Chapter 02

0Shares

கொட்டுகின்ற மழை நீரில் நனைந்தபடி வந்து கொண்டிருந்த ஒரு மழை நாளில்தான் மாளவிகாவை ரமணன் சந்தித்தான்…

அன்று துறைமுகத்தில் வந்து இறங்கியிருந்த பொருள்களை எடுப்பதில் இருந்த சிரமம் தொடர்பாக சில உயரதிகாரிகளை அவன் சந்திக்க வேண்டியிருந்தது.. சந்தித்து விட்டு வெளியே வந்தவனுக்கு தலை வலிக்க ஆரம்பித்திருந்தது.. மழையோ வானத்தை கிழித்ததைப் போல கொட்டோ.. கொட்டென்று கொட்டிக் கொண்டிருந்தது.. அந்தக் கொட்டும் மழையில் தலையைப் பிடித்துக் கொண்டவன்..

“சூடா காப்பி சாப்பிட்டா தேவலை தாமஸ்.. ஏதாச்சும் ரோட்டோரமா டீக்கடை இருந்தா அங்கே வண்டியை நிறுத்து..” என்றான்..

டாடா சுமோவை ஓட்டிக் கொண்டிருந்த தாமஸ் தலையை அசைத்தான்.. காரின் முன்பக்க கண்ணாடியில் கொட்டிக் கொண்டிருந்த மழை நீர் தாரைகளை 

வைப்பர் துடைத்துக் கொண்டிருக்க.. சாலையில் ஏதேனும் டீக்கடை தென்படுகிறதா என்று அவனின் விழிகள் துழாவின..

“அந்தா இருக்கிற பஸ் ஸ்டாப்பண்ட ஒரு டீக்கடை இருக்குடா மச்சான்..” என்றான் காரின் பின்பக்க சீட்டில் அமர்ந்திருந்த குமார்..

“ஆமாண்ணே.. அங்கே ஒரு டீக்கடை தெரியுது.. ஆனா சின்னக்கடை போல இருக்கேண்ணே..” தாமஸ் தயங்கினான்..

“அவசரத்துக்கு அதெல்லாம் பாத்தா முடியுமா.. நீ அங்க வண்டியை நிறுத்து..” ரமணன் உத்தரவிட்டான்..

பஸ் ஸ்டாப்பின் அருகேயிருந்த அந்த டீஸ்டாலின் முன்னால் வண்டி நின்றது.. திபுதிபுவென்று காரின் பின் சீட்டிலிருந்து இறங்கிய ரமணனின் ஆள்கள் அவனுக்கு சூடாக காபியை வாங்குவதற்காக நான் முந்தி.. நீ முந்தி என்று ஓடினார்கள்.. ஆளேயில்லாத டீக்கடையில் அடாது மழை பெய்தாலும்.. விடாமல் டீயை ஆற்றியே தீருவேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டு.. கடமையுணர்ச்சியுடன் டீயை ஆற்றிக் கொண்டிருந்த நாயர்.. அவனைச் சுற்றி வளைத்த கூட்டத்தைக் கண்டு அரண்டு போனான்…

“ஏய்ய்.. காருக்குள்ள யாரு தெரியுமில்ல.. அண்ணன்..!” தாட்டியாக.. பயில்வானைப் போலத் தெரிந்த ஒருவன் மிரட்ட..

“எந்த அண்ணன்…?” என்று கேட்டு விட்டு முதுகில் ஒர் அடியை வாங்கினான் டீக்கடைக்காரன்..

“எங்க அண்ணனைப் பாத்தா எந்த அண்ணன்னு கேக்கிற.. ரமணா அண்ணன்னு சொன்னா.. அழுத புள்ளயும் வாய் மூடும்லே..”

திருநெல்வேலிப் பக்கத்து கிராமத்தில் பிறந்து வளர்ந்த கிருஷ்ணன் மிரட்டிய மிரட்டலில்.. வாங்கின அடியின் வலியில் அழுவதற்காக வாயைத் திறந்த டீக்கடைக்காரன் அவசரமாக வாயை மூடிக் கொண்டான்..

‘ரமணா.. என் கடைக்கு டீ சாப்பிட வந்திருக்காரா..’

அவனுக்கு ஆனந்த அதிச்சியில் கையும் ஓடவில்லை.. காலும் ஓடவில்லை.. அடுத்த ஒரு மாதத்திற்கு இந்த தலைப்புச் செய்தியை வைத்தே டீக்கடையின் வியாபாரத்தை அதிகப்படுத்தி விடலாம் என்ற உற்சாகத் தோடு அவசர கதியில் டீயைக் கலக்க ஆரம்பித்தான்..

“டேய்.. அண்ணன் டீயைக் கேட்கல.. காபி கேட்டார்..”

காருக்குள்ளே இருந்து சப்தம் வந்ததும்.. கலக்கிய டீயை அம்போவென விட்டுவிட்டு.. கணப்பொழுதில் காப்பியை கலக்கிக் கொடுத்தான் நாயர்..

“இந்தாங்கண்ணே காபி..”

கலக்கி முடித்த காபியை அவன் நீட்ட.. பல கைகள் முன்னால் நீண்டு அதைக் கைப்பற்ற முனைந்தன.. 

வெற்றி யென்னவோ கிருஷ்ணனுக்குத்தான் கிடைத்தது.. அவன் காபித் தம்ளரைக் கைப்பற்றி.. காருக்குள் அமர்ந்திருந்த ரமணனிடம் நீட்டினான்.. அதை வாங்கி உறிஞ்ச ஆரம்பித்த ரமணன் தலைவலி கொஞ்சமாக குறைவதைப் போல் உணர்ந்தான்..

“நீங்களும் சூடா டீயோ.. காபியோ குடிச்சுக்கங்க…”

அவன் அனுமதி தந்ததும்.. அதற்காகவே காத்திருந்ததைப் போல காரைவிட்டு இறங்கிய தாமஸ்.. டீக்கடையின் தாழ்வான கூரைப்பகுதிக்குள் சென்றான்..

போடுகிற ‘டீ’க்களுக்கு பணம் கிடைக்குமோ.. கிடைக்காதோ என்ற அவநம்பிக்கையுடன் அவசர கதியாக வரிசையாக டீத்தம்ளர்களை நிரப்பிக் கொண்டிருந்தான் நாயர்..

மழையின் குளிர் காற்றில் சூடான காபியைப் பருகும் சுகத்தில் அமிழ்ந்திருந்த ரமணன் அப்போதுதான் அந்தக் காட்சியைக் கண்டான்…

டீக்கடைக்கு அருகேயிருந்த பஸ் ஸ்டாப்பில் பஸ்ஸிற்காக சிலர் காத்துக் கொண்டிருந்தார்கள்… அவர்களுக்கிடையே நின்று கொண்டிருந்த அந்த அழகான இளம் யுவதி.. பஸ் ஸ்டாப்பின் கூரை மீதிருந்து கொட்டிக் கொண்டிருந்த மழை நீர் தாரைகளை உள்ளங்கைகளை விரித்துப் பிடித்து சந்தோஷித்துக் கொண்டிருந்தாள்…

மழைநீர் தாரைகளின் இடையே தெரிந்த அவளின் முகம்.. வரிசையாகக் கோர்த்த பாசிமணி மாலைகள் தொங்க விடப் பட்டிருக்க.. அவற்றின் ஊடே தெரியும் முகவடிவைப் போல அழகாக இருந்தது.. ரமணனை மீண்டும் அவளைப் பார்க்கத் தூண்டிது..

ரமணன்.. அவளையே பார்த்தான்.. மழை நீரைக் கைகளில் ஏந்தும் போது உணரும் மழையின் குளிர்ச்சியை அவளின் முகத்தில் தெரிந்த உணர்வலைகள் பிரதிபலித்துக் கொண்டிருந்தன.. மழை நீரைப் பிடிப்பதும்.. அது கைகளில் நிரம்பி வழிந்ததும் கைகளை இழுத்துக் கொண்டு.. உள்ளங்கைகளை கன்னத்தில் வைத்து அந்த மழைநீரின் ஜில்லிப்பை உணர்ந்து அனுபவித்து கண்களை மூடுவதுமாக இருந்தாள் அந்தப் பெண்…

அங்கேயிருந்த மற்றவர்கள் மழை நீர் மேலே பட்டு விடாமலிருக்கும் பொருட்டு.. ஒதுங்கி நின்றிருந்தார்கள்.. மழைக்காற்றின் குளிரிலிருந்து தங்களைக் காத்துக் கொள்வதற்காக.. சுடிதாரின் துப்பட்டாவையோ.. சேலையின் முந்தானையையோ.. துண்டையோ கொண்டு மேலே போர்த்திக் கொண்டிருந்தார்கள்..

அப்படி எதையும் செய்யாதவளாய்.. அப்படிச் செய்து கொண்டிருப்பவர்களை கண்டு கொள்ளாதவளாய்.. மழை நீரில் கை நனைத்து சந்தோஷித்த அந்தப் பெண் அவனுக்கு புதியவளாக தோற்றமளித்தாள்..

குழந்தையைப் போன்ற அவளின் குதூகலத்தை மற்றவர்கள் கவனித்துக் கொண்டிருப்பார்களோ என்ற என்னமோ.. தயக்கமோ அவளிடத்தில் கொஞ்சம் கூட இல்லை.. தனக்குத் தானே சிருஷ்டித்துக் கொண்ட ஒரு மாய உலகில் பிரவேசித்தவளாக அவள் இருந்தாள்..

 அவளின் அந்தத் தன்மை ரமணனை வசீகரித்து விட்டது…

எதனால் அவளிடம் விழுந்தான் என்று இன்றுவரை மிகச் சரியாக அனுமானித்துக் கணித்துச் சொல்ல ரமணனால் முடியவில்லை..

அவளை முதன் முதலில் சந்தித்த பொழுது மழை பொழியும் குளிர்ச்சி நிறைந்த பொழுதானதாக இருந்ததாலா..? இல்லை.. கொட்டும் மழைநீரில்.. தூசும்.. குப்பையும் இன்றி.. துடைத்து கழுவி விட்டதைப் போலச் சாலையும்.. சுற்றுப்புறமும் சுத்தமாக இருந்த சுகந்தமான தருணத்தில் அவன் அவளைப் பார்த்ததாலா..? இல்லை.. எப்பொழுதும் சண்டை.. சச்சரவு.. பிரச்னை.. தீர்வு என்று.. பொழுது விடிந்து பொழுது போகும்வரை.. போராடிக் கொண்டு.. போர்க்களமே வாழ்க்கையாக வாழ்பனின் முன்னால்.. மழையை ரசித்து வாழும் வாழ்க்கையை அவள் மேற்கொண்டிருந்ததாலா..?

எது.. அது.. என அறுதியிட்டுச் சொல்ல ரமணனால் முடியவில்லை.. அந்த நொடியிலிருந்து அவன் அவளைக் காதலிக்க ஆரம்பித்து விட்டான்.. அது மட்டும்தான் அவனுக்குத் தெரிந்திருந்தது..

டீயைக் குடித்து விட்டுக் கிளம்பியவர்கள் ரூபாய் நோட்டுக்களை எடுத்து நீட்டியதில் டீக்கடை நாயர் மயக்கம் போடப் போனான்.. ரௌடிகள் டீக்குடிக்க வந்து விட்டு.. பணத்தை எடுத்து நீட்டுவதை அப்போதுதான் அவன் பார்க்கிறான்…

எதற்கும் இருக்கட்டுமென்று.. முன்ஜாக்கிரதை முத்தண்ணாவாக…

“வேணாங்க..” என்று மறுத்தான் அவன்..

“யோவ்.. ஓங்கி ஒரு போடு போட்டேன்னு வைய்யி.. உன் வாயி வெத்தல பாக்கை போட்டுக்கும்.. யாருக்கு ஓசி டீயைக் கொடுக்கப் பார்க்கிற..? ரமணா அண்ணனோட ஆளுகளுக்கா.. அண்ணனுக்குத் தெரிஞ்சதுன்னு வைய்யி.. உன் கடையும் கந்தலு.. நீயும் கந்தலு.. எப்படி வசதி..?” தாமஸ் உறுமினான்..

கந்தலாவதுதான் வசதி என்று சொல்ல டீக்கடை நாயருக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது..? அவன் அவசரமாக இருகைகளையும் நீட்டி பணத்தை வாங்கிக் கொண்டான்..

“மீதிச் சில்லறைங்க..” நாயர் கேட்டான்..

கேட்டவனை தாமஸ் முறைத்த முறைப்பில்.. டீக்கடைக்குள் பதுங்கியே விட்டான்..

“யாருக்கு சில்லறை கொடுக்கப் பாக்கிற..?”

தாமஸ் டீக்கடைக்குள் பாயப் போக.. அவனை தடுத்தாட் கொண்டான் கிருஷ்ணன்..

“விடுல்லே.. அவன் தெரியாம கேட்டுட்டான்.. அவனுக்கு என்னலே தெரியும்.. நம்ம அண்ணனோட மகிமையைப் பத்தி.. நீ வாலே..”

காருக்குள் ஏறியவர்கள் ரமணனின் தோற்றத்தைக் கண்டு திகைத்து விட்டார்கள்…

0Shares

Reviews — Kaithotta Kalvane / கைத்தொட்ட கள்வனே

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link