Chapter 25
ஓர்வழிப் பாதை பயணம் இது..
ஒருவர் மட்டும் குடியிருக்கும் மனது இது..
விலை கொடுக்க நினைத்தாலும் முடியாத..
விலை மதிப்பில்லாத என் இதயம் இது..
காதலாகி.. கசிந்துருகி..
ஜீவாவை சிறு வயது முதலே கவிதா அறிவாள்.. அவன் இருக்கும் இடத்தில் கலகலப்பு குடியிருக்கும்.. அப்பேர்ப் பட்டவன் மரணத்தின் விளிம்பைத் தொட்டுத் திரும்பியிருக்கிறான் என்பதை நினைத்துப் பார்க்கவே அவள் நெஞ்சம் நடுங்கியது..
‘இவன்தான் எவ்வளவு பூஞ்சை மனம் கொண்டவன்..’ அவள் வியப்புடன் ஜீவாவைப் பார்த்தாள்.
‘இவனது அன்பை சந்தியா புரிந்து கொள்ள முடியாது. அவள் எல்லாரையும் சந்தேகப்பட்டே பழக்கப்பட்டவள்.. சூடுபட்ட பூனை.. ஆறிய பாலைப் பார்த்தாலும் வாய் வைக்க அஞ்சுவதைப் போல.. சந்தியா உண்மையான காதலைக் கண்டு அஞ்சி விலகுகிறாள்..’
“நீங்க இந்த அளவுக்கு உடைவீங்கன்னு நான் நினைத்தே பார்க்கவில்லை அண்ணா..”
“ம்ம்.. என்ன பாடுபட்டாலும் உன் பிரண்ட் மனம் மசிய மாட்டேன்னு சொல்லிட்டாள்.. நானும் வேறு வகையில் அவளை வம்புக்கு இழுத்து என்னுடன் பேச வைத்திருக்கிறேன்.”
“எப்படி..?”
“அவளுக்கு என்னைக் கண்டு பயம்ன்னு சொன்னேன்.. என்னோடு நட்பாகப் பழகினால் காதலித்து விடுவோம்ன்னு அவள் பயந்து விலகுகிறாள்ன்னு சொன்னேன்.. இல்லைன்னு புரூவ் பண்ண என்ன செய்யனும்னு கேட்டாள்.. என்னோடு எப்போதும் போல் பழகனும்னு சொன்னேன்..”
“குட்.. சரியாகத்தான் அட்டாக் பண்ணியிருக்கீங்க..”
“அதுதான் என் முகம் பார்க்காமல் என்னோடு பேசிப் பழகுகிறாள்..”
‘அவள் உங்கள் முகம் பார்க்காமல் பேசுவதற்கு காரணம் வெறும் பிடிவாதம் மட்டுமில்லை..’
கவிதா மனதிற்குள் நினைத்ததை ஜீவாவிடம் சொல்லவில்லை..
“வாங்க அண்ணா..” என்று ஜீவாவை உள்ளே அழைத்துக் கொண்டு போனாள்..
ஹால் சோபாவில் அமர்ந்திருந்த சந்தியா காபி குடித்துக் கொண்டிருந்தாள்..
“யாருடி காபி கொடுத்தது..” என்று கவிதா கேட்டாள்..
“எதற்கு கேட்கிறாய்..? ஏன் இவளுக்கு காபி கொடுத்தீங்கன்னு அவங்களைத் திட்டப் போகிறாயா..?” என்று மேல் பார்வை பர்த்தபடி சந்தியா கேட்டாள்..
“உன் புத்தி எதையும் ஒழுங்காகவே யோசிக்காதுன்னு தான் எனக்குத் தெரியுமே..”
கவிதா சந்தியாவின் அருகே அமர ஜீவா அவர்களுக்கு எதிரே இருந்த சோபாவில் அமர்ந்தான்..
“என்ன கவி பேச்செல்லாம் ஒரு தினுசா இருக்கு.. யாரும் என்னைப் பத்தி உன்னிடம் போட்டுக் கொடுத்து விட்டாங்களா..?”
சந்தியாவின் பார்வையில் வெப்பம் வந்திருந்தது.. ஜீவா கைகளை விரித்து தோளை அசட்டையாக குலுக்கினான்.. அவனைப் பார்த்துக் கொண்டிருந்த சந்தியாவை தன்பக்கம் திருப்பி..
“என்னைப் பாருடி..” என்றாள் கவிதா கோபமாக..
“உன்னைப் பார்க்கத்தான் உன் வுட்பி வரப் போகிறாரே..”
சந்தியா சட்டென்று பேச்சை மாற்றி விட்டாள்..
சமையலறைக்குள் இருந்து ஈரக் கைகளை புடவை முந்தானையில் துடைத்தபடி வந்த ரேணுகா ஜீவாவைக் கண்டதும் முகம் மலர்ந்தாள்..
“வந்துட்டியா ஜீவா.. கையும் ஓடலை.. காலும் ஓடலை.. எப்படித்தான் இந்த விசேசத்தை நல்லபடியாய் நடத்தி முடிக்கப் போகிறோமோன்னு பயந்துக்கிட்டே இருந்தேன்.. நல்லவேளை.. கை கொடுக்க நீ வந்துவிட்ட..” என்றாள் நிம்மதியடன்..
“ஏம்மா.. இது என் தங்கச்சி கல்யாண நிச்சயதார்த்தம்.. நான் வராமல் இருப்பேனா.. என்ன செய்யனும்னு சொல்லுங்க.. ஒரு நொடியில் செய்து முடித்து விடுகிறேன்..”
“வாசலில் ஷாமியானா கட்ட வேண்டும்.. மொட்டை மாடியிலயும் கட்டி விட்டால் தேவலை.. விருந்தை மொட்டை மாடியில் கொடுக்கலாமுன்னு நினைக்கறேன்.. நீ என்ன நினைக்கற..?”
“நீங்க நினைக்கிறதைத்தான் நானும் நினைக்கிறேன்..”
“மொத்தமாய் எண்பத்தி ஏழு சேராவது வாடகைக்கு எடுத்து வந்து விடனும்னு நான் நினைக்கிறேன்.. நீ என்ன நினைக்கறே..?”
“நீங்க சரியாக சொல்லியிருக்கீங்கன்னு நினைக்கிறேன்..”
“நீண்ட டைனிங்டேபிள்களை மொட்டை மாடியில் ஷாமியானா கட்டிவிட்டு வரிசையாக போட்டுவிட்டால் நல்லதுன்னு நான் நினைக்கிறேன்.. நீ என்ன நினைக்கறே.”
ரேணுகா இதைக் கேட்டுவிட்டு ஜீவாவின் முகம் பார்த்தாள்.. அவன் பதில் சொல்ல வாய் திறக்கையில் அவனை முந்திக் கொண்டு சந்தியா பதில் சொன்னாள்..
Reviews — Kadalaki Kasinthuruki / காதலாகி கசிந்துருகி
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.