Chapter 23

0Shares

காலையில் கண்விழித்ததும் தன்மேல் கிடந்த நந்தகுமாரனின் கரத்தைக் கண்டு நேற்றைய நினைவில் கன்னம் சிவந்தாள் மைதிலி.. மெதுவாய் அவன் கரம் விலக்கி எழுந்தவள் குளித்து விட எண்ணும்போது கதவு தட்டப்பட திறந்தாள்.. சோலையம்மாள் ஒரு தட்டில் காபி தம்ளர்களுடன் நின்றிருந்தாள்.. மருமகளைப் பார்த்து அவள் புன்னகை செய்ய மைதிலிக்கோ வெட்கம் பிடுங்கித் தின்றது.. சோலையம்மாள் அதைக் கவனியாதது போல்..

“காபி குடிச்சிட்டு, குளிச்சிட்டு நந்துவும் நீயும் கீழே வாங்கம்மா.. ராத்திரியும் சாப்பிடலை.. நான் கூப்பிட வந்து பார்த்தேன்.. தூங்கிக்கிட்டு இருந்தாப்புல இருந்தது.. சரி தூங்கட்டும்ன்னு போயிட்டேன்.. பசிக்குமில்ல,” என்றாள் படு இங்கிதமாக..

மைதிலி தயக்கத்துடன், “அத்தை.. எனக்கு மாற்றுச் சேலை..” என்று இழுக்க..  “அடடா.. அதை அந்த மடையன் சொல்லவில்லையா..? பீரோவில் இரண்டு அடுக்கு நிறைய உனக்கு புடவை வாங்கி அடுக்கி வைத்து விட்டோம்மா.. நாங்களே ஏதோ அளவு சொல்லி ஜாக்கெட்டும் தைத்துவிட்டோம்.. முன்னே பின்னே இருந்தால் டெய்லர்கிட்டே சொல்லி சரி பண்ணிக்கலாம்.. மத்த துணிகளும் இருக்கு.. வேற வேணுமின்னா நந்தகூட டவுனுக்கு போய் வாங்கிக்க என்ன..” என்று அர்த்தத்துடன் சிரித்த சோலையம்மாள் சென்றுவிட்டாள்..

முரட்டுக் குழந்தை போல் தூங்கும் கணவனைப் பார்த்து, “போடா படவா,” என்று செல்லமாகத் திட்டிக் கொண்ட மைதிலி அவனை எழுப்பினாள்.. விழித்தவன் அவளை விழியால் அருகே அழைக்க,

“உதைவிழும்.. ராஸ்கல்.. காபி குடியுங்கள்.. நான் குளிக்கப் போக வேண்டும்..” என்றவாறு அவன் கையில் காபிப் கோப்பையை திணித்தாள்.. அவன் அவளைப் பிடிக்க முயல அவன் கைக்கு அகப்படாமல் தப்பித்து குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.. குளித்து முடித்து தலையை காய வைத்துப் பின்னலிட்டுக் கொண்டு இருந்தபோது நந்தகுமாரன் பின்னால் வந்து அவளை இறுக அணைத்து கூந்தலை முகர்ந்தான்..

“என்ன வாசனை பிடிக்கிறீர்கள்..?”

“இல்லை உன் கூந்தல் வாசம் இயற்கையானதா இல்லை செயற்கை ஆனதா என்று ஆராய்ச்சி செய்யத் தான் வாசனை பிடிக்கிறேன்..”

“அதெல்லாம் பழைய டயலாக் வில்லன் சார்..”

“வில்லனா.. உன் ஹீரோடி நான்..”

“எந்த ஹீரோ துப்பாக்கி முனையில் பெண்ணைக் கடத்தித் தாலி கட்டுகிறான்..?”

“இந்த ஹீரோ எதுவும் செய்வான்.. அவனது மைதிலிக்காக..”

“போதுமே.. விடுங்கள்.. அத்தை வேறு வந்து நேற்று ராத்திரி சாப்பிடக் கூப்பிட வந்தேன்.. நீங்க தூங்கிட்டதால் கூப்பிடமா போயிட்டேங்கிறாங்க.. எனக்கு வெட்கமா போயிருச்சு.. நேத்து நாம் தூங்கினோமாக்கும்..?”

“அது அவங்களுக்கும் தெரியும்.. இப்ப நீ வா..”

அவன் கரங்கள் எல்லை மீற அவள் விலகினாள்..

“ஏண்டி.. இரண்டு வருடம் காதலித்து.. நேற்றுத்தான் தாலி கட்டியிருக்கிறேன்.. என்னவோ அறுபது வருடம் ஆனதுபோல் அலுத்துக் கொள்கிறாயே..”

“அதானல்தான் நேற்று இரவு எனக்கு எல்லாமும் மறந்துவிட்டது..”

“இப்போது எது நினைவு வந்திருக்கிறது..? உன் வீடா..? இல்லை அந்த வினய்யா..?” அவன் கோபமாகத்தான் கேட்டான்.. ஆனால் அவள் “ஆமாம்” என்று ஒத்துக்கொண்டாள்.. அவன் சினத்தின் உச்சியில் மலையேறினான்..

“உன் வீட்டை நினைத்தேன்னு சொல்லு கேட்டுக் கிறேன்.. அந்த வினய்யை நினைத்தேன்னு சொன்னால் என்னடி அர்த்தம்..?”

“என் மனசாட்சி என்னை உறுத்துகிறது நந்து..” அவள் விழிகளில் நீர் மல்கியது.. அவன் புரியாமல் காரணம் கேட்டான்..

“என்னைப் பெற்றவர்களையும் கூடப்பிறந்த அண்ணைனையும் நான் ஏமாற்றி விட்டேன்.. எனக்கு அவர்கள் ஆசிர்வாதம் கூட வேண்டாம்.. மன்னிப்பு வேண்டும்.. அப்புறம் அந்த வினய்.. மேனகா ஆடிய ஆட்டத்தில் அவர் கௌரவம் பலியாகலாமா அதற்குப் பிராயச்சித்தம் இல்லையா..?”

நந்தகுமாரன் யோசித்தான்.. அவளது துயரம் புரிந்தது.. ஆதரவாய் அவளை அணைத்துக் கொண்டு முதுகில் தட்டிக் கொடுத்தான்..

“உன் வீட்டாரிடம் மன்னிப்புக் கேட்பதில் எனக்குத் தயக்கமில்லை மைதிலி.. அது நான் செய்ய வேண்டிய செயல் கூட.. ஆனால் வினய்க்கு எப்படிப் பரிகாரம் செய்வது..?”

“அதற்கு என்னிடம் ஒரு வழியிருக்கு..” மைதிலி கூறினாள்.. நந்தகுமாரன் வியப்புடன் மனைவியைப் பார்த்தான்..

“ஐ அப்ரிசியேட் யு.. சரியான யோசனை சொல்லியிருக்கிறாய்.. நான் நம் கல்யாணத்திற்காக ஒரு மாதம் லீவு போட்டிருக்கிறேன்.. நீயும் லீவில்தான் இருக்கிறாய்.. நம் விடுமுறையை பயன்படுத்திக் கொள்ளலாம்..”

இருவரும் கீழே சென்றனர்.. சோலையம்மாள் பூஜை அறைக்கு அவர்கள் இருவரையும் அழைத்துச் சென்று மைதிலியை விளக்கேற்றச் சொன்னாள்.. அதன்பின் இருவருக்கும் திருநீறு, குங்குமம் பூசிவிட்டு சாப்பிட அழைத்து வந்தாள்.. துரைசிங்கம் மீசையை முறுக்கிக் கொண்டு அமர்ந்திருந்தார்.. மைதிலி சாப்பிட உட்காராமல் பரிமாற ஆரம்பித்தாள்.. சோலையம்மாள் பூரித்துப் போனாள்..

“என்ன மருமகளே.. இப்படி வேலை செஞ்சுதான் என் பொண்டாட்டியை வசியம் பண்ணினாயா..?” என்று துரைசிங்கம் கேலி செய்ய,

“அதற்கு முன்னாலேயே உங்க மகன் என் மருமகளை வசியம் செய்து விட்டானே.. அதற்கு என்ன சொல்லு கிறீர்கள்,” என்று சோலையம்மாள் பதில் கொடுத்தாள்..

“அப்புறம் நாம ஏண்டா தனி ஆவர்த்தனம் வாசிக்கணும்.. நாமளும் கூட்டணி போட்டுவிடலாம்..” என்று அவர் கடகடவென்று சிரித்தார்..

“சந்தடி சாக்கில் தாய்க்கும், மகனுக்கும் நடுவில் புகுந்து கொள்கிறார் பாரு..”

“சரிசரி.. நீயும் புருசன், பெண்டாட்டிக்குள் புகுந்து கொள்ளாமல் அவர்களை தனியாய் விடு.. நீயும், நானும் கூட்டணி, மகனும் மருமகளும் கூட்டணி.. சரியா..?” எல்லோரும் சிரிக்க நந்தகுமாரன் திடீரென்று நினைவு வந்தவனாய்,

“மேனகா எங்கேப்பா.. கண்ணலேயே படவில்லை..” என்றான்..

“அவ நேற்று ராத்திரியே புறப்பட்டுப் போயிட்டாள்ல புயல் மாதிரி வந்தாள்.. அவள் சாமானையெல்லாம் தூக்கி காரில் போட்டா.. அவளோட டிரைவரைக் கூப்பிட்டா.. போயிட்டு வரேன்னு சொல்லிக்கக் கூட இல்லை.. போய் விட்டாள்டா..”

“அதுக்கு நீங்க ஏம்மா வருத்தப்படுறீங்க.. நல்லவர்க்கு அழகு சொல்லாமல் போவது.. விடுங்க..”

காலையில் சாப்பாடு முடிந்ததும் திருச்சி வரை போய் வருவதாகக் கூறிவிட்டு நந்தகுமாரனின் காரில் இருவரும் திருச்சி சென்றனர்.. மைதிலியின் வீட்டின் முன் காரை நிறுத்தி அவர்கள் இறங்க தெருவில் பக்கத்து வீடுகளில் இருந்தவர்கள் கூடி வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர். மைதிலி நந்தகுமாரனின் கையை பயத்துடன் பிடித்துக் கொண்டாள்.. அவள் விரல்களை ஆதரவாய் அழுத்திப் பிடித்தவன்,

“பயப்படாமல் வா.. நான் இருக்கிறேன்..” என்று தைரியம் கூறினான்..

உள்ளே சென்றவர்களை யாரும் வரவேற்கவில்லை.. விசாலாட்சி மட்டும் நந்தகுமாரனை ‘இவர்தான் என் மாப்பிள்ளையா’ என்பது போல் பார்த்துக் கொண்டாள்..

“வணக்கம் மாமா.. நான்தான் உங்க மாப்பிள்ளை..”

“நல்லா இருக்கு.. ரொம்ப நல்லா இருக்கு.. பொண்ணைக் கடத்திட்டுப் போய் தாலிகட்டி குடும்பம் நடத்திட்டு வந்து நான்தான் உன் மாப்பிள்ளைன்னு நிற்கிறதுக்கு உனக்கு ரொம்ப தைரியம்தான்.. என் வீட்டிலயும் தப்பு இருக்கு.. அதனால்தான் பொறுமையா பேசறேன்.. இல்லை.. வைத்தீஸ்வரன் என்ன செஞ்சிருப்பான்னு எனக்கே தெரியாது..”

“மிஸ்டர் கிருஷ்ணமூர்த்தி எங்களை மன்னித்து விடுங்கள்..”

“நான் இனி மன்னித்து உங்களுக்கு ஆகப்போவ தென்ன.. என் வீட்டில் பலவீனம் இருந்தது.. நீங்கள் ஜெயித்து விட்டீர்கள்.. இனிப் பேச்சு வேண்டியதில்லை..”

“அம்மா.. என்னை ஏற்றுக் கொள்ள மாட்டீர்களா..?”

“இப்போது அழுது என்ன பிரயோசனம் மைதிலி.. எனக்கு நீ மட்டும் பெண்ணில்லை.. சாவித்திரி இருக்கிறாள்.. அவள் புகுந்த வீட்டில் எங்களுக்கு மரியாதை வேண்டும்.. படித்துப் படித்துச் சொன்னேன்..நீ கேட்க வில்லை.. இனி உனக்கு உன் கணவர்தான் தாய், தகப்பன் எல்லாமும்..” அவள் சூசகமாய் கூறிவிட்டாள்..

மதியம் வேம்பூருக்கு வந்து அழுதபோது சோலையம்மாள் கூறினாள்..

“காதலில் வெற்றி பெற்றால் காதலர்களுக்கு சந்தோசம்.. பெற்றவர்களுக்கு வருத்தம்.. பெத்தவங்க சம்மதத்தோடு நிறைவேறும் காதல் கல்யாணம் நம்ம நாட்டில் ரொம்பக் கம்மி.. பொறுமையா இருங்க.. காலம் போகப் போக எல்லாம் சரியாகும்..”

மறுநாள் காலையில் இருவரும் சென்னைக்கு கிளம்பினார்கள்..

0Shares

Reviews — Kadalin Pon Vethiyle / காதலின் பொன் வீதியிலே

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link