Chapter 03

0Shares

அதுவரை ரமணனை அவர்கள் அப்படிப்பட்ட மென்மையான முகபாவனையுடன் பார்த்ததில்லை..

எப்போதும் கடுமையான முகத்துடன்.. புருவங்களைச் சுளித்தபடி.. எதிராளியைத் துளைக்கும் கூர்மையான பார்வையுடன் இருப்பவனின் முகம் முற்றிலுமாக மாறியிருந்தது..

அவன் முகத்தில் பனியின் குளுமையிருந்ததை ஆச்சரியத்துடன் அவனுடைய ஆள்கள் உணர்ந்தார்கள்.. முன்பு எப்போதும் இல்லாதபடி அவன் முகத்தில் விரவிக் கிடந்த மென்மையில் அவர்கள் அதிசயித்துப் போனார்கள்..

“என்னலே.. அண்ணனின் முகத்தில் பல்பு எரியுது..” கிருஷ்ணன் கிசுகிசுத்தான்…

“ஆமான்டா.. என்னவா இருக்கும்..?” தாமஸ் நெற்றிப் பொட்டைத் தட்டியபடி ரமணனின் பார்வை போன திக்கில் பார்த்தான்..

அவனுக்கு தூக்கிவாரிப் போட்டது.. காருக்குள்ளிருந்த மற்றவர்களைப் பார்த்தான்.. அவனின் நிலைமையில்தான் அவர்களும் இருந்தார்கள்..

‘பொண்ணுலே..’

வாய்விட்டுச் சொல்ல பயந்தவனாக மனதுக்குள்ளேயே நினைத்துக் கொண்டான் கிருஷ்ணன்..

அதுவரை ரமணன் பெண்களைத் திரும்பிப் பார்த்ததில்லை.. அந்த வகையில் மற்றவர்களிடமிருந்து முற்றிலும் வித்தியாசமானவனாக அவன் இருந்தான்…

“இதோ பார்.. நாம அன்டர் கிரௌண்டில் ஆட்டம் காட்டறவங்களா இருக்கலாம்.. அதுக்காக மனம் போனபடி ஆடக் கூடாது.. நாம வேற.. பப்ளிக் வேற.. உன்ன 

எதுக்கற எதிரியப் போட்டுத்தள்ளு.. ஆனா பப்ளிக் மேல சின்னத் தூசி கூடப் படாம பார்த்துக்க.. பசிக்கு சாப்பிட்டா பணத்தைக் கொடுத்துரு.. உனக்குச் சாப்பாட்டைக் கொடுத்தவனுக்கும் வயிறுன்னு ஒன்று இருக்கில்ல..? அவனும் சாப்பிடனுமில்ல.. 

நீ வேட்டையாட வேண்டியது மிருகங்கள.. மனுசங்கள இல்ல.. மக்கள் கூட்டத்திலே இருந்து தள்ளியே நில்லு…”

இப்படியெல்லாம் சட்டம் போட்டு வைத்திருக்கும் தாதா அவன்.. பெண்களைப் பற்றி அறிவுரை சொல்லக் கூடப் பேசமாட்டான்.. எவனாவது பேசி வைத்தால் ஒரு பார்வை பார்ப்பான்.. அதில் பற்றியெறியும் தீயில் பேசியவன் வாயை மூடிக் கொள்வான்..

அப்படிப் பெண்வாடையே படாத ரிஷியசிருங்கராக இருந்தவனா ஒரு பெண்ணை இத்தனை ஆவலுடன் பார்க்கிறான்..?

‘காரைக் கிளப்பட்டுமா..?’ என்று கேட்க பயந்தவனாக தாமஸ் பேசாமல் டிரைவர் சீட்டில் அமர்ந்து விட்டான்…

மற்றவர்களும் அவனைப் பின்பற்றியவர்களாக.. அமைதியின் சிகரமாய் காருக்குள் அடைந்தார்கள்..

நேரம் ஓடிக் கொண்டிருந்தது.. மழையும் நிற்கவில்லை.. ரமணனும் பார்வையைத் திருப்பவில்லை.. மழை நீரைக் கிழித்தவாறு ஒருபஸ் வந்து நின்றது.. மழைநீரில் கை நனைத்து.. ஆடிக் கொண்டிருந்த அந்தப் பெண் ஓடிப் போய் பஸ்ஸில் ஏறிவிட்டாள்.. பஸ் நகர்ந்து சென்றதும் காருக்குள் இருந்தவர்கள்..

‘அப்பாடி..’ என்ற நிம்மதிப் பெருமூச்சை விட்டார்கள்..

‘இனியாவது காரைக் கிளப்பலாமா..?’ எதிர் பார்ப்புடன் ரமணனின் முகத்தைப் பார்த்தான் தாமஸ்…

“அந்த பஸ்ஸை ஃபாலோ பண்ணு தாமஸ்..” ரமணன் உத்தரவிட்டான்..

தாமஸின் முகத்தில் ஈயாடவில்லை.. காருக்குள் இருந்தவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.. ரமணன் சொன்னதைச் செய்தான் தாமஸ்.. பஸ்ஸை டாடா சுமோ பின் தொடர்ந்தது.. ஒரு ஸ்டாப்பில் இறங்கினாள் மாளவிகா.. மழை விட்டிருந்தது.. லேசான தூறலில் துள்ளலுடன் நடைபோட்டு.. பக்கவாட்டில் திரும்பிய தெருவில் அவள் விரைய தாமஸ் ரமணனின் முகம் பார்த்தான்..

“இடைவெளி விட்டு ஃபாலோ பண்ணு…”

மாளவிகாவைத் தொடர்வது போல இல்லாமல் இடைவெளி விட்டு மெதுவாகப் பின் தொடர்ந்து டாடா சுமோ.. ஒரு வளைவில் திரும்பியவள் அடுத்தடுத்து இருந்த வீடுகளில் ஒன்றில் மறைந்து போக.. ரமணன் கிருஷ்ணனைப் பார்த்தான்..

“நாங்க அந்தத் தெருவில வெயிட் பண்றோம்.. நீ அந்தப் பெண்ணைப் பத்தின விவரங்களை விசாரிச்சுட்டு வா..”

எப்படி என்று கிருஷ்ணன் கேட்கவில்லை.. அவன் மட்டுமில்லை.. ரமணனின் ஆள்கள் எவருமே ரமணனின் வார்த்தைக்கு எதிர் வார்த்தை பேச மாட்டார்கள்.. ‘மலையுச்சியிலிருந்து குதி’ என்று ரமணன் சொன்னாலும்.. அடுத்த நொடியே கேள்வியே கேட்காமல் குதித்து விடுவார்கள்..

இப்போது ரமணன் ஒன்றும் மலையுச்சியிலிருந்து குதிக்கச் சொல்லவில்லையே.. கிருஷ்ணன் இறங்கிக் கொள்ள டாடா சுமோ நகர்ந்து விட்டது.. விசாரிக்கப் போன கிருஷ்ணனுக்கு.. இதற்குப் பதில் மலையுச்சியிலிருந்தே குதித்து விடலாம் என்று தோன்றியது..

எவனையாவது போட்டுத்தாக்கு என்றால் தாக்கி விடலாம்.. ஆனால் ஒரு பெண்ணைப் பற்றிய விவரங்களை கொண்டு வா என்றால்.. எப்படிக் கொண்டு வருவது..?

ஆனாலும் அவன் அதைச் செய்துதான் ஆக வேண்டும்.. அவனறிந்த ரமணன்.. பெண்களைக் கசக்கி முகரும் ரகமல்ல.. இதுவரை அவன் விசாரிக்கச் சொன்ன தெல்லாம் எதிரியின் பின்புலத்தைப் பற்றிய தகவல் களாகத்தான் இருக்கும்..

முதன் முறையாக அவன் ஒரு பெண்ணைப் பற்றி அறிய விரும்புகிறான் அவன் கேட்டு அதைச் செய்து முடிக்காவிட்டால்.. கிருஷ்ணன் பிறந்த திருநெல்வேலிச் சீமைக்குத்தான் என்ன பெருமை இருக்கப் போகிறது..? தொண்டையில் இருப்பதைக்கூடத் தோண்டியெடுத்து விடும் திருநெல்வேலிச் சீமையின் துப்புத் துலக்கும் பெருமையைக் காக்க களம் இறங்கினான் கிருஷ்ணன்..

தெருமுனை டீக்கடை எதற்காக இருக்கிறது..? இதைப் போன்ற தகவல்களை சேகரிப்பதற்காகத்தானே இருக்கிறது.. ஒரு டீயை வாங்கிக் குடித்தபடி மாளவிகா மறைந்த வீட்டையே உற்றுப் பார்த்தவன்..

“ஏண்ணே.. அது வெங்கிடாசலம் வீடுதானே..?” என்று விசாரித்தான்..

“இல்லையே.. அங்கே சிதம்பரமில்ல குடியிருக்கார்..” என்றான் பக்கத்தில் டீ குடித்துக் கொண்டிருந்தவன்..

“இல்லண்ணே.. அவர் பேரு வெங்கடாசலம்தான்.. அவரோட பொண்ணோட பேரு கூட.. லலிதான்னு இருக்குமே..” கிருஷ்ணன் போட்டு வாங்கினான்..

“ஏங்க.. நான் இத்தனை வருசமா இந்தத் தெருவில குடியிருக்கேன்.. எனக்குத் தெரியாதா.. அவர் பேரு சிதம்பரம்.. அவருக்கு ரெண்டு பொண்ணு.. ஒரு பையன்..” என்று தனது ஞாபக சக்தியை நிலை நாட்டினான்.. தானாய் வந்து மாட்டிக் கொண்ட தகவல் சொல்பவன்..

“அப்படியா சொல்றிங்க.. அவரோட மூத்த பொண்ணு காலேஜிலதான படிக்குது..? லலிதான்னுதான பெயரு..” கிருஷ்ணன் அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டான்..

அவனுக்கு இயல்பாகவே முகத்தில் அப்பாவிக் களைதான் பொங்கி வழியும்.. அந்த ஒரு காரணத்துக்-காகவே அவனை தகவலறிந்து சொல்லும் உளவுப் படையின் தளபதியாக ரமணன் வைத்திருந்தான்..

அப்பேற்பட்ட கிருஷ்ணனின் அப்பாவிக் களையில் ஏமாந்து போன அந்த ஆள்…

“நீங்க வேற.. சிதம்பரத்தோட மூத்த பொண்ணு பேரு பூமிகா.. அதுக்கு கல்யாணமாயிடுச்சு.. அடுத்த பொண்ணு மாளவிகாதான் காலேஜில படிக்குது..”, என்று சொல்லி வைத்தான்…

“அப்படிங்களா.. இப்பத்தான் தடுக்கி விழுந்தா இன்ஜினியருக்குப் படிக்கிற காலேஜாத்தானே இருக்குது..” தூண்டில் போட்டான் கிருஷ்ணன்..

“இதைத்தான் சரியாச் சொல்லியிருக்கீங்க.. அந்தப் பொண்ணு இன்ஜினியருக்குத்தான் படிக்குது..” வகையாக தூண்டிலில் சிக்கினான் அந்த தகவல் சொல்லி…

“என்னமோ போங்க.. நல்ல வேளையா நீங்க அந்த வீட்டில குடியிருக்கிறது வெங்கடாசலமில்ல.. சிதம்பரம்ன்னு சொன்னீங்க.. இல்லைன்னா நானு நேராப் போயி அந்த வீட்டுக் கதவைத் தட்டியிருப்பேன்.. ரொம்ப நன்றிங்க அண்ணே..” பாசத்துடன் தகவல் சொல்லி குடித்த டீக்கும் சேர்த்து பணத்தைக் கொடுத்து விட்டு இடத்தைக் காலி செய்தான் கிருஷ்ணன்..

“இந்தக் காலத்தில இப்படியொரு வெள்ளந்தி மனுசனப்பா..”

தகவல் சொன்னவன் டீக்கடைக்காரனிடம் வியந்து கொண்டிருந்த போது.. அந்த வெள்ளந்தி மனிதன் டாடா சுமோவில் ஏறி அமர்ந்து சேகரித்துக் கொண்டு வந்த தகவல்களை ரமணனிடம் கொட்டினான்..

“அது படிக்கிற காலேஜ் பேரு மட்டும் தெரியலைண்ணே.. அதையும் கேட்டா.. சந்தேகம் கிளம்பிரும்ன்னு கேட்காம விட்டுட்டேன்..”

“தேவையில்லை.. நாளைக்கே கண்டு பிடிச்சிரலாம்..”

சொன்னதைப் போலவே.. மறுநாள் காலையில் அவள் இறங்கிப் போன பஸ் ஸ்டாப்பில் காத்திருந்து அவள் பஸ்ஸில் ஏறியதும் பஸ்ஸை பின் தொடர்ந்து.. அவளுடைய காலேஜைக் கண்டு பிடித்து விட்டான் ரமணன்..

“கிருஷ்ணா..”

அடுத்த ஆறாவது நிமிடத்தில் மாளவிகா படித்துக் கொண்டிருந்த படிப்பின் பெயரும்.. வருடமும் ரமணனுக்கு வந்து சேர்ந்து விட்டன…

0Shares

Reviews — Kaithotta Kalvane / கைத்தொட்ட கள்வனே

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link