Chapter 09
மொட்டை மாடியில் தனியே அமர்ந்திருந்தாள் மைதிலி.. கைகள் தன் போக்கில் தலையில் சூடியிருந்த முல்லைப் பூச்சரத்திலிருந்து ஒவ்வொரு பூவாக உருவிக் கொண்டிருக்க கண்கள் வான் வெளியில் லயித்திருந்தது.. மனம் பூராவும் டேவிட்டின் கேள்வியே எதிரொலித்தது..
‘சம்மதிக்க மாட்டார்கள் என்று தெரிந்த பின்னாலும் காதலிக்கலாமா..?’
கூடாதுதான்.. அப்புறம் எந்தத் தைரியத்தில் காதலித்தாள்.. இப்போது பிரச்னையை எதிர்கொள்ள ஏன் பயப்படுகிறாள்..?
“மைதிலி..” என்று அழைக்கும் குரல் கேட்டது.. விசாலாட்சி படியேறி வந்தாள்..
“என்னடா.. இங்கே தனியா உட்கார்ந்துக்கிட்டு இருக்கே..”
“இல்லைம்மா.. சும்மா காற்றாட உட்காரலாமேன்னு தான்..”
மைதிலியின் குரல் வெறுமையாய் ஒலித்தது.. மீண்டும் வானை வெறித்தாள்.. விசாலாட்சி யோசனையாய் மகளைப் பார்த்தாள்.. சில நாள்களாகவே அவளது செயல்பாடுகள் சரியில்லாததாக இருக்கிறது.. நேற்று இரவு சாப்பிட்டு முடிக்கும்போது விசாலாட்சி மகளைப் பார்த்து,
“குழம்பு நல்லாயிருக்காடா..?” என்று கேட்டாள்..
“நீங்க வைக்கிற சாம்பார் என்னைக்குமா சோடை போயிருக்கு..?” என்றாள் மைதிலி.. விசாலாட்சி துணுக் குற்றாள்.. அவள் வைத்திருந்தது பூண்டுக் குழம்பு..! காலையில் முல்லைப் பூ வைத்து விட்டபோது,
“மல்லிகைப் பூவாம்மா..? வாசனை நல்லாயிருக்கு..” என்கிறாள்.. தட்டில் இட்லியைப் போட்டாள்..
“தோசை இன்னும் கொஞ்சம் மொறுமொறுப்பா இருக்கணும் அம்மா..” என்கிறாள்.. அடிக்கடி தனியாய் மொட்டை மாடியில் அமர்ந்து கொள்கிறாள்.. சில சமயம் நள்ளிரவில் பாத்ரூம் போக எழுந்தால்
மகள் ஜன்னலருகில் அமர்ந்து கொண்டு வானத்தை வெறித்துக் கொண்டிருப்பதை காண நேர்கிறது..
“மைதிலி என்னம்மா செய்கிறே..?” என்று குரல் கொடுத்தால்..
“ஒண்ணுமில்லைம்மா..” என்று கூறிவிட்டு சுருண்டு படுத்துக் கொள்கிறாள்..
“ஒன்னுமேயில்லையா..?” தாய் மனம் சந்தேகம் கொண்டது..
“மைதிலி..” என்று கண்டிப்புடன் அழைத்தாள்.. தாயின் குரலில் வித்தியாசத்தை உணர்ந்தவள்,
“என்னம்மா..?” என்று தாயின் முகம் பார்த்தாள்..
“அப்பா முசுட்டு சுபாவக்காரர்தான்.. அண்ணன் தன் குடும்பம்ன்னு போய் விட்டவன்தான்.. இப்போதைக்கு அதிக வசதியில்லாததால் உன் சம்பளத்தை சேர்த்து வைத்து உனக்குக் கல்யாணம் பண்ண வேண்டும்தான்.. ஆனால் இது நம்ம குடும்பம்.. நமக்குன்னு ஓர் கௌரவம் இருக்கு.. உன் சம்பளத்திலிருந்து வீட்டுச் செலவுக்கு ஒரு பைசா கூட நான் எடுப்பதில்லை.. அப்படியே பேங்கில் உன் கணக்கில்தான் போட்டு விடுகிறேன்..”
“அம்மா.. ஏன் இப்படிப் பேசுகிறீர்கள்..?”
“பேச வேண்டியிருக்கிறது மைதிலி.. நீ, சாவித்திரி, கிருஷ்ணமூர்த்தி மூன்று பேருமே எங்கள் பிள்ளைகள் தான்.. ஒருவருக்கு அதிகமாக ஒருவருக்குக் குறைவாக நாங்கள் செய்யவில்லை.. சாவித்திரிக்கு படிப்பைக் கொடுக்கவில்லை.. உனக்கு படிப்போடு வேலையையும் கொடுத்தோம்.. சாவித்திரிக்கு அதிக செலவு செய்து கல்யாணம் பண்ணி வைத்தோம்.. கிருஷ்ணமூர்த்தி அப்பாவின் சுமையை பகிர்ந்து கொண்டான்.. நல்லவன்.. அவனுக்கும் குடும்பன்னு ஆகி விட்டதால் கொஞ்சம் ஒதுங்கி இருக்கிறான்..”
“ஏம்மா.. என்னவோ போல் பேசுகிறீர்கள்..?”
“நீ கொஞ்ச நாளா என்னவோ போல் இருக்கிறாயே அதனால்தான்.. உன்மேல் நான் நிறைய நம்பிக்கை வைத்திருக்கிறேன்.. ஏமாற்றி விடாதே..”
விசாலாட்சி எழுந்து கீழே இறங்கிச் சென்று விட்டாள்.. மைதிலி மௌனமாய் விசும்பினாள்.. முகத்தைப் பார்த்து சுகத்தை தெரிந்து கொள்ளும் தாயிடம் தன் காதல் பற்றி எப்படிச் சொல்ல..?
வேம்பூரில் நந்தகுமாரன் பாடு திண்டாட்ட மாயிருந்தது.. மாலை அவன் வீடு திரும்பும்போது வீடு அமைதியாக இருந்தது.. அவன் பூனை போல் வண்டியை நிறுத்தி விட்டு மெதுவாகக் கதவைத் திறந்து உள்ளே போக ‘படாரென்ற’ சத்தத்துடன் மேலே பலூன் வெடித்தது.. அதிலிருந்து பூக்களும், ஜிகினாத் தூள்களும் அவன் மேல் பொழிய வீட்டின் அனைத்து விளக்குகளும் எரிந்தன.. வரவேற்பறை நடுவில் ஒரு டீப்பாயின் மேல் கேக் வைக்கப்பட்டிருந்தது.. வீட்டு வேலையாள்கள் கைதட்ட அவன் ஏதோ ஓர் இந்திப் படத்தின் காட்சி போல் அந்தச் சூழ்நிலையை உணர்ந்தான் அவன் வீடா இது..? தாயைப் பார்த்து,
“அம்மா என்னம்மா இது..?” என்றான் அழமாட்டாத குறையாய்..
“எல்லாம் நம் நேரம்டா..” என்றாள் சோலையம்மாள் அதே தொனியில்.. பட் பட்டென்று கைதட்டியபடி வந்த மேனகா,
“வெல்கம் மிஸ்டர் நந்தகுமாரன்..” என்றாள்..
“யார் வீட்டில் யார் வரவேற்பது..?”
“யார் வீடா இருந்தால் என்ன..? யார் வரவேற்றால் என்ன..?”
“இதெல்லாம் உங்க வேலையா..? ஏன் இப்படிச் சீன் கிரியேட் பண்றீங்க..?”
“உங்கள் வீட்டில் உங்களோடு என் முதல் நாள்.. கொண்டாடலாம்னுதான்..”
“கேட்கச் சகிக்கலை.. அம்மா.. நைட் டிபனை மாடிக்கு என் ரூமிற்கே கொண்டு வந்து விடுங்கள்..”
“ஏன் துரை கீழே வந்து சாப்பிட மாட்டாரா..?” என்று துரைசிங்கம் உறும..
“ஆமாம்.. பெரிய துரை படுத்துகிற பாட்டில் அவர் மூஞ்சியைப் பார்த்துக்கிட்டு சாப்பிடச் சின்ன துரையால் முடியாது..”
“அதெல்லாம் ரூமிற்கு சாப்பாடு வராது..”
“நானும் சாப்பிட வரமாட்டேன்..”
சோலையம்மாள் பதறிப் போனாள்.. காலையிலிருந்து வகை வகையாய் உணவு சமைத்து எல்லோருக்கும் போடுகிறாள்.. பெற்ற மகனுக்கு ஒரு வாய் உணவு போட முடியவில்லை என்றால் தாய் மனம் என்ன பாடு படும்..?
“நீ போடா ராஜா.. நான் சாப்பாடு எடுத்து வருகிறேன்..”
“நீங்கள் போங்கள் நந்தகுமாரன்.. நான் எடுத்து வருகிறேன்..” என்று மேனகா கூற அவன் தாயைப் பார்த்து,
“அம்மா கவனியுங்கள்.. நீங்கள் மட்டும்தான் என் ரூமிற்கு வரணும் புரியுதா..” என்று கூறிவிட்டு எரிச்சலுடன் சென்று விட்டான்..
அவன் சென்ற திக்கைப் பார்த்தபடி மேனகா அசையாமல் நிற்க,
“என்ன மருமகளே.. முதல் நாளே மலையைச் சுட்டால் எப்படி.. அடி மேலடி அடிச்சா அம்மிக்கல்லே நகரும், என் பிள்ளை எம்மாத்திரம்..?” என்றார் துரைசிங்கம்..
“வெல்செட் அங்கிள்.. நான் ஜெயிக்காமல் சென்னைக்குத் திரும்ப மாட்டேன்..”
அன்று இரவு பலகாரத்தை மகனுக்கு ஒரு தட்டில் எடுத்து வைத்து சுற்றிலும் சின்னக் கிண்ணங்களில் குருமா மற்றைய பதார்த்தங்களை எடுத்து அடுக்கி இன்னொரு தட்டுக் கொண்டு மூடி சோலையம்மாள் மாடியேறிச் சென்றாள்.. நந்தகுமாரன் அறைக்குள் நுழையப் போகும்போது மேனகா அழைத்தாள்..
“ஆன்ட்டி.. நான் உதவி செய்யட்டுமா..?”
சோலையம்மாள் திரும்பிப் பார்த்தாள்.. அறை வாசலில் மெல்லிய நைட்டி அணிந்து மேனகா நின்றிருந்தாள்.. சோலையம்மாளின் முகம் சுருங்கியது..
“பாரும்மா.. இது பட்டணமில்லை.. கிராமம் இங்கே இப்படி கவுனை போட்டுக்கிட்டு ஆம்பளைங்க முன்னாடி நடமாடக்கூடாது..”
“ஓஹ்.. ஆன்ட்டி.. இது நைட் டிரஸ்..”
“இருக்கட்டும்மா.. இதைப் போட்டுக்கிட்டால் தூங்க வேண்டியதுதானே..? ஏன் அந்நிய ஆம்பளைக இருக்கிற ரூமுக்குள் வரணும்னு நினைக்கிற..?”
“ஆன்ட்டி.. இது என் நந்தகுமாரோட ரூம்.. நான் அவரை தேர்ட் பெர்ஸனா நினைக்கவே இல்லை..”
“ஆனா.. அவன் உன்னை மூணாம் மனுசியாத்தானே நினைக்கிறான்…” என்ற சோலையம்மாள் மகனின் அறைக்கதவைத் தட்ட அது லேசாகத் திறந்தது உள்ளே போய் மேனகாவைப் பார்த்துக் கொண்டே கதவைத் தாழிட்டாள்..
“என்னம்மா முகம் கோபமாக இருக்கு..” என்று கேட்ட மகனிடம்,
“காலம் கலிகாலமா போச்சுடா தம்பி.. ஆம்பளைக கிட்டயிருந்து பொண்ணுகளைத்தான் காப்பாத்த ரூமில் போட்டு அடைப்போம், உன் கதை தலைகீழாக இருக்கு..” என்றாள்..
வெளியே நின்றிருந்த மேனகாவின் காதுகளில் இந்த வார்த்தைகள் அட்சரம் பிசகாமல் அப்படியே விழுந்தன.. மேனகாவின் முகம் அவமானத்தில் சிறுத்தது.. பழைய மேனகாவாக இருந்தால் இப்படி ஓர் பட்டிக்காட்டு வீட்டில் காலடிகூட எடுத்து வைத்திருக்க மாட்டாள்.. இந்த மேனகா நந்தகுமாரனை ஜெயிக்க சபதம் போட்டு வந்தவளாயிற்றே.. பல்லைக் கடித்துக் கொண்டு மாடி வராண்டாவில் நடை பயின்று கொண்டிருந்தாள்.. சாப்பிட்டு முடித்தவுடன் சோலையம்மாள் பாத்திரங்களுடன் வெளியேற, நந்தகுமாரன் மேனகா தூங்கியிருப்பாள் என்று நினைத்தவனாய் மாடி வராண்டா பக்கம் வந்தான்.. இரவு நேரக் காற்று ஜிலுஜிலுவென்று வீச கைப்பிடிச் சுவரில் சாய்ந்தவன்,
“கிளைமேட் நல்லாயிருக்கு இல்லையா மிஸ்டர் நந்தகுமாரன்..” என்ற குரல் கேட்டு தூக்கி வாரிப்போட திரும்பிப் பார்த்தான்.. மேனகா நின்றிருந்தாள்..
“யு ஸீ.. மிஸ்டர் நந்தகுமாரன்.. இது உங்கள் வீடு.. நான் கெஸ்ட்.. என்னிடம் பயந்து கொண்டு இவ்வளவு ஸில்லியாக பிஹேவ் பண்ண வேண்டுமா..?”
நந்தகுமாரன் யோசித்தான்.. இந்தப் பெண்ணின் கேள்வி உண்மையானது தானே..
“ஐ நோ மிஸ் மேனகா.. பட் வாட் கேன் ஐ டு..? எனக்கு உங்கள் மேல் ஈடுபாடு இல்லை என்று சொன்ன பின்னாலும்.. ஐ ஆம் ஸாரி டு ஸே திஸ்.. நீங்கள் என்னைத் துரத்திக் கொண்டு வருவது போல் இருக்கிறது.. எனக்கு இது பிடிக்கவில்லை..”
“ஏனென்றால் நம் தமிழ் கல்ச்சர் பிரகாரம் ஒரு ஆண் தான் பெண்ணை விரும்ப வேண்டும்.. அவள் மறுத்தால் துரத்தித் துரத்தி காதலிக்க வேண்டும்.. நம் தமிழ் சினிமாவில் எல்லாம் இப்படித்தானே காட்டுகிறார்கள்.. அதே ஒரு ஏழை கறுப்பு நிறமுடைய பெண் பணக்கார சிவந்த நிற ஆணை துரத்தித் துரத்தி காதலிப்பது போல் எந்த சினிமாவிலாவது எடுக்கிறார்களா..? இல்லையே.. நீங்கள் வித்தியாசமானவர் என்று நினைத்தேன்.. இல்லை போல் இருக்கிறது..”
நந்தகுமாரன் கையைக் கட்டிக் கொண்டு அவன் பேசுவதை ரசித்தான்..
“மேனகா.. உங்களிடம் ஒன்று சொல்லவா..?”
“சொல்லுங்கள்..”
“இந்தக் காதல், கல்யாணம் இதை நீங்கள் விட்டு விட்டால் எனக்கு ஒரு நல்ல தோழியாக இருப்பீர்களோ என்று தோன்றுகிறது.”
மேனகா புன்னகைத்தாள்..
“அது என் பாடு.. நீங்கள் என்னைக் காதலியாக நினைக்கும் வரை தோழியாக நினைக்கலாமே..”
“தாராளமாய்.. ஆனால் நட்பு என்ற எல்லைக் கோட்டை நீங்கள் தாண்டக்கூடாது..”
“நீங்கள் தாண்டாதவரை நான் தாண்ட மாட்டேன்..”
“நிச்சயம் நான் தாண்ட மாட்டேன்..”
“அது எப்படி அவ்வளவு நிச்சயமாய் சொல்கிறீர்கள்..? நட்பிற்கும் காதலுக்கும் இடையே ஒரு நூல் அளவுதான் கோடு உள்ளது.”
நந்தகுமாரன் நிதானமாய் அவளைப் பார்த்தான்..
“அந்தக் கோட்டைத் தாண்டி ஏற்கெனவே என் மனதில் ஒரு பெண் உட்கார்ந்து விட்டாள்..” உண்மையை உடைத்தால் அவள் திரும்பிப் போய் விடுவாள் என்ற எண்ணத்தில் நந்தகுமாரன் இதைக் கூறினான்.
“நினைத்தேன்.. யார் அவள்..?”
“அதைக் காலம் வரும்போது சொல்கிறேன்..”
மேனகா யோசனையுடன் வரண்டாவில் நடந்தாள்.. பின் நின்றாள்..
“மிஸ்டர் நந்தகுமாரன்.. நீங்கள் காதலிப்பவர்.. உங்கள் காதல் எவ்வளவு உண்மையானதோ அது போல் உங்கள் மேல் நான் வைத்திருக்கும் காதலும் உண்மையானது.. நான் உங்களை வற்புறுத்த மாட்டேன்.. ஆனால் உங்கள் கல்யாணம் முடியும் வரை திரும்பிப் போக மாட்டேன்.. ஐ மீன்.. ஒன்று நீங்கள் உங்கள் காதலியை மணக்க வேண்டும்.. இல்லாவிட்டால் என்னை மணம் செய்ய வேண்டும்..”
“மேனகா.. எங்களுக்குச் சில பிரச்னைகள் இருக்கின்றன.. அவள் வீட்டில் இன்னும் சொல்லவில்லை.. அவள் சொல்லாமல் நான் என் வீட்டில் சொல்ல முடியாது..”
“ஏன் அவள் வீட்டில் சொல்வதில் என்ன தடை..?”
“அவள் குடும்பத்தில் ஜாதி விட்டு ஜாதி கல்யாணம் பண்ணிக் கொடுக்க மாட்டார்கள்..”
“ஓ..! இதோ பாருங்கள் நந்தகுமாரன்.. ம்ம்.. உங்கள் பெயரை முழுவதும் நீட்டிச் சொல்வது ஒரு மாதிரி இருக்கிறது.. உங்கள் பெயரைச் சுருக்கி கூப்பிடவா..?”
இப்போது நந்தகுமாரன் புன்னகைத்தான்..
“என் அம்மா என்னை நந்து என்று கூப்பிடுவார்கள்..”
“அப்படியானால் நான் குமார் என்று கூப்பிடுகிறேன்.. உங்கள் அம்மாவை எனக்குப் பிடிக்கவில்லை..”
நந்தகுமாரன் புருவம் சுருங்கினான்.. தாயைப் பிடிக்க வில்லையென்று தன்னிடமே சொல்ல இவளுக்கு எவ்வளவு தைரியம் என்ற கோபம் கிளம்பும் அதே நேரத்தில் அவளது வெளிப்படையான சுபாவம் அவனைக்கவர்ந்தது..?
“ஏன்..?”
“ஏன்னா அவங்களுக்கு என்னைப் பிடிக்கலை.. தட்ஸ் ஆல்..”
நந்தகுமாரன் இன்னும் வியந்தான்..
“அது எப்படி உங்களுக்குத் தெரியும்..?”
“தெரியும்.. அது பெண்களுக்கான பிரத்யேக உள்ளுணர்வு.. இப்போ அது இல்லை விசயம்.. குமார்.. உங்கள் காதலில் பிரச்னைகள் இருந்தால் அது உங்கள் கவலை.. என் கவலையல்ல.. என் கவலை உங்களை மணப்பது எப்படி என்பது தான்.. ஸோ.. உங்கள் கல்யாணம் முடிய ஒரு மாதமோ, ஒரு வருடமோ, இல்லை இந்த ஜென்மம் முழுவதுமோ ஆனாலும் நான் அசர மாட்டேன்.. இந்த வீட்டை விட்டு நகர மாட்டேன்.. என்னைப் ‘போ’ என்று உங்கள் அப்பா ஒரு போதும் என்னைக் கிளம்பச் சொல்ல மாட்டார்.. ஒரு வகையில் நீங்கள் எனக்குத் தேங்க்ஸ் சொல்ல வேண்டும்..”
“எதற்கு..?”
“நான் உங்களது மெத்தனமான காதலுக்கு ஓர் உந்து சக்தியாக இருக்கப் போகிறேன் இல்லையா..? அதற்காக..”
“மேனகா காதல் ஒருவர் மேல் ஓர் முறை தான் வரும்..”
“ஆனால் முதல் முறை வருவதுதான் உண்மையான காதல் என்று எப்படிச் சொல்ல முடியும்.. மறுமுறை வருவதுகூட.. ஐ மீன் என் மேல் ஏற்படப் போவது கூட உண்மையான காதலாக இருக்கலாம் இல்லையா..?”
“உங்களிடம் வாய் கொடுக்காமல் இருப்பது நல்லது மேனகா.. குட்நைட்..”
“வெயிட்.. வெயிட்.. நாளைக்கு எனக்கு உச்சிப் பிள்ளையார் கோவிலுக்குப் போகனுமே..”
“போய் வாருங்களேன்..”
“பிரெண்ட்னு சொல்லி விட்டு நழுவினால் எப்படி..? நீங்கள் தானே எனக்கு ஊரைச் சுற்றிக் காட்ட வேண்டும்..”
“நானா..? அது சரிவராது மேனகா..”
“ஏன்.. பயமா..? என்மேல் காதல் வந்து விடும்ன்னு பயமா..?”
“நெவர்.. என் காதல் பலவீனமானது அல்ல..”
“அப்படியானால் என்னுடன் வாருங்கள்..”
“சரி வருகிறேன்.. ஆனால் ஆபிஸ் முடிந்துதான் வருவேன்..”
“நோ பிராப்ளம்.. நான் உங்கள் ஆபிஸில் வந்து ஜாயின் பண்ணிக் கொள்கிறேன்..”
“எப்படி வருவீர்கள்..?”
“காரில் வருவேன்..”
மேனகா அவள் அறைக்குள் மறைந்து விட நந்தகுமாரன் சிந்தித்தான்.. பின் ஒரு முடிவோடு தோளைக் குலுக்கிக் கொண்டான்.
மறுநாள் அலுவலகத்தில் மைதிலியின் பார்வையை எதிர்கொள்ளும் போது அவள் முகத்திலிருந்த சோர்வு உறுத்தியது.. அன்றைய வேலை முடிந்து மாலை மேனகா வருவதாகச் சொன்னாளே என்று அவன் நினைத்துக் கொண்ட அதே நேரத்தில் அவனது அலுவலக வாசலில் அவளது கார் வந்து நின்றது.
காரை விட்டு இறங்கியவள் டக்டக்கென்று தன் ஹை ஹீல்ஸ் சப்திக்க நடந்து வந்து டேவிட்டிடம் நின்று..
“மிஸ்டர் நந்தகுமாரனைப் பார்க்கணுமே..” என்றாள்.
அந்த அழகிய அல்ட்ரா மாடர்ன் யுவதியை மேலும் கீழும் பார்த்த டேவிட்டிற்கு மூச்சுத் திணறியது.. அவளுடன் பேச்சை வளர்க்க விரும்பி,
“அதற்கு நீங்கள் யார்ன்னு சொல்லணுமே..” என்றான்..
“ஐ ஆம் மேனகா..” என்று அவள் கூறியதும் டேவிட்டின் அருகிலிருந்த மைதிலி சடக்கென்று நிமிர்ந்து பார்த்ததை மேனகா பதிவு செய்து கொண்டாள்.. அதே நேரம் நந்தகுமாரன் அறைக் கதவைத் திறந்து கொண்டு வர,
“ஹாய் குமார்.. உச்சிப் பிள்ளையார் கோவிலுக்கு கூட்டிப் போகிறேன்னு சொல்லிட்டு இன்னும் கிளம்பாம இருக்கீங்களே.. கமான்..” என்றாள்.. அவள் மனம் ஓர் கணக்கிட்டது.. அவளது பெயரைக் கேட்டதும் நிமிர்ந்து பார்த்த அந்தப் பெண் நந்தகுமாரனது காதலியாக இருந்தால் நிச்சயம் கோவிலுக்குப் பின் தொடர்ந்து வருவாள்.. அவள் யாரென்று அறிந்து கொள்ள அது முதல் படி..
“இதோ வந்து விட்டேன்..” என்ற நந்தகுமாரனின் கையிலிருந்த அவனது டி.வி.எஸ் அப்பாச்சி வண்டியின் சாவியை சுவாதீனமாக பிடுங்கிக் கொண்டவள்,
“உங்கள் வண்டியை என் கார் டிரைவர் வீட்டுக்கு ஓட்டிப் போய் விடுவார்.. நாம் என் காரில் போகலாம்..” என்று கூறினாள்..
நந்தகுமாரன் ‘உன் இஷ்டம்’ என்பது போல் தோள் குலுக்கி கை விரித்தான்.. இருவரும் இணைந்து சென்று மறைந்தார்கள்.. அவர்கள் கண் பார்வையிலிருந்து மறையவும் டேவிட் பாத்திமாவைப் பார்த்து,
“இதுதான் காத்திருந்தவள் காதலனை நேற்று வந்தவள் தள்ளிக் கொண்டு போவது என்பது..” என்றான்.
பாத்திமா மைதிலியின் முகம் பார்க்க அவள் கிளம்பினாள்..
“இரு மைதிலி நானும் வருகிறேன்..” என்று பாத்திமா கூற,
“எங்கே உச்சிப் பிள்ளையார் கோவிலுக்குப் போகப் போகிறீர்களா…? என்ன பார்க்கிறீர்கள்..? மைதிலி வீட்டுக்குப் போகப் போவதில்லை.. நம்ம நந்தகுமாரன் எங்கே போயிருக்கிறாரோ அங்கே போகப் போகிறாங்க.. என்ன மைதிலி நான் சொல்வது சரிதானே.. நீங்க மசூதிக்குப் போய் தொழுகை பண்ணுங்க.. நானும் சர்ச்சுக்குப் போய் பிரேயர் பண்ணுகிறேன்.. அப்படியாவது மைதிலியின் காதல் இந்த மேனகா சுனாமியிலிருந்து தப்பிக்கிறதா என்று பார்க்கலாம்..” என்று கூறினான் டேவிட்.
மைதிலி பதில் சொல்லாமல் அங்கிருந்து விரைந்தாள்.. ஓர் ஆட்டோ பிடித்து உச்சிப் பிள்ளையார் கோவிலை அடைந்தவள் கோவில் சுற்றுப் பிரகாரத்தில் முன்னே சென்று கொண்டிருந்த நந்தகுமாரனையும், மேனகாவையும் பார்த்து விட்டு மெல்லப் பின் தொடர்ந்தாள்.. அதுவரை அவள் வருகையை எதிர்பார்த்திருந்த அந்த இருவரின் மனமும் தனித்தனியே துள்ளியது.. மேனகா மைதிலியை இனம் கண்டு கொண்டாள்.. நந்தகுமாரன் அவள் மனதின் பயத்தைக் கண்டு கொண்டான்.. மெல்ல அவனது கை விரல்கள் மேனகாவின் கைவிரல்களுடன் பின்னிப் பிணைந்தன.. பின் தொடர்ந்த மைதிலி வெப்பமானாள்.. மனம் கொதித்து உடைந்தாள்..
‘அவளது நந்தகுமாரனா அவள் மனத்தை துடிக்க வைப்பது..?’ என்று மைதிலியின் உள்ளம் அவளைக் கேள்வி கேட்டது.
Reviews — Kadalin Pon Vethiyle / காதலின் பொன் வீதியிலே
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.