Chapter 23

0Shares

பூ வாசத்தோடு, காற்று வந்து..

என் முகத்தில் பட்டது..

அது உன்னைத் தொட்ட காற்று என்று..

என் மனதிற்குப் பட்டது..

காதலாகி.. கசிந்துருகி..

ஜீவா சந்தியாவின் கள்ளப் பார்வையைக் கவனித்து விட்டான்.. வாசலில் காய்கறியைத் தள்ளுவண்டியில் போட்டு விற்றுக் கொண்டிருந்த வியாபாரியின் வண்டியிலிருந்து ரேடியோ பாடியது..

“கள்ள மலர் சிரிப்பிலே..

கண்களின் அழைப்பிலே..

கன்னி மனம் விழுந்ததம்மா..”

பாட்டைக் கேட்ட ஜீவா கண்களில் சிரிப்போடு..

“என்ன ஒரு பொருத்தமான பாட்டு..” என்று சொன்னான்..

சந்தியா சட்டென்று அவன் சொன்னதைப் புரிந்து கொண்டாள்..

‘நான் பார்த்ததைச் சொல்கிறான்..’ அவளுக்கு முகம் சிவந்து விட்டது..

“என்னண்ணா.. பாட்டெல்லாம் தூள் பரக்குது..” என்று கேட்டாள் கவிதா..

“இந்தக் கள்ளப் பார்வை.. கள்ளச்சிரிப்பு.. இதைப் பற்றியெல்லாம் நீ என்ன நினைக்கிற கவிதா..” என்றான் ஜீவா..

அவனுடைய குறும்புப் பார்வை தன் முகத்தில் படர்வதை உணர்ந்து கொண்ட சந்தியா..

“கவிதா வா நாம் வீட்டிற்குள் போகலாம்..” என்று சொல்லியவாறு வீட்டுக்குள் போக யத்தனித்தாள்..

“பொறுடி.. இப்ப எதுக்கு வீட்டுக்குள்ள போகனும்னு பறக்கிற..? வாசலில் சிலுசிலுன்னு காத்து வருது.. அண்ணன் வேற ஜாலியாய் பாட்டெல்லாம் பாடிக்கிட்டிருக்கிறார்.. இப்ப உள்ளே போய் என்னத்தை செய்யப் போகிறோம்.. கொஞ்ச நேரம் காற்றாட இங்கேயே நிற்கலாமே..”

“உங்க அண்ணன் பாடும் பாட்டைக் கேட்பதற்குப் பதில் கழுதை கத்துவதைக் கேட்கலாம்.. இதைவிட கழுதையின் பாட்ட எவ்வளவோ அருமையாக இருக்கும்..” என்று சந்தியா சொல்லிக் கொண்டிருக்கும் போதே கவிதா அவளிடம் சண்டைக்கு வந்து விட்டாள்..

“என்னடி நானும் பார்த்துக்கிட்டே இருக்கேன்.. நான் வருவதற்கு முன்னாடி அண்ணனை குரங்குன்னு சொல்லியிருக்கிற.. நான் வந்த பின்னால் என் முன்னாலேயே மாடுன்னு சொன்ன இப்ப கழுதைன்னு சொல்கிற.. நீ உன் மனதில் என்னதான் நினைத்துக்கிட்டு இருக்க..?”

“பாரு கவிதா.. உன் அண்ணனின் பேச்சிற்கே வரவில்லை.. எது எப்படின்னாலும் நான் இவரை கழுதைன்னு சொல்லவே இல்லை.. அப்படிச் சொன்னால் கழுதை கோபித்துக் கொண்டு.. என்னுடன் சண்டைக்கு வந்துவிடாதா..”

“ஏய்ய் என்னடி உனக்கு இப்படி வாய் கிழியுது..? அண்ணா இவள் பேசுவதைக் கேட்டீங்களா..?”

கவிதா ஜீவாவிடம் புகார் செய்ய.. அவனோ..

“ஹா.. ஹா..” என்று சந்தியா கூறுவதை ரசித்துச் சிரித்துக் கொண்டிருந்தான்..

“கவிதா உன் பிரண்ட் என்னை என்ன வேண்டு மானாலும் சொல்லித் திட்டிக் கொள்ளட்டும்.. ஆனால் ‘அனுமார்’ன்னு மட்டும் சொல்ல வேண்டாம்ன்னு சொல்லு.. ஏன்னா அனுமார் கட்டைப் பிரம்மச்சாரி.. நான் குடியும் குடித்தனமுமாய் இருக்கனும்னு ஆசைப்படுகிறவன்..”

ஜீவாவின் பார்வை சந்தியாவின் பக்கம் மொய்க்க கவிதா யோசனையுடன் சந்தியாவைத் திரும்பிப் 

பார்த்தாள்.. சந்தியா ஜீவாவின் பார்வையைத் தவிர்த்துக் கொண்டிருந்தாள்..

‘இவங்க இரண்டு பேரும் நல்லாப் பேசிக்குவாங்களே.. இப்ப ஏன் இப்படி ஜாடையாய் பார்த்துப் பேசிக்கிறாங்க..’

“ஆக உன் அண்ணன் மாடாகவும் கழுதையாகவும் இருக்க ஆசைப்படுகிறார் போல கவிதா..”

“இப்ப உனக்கு காபி வேணுமா வேணாமா..?”

கவிதா கறாராகக் கேட்டாள் சந்தியா..

“அடிப்பாவி.. காலைக் காப்பியில் கை வைத்து விட்டாயா..?” என்று கேட்டாள்..

“அப்போ பேசாமல் வாயை மூடிக் கொண்டு என் பின்னால் வா.. என் ஜீவா அண்ணனைக் கிண்டலடித்தால் நான் பச்சைத் தண்ணீர் கூடத் தரமாட்டேன்..”

“ம்ஹீம் உன் கூடப் பிறந்த அண்ணனிடம் கூட நீ இப்படி பாசமழையைப் பொழிந்திருக்க மாட்டாய்.. இந்த அண்ணன் மேல் பாசத்தை கொட்டோ கொட்டுன்னு கொட்டுகிறாய்.. பார்த்தும்மா பாசம் அதிகமானால் வழுக்கி விட்டுவிடும்..”

சந்தியா மீண்டும் மறைமுகமாய் ஜீவாவை வம்புக்கு இழுக்க அவன் மீசைக்குள் சிரித்தான்..

“அதற்காக பாசத்தைக் காட்டாமல் இருந்தாலும் அது கட்டாந்தரையாகி விடும்..” என்று அவன் பதிலுக்குச் சொல்ல..

“வெல்டன் அண்ணா.. இப்படித்தான் போட்டுத் தாக்க வேண்டும்..” என்று ஜீவாவிற்கு கை கொடுத்தாள் கவிதா..

சந்தியா.. பொய் கோபத்துடன் வீட்டுக்குள் சென்றுவிட கவிதாவும் ஜீவாவும் அதைப் பார்த்துச் சிரித்தனர்..

சிரித்துக் கொண்டே திரும்பி கவிதாவின் முகத்தைப் பார்த்த ஜீவா திகைத்தான்.. கவிதா சிரிப்பில்லாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்..

“என்னம்மா..?”

“சந்தியாவிற்கும் உங்களுக்கும் இடையில் என்ன நடந்தது..?”

கவிதாவின் இந்த நேரிடையான கேள்வியை ஜீவா எதிர்பார்க்கவே இல்லை.. அவன் முகத்திலும் சிரிப்பு மறைந்தது..

0Shares

Reviews — Kadalaki Kasinthuruki / காதலாகி கசிந்துருகி

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link