Chapter 26
உன்னோடு ஒருநாள்..
உயிராய் வாழ்ந்திடவே..
என் மனம் துடிப்பதை..
ஏனடி.. நீ அறிய மறுக்கிறாய்..?
காதலாகி.. கசிந்துருகி..
“அவர் என்ன ஆண்ட்டி சொல்லப் போகிறார்..? நீங்க நினைத்ததையே அவரும் நினைத்ததாகச் சொல்லப் போகிறார்..”
சந்தியா கிண்டலுடன் சொல்லவும் கவிதா சிரித்தாள்.. ரேணுகா சந்தியாவைக் கோபித்துக் கொள்ள முடியாதவளாய் மகளைக் கோபித்துக் கொண்டாள்..
“என்ன கவிதா இது ஜீவாவைக் கிண்டல் பண்ண எங்கே நீ கற்றுக் கொண்டாய்..?”
“இதோ இவளிடமிருந்துதான் கற்றுக் கொண்டேன்..”
கவிதா சட்டென்று சந்தியாவின் பக்கம் கைகாட்ட அவள் அதை மறுத்தாள்..
“இவள் சும்மா சொல்கிறாள் ஆண்ட்டி.. நான் ஏன் யாரையும் கிண்டல் பண்ணப் போகிறேன்..?”
“வாயடித்தது போதும்.. முதலில் எல்லாரும் சாப்பிட வாங்க.. கொஞ்ச நேரத்தில் ஊரிலிருந்து நம்ம சொந்தக் காரங்க வந்து குமிஞ்சிடுவாங்க.. அவங்களுக்கு மதிய விருந்து ரெடி பண்ணனும்.. மாப்பிள்ளை வீட்டிலிருந்து சாயங்காலமே வந்து விடுவாங்க.. அவங்களுக்கு வந்தவுடனேயே, காபி டிபனைக் கொடுக்க வேண்டும்.. நல்லபடியா நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தவுடனேயே ராத்திரி விருந்தை சிறப்பாக் கொடுக்கணும்.. ஸ்ஸ்.. அப்பா.. இப்பவே கண்ணைக் கட்டுதே ஜீவா..”
“நீங்க ஏம்மா கவலைப்படறீங்க.. நானிருக்க பயமேன்.. எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன்.. நீங்க முதலில் கொஞ்சம் உட்காருங்க.. கவிதா அம்மாவுக்கு ஃபேனைப் போடு..” என்று ஜீவா அக்கறையாக ரேணுகாவின் கையைப் பிடித்து உட்கார வைத்தான்..
“கவி.. ஃபேன் ஏற்கனெவே சுற்றிக்கிட்டுத்தான் இருக்கு..” என்றாள் சந்தியா கேலியாக..
“எல்லாம் எனக்கும் தெரியும் கவி.. கொஞ்சம் வேகத்தை அதிகப் படுத்துன்னு சொன்னேன்..” என்று சமாளித்தான் ஜீவா..
“உன் அண்ணனிடம் இருக்கிற குவாலிபிகேசன் களிலேயே இந்த சமாளிபிகேசன்தான் பெரிய குவாலிபிகேசன்..” என்றாள் சந்தியா..
“அரட்டை அடித்தது போதும்.. எல்லாரும் சாப்பிட வாங்க.. சந்தியா கவிதா சாப்பிட்டவுடன் அவள் கைகளில் மெஹந்தி வரைந்து விடு..”
“ஆகட்டும் ஆண்ட்டி..”
“அப்புறம் மதியத்திற்குமேல் பியூட்டி பார்லரில் இருந்து வந்து விடுவாங்க.. அதனால் நீங்க இரண்டுபேரும் கொஞ்சம் தூங்கி எழுந்து விடுங்க..”
“அதெல்லாம் நான் கவிதாவைப் பார்த்துக் கொள்கிறேன் ஆண்ட்டி..”
சந்தியா பொறுப்பாய் பதில் சொல்லிக் கொண்டிருப்பதை கவனித்துக் கொண்டே ஜீவா..
“குமார் எங்கேம்மா..?” என்று ரேணுகாவிடம் கேட்டான்..
“சொந்த பந்தம் எல்லாம் பஸ் ஸ்டாண்டில் இறங்கிக் கொண்டு போன் பண்ணுவாங்க.. ஒவ்வொரு செட்டாய் போய் கூப்பிட்டுக் கொண்டு வர இன்று ஒருநாள் வாடகை கொடுத்து வேனைப் பிடித்து விடலாமுன்னு முடிவு செய்தோம்.. காலையில் வேனைப் பேசிக் கூப்பிட்டுக் கொண்டு வரப் போனான்.. இன்னும் ஆளைக் காணோம்..”
“அப்பா.. எங்கே போய்விட்டார்..?”
“ஷாமியானாவையும் நாற்காலி டேபிள்களையும் வாடகைக்கு எடுத்துக் கொண்டுவர இவர் இந்தப் பக்கம் போனார்.. இன்னும் இவரையும் ஆளைக் காணோம்..”
“அப்படியா..?”
“இரண்டும்.. இரண்டு அகப்பை.. இரண்டுமே கழண்ட அகப்பை.. நீயே சொல்லு ஜீவா.. இவங்களை வைத்துக் கொண்டு நான் எப்படி இந்த விசேசத்தை நல்லபடி நடத்தி முடிப்பேன்.. இப்பவே எனக்கு குளிரும் காய்ச்சலும் வரும் போல இருக்கே..”
“இரண்டு பேருமே வேலையகத்தானேம்மா போயிருக்காங்க..”
“என்ன வேலை செய்து என்ன செய்ய..? செய்ய வேண்டிய முக்கியமான வேலையை இன்னும் செய்ய வில்லையே..”
“எதைச் சொல்கிறீங்க..?”
“அதுதான்ப்பா சாப்பாடு.. பத்துப்பேருக்கு என்னால் சமைத்துப் போட முடியும்.. இருநூறு பேருக்கு விருந்து சமைக்க முடியுமா..?”
“முடியாதுதான்..”
“ஊரில் இருந்து மதியமே சொந்த பந்தம் வந்து இறங்கிவிடும்.. அவங்களுக்கு சாப்பாட்டுக்கு சொல்ல வேண்டும் நைட் விருந்திற்கு இன்னும் ஆர்டர் கொடுக்கவில்லை.. இருக்கவே இருக்கிறது சாயங்கால காபி டிபன்.. அதற்கு என்ன செய்யனும் ஏது செய்யனும்னு ஒரு பேச்சும் சொல்லவில்லை..”
ரேணுகா அங்கலாய்த்துக் கொண்டிருந்த போது வாசலில் வேன் சத்தம் கேட்டது..
“குமார் வந்து விட்டான் போல..” என்று எழுந்து வாசலுக்குச் சென்றான் ஜீவா..
சற்று நேரத்தில் குமாரும் அவனும் ஷாமியானா பந்தல்களுடன் வீட்டிற்குள் வந்தார்கள்.. ரேணுகா கவலை நீங்கியவளாக எழுந்து வாசலுக்கு சென்றாள்.. எல்லாரும் வாடகை நாற்காலிகளை இறக்கிப் போட ஆரம்பித்தனர்..
Reviews — Kadalaki Kasinthuruki / காதலாகி கசிந்துருகி
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.