Chapter 31
உன் கூந்தலில் இருந்து..
ஒருமலர் உதிர்ந்தது..
அந்த ஒருமலர் என்வீட்டுப்
பெட்டகத்தில் துயின்றது..
காதலாகி.. கசிந்துருகி..
சந்தியா ஆளரவமில்லாத தெருவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் அவளது வாழ்வைப் போல.. அது யாருமில்லாமல் வெறிச்சோடிக் கிடப்பதாக நினைத்துக் கொண்டாள்..
கவிதாவிற்காகத்தான் அவள் வந்தாள்.. ஆனால் கவிதாவை அவளுடைய உறவினர்கள் சுற்றிக் கொள்ளவும் வேறு வழியில்லாமல் சந்தியா விலகி நிற்க வேண்டி வந்தது..
‘எனக்கென்று யாரும் இல்லையா..?’
அவள் மனம் துயர் கொண்டபோது.. ‘நானிருக்கிறேன்..’ என்பது போல அவளுடைய முதுகிற்குப் பின்னாலிருந்து ஒரு குரல் கேட்டது.
“இங்கே இருட்டுக்குள் நின்று கொண்டு எந்தக் கோட்டையைப் பிடிக்க யோசித்துக் கொண்டிருக்கிறாய் சந்தியா..”
சட்டென்று.. சந்தியாவின் முகமும் அகமும் மலர்ந்து விட்டன.. தன் முகம் மலர்ந்து விட்டதை அவன் அறியாமல் அவள் இருள் போர்வைக்குள் இன்னும் மறைத்து கொண்டாள்..
“நிச்சயமாய் காதல் கோட்டையைப் பிடிக்க யோசிக்கவில்லை..” இடக்கான பதிலைச் சொன்ன சந்தியாவின் குரலில் இருந்த துள்ளல் அவளைக் காட்டிக் கொடுத்துவிட்டது..
அவளுடைய முகத்தை மறைத்துக் கொண்டவளால் அகத்தை மறைத்துக் கொள்ள முடியவில்லை..
ஜீவா அவள் மனதைக் கண்டு கொண்டுவிட்டான்.. அவள் மனம் மெல்ல மாறுவதை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது..
ஜீவா அவளருகே நெருங்கி நின்றான்.. சந்தியா மனம் தடுமாறினாள்.. அவனிடமிருந்து வந்த பவுடர் கலந்த சென்டின் வாசனை அவளுக்குப் பிடித்தமானதாக இருந்தது..
“காதல் கோட்டையைப் பிடிக்க யோசித்தாலும் அதில் தப்பொன்றுமில்லையே..” ஜீவா அவளிடம் பேச்சை வளர்த்தான்..
ஜீவா காதோரமாக சரிந்து பேசியது சந்தியாவை கிறங்கடித்தது.. அவள் ‘ஜிவ்’ என்ற ஓர் உணர்வை உணர்ந்தாள்.. ஜீவா பேசியதற்கு ஏதாவது ஒரு பதிலைச் சொல்ல வேண்டும் என்பதற்காக..
“தேவையில்லாததை நான் யோசிப்பதில்லை..” என்று கூறினாள்..
“இப்போது தேவையில்லாததாக தோன்றுவது எப்போதுமே தேவைப் படாமல் போய் விடுமா..?”
ஜீவா அவளருகே மெதுவாக நகர்ந்து நின்று கொண்டான்.. சந்தியாவின் மனம் மொட்டைமாடியில் நிகழ்ந்த நிகழ்வின் எதிர்பார்ப்பால் சிறகடித்தது..
“தேவைப்படுமென்றும் சொல்ல முடியுமா..?”
“ஏன் சொல்ல முடியாது..?”
“உதாரணத்திற்கு ஒன்று சொல்லுங்கள்..”
“ஒன்றென்ன.. ஓராயிரம் சொல்லலாம்.. இன்னும் சொல்வதானால் அதை வார்த்தைகளால் சொல்வதைவிட செயலில் காட்டலாம்..”
“எப்படி..?”
ஜீவா கூறியதற்கு பதிலைச் சொல்லும் எண்ணம் மட்டுமே சந்தியாவிற்கு இருந்ததேயொழிய அவன் சொன்னதற்கு அர்த்தம் என்ன.. என்பதை அவள் யோசித்துப் பார்க்க வில்லை..
அவன் எது சொன்னாலும் மறுத்துப் பேசிக் கொண்டிருந்தவள்.. அதுபோலவே.. இதையும் நினைத்துப் பதில் சொன்னாள்..
ஆனால் அவளது பதிலுக்காகவே காத்திருந்தவனைப் போல ஜீவா அவளை தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டு விட்டான்..
சட்டென்று அவன் இழுத்து அணைத்துக் கொள்ளவும் அதை எதிர்பார்த்துக் கொண்டிருந்த சந்தியா துவண்டு போனாள்.. தயக்கமில்லாமல்.. இந்த முறை ஜீவா அவளது கன்னத்தில் முத்தமிட்டான்.. தன் கைக்குள் அடங்கியிருந்தவளின் தோள் தழுவி அவளது கழுத்து வளைவில் முகம் பதித்தான்.. அவளது காதோரமாக கிசுகிசுத்தான்..
“இப்படித்தான் சந்தியா..”
அவள் பேச்சிழந்து போயிருந்தாள்.. தாள முடியாது தவிப்புடன் உடல் நடுங்க அவனிடமிருந்து விலகவும் முடியாமல் விலக மனமும் இல்லாமல் தொய்ந்து ஒரு கொடி போல் நிற்பதற்கு பலம் இன்றி அவனது தோள் தழுவி சாய்ந்திருந்தாள்..
“சொல்லுடி.. என்னிடம் என்ன குறை கண்டாய்..? என்னை உனக்குப் பிடிக்கவில்லையா..? பிடிக்காமலா என்னிடம் நீ இப்படி சரணாகியிருக்கிறாய்..? நான் உன்னுடையவன் சந்தியா..” அவள் காதினிலே முணுமுணுத்தான்..
சந்தியா பதில் பேசவில்லை.. சற்றுமுன் அவள் மனதில் இருந்த வெறுமை மறைந்து போய் விட்டதை உணர்ந்தாள் அவள்..
தான் தனி.. என்ற எண்ணம் மறைந்து அவளுக்காக உருகும் ஒருவன் இருக்கிறான்.. என்ற நினைவு அவள் நெஞ்சில் நிறைந்தது..
முதன் முதலாக சந்தியாவின் தொய்ந்து கிடந்த கரங்கள் தானாக மேலெழும்பி.. அவனது முதுகைத் தழுவிக் கொண்டன.. அவள் அன் மார்பில் முகம் புதைத்தாள்..
Reviews — Kadalaki Kasinthuruki / காதலாகி கசிந்துருகி
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.