Chapter 04

0Shares

தன் மனதிற்குள் தோன்றும் ரசாயன மாற்றங்களை உணர்ந்து இருந்தும் மௌனம் காத்தாள் மைதிலி..

அவள் வளர்ந்த விதம் அப்படி. மனதில் நினைப்பதை செயலாற்ற என்றுமே முடியாது என்பதை அறிந்தவள் அவள்.. அவன் வேறு இனம்.. வேறு பழக்க வழக்கங்கள் கொண்டவன்.. இனம் மாறித் திருமணம் செய்வது என்பது அவளது இல்லத்தில் பேசக்கூடாத ஒன்று.

கையில் திருமணம் செய்து வைக்கப் பணம் இல்லாவிட்டால் காலம் பூராவும் பெண் கன்னியாக இருந்தாலும் பரவாயில்லை.. வேற்று இன மாப்பிள்ளையை நினைத்துக் கூடப் பார்க்க மாட்டார் வைத்தீஸ்வரன்..

விசாலாட்சியோ மகள் ஒரு சொல் தேடித் தந்து விட்டால் நெஞ்சு துடிதுடித்துப் போய் விடுவாள்.. தங்கள் சமூகத்தின் அனைத்துப் பழக்க வழக்கங்களையும் ஏற்று வாழ்நாள் பூராவும் சம்பாதிக்கும் பணத்தைக் கப்பம் கட்ட அவள் தயார்.. ஆனால் மகள் காதல் திருமணம் செய்து கொள்வதை ஏற்றுக் கொள்ள என்றுமே அவள் தயாரில்லை..

கிருஷ்ணமூர்த்தி கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டில் ஊறியவன்.. ‘கையில் பணம் இல்லையா.. கல்யாணத்தைத் தள்ளிப்போடு’ என்று கூறினாலும் கூறுவானேயொழிய.. படித்து வேலைக்குச் செல்லும் அவன் கூட இனம் மாறித் திருமணம் செய்வதை வரவேற்க மாட்டான்.. வீட்டுக்கு அடங்கி பெற்றோர் பார்த்து வைத்த பெண்ணை மணம் செய்து கொண்டவன்.. அவனது சிவந்த நிறத்திற்கும் அழகிய தோற்றத்திற்கும் அக்கம், பக்கத்திலும் அவன் பணிபுரிந்த அலுவலகத்திலும் அவனுக்கு ரசிகை கூட்டமே உண்டு.. நிமிர்ந்து பார்த்து அறியாதவன்..

இந்த ‘பூ விலங்கை’ எப்படி மைதிலியால் உடைக்க முடியும்..? தன் குடும்பத்தை மீறி அறியாதவள் அவள்.. பூவாசத்தை அடக்க முடியுமா..? அது போல் அவள் மனதில் அவள் பொத்தி வைத்திருந்த காதல் மலர்ந்து மணம் பரப்பா விட்டாலும் அதன் வாசனையை அவளை நித்தம் நுகர வைத்தது..

தினமும் உடை உடுத்தும்போது இந்த நிறம் அவனுக்குப் பிடிக்குமா..? என்ற நினைவு வருவதை தடுக்க முடியவில்லை.. அறியாப் பெண் போல் வேலை செய்தாலும் அவன் அலுவலகம் நுழையும் நேரம் பார்த்து வாசல் நோக்கித் தாவும் விழிகளை அவளால் கட்டுப்படுத்த இயலவில்லை. அதே போல் அவள் விழிகளைப் பார்த்த படி அவன் வரும்போது பார்வையைத் தழைத்துக் கொண்டு அவன் முகம் திருப்பி நடக்கும்போது அவனை விழியால் தொடர்வதைத் தவிர்க்க முடிவதில்லை.. சொல்லி வைத்தாற் போல் தன் அறைக் கதவைத் திறந்து உள்ளே போகும் அந்தக் கடைசி வினாடியில் சட்டென அவள் பார்வையை சந்தித்து விடுவான் நந்தகுமாரன்.. மாட்டிக் கொண்டு அவள் தவிக்கும்போது அவன் முகத்தில் இளநகை அரும்ப அறையுள் மறைந்து விடுவான்..

‘இது போதும்’ என்ற இதமான உணர்வுடன் அவள் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கும்போது ‘காதல்’ அவள் மனக் கதவை நேரடியாய் தட்டும் நேரம் வந்தது..

அன்று கோவிலைச் சுற்றி வலம் வந்து கொண்டிருந்தாள் மைதிலி..

“சாமி கும்பிட வந்தீங்களா..?” என்ற குரல் கேட்ட நிமிர்ந்து பார்த்தாள்.. எதிரே அவள் உள்ளம் கவர்ந்த கள்வனான நந்தகுமாரன் நின்றிருந்தான்.. அவள் மனம் துள்ளியது.. சிறகடித்த உணர்வுகள் கட்டவிழ்க்க அவனோடு அலுவலகத்தில் பேசத் துடிக்கும் நாவைக் கட்டிப் போட்டிருந்தவள், இன்று கட்டவிழ்த்தாள்.. அவள் நாவு சந்தோஷமாய் சதிராடியது..

“கடைசியில் நீங்களும் அந்த ஜாதிதானா..?” என்றாள் மைதிலி மர்மப் புன்னகை ஒன்றை வீசியபடி.. அவள் எதிர்பார்த்தபடி நந்தகுமாரனின் முகம் மாறியது..

“ஹலோ.. நான் கருப்புச் சட்டைக்காரன்.. ஜாதி மதமெல்லாம் என்னிடம் பேசக்கூடாது..” என்றான் கோபமாக..

“ம்ம்.. எவ்வளவு கோபம் வருகிறது ஆபிசர் சாருக்கு.. சார்.. நான் மனித ஜாதிகளைச் சொல்லவில்லை.. சில பேரின் பழக்கங்களைக் குறிப்பிட்டு ‘நீ அந்த வகையா’ என்பார்களே அது போல் கேட்டேன்..”

“ஓகோ..” என்றவனின் முகத்தில் புன்னகை அரும்பியது.. அவனது கோபத்தை ரசிக்க வேண்டுமென்றே ‘ஜாதி’ என்ற வார்த்தையைக் குறிப்பிட்டு இருக்கிறாள்.. என்றுமே ‘பேசா மடந்தை’ இன்று பேச நந்தகுமாரன் அதை இன்னும் அதிகப்படுத்த பேச்சை வளர்த்தான்..

“அது என்ன பழக்க, வழக்க ஜாதி..?”

“ம்ம்.. சினிமா தியேட்டரில் பார்ப்பார்கள்.. அபத்தமா ‘சினிமா பார்க்க வந்தீங்களா..?’ன்னு கேட்பாங்க.. லைப்ரரியில் பார்ப்பார்கள்.. அதே போல ‘படிக்க வந்தீங்களா’ன்னு கேட்பாங்க.. அப்புறம்..”

“போதும் போதும்.. அதேபோல் நானும் கோவிலுக்கு வந்த உங்களிடம் சாமி கும்பிட வந்தீங்களா’ன்னு கேட்டு விட்டேன்.. அப்படித்தானே..”

துளைக்கும் அவன் பார்வையை எதிர்கொள்ள மாட்டாதவளாய் சிரம் தாழ்த்திக் கொண்டவளின் செய்கை கண்டு ஆண்மையின் கம்பீரம் கொண்டவன் ஆர்வமாய் அவளைப் பார்த்தபடி,

“ஏங்க.. கோவிலுக்கு வந்தவங்ககிட்ட பேச்சை ஆரம்பிக்கணும்னா ‘சாமி கும்பிட வந்தீங்களா’ன்னுதான் கேட்கணும்.. சினிமா தியேட்டரில் அப்படிக் கேட்டால்தான் தப்பு.. லைப்ரரிக்கு வந்தவங்க கிட்ட பேசணுமின்னா.. ‘சினிமா பார்க்க வந்தீங்களா’ன்னா கேட்க முடியும்..? ‘படிக்க வந்தீங்களா’ன்னு தானே கேட்க முடியும்..?” அவன் முகத்தில் மடக்கிய புன்னகை அரும்ப விழிகள்.. ‘இதற்கு என்ன சொல்லப் போகிறாய்..?’ என்று கேட்டான்.

“அது சரி சார்.. உங்களிடம் பேசி ஜெயிக்க முடியுமா..?”

“பேசாமலே என்னை ஜெயித்து விட்டீர்களே..”

“என்ன..?” என்று மைதிலி அதிர்ந்து போய் பார்க்க,

“இல்லை.. நீங்கள் அமைதியான பெண்ணுன்னு நான் ஆபிசில் சொல்லி வைத்திருக்கிறேன்.. நீங்கள் அதை பொய்யாக்கிட்டீங்களேன்னு சொன்னேன்..”

உடைத்துப் பேச நேரம் பார்த்தவாறு பேச்சை மாற்றிப் பேசியவன்,

“உங்கள் சாமியிடம் தேவையானதை கேட்டு முடித்து விட்டீர்களா..?” என்று கேட்டான்..

“என்ன சொல்கிறீர்கள்..? எனக்குப் புரிய வில்லையே..”

“சாமி கும்பிட்டு முடித்து விட்டீர்களா என்று கேட்டேன்..”

“ம்ம்.. அப்போதே வணங்கி வந்து விட்டேன்..”

“இப்போ கோவில் வலமா..?”

“நீங்கள் என்னைக் கேலி செய்கிறீர்களா..? அதுசரி சார்.. நான் தான் கோவிலுக்கு சாமி கும்பிட வந்தேன்.. கருப்பு சட்டைக்காரர் நீங்கள் எதுக்கு வந்தீர்கள்..?”

“கோவில் சாமிக்கு மட்டும்தான் சொந்தமா..?”

“எங்களுக்கு அப்படித்தான்..”

“எனக்கு அப்படியில்லை.. நான் அர்ச்சகரைப் பார்க்க வந்தேன்..”

“அர்ச்சகரிடம் அப்படி என்ன வேலை..?”

“அதை நின்று கொண்டுதான் சொல்ல வேண்டுமா..? உட்கார்ந்து கொண்டு சொல்கிறேனே.. எனக்குக் கால் வலிக்கிறது.. கோவிலைச் சுற்றி வந்த உங்களுக்கும் கால் வலித்திருக்கும்.. அங்கே உட்காரலாம்.. வருகிறீர்களா..?” என்று சுற்றுப் பிரகாரத்தில் இருந்த மண்டபத்தைக் காட்டினான்..

பழைய சோறு கிடைக்காதவளுக்கு பாலும் சோறும் கிடைத்தால் மாட்டேன் என்று சொல்வாளா..? சில வினாடிகள் பார்ப்பதற்கே சிலிர்த்துப் போய் விடுபவள் அங்கே அமைதியான சூழ்நிலையில் அருகே உட்கார்ந்து உரையாட சந்தர்ப்பம் கிடைத்தால் மறுப்பாளா..?

நந்தகுமாரன் மண்டபத்துப் படியில் உட்கார அருகே இடைவெளிவிட்டு அமர்ந்தாள் மைதிலி.. மாலை நேரத்து காற்று மனம் வருடிச் செல்ல ஆசையுடன் கோவில் கோபுரத்தை அண்ணாந்து பார்த்தாள்.. புறாக்கள் சிறகடித்துக் கொண்டு இருந்தன.. நந்தகுமாரனும் அதை ரசித்தான்..

“எது எப்படியோ எனக்கு இந்த கோபுரத்தில் கூடு கட்டியிருக்கும் புறாக்களைப் பார்க்க மிகவும் பிடிக்கும்..”

“இது தெய்வத்தின் சந்நதி.. அமைதியான இடம்..”

“அது உங்கள் நம்பிக்கை..”

“சரி.. அர்ச்சகரை ஏன் பார்க்க வந்தீர்கள்..” பேச்சை மாற்றினாள் மைதிலி..

“அர்ச்சகர் எங்கள் ஊரைச் சேர்ந்தவர்.. அவரின் குழந்தைக்கு ஒரு ஆபரேசன் செய்ய வேண்டியிருக்கிறது.. என்னிடம் பண உதவி கேட்டிருந்தார்.. கொடுக்க வந்தேன்..”

“வேம்பூர்தானே உங்கள் ஊர்..?”

“ஆமாம்..”

“அர்ச்சகரின் வீட்டில் போய் இதைக் கொடுத் திருக்கலாமே..”

“கிராமத்தில் அது தேவையில்லாமல் பெரிதாக பேசப்படும்.. எனக்கு அதில் விருப்பமில்லை.. உதவி செய்வதை மற்றவர் அறியாமல் செய்ய வேண்டும்..”

மைதிலி அயர்ந்து போனாள்.. ஒவ்வொரு நாளும் அறிய நேரும் அவனது புதுமுகம்.. விளம்பரமே உலகமான இந்த சமுதாயத்தில் வலது கை கொடுப்பது இடது கைக்குத் தெரியக்கூடாது என்று நினைக்கும் இவன் எப்படிப்பட்ட நல்லவன்.. இவனது அறிமுகம் கிடைத்ததே பெரிய வரமல்லவா..?

“என்ன அப்படிப் பார்க்கறீங்க..?”

“எப்படி உங்களால் இப்படி இருக்க முடிகின்றது..?”

“இன்றைக்கு லீவு நாள்.. அதனால் இப்படி உட்கார்ந்து அரட்டை அடிக்க முடிகின்றது..”

“நான் இதைச் சொன்னேனா..?” என்று சிணுங்கினாள் மைதிலி..

“வேறு எதைச் சொன்னீர்கள் என்று தெரியும்.. அது பெரிய விஷயமல்ல..”

“நாத்திகம் பேசுபவரிடம் இப்படி ஒரு கருணை உள்ளமா..?”

“ஏங்க..? நாத்திகம் பேசினால் அவன் கெட்டவனா..? கடவுளைக் கும்பிடும் உங்களை விடக் கருணையில் குறைந்தவர்கள் இல்லை நாங்கள்.. நீங்கள் கோவில் உண்டியலில் போடும் பணத்தில் ஆயிரத்தில் ஒரு பங்கை அனாதை ஆசிரமங்களுக்குக் கொடுத்தால் எத்தனை உயிர்கள் ஜீவிக்கும்..? நாங்கள் மனிதர்களை நேசிக்கிறோம்.. உங்களைப் போல் கண்ணுக்குத் தெரியாத கடவுளை நேசிக்க வில்லை.. நாங்கள் யதார்த்தவாதி.. உங்களைப் போல் கற்பனை வாதியல்ல..” நந்தகுமாரன் நிறுத்தாமல் கோர்வையாகப் பேசினான்..

மைதிலி கோபமாய் நிமிர்ந்தாள்.. காதலன் அவள் முன்னாலிருந்து மறைந்து கடவுளை நிந்திக்கும் கருப்புச் சட்டைக் காரன் தோன்றினான்.. அவள் போருக்குத் தயாரானாள்..

0Shares

Reviews — Kadalin Pon Vethiyle / காதலின் பொன் வீதியிலே

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link