிப்பது போலவே இருக்கு..” என்றாள் சந்தியா..

“என்னை வேண்டுமானால் மாடுன்னு சொல்லு.. நான் கேட்டுக் கொள்கிறேன்.. ஆனால் கள்ளிச் சொட்டு போல இருக்கும் இந்தக் காப்பியைப் போய் கழனித் தண்ணின்னு நீ சொல்லலாமா சந்தியா.. இதைச் சொல்ல உனக்கு எப்படி சந்தியா மனம் வந்தது..” என்று உணர்ச்சி மயமாகி நடிகர் திலகம் போல்.. ஏற்ற இறக்கத்துடன் கேட்டான் ஜீவா..

கவிதா கலகலவென்று சிரித்துக் கொண்டே சந்தியாவைப் பார்த்தாள்..

“நீ ஜீவா அண்ணனைக் கிண்டலடித்து விட முடியுமா..? அவரை யாருன்னு நினைத்த..?”

“உன் பிரண்ட் தானே.. நீ வருவதற்கு முன்னால் மேடம் என்னைக் குரங்குன்னு நினைத்தாங்களாம்.. இப்போது மாடுன்னு சொல்லி விட்டாங்க.. ஆக மொத்தம் அம்மையாருக்கு என்னைப் பார்த்தால் நான்கு கால் ஜீவராசிகள்தான் நினைவுக்கு வருகின்றது.. மனித இனம் நினைவுக்கு வருவதே இல்லை..”

ஜீவா கிண்டலாக சந்தியாவைப் பார்த்துக் கொண்டே கூறவும் கவிதா ஆச்சரியத்துடன் சந்தியாவைப் பார்த்தாள்.

“ஏன் சந்தியா அண்ணனையா குரங்குன்னு சொன்ன..?”

“ச்சு.. அதெல்லாம் இல்லைடி அவர் பொய் சொல்கிறார்..”

“ஜீவா அண்ணன் பொய்யே சொல்லமாட்டாங்க.. தெரியுமா..?”

“உன் பிரண்டிற்கு எங்கே அதெல்லாம் தெரியப் போகுது..? அவங்களுக்குத்தான் நல்லதே கண்ணுக்குத் தெரியாதே..”

“கவிதா உன் அண்ணனை வாயை மூடச் சொல்லு.. அவர் கோலத்தை ஒரே தாவாக தாவி விட்டு பெரிதாய் பெருமை பீற்றல் களஞ்சியமா பீற்றிக் கொண்டார்.. நான் அனுமார் கடலைத் தாண்டிய போது கூட இப்படிப் பெருமையாய் பார்த்திருக்க மாட்டாருன்னு சொன்னேன்.. அதைத்தான் இப்படிச் சொல்கிறார்..”

“ஏண்டி அனுமார்ன்னு என் அண்ணனைப் பார்த்து எப்படி நீ சொல்லலாம்.. அவருடைய ஹேண்ட்சம்மான ஃபேஸ் அப்பீரியன்ஸைப் பார்த்து எத்தனைப் பெண்கள் அவரை சைட் அடிக்கிறாங்க தெரியுமா..?”

“எனக்குத் தெரியாது.. நான் அதைத் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை..”

இதைச் சொல்லிக் கொண்டே சந்தியா.. ஜீவாவைப் பார்க்காதது போல் பார்த்து வைத்தாள்.. முன்பைவிட ஜீவா இப்போது கம்பீரமான அழகனாக அவள் கண்களுக்குத் தெரிந்தான்..

0Shares

Reviews — Kadalaki Kasinthuruki / காதலாகி கசிந்துருகி

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link