Chapter 24
உன் பார்வைக்காக ஏங்கி நிற்கும்..
உண்மையான காதலன் நான்..
எனைவிட்டு வேறுதிசை ஏன் பார்த்தாய்..?
எனைப் போல் இப்புவியில் யாரிருப்பார்..?
காலதாகி.. கசிந்துருகி..
“கவிதா..”
“நான் ஏன் இப்படிக் கேட்கிறேன்னு நினைக்கறீங்களா அண்ணா..?”
ஜீவாவின் தலை ‘ஆமெ’ன்ற பாவனையில் மேலும் கீழும் அசைந்தது..
“உங்க கிட்டயும் சந்தியாகிட்டயும் வித்தியாசம் தெரியுதுண்ணா.. நீங்க எப்போதும் கலகலப்பானவர்தான்.. புதிதாய் ஜோக்கடிக்கவில்லை.. புதிதாய் சிரிக்க வைக்க வில்லை.. ஆனால் சந்தியா எப்போதும் சோகமாகவே இருப்பாள்.. உங்களிடம் சோகமாகத்தான் பேசுவாள்.. ஆனால் நேரடியாய் உங்கள் முகத்தைப் பார்த்துப் பேசுவாள்.. நீங்களும் சந்தியா இருக்கும் போது ஜாலியாக பேச மாட்டீங்க.. இப்போ எல்லாமே தலைகீழாய் மாறியிருக்கே.. என்ன விசயம்..?”
“சந்தியா உன்னிடம் எதுவும் சொல்லவில்லையா..?”
“ஊஹீம்..”
ஜீவாவின் மனதில் மீண்டும் சாரல் அடித்தது.. உயிர்த் தோழியிடமும் சந்தியா உண்மையை மறைத்திருக்கிறாள்..
“கவிதா..”
“என்னண்ணா..?”
“நான் சந்தியாவைக் காதலிக்கிறேன்ம்மா..”
இதைக் கேட்டதும் – கவிதா குதூகலித்தாள்..
“நிஜமாகவா அண்ணா.. இதை சந்தியாவிடம் சொல்லி விட்டீங்களா..?”
“ம்ம்ம்..”
“அவள் என்ன சொன்னாள்..?”
“முடியாதுன்னு சொன்னாள்..”
“வாட்..?”
கவிதா அதிர்ச்சியுடன் ஜீவாவின் முகத்தைப் பார்த்தாள்.. அவன் முகம் வாடியிருந்தது.. இப்போதுதான் அவள் கண்களில் பட்டது.. இளைத்திருந்தான்..
“என்ன அண்ணா சொல்கிறீங்க..?”
“சந்தியா என் காதலை ஏற்றுக் கொள்ளவில்லை கவிதா.. என் முகத்தைப் பார்த்து பேச மறுத்து விட்டாள்.. பிரண்ட்ஷிப்பை நான் தப்பாப் புரிஞ்சுக்கிட்டேன்னு சொல்லி என்னுடன் சண்டை போட்டாள்..”
“கடவுளே.. இவள் ஏன் இப்படிப் பண்ணுகிறாள்..? உங்களைப் போல ஒரு துணை கிடைக்க இவள் கொடுத்து வைத்திருக்க வேண்டாமா..?”
ஜீவா பதில் பேசவில்லை.. கவிதாவிற்கு ஆற்றாமையாக இருந்தது..
“அதனால்தான் நீங்க கொஞ்ச நாளாய் எங்க வீட்டிற்கு வராமல் இருந்தீங்களா..?”
“குமாரின் முகத்தில் நான் எப்படிம்மா விழிப்பது..?”
“ஐயே இது என்னண்ணா.. அவள்தான் உங்களைப் புரிந்து கொள்ளாமல் பேசுகிறாள்ன்னா நீங்களும் இப்படி இருக்கறீங்க.. அப்படி நீங்க என்ன தப்பைப் பண்ணிட்டீங்க..?”
“காதலைச் சொல்லி விட்டேனேம்மா.. அதை மனதில் மறைத்துக் கொண்டு நான் நடித்திருக்க வேண்டும்.. அதை விட்டுவிட்டு உண்மையைச் சொன்னேனில்லையா.. அதற்குத் தான் அவள் என் முகம் பார்க்காமல் விலகிப் போய் என்னைத் தண்டித்தாள்ம்மா..”
“நீங்க சும்மா இருங்கண்ணா.. நீங்க ஏன் இப்படி கில்ட்டியாய் பீல் பண்ணுகிறீங்க.. அண்ணனின் முகத்தில் விழிக்க முடியாத பெரிய தப்பை ஒன்னும் நீங்க பண்ணி விடவில்லை..”
கவிதாவின் கோபம் ஜீவாவின் மனதிற்கு இதமாக இருந்தது.. வாசலில் லேசாக வெயில் ஏற ஆரம்பித்திருந்தது..
“நீங்க உள்ளே வாங்கண்ணா..”
“ம்ம்.. வருகிறேன்..”
வீட்டுக்குள் திரும்பப் போன கவிதா சற்று நிதானத்தாள்..
“அண்ணா.. ஒரு நிமிசம்..”
“என்னம்மா..”
“இப்போ எப்படி உங்களிடம் பேசுகிறாள்..?”
ஜீவா மர்மப் புன்னகையொன்றை உதிர்த்தான்..
“அதுவா அது ஒரு பெரிய கதைம்மா.. நான் ஏறக்குறைய செத்துப் பிழைத்து திரும்பி வந்திருக்கிறேன்.”
“அண்ணா..”
“ஆமாம் கவிதா தற்கொலை செய்து கொள்ள தூக்க மாத்திரைப் பாட்டிலையெல்லாம் எடுத்துவிட்டேன்.. செத்துப் போனால் இவளைப் பார்க்க முடியாதுங்கிற ஒரே காரணத்துக்காக மாத்திரைகளை விழுங்கவில்லை..”
“என் ஜீவா அண்ணனா இதைச் செய்யப் போனது..? நீங்க தைரியசாலியாச்சேண்ணா..”
“ஆனால் நான்தான் காதலித்து தொலைத்து விட்டேனே..”
கவிதாவிற்கு கேட்கச் சகிக்கவில்லை.. இவனிடம் என்ன குறையைக் கண்டு சந்தியா வெறுத்து விலகினாள் என்று அவள் நினைத்தாள்..
Reviews — Kadalaki Kasinthuruki / காதலாகி கசிந்துருகி
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.