Chapter 05

0Shares

மைதிலி பிறந்தது முதல் தெய்வக் கதைகளைக் கேட்டு வளர்ந்தவள்.. மகிழ்ச்சியோ, துக்கமோ அதை மனிதருக்கு சொல்வதற்கு முன் கடவுளிடம் சொல்லிப் பகிர்ந்து கொள்பவள்.. உலகம் இயங்குவது கடவுளால் என்பதை உளமார நம்புகிறவள்.. கடவுள் இல்லையென்று சொல்பவன் அவளது காதலன் என்பதை அவள் மறந்தாள்.. சொற்போருக்கு இழுக்கும் ஒரு நாத்திகன் என்பதை மட்டும் உணர்ந்தாள்.. அமைதியாய் ஆனால் தெளிவாய் பேச ஆரம்பித்தாள்..

“நன்றாகப் பேசுகிறீர்கள்.. உங்களைப் போன்றவர் களுக்குப் பேசச் சொல்லியா கொடுக்க வேண்டும்..? இது விழா மேடையாக இருந்திருந்தால் நிச்சயம் கைதட்டல் கிடைத்திருக்கும்.. நாத்திகன்தான் மனிதன் என்றால் ஆத்திகன் யார்..? மிருகமா..? நீங்கள் யதார்த்தவாதிகள் தான்.. நாங்கள் கற்பனாவாதிகள்தான்.. அன்பை, பாசத்தை, காதலை நேரில் காட்டுங்கள் பார்ப்போம்.. யதார்த்தவாதிகள் உங்களால் அதை உணரத்தானே முடியும்..? அப்போது நீங்களும் எங்களைப் போன்ற கற்பனைவாதிகள் ஆகி விடுகிறீர்கள்தானே.. தப்பிக்க முடியாத, தாங்க முடியாத துன்பங்களிலிருந்து விடுபட எளிய மக்கள் எங்கே போவார்கள்..?”

கண் முன் நடக்கும் கொடுமைகளிலிருந்து தப்பிக்க கடவுளைத்தானே நாங்கள் தஞ்சம்புக வேண்டியிருக்கிறது. கடவுள் கண்ணுக்குத் தெரியாதவர்தான்.. உங்கள் தாய் உங்களிடம் காட்டும் ‘தாய்மை’ என்ற பாசத்தைக் கண்ணால் பார்க்க முடியுமா..? உணரத்தானே முடியும்.. அதைப்போல் கடவுளையும் காண முடியாது.. அவரின் கருணையை உணரத்தான் முடியும்.. நாங்கள் கடவுளின் உருவப் படங்களை வணங்குகிறோம்.. நீங்கள் மனிதர்களின் உருவப் படங்களை வணங்குகிறீர்கள்.. நாங்கள் கடவுளை ஆராதிக்கிறோம்.. நீங்கள் மனிதர்களை ஆராதிக்கிறீர்கள்.. எங்களுடைய காலம் காலமாய் வரும் கடவுள் நம்பிக்கை.. உங்களுடையதுதான் மூடநம்பிக்கை.

மைதிலி முகம் ஆத்திரத்தில் சிவக்க கைகளை ஆட்டியபடி பேச சூழ்நிலையின் பேதத்தை உணர்ந்த நந்தகுமாரன் துணுக்குற்றான்.. என்ன இது..? காதல் சொல்ல அழைத்து விட்டு கருத்துச் சொல்லிக் கொண்டிருக்கிறானே.. தன் கொள்கைகளைப் பேச இதுவா நேரம்..? தன்னைத் தானே கடிந்து கொண்டவன், மெதுவாய் கை தட்டினான்..

“பலே, என்னைப் பேச்சாளர் என்று கூறிவிட்டு நீங்கள் தான் போட்டுத் தாக்குகிறீர்கள்.. அதுசரி.. நான் ஒன்று கேட்கிறேன்.. தினந்தோறும் இந்தக் கடவுளுக்குத் தானே அர்ச்சனை செய்கிறார் அந்த அர்ச்சகர்.. அவரது குழந்தைக்கு மருத்துவம் செய்ய கடவுளா பணம் கொடுத்தார்..? இந்த நாத்திகன்தான் கொடுத்தான்..”

மைதிலி விட்டுக் கொடுக்கவில்லை..

“தெய்வம் மனித ரூபத்தில்தான் உதவி செய்யும்.. அவர் தினமும் கடவுளைக் கும்பிட்டு பணி செய்து கிடப்பதால்தான் உங்கள் மூலமாக இறைவன் உதவி செய்கிறார்..”

“தோடா.. கடவுள் கருப்புச் சட்டைக்காரன் உருவத்தில் வருகிறாரா..? குட் ஜோக்..”

“தெய்வத்திற்கு நாம் எல்லோரும் குழந்தைகள்தான்.. கருப்புச் சட்டைக்கார், வெள்ளைச் சட்டைக்காரர், சிவப்புச் சட்டைக்காரர் என்ற பேதமெல்லாம் கடவுள் பார்ப்பதில்லை..”

தன் போக்கில் மைதிலி பேசிக் கொண்டிருக்க நந்தகுமாரன் காதல் கடலில் நங்கூரம் இட நேரம் கிட்டி விட்டதை உணர்ந்தான்..

“அப்போ.. தெய்வத்தின் பார்வையில் நீயும், நானும் ஒன்று அப்படித்தானே..” நந்தகுமாரன் ஆழ்ந்த பார்வையுடன் கேட்டான்..

தன் வாதத்தில் கவனமாக இருந்த மைதிலி அவன் பார்வை மாறுதலையும் தன்னை ஒரு மையில் அழைத்த தையும் கவனியாமல்,

“அப்படித்தான்..” என்று கூறினாள்..

“அப்போ.. நாமிருவரும் ஒன்றாகி விட்டோமா மைதிலி..” என்று நந்தகுமாரன் குழைவாய் கேட்க அந்தக் குரலின் தன்மையை உணர்ந்த மைதிலி அவனை நிமிர்ந்து பார்த்தாள்.. அவன் பார்வை உணர்த்தியது என்ன..? ‘அன்பே கடவுள்’ என்று வாதம் செய்தாளே.. அந்த அன்பை.. காதலை அல்லவா அவன் பார்வை அள்ளித் தருகிறது.. அவள் தடுமாறினாள்..

‘இறைவா இது என்ன சோதனை.. கண் நேரம் அவன் அருகிருக்க ஆசைப்பட்டுக் காதலை என் செவியில் கேட்டு விட்டேனே.. இதை எப்படி எதிர் கொள்வேன்..’

அவள் பேச்சிழந்து எழ முயல அவன் சினத்துடன் அவள் கரம் பிடித்து அமர்த்தினான்.. மைதிலி பதறினாள்..

“என்ன இது கையைப் பிடிக்கறீங்க.. யாராவது பார்த்து விட்டால்..”

“பார்த்தால் என்ன..? இது கோவில்.. உன் கடவுளிருக்கும் இடம் நான் தப்பான நோக்கத்தில் உன் கையைப் பிடித்து இழுக்கவில்லை.. எனக்கு ஒரு பதிலைச் சொல்லி விட்டுப் போ’ என்று உன்னைத் தடுக்கத்தான் நிறுத்துகிறேன்..”

“என்ன பதிலைச் சொல்ல.. எதற்குப் பதிலைச் சொல்ல..?”

“ஏன் உனக்குத் தெரியாதா..? இல்லை எனக்குத்தான் உன் மனம் தெரியாதா..? எதற்கு இந்த நடிப்பு..?”

“நடிப்பா.. நானா.. என்ன வார்த்தை சொல்லி விட்டீர்கள்..”

“என்னைச் சொல்ல வைக்கிறாய்..”

மைதிலி வேகமான மூச்சுக்களை விட்டு தன்னை அமைதிப்படுத்திக் கொண்டாள்.. அவன் முகத்தைப் பார்த்தாள்.. கோபத்தில் மீசை துடிக்க அமர்ந்திருந்தான்.. அவனது சினம் அவளுக்கு அச்சத்தைத் தந்தது.. மருண்ட பார்வையுடன்,

“இப்போ நான் என்ன பண்ணிட்டேன்னு கோபப்படறிங்க..” என்றாள்.. அவளது பணிதலில் இளகியவன் முகத்தில் வழக்கமான புன்னகை திரும்பியது.. மைதிலிக்கு ‘அப்பாடா’ என்றிருந்தது..

“அப்போ சொல்லு..” என்றான் அவன்..

“திடீர்ன்னு கேட்டால் எப்படி..?”

“ஏய்ய்.. இந்தக் கதையை எல்லாம் என்கிட்ட சொல்லாதே.. நீ வேலைக்குச் சேர்ந்த முதல் நாள் முதல் இன்றைய நாள் வரை இந்த ஒரு வருடமாய் நாம் காதலித்துக் கொண்டிருக்கிறோம்.. இல்லைன்னு உன் மனச்சாட்சியைத் தொட்டுச் சொல்லுடி..”

“என்னது ‘டீ’யா..?” மைதிலிக்குத் தூக்கி வாரிப் போட்டது..

“ஆமாண்டி.. என் அப்பா அம்மாவை அப்படித்தான் கூப்பிடுவார்..”

மைதிலியின் அப்பாவும் அவளது அம்மாவை அப்படித்தான் கூப்பிடுவார்.. ஆனால் அவர்கள் கணவன், மனைவி ஆயிற்றே.. அவளது சிந்தனையைப் படித்தவனாய் அவன் கூறினான்..

“என்னைப் பொறுத்தவரை நீதாண்டி என் பெண்டாட்டி..”

மைதிலி மருகினாள்.. ‘இது நடக்குமா..?’

“வேண்டாம்.. அவசரப் படாதீர்கள்.. இது நடக்குமா, நடக்காதா என்று தெரியாமல் ஆசையை வளர்க்க வேண்டாமே..”

“நடத்திக் காட்ட வேண்டும் மைதிலி.. மனதில் தைரியமும், எண்ணத்தில் உறுதியும் இருந்தால் நடக்காதது ஏது..?”

“இல்லை சார்.. அது வந்து..”

“என்னது சாரா..? ஏண்டி நான் உன்னை என் பெண்டாட்டின்னு சொல்கிறேன்.. நீ சார் போடுகிறாய்.. என் பெயரைச் சொல்லிக் கூப்பிடு..”

“அது எப்படி..?”

“இப்போ கூப்பிடப் போகிறாயா இல்லையா..?”

“ப்ளீஸ்.. இன்னும் கொஞ்ச நாள் போகட்டுமே..”

“கூப்பிடுகிறாயா.. இல்லை நான் எழுந்து போகட்டுமா..?” அவன் எழ முயல அவசரமாய் அவள்,

“வேண்டாம் நந்து..” என்றாள்..

அவன் முகம் மலர அமர்ந்தான்.. அவள் முகம் பார்த்து,

“என் அம்மா என்னை நந்துன்னுதான் கூப்பிடுவாங்க..” என்றான்..

அவள் வெட்கத்துடன் கைவிரல்களால் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள்.. அவளது கரம் பற்றி விரல் வருட அவள் பதட்டத்துடன் கையை உருவ முயல,

“ஏன்..” என்று உறுமினான்.. கையை அவன் பிடிக்குள்ளேயே விட்டவள்,

“நமக்குள் ஆயிரம் வேற்றுமைகள் அதை நினைக்காமல் பேசினால் எப்படி..” என்றாள்..

“என்ன வேற்றுமை..?”

“நம்பர் ஒன்.. நீங்க ஆபிசர் நான் கிளார்க்..”

“நான் உன் நந்து.. நீ என் பெண்டாட்டி.. நெக்ஸ்ட்..”

“நெக்ஸ்ட்.. நாம ரெண்டு பேரும் வேற வேற ஜாதி..”

“இல்லையே.. ஒரே ஜாதிதானே..”

“ஒரே ஜாதியா..? என்ன விளையாடுகிறீர்களா..?”

“மனித ஜாதிடி..”

“நீங்கள் பெரிய பணக்காரர்.. நான் மிடில் கிளாஸ்..”

“நீ என் பெண்டாட்டியானா.. என் சொத்தெல்லாம் உன்னதுதானே..”

“இது பேச்சுக்குத்தான் நன்றாயிருக்கும்..”

“ஏன் கேட்க நல்லாயில்லையா..?”

“நந்து ப்ளீஸ்.. சீரியஸா பேசுங்கள்..”

மைதிலியின் முகத்தில் கலக்கம் இருந்தது.. நந்தகுமாரன் அவளை ஆதரவாய் கைநீட்டி அழைக்க இரண்டு படி கீழே தள்ளி அவன் காலடியில் அமர்ந்தவள் அவன் மடியில் முகம் புதைத்தாள்.. இப்படியே இருந்து விட்டால் எவ்வளவோ நன்றாக இருக்கும் என்று தோன்றியது.. அவளது முடியை வருடிவிட்ட நந்தகுமாரன் கேட்டான்,

“மைதிலி.. உன்னை ஒன்று கேட்கிறேன்.. பதில் சொல்.. இந்த நொடி என்னிடம் சரண் அடைந்திருக் கிறாயே.. இதற்கு மேல் உன்னை யாராவது பெண் பார்க்க வந்தால் அவர்கள் முன்னால் உன்னால் நிற்க முடியுமா..?”

‘எப்படி முடியும்..?’ இதயம் குலுங்கியது மைதிலிக்கு.

“முடியாது..” என்றாள் திடமான குரலில்..

“இன்னொருவனை கணவனாய் நினைக்க முடியுமா..?”

“நந்து ப்ளீஸ்.. இப்படியெல்லாம் பேச்சுக்குக்கூட கேட்காதீர்கள்..”

“இன்னொருத்திக்கு நான் கணவனாக நேர்ந்தால் என்ன செய்வாய்..?”

“கொலை செய்து விடுவேன்..”

“யாரை அந்தப் பெண்ணையா..?”

“இல்லை உன்னை.. ராஸ்கல்..! என்னை மடி சாய்த்துக் கொண்டு என்ன பேச்சுப் பேசுகிறாய்.. நீ மைதிலியின் கணவன்.. அதை மறந்தால்.. மகனே.. குடலை உறுவி மாலை போட்டு விடுவேன்..”

நந்தகுமாரன் கடகடவென்று மீசை அதிரச் சிரித்தான்..

“இதுதான்.. இந்த தைரியத்தைத்தான் காதல் கொடுத்திருக்கிறது.. சொல்.. இனி நீயோ, நானோ பேசி முடிவு பண்ண எதுவும் இருக்கிறதா..?”

‘இல்லை’யென்று தலை அசைத்தாள் மைதிலி.. அவளுக்குப் புரிந்தது.. அவள் காதல் என்னும் ஒரு வழிப் பாதையில் சென்று விட்டாள்.. இனித் திரும்ப முடியாது..

அன்று இல்லம் திரும்பியபோது கோவிலுக்கு விசாலாட்சி, வைத்தீஸ்வரனின் மகளாகச் சென்றவள் நந்தகுமாரனின் காதலியாக அவனின் மானசீக மனைவியாகத் திரும்பினாள்..

0Shares

Reviews — Kadalin Pon Vethiyle / காதலின் பொன் வீதியிலே

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link