Chapter 07

0Shares

தந்த நிறம், வாரா வாரம் அழகு நிலையத்திற்குச் சென்று சீராக ஆனால், ஏற்ற இறக்கமாக வெட்டி விடப்பட்ட கூந்தல், செதுக்கி வைத்தது போன்ற உடல்வாகு, கூரான நாசி, கொவ்வை இதழ்கள், மீன் போல் நீண்ட விழிகள்..

இதுதான் மேனகா.. சுடிதார் கூட பழமையான உடை என்பவள்.. ஜீன்ஸை விரும்பும் தற்கால யுவதி.. திருச்சிக்கு அருகிலிருக்கும் தோப்பூர் கிராமத்து ஜமீன் வாரிசு.. மூன்று தலைமுறையாக சென்னையில் வாசம் செய்யும் குடும்பத்தின் ஒரே செல்வ மகள்.. நிலபுலன்களை குத்தகைக்கு விட்டுவிட்டு வெளிநாட்டு ஏற்றுமதி இறக்குமதி வியாபாரத்தில் இறங்கிய அவளது கொள்ளுத் தாத்தா ஆரம்பித்து வைத்ததை தாத்தா செழிக்க வைக்க இப்போது ஏழு தலைமுறைக்கு அரசன் போல வாழ வைக்கும் செல்வத்திற்கு அதிபதியான அவளது தந்தை, மேனகா நிலவைப் பார்த்து ஆசைப்பட்டாலும் உடனே வாங்கித் தந்து விடத் துடிப்பவர்.. மேனகா வைத்ததுதான் அவள் குடும்பத்தில் சட்டம். அவள் சொல்வதுதான் வேதம்..

இத்தகைய மேனகா ஒரு கல்யாணத்தில் நந்தகுமாரனின் அதிரடி நடவடிக்கையைக் கண்டாள்.. கண்ட அந்தக் கணத்திலேயே அவன் மேல் காதல் கொண்டாள்..

நந்தகுமாரனின் சித்தப்பா மகளின் திருமணம்.. மாப்பிள்ளை வீடு சென்னையில் இருந்தது.. மாப்பிள்ளை ஊரில்தான் திருமணம் முடிப்பது அவர்களது குடும்பப் பழக்கம்.. எனவே பெண்ணழைத்துக் கொண்டு சென்னைக்கு முதல் நாளே உறவினர் வட்டாரம் சென்றபோது குடும்பத்துக்கு மூத்தவரான துரைசிங்கம் தன் டாடா சுமோவில் குடும்பத்துடன் உடன் சென்றார்.. மணப்பெண்ணுக்கு அண்ணனாக நந்தகுமாரன் திருமண மண்டபத்தில் ஓடி ஆடி வேலை செய்து கொண்டிருந்தான்..

திருமண மாப்பிள்ளை மேனகாவின் தந்தைக்கு ஒன்று விட்ட தம்பியின் மகன்.. மேனகாவிற்கு ஒன்றுவிட்ட அண்ணன்.. மேனகாவின் தந்தை ராஜலிங்கம் அளவிற்குச் செல்வந்தராக இல்லாவிட்டாலும் ஓரளவு வளமானவர்தான் மாப்பிள்ளையின் அப்பா.. எனவே சொந்தத்திற்காகவும் ஓரளவு வசதியானவர்கள் தான் என்பதாலும் தம்பியின் வீட்டுத் திருமணத்திற்கு குடும்பத்துடன் வருகை தந்திருந்தார் ராஜலிங்கம்.

திருமண மண்டபத்தில் முன் வரிசையில் தாய், தந்தையுடன் அமர்ந்திருந்த மேனகாவும், மற்றவர்களும் மண்டப வாசலில் சளசளப்பு கேட்டுத் திரும்பிப் பார்த்தனர்.. சர், சர்ரென சீறிக் கொண்டு நாலைந்து டாடா சுமோ வண்டிகள் வந்து நிற்க அதிலிருந்து திபுதிபுவென முரட்டு ஆள்கள் அரிவாள், கத்தி, கபடாவுடன் குதித்து இறங்கினார்கள்.. முன்னால் அந்தக் கூட்டத்திற்கு தலைமை போல் வந்த முரட்டு வாலிபன்,

“யோவ் மாமா..” என்று கத்தினான்.

பெண்ணின் தகப்பனார் பாலசிங்கம் பதறிப் போனார்.. வந்து நின்றது அவரது மைத்துனன்.. அவரது மனைவியின் தம்பி..

“என்னடா பரமா.. ஏண்டா இப்படிக் கூட்டம் கூட்டிக் கிட்டு வந்து கத்துகிறே..?”

“ஏன் உனக்குத் தெரியாதா..? நான் ஊரிலில்லாத நேரமாப் பார்த்து என் அக்கா மகளுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கப் பார்க்கறியா..? முறை மாமன் நான் இருக்கும்போது என் அக்கா மகள் கழுத்தில் இன்னொருத்தன் தாலி கட்டுறதா..? நீ எப்படி இந்தக் கல்யாணத்தை நடத்துறன்னு பார்க்கிறேன்..”

பாலசிங்கத்தின் மனைவி காமாட்சி ஓடி வந்து தம்பியைக் கெஞ்சினாள்.. உறவுக்காரர்கள் சமாதானப் படுத்திப் பார்த்தார்கள்.. அடங்காமல் பரமன் திமிறிக் கொண்டிருக்க அவன் கன்னத்தில் ஓங்கி ஓர் அறை விழுந்தது.. அறை பட்ட வேகத்தில் கையிலிருந்த அரிவாள் கீழே விழ பரமன் திரும்பிப் பார்த்தான்..

அங்கே திருமணத்திற்காக கட்டியிருந்த பட்டு வேட்டியை மடித்துக் கட்டியபடி முழுக்கை சட்டையை முழங்கைக்கு மேல் ஏற்றி விட்டவாறு ஜல்லிக்கட்டு காளை போல் நந்தகுமாரன் நின்று கொண்டிருந்தான்..

“என்னடா நினைச்சுக்கிட்டிருக்கே.. சித்திக்குக் கூடப் பிறந்தவன் ஆயிற்றே.. உறவுக்காரனாப் போயிட்டியேன்னு தயங்கி நின்னா நீ ஆண் பிள்ளை சிங்கமாயிடுவியா..? எங்கே.. என் தங்கை மேல் கை வை பார்ப்போம்… தொட்ட கையை வெட்டாமல் விட மாட்டான்டா இந்த நந்தகுமாரன்..” என்று சீறினான் அவன்.

அவனைக் கண்டதும் பரமனும் அவனுடன் வந்தவர்களும் பதுங்குவதை மேனகா வியப்புடன் பார்த்தாள்.. அவள் அறிந்த ஆண்களின் வட்டாரம் வேறு.. கோட்சூட்டுடன் டை கட்டி நாசுக்காய் கோப்பையில் பானம் அருந்தி விலகிச் செல்லும் தந்தையின் நண்பர்கள் வட்டாரம்.. அலட்டலாய் உடையணிந்து அட்டகாசமாய் நுனிநாக்கில் ஆங்கிலம் பேசிக் கொண்டு இவளது மனதைக் கவர முயலும் இளம் பணக்கார வாலிபர்களின் வட்டாரம்… அவர்களின் இந்த வலிமையை அவள் கண்டதில்லை.. யாரேனும் மிரட்ட முயன்றால் அவர்களது அதிகாரத்தையும், பணபலத்தையும் கொண்டு தான் அவர்களை அடக்க முயல்வார்கள்.. தன் சுய வலிமையைக் காட்டி அல்ல.. நிமிர்ந்து நின்று எதிராளியை தன் கைவலிமையால் அடக்கும் ஆண் மகனை அன்றுதான் முதன் முதலாய் கண்டாள் மேனகா..

பரமனும், அவனுடன் வந்திருந்த கூட்டாளிகளும் ஆயுதம் வைத்திருந்தார்கள்.. அங்கிருந்த அனைவரும் போலீசைக் கூப்பிட செல்போனை அழுத்திக் கொண்டிருக்க நந்தகுமாரன் வந்து விட்டானே ஒரு அறை.. மேனகா சுவாரஸ்யமாய் அவனைப் பார்த்தாள்.. நந்தகுமாரன் அவனை அறைந்ததோடு விடவில்லை..

“எடுடா கீழே போட்ட அரிவாளை எடு.. மகனே நான்  சொடக்குப் போடுற நிமிசத்துக்குள்ள நீயும் உன் கூட்டாளிகளும் இந்த இடத்தைக் காலி பண்ணலே.. ஒரு பயல் உயிரோடு ஊர் போய் சேர மாட்டிங்க.. ஓடுங்கடா..”

நந்தகுமாரன் விரல் சொடுக்க ஆரம்பிக்க அடுத்த நொடியில் அவர்கள் அனைவரும் ஓடிப் போனார்கள்.. நந்தகுமாரன், பாலசிங்கத்தைப் பார்த்து அதட்டினான்..

“சித்தப்பா.. இதையெல்லாம் ஊரிலேயே ஏன் என்கிட்ட சொல்லவில்லை..? இதை அங்கேயே பேசித் தீர்த்திருக்கலாமே.. ஊர் விட்டு, ஊர் வந்து அவங்க தகராறு பண்ற மாதிரி வைத்துக்கணுமா..?”

“இல்லடா நந்து.. என்ன இருந்தாலும் அவன் தாய் மாமன்.. முறை மாமன் வேற.. அவன் பக்கம் நியாயம் இருக்கிறப்போ அவன் ஊரில் இல்லாதப்போ கல்யாணத்தைப் பண்ணிப் புடலாம்ன்னு நினைச்சுத்தான்..”

“எந்தக் காலத்தில் இருக்கறீங்க சித்தப்பா.. இப்பப் போய் முறை மாமனாம்.. அவன் பக்கம் நியாயமிருக்காம்.. உங்களை.. நீங்கள்ளாம் திருந்தவே மாட்டீங்களா..”

“நீ நாத்திகம் பேசுறவன்.. பகுத்தறிவுவாதி.. நாங்க அந்தக் காலத்து ஆளுக.. எங்க நியாயம் வேறதான்ப்பா..”

“சரிசரி.. கல்யாண வேலைகளைப் பாருங்க..” என்றபடி நந்தகுமாரன் கம்பீரமாய் மடித்துக் கட்டிய வேட்டியை தழைய விட்டு, மடக்கி விடப்பட்டிருந்த சட்டையை இழுத்து விட்டபடி அங்கிருந்து செல்ல மேனகாவின் பார்வையும் அவனைத் தொடர்ந்தது.

அன்று திருமணம் முடிந்ததும் பெற்றோர் கிளம்புகையில் மேனகா தாமதித்தாள்..

“என்ன மேனகா கிளம்பவில்லையா..? உன் பிரெண்ட் டோட பர்த்டே பார்ட்டிக்கு போகணும்னு சொன்னியே..” என்று ராஜலிங்கம் வினவ,

“நோ டாடி.. ஐ லைக் திஸ் அட்மாஸ்பியர்.. நான் இன்னும் கொஞ்ச நேரம் இங்கே இருந்து விட்டு வருகிறேன்.. நீங்க போய் காரை அனுப்புங்க..” என்று மேனகா கூறிவிட்டு அங்கேயே மதியம் வரை தங்கி விட்டாள்..

நந்தகுமாரன் நடப்பதை, பேசுவதை, திரும்புவதை தன் செல்போன் கேமிராவில் படம் பிடித்துக் கொண்டிருந்தவள் மதியம் அவனைப் பிரிய மனமில்லாமல் கிளம்பிச் சென்றாள்.. அன்று மாலையே அந்தத் திருமணத்தின் வரவேற்பில் கலந்து கொண்டவள் நந்தகுமாரனிடம் சென்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள்..

“ஹலோ.. ஐ ஆம் மேனகா..” என்று கை குலுக்க கை நீட்டியவளிடம்,

“என் பெயர் நந்தகுமாரன்..” என்று கரம் குவித்தான் நந்தகுமாரன்.

“ஓ..” என்று புருவங்கள் வில்லாக மேலேற வியந்தவள் தன் கரத்தை மடக்கிக் கொண்டு,

“ஐ லைக் யு வெரிமச்..” என்றாள்..

“நீங்க என்ன சொல்றீங்கன்னு.. இல்லை.. சொல்ல வருகிறீர்கள்ன்னு எனக்குப் புரியவில்லையே..” என்றான் நந்தகுமாரன் தன் புருவத்தை வினவும் பாவனையில் உயர்த்தியவனாய்..

“வெல்.. நான் ஸ்ட்ரெயிட்டாவே சொல்கிறேன்.. நீங்கள் என்னை இம்ப்ரஸ் பண்ணி விட்டீர்கள்.. யுநோ.. நான் இதுவரை எந்த ஆணிடமும் இம்ப்ரஸ் ஆனதில்லை..”

“அப்படியா..?” என்றான் நந்தகுமாரன் கேலி தொனிக்கும் குரலில்..

“ஆமாம்.. இந்த மேனகாவை வலை வீசிப் பிடிக்க எத்தனை பேர் முயன்றார்கள் தெரியுமா..?” என்றாள் அவள் கர்வமான குரலில்..

“ஊஹூம்..?” என்றான் அவன் அதே கேலியுடன்..

“ஆனால்.. இந்த மேனகா வலை வீசிப் பிடிக்கப் பார்க்கும் ஒரே ஆண்.. நீங்கள்தான்..” என்றவள்,

“என்ன ஆச்சரியமாய் இருக்கிறதா..?” என்று அதே கர்வத்துடன் தொடர்ந்து கேட்டாள்..

“இதற்கு என்ன பதில் சொல்ல வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள்..?” என்றான் நந்தகுமாரன் மிடுக்காக..

“மிஸ்டர் நந்தகுமாரன்.. என் பேக்ரவுண்ட் தெரியாமலே என் அழகைப் பார்த்து மயங்கி என் பின்னால் அலைந்தவர்கள் அதிகம்.. என் பேக்ரவுண்ட் தெரிந்தவுடன் என் கடைக்கண் பார்வைக்காக தவமே இருக்கிறார்கள்..”

“அதுசரி.. அதையெல்லாம் ஏன் என்னிடம் வந்து சொல்கிறீர்கள்..? தவம் செய்பவன் யாருக்காவது உங்கள் கடைக்கண் பார்வையைக் கொடுத்துக் கடைத் தேற்றலாமே..?”

“ஸ்டுப்பிட்.. என் மனம் தெரிந்தும் இப்படிப் பேசாதீர்கள்..”

“என் மனம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா..? அதில் நிச்சயம் நீங்கள் இல்லை..”

“இனி வருவேன்..”

“அது முடியாது.. உங்கள் வலையில் சிக்கும் மீன் நானல்ல.. நான் கழுவுகிற மீன்களில் நழுவுகிற மீன்..”

“நான் யாரென்று தெரியாமல் பேசுகிறீர்கள்..” என்று மேனகா கூறிக் கொண்டிருக்கும்போது அங்கே வந்த பலவேசம்..

“அடடே நம்ம தோப்பூர் ஜமீன் வீட்டுப் பொண்ணு.. ஏம்மா தோப்பூரை ஆண்டது போதாதுன்னு சென்னையை ஆள வந்திருச்சு உங்க பரம்பரை.. மகாராணி.. நீங்க போய் நிற்கலாமா.. உட்கார்ந்து பேசுங்கம்மா..” என்றபடி சேரைத் தூக்கி வந்துபோட அதில் அமர்ந்து கால் மேல் கால் போட்டுக் கொண்டவள் ராஜ தோரணையுடன் நந்தகுமாரனைப் பார்க்க அவன் அலட்சியமாய் தோளைக் குலுக்கிக் கொண்டு அங்கிருந்து நகர்ந்து சென்று விட்டான்.. அதிர்ந்து போன மேனகா பார்வையைத் திருப்ப பலவேசம் அருகில் வந்தார்..

“அப்பாவைக் கூப்பிடுங்க..”

ராஜலிங்கம் பறந்து கொண்டு வந்தார்.. அவள் பல வேசத்தை அழைத்து,

“அங்கிள், இப்போது என்னிடம் பேசிக் கொண்டிருந்தாரே.. நந்தகுமாரன் அவர் யாருன்னு தெரியுமா..?” என்று கேட்டாள்..

“நம்ம வேம்பூர் துரைசிங்கத்தோட மகன்.. உங்களுக்கு மாமன் மகன் முறைதானம்மா.. இன்கம்டாக்ஸ் ஆபிசரா இருக்கான்..” என்று அவர் கூற ராஜலிங்கத்தைப் பார்த்தவள்,

“டாடி.. எனக்கு அந்த நந்தகுமாரன் கணவனாக வரவேண்டும்..” என்றாள்..

“மேனகா..” என்று அவர் திகைக்க,

“டாடி.. மேரேஜ் பண்ணினால் அவரைத்தான் பண்ணிக்குவேன்..” என்று அவள் அழுத்தம் திருத்தமாய் கூறினாள்.. மகளின் முகத்திலிருந்த தீவிரத்தைக் கண்டவர்,

“ஓகேம்மா.. நான் பேசி முடிக்கிறேன்..” என்று உறுதி அளித்தார்..

பொறுப்பு பலவேசகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.. அப்போதே துரைசிங்கத்தையும், ராஜலிங்கத்தையும் சந்திக்க வைத்தார் பலவேசம்.. துரைசிங்கம் மலைத்துப் போனார்.. வேம்பூருக்கு அவர் பெரிய மனிதராக இருக்கலாம்.. தோப்பூர் ஜமீன் பரம்பரை அவர்களது வட்டாரத்திலேயே மிகப்பெரிய வீடு.. சென்னையில் ராஜபோகமாய் வாழும் அவர்கள் வீட்டுப் பெண் அவரது மருமகளாக வந்தால்.. நினைத்தாலே நெஞ்சம் இனித்தது..

ஊர் வந்து சேர்ந்தவுடன் அவர் மகனை கரைக்கப் பார்க்க அவன் பிடி கொடுக்க மறுத்தான்.. தன் முயற்சியில் தோல்வி கண்ட துரைசிங்கம் சோர்வடைய அவரை நிமிர வைப்பது போல் ராஜலிங்கத்திடமிருந்து செய்தி வந்தது..

அவரது மகள் மேனகா திருச்சியைச் சுற்றிப் பார்க்க விரும்புகிறாள்.. அதற்காக தோப்பூர் வீட்டில் தங்காமல் வேம்பூரில் துரைசிங்கத்தின் வீட்டில் தங்கப் போகிறாள்,

மேனகையின் வரவுக்கு வேம்பூர் வீடு தயாரானது.

0Shares

Reviews — Kadalin Pon Vethiyle / காதலின் பொன் வீதியிலே

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link