Chapter 32
நீயென் அருகில் இருந்தபோது..
ஒரு நாளும், ஒரு நொடியாய், கழிந்தது..
நீயெனை விலகிச் சென்றபோது..
ஒரு நொடியும் ஒரு நாளாய் கனத்தது..
காதலாகி.. கசிந்துருகி..
நம்ப முடியாத பேரானந்தத்துடன் தன்னிடம் அடைக்கலமாகியிருந்தவளின் முடியில் முகம் புதைத்துக் கொண்டான் ஜீவா.. அவன் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் அவளது கூந்தலை நனைத்தது..
எவளுக்காக அல்லும் பகலும் புழுவாய் அவன் துடித்தானோ.. அவள் அவனைத் தழுவி நின்று விட்டாள்..
எவளுக்காக மரணத்தின் விளிம்பு வரை சென்று திரும்பினானோ அவள் மனது அவனுக்கு கிடைத்து விட்டது..
எவளுக்காக தன் கையை தானே சுட்டுக் கொண்டானோ.. அவள் சுட்டெரிக்கும் சூரியனாக இல்லாமல் குளிர் கொடுக்கும் தந்நிலவாய் மாறி அவனைத் தழுவிக் கொண்டுவிட்டாள்..
எவளுக்கா ஒரு மன நோயாளி போல் அவன் கன்யாகுமாரியின் கடற்கரையின் யாருமற்ற அநாதையாக சுருண்டு கிடந்தானோ.. அவள் அவன் மார்பில் முகம் புதைத்து விட்டாள்..
“சந்தியா.. ஐ லவ் யு..”
அவன் குரல் விம்மியதை உணர்ந்து கொண்டாள் சந்தியா.. இத்தனை நாளும் இத்தகைய அன்பையும், காதலையும் உணராமல் போனதற்கு தன்னைத்தானே நொந்து கொண்டாள்..
“பயந்துவிட்டேன் சந்தியா..”
“பயமா..? உங்களுக்கா..?”
“ம்ம்ம்..”
“எதற்குப் பயம்..?”
“எங்கே நீயென்னை ஒரேயடியாய் வெறுத்து விலகி விட்டாயோன்னு கலங்கிப்போய் விட்டேன்..”
“இப்போதும் சொல்கிறேன் நான் அன்றைக்கு வேதனைப்பட்டது நிஜம்.. உங்கள் மேல் வெறுப்பும் கோபமும் வந்தது நிஜம்.. நண்பனாக இருந்தவர் காதலனாக மாறியதில் எனக்கு உடன் பாடில்லைதான்..”
“அது அப்போது.. இப்போது..?”
தன் முகத்தருகே இருந்த அவளது முகத்தோடு முகம் வைத்துக் கொஞ்சும் குரலில் வினவினான் ஜீவா..
“ஜீவா.. ப்ளீஸ்..”
தாள முடியாத தவிப்புடன் அவள் பேசமுடியாமல் திணறினாள்..
“சொல்லுடி.. இப்போது என்னை வெறுக்கிறாயா..?”
“இல்லை..”
“இப்போது நான் யார்..? உன் நண்பனா..?”
“பகைவனில்லை..”
அந்த நிலையிலும் நையாண்டியாய் பதில் கூறிய சந்தியா மெல்ல சிரித்தாள்.. அந்த சிரிப்பில் மயங்கிப் போன ஜீவா அவளைத் தன் கைகளில் ஏந்தித் தூக்கினான்..
“ஜீவா.. ப்ளீஸ் யாராவது வந்துவிடப் போகிறாங்க..”
“வந்தால் வரட்டுமே..”
“நம்மைத் தப்பாக நினைத்து விட மாட்டாங்களா..?”
“என் பெண்டாட்டியை நான் தூக்குகிறேன்.. நீங்க யாரு அதைக் கேட்கன்னு கேட்டுவிட மாட்டேனா..?”
சந்தியா மீண்டும் பேச்சிழந்தவளாக தடுமாறினாள்.. ஜீவாவின் கரங்கள் அவள் முதுகில் பரவ.. அவள் மீண்டும் அவன் மார்பில் முகம் புதைத்தாள்..
“சந்தியா..”
“ம்ம்ம்..”
“நாளைக்கு என்னுடன் கன்யாகுமரியம்மன் கோயிலுக்கு வருவாயா..?”
“அந்தக் கோயிலின் அம்மன்தான் உன் காதல் எனக்கு கிடைத்துவிட வரம் கொடுத்திருக்கிறாங்க சந்தியா..”
“ம்ம்ம்..”
“ஒரு நாள் முழுவதும் நான் பைத்தியக்காரன் போல பீச்சில் கிடந்தேன்.. நைட் எட்டு மணியிருக்கும்.. கோயிலில் போய் அம்மனிடம் வேண்டிக் கொண்டேன்.. என் காதல் நிறைவேறனும்னு.. கண்ணீர் விட்டேன்.. கண் திறந்து பார்த்தால் அர்ச்சகர்.. தீபாதரனை தட்டுடன் நிற்கிறார்..”
சந்தியா அவன் முகத்தை அண்ணாந்து பார்த்தபடி அவன் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்தாள்..
“நீ நினைத்தது நிறைவேறும்.. அந்த அம்பாள் வரம் கொடுப்பாள்ன்னு சொன்னார்.. அது உண்மையாகி விட்டது.”
ஓர்வித சிலிர்ப்புடன் தன் காதலியிடம் தன் மன உணர்வைச் சொல்லிக் கொண்டிருந்தான் ஜீவா..
Reviews — Kadalaki Kasinthuruki / காதலாகி கசிந்துருகி
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.