Chapter 05

0Shares

மாளவிகா விதியை நொந்து கொண்டாள்.. ஊருக்குள் அழகான பெண்கள் பலரிருக்க.. அவன் காதலுக்கு அவள்தான் ஆளாகியிருக்க வேண்டுமா..? மற்ற பெண்களைப் பார்த்தால் அவனுக்கு காதல் வந்து தொலைக்கவில்லையா..?

‘இல்லை’ என்றான் ரமணன்.. அவளைப் பார்த்தவுடன் அவன் மனதில் மலரும் பூ.. மற்ற யாரையும் பார்த்து மலர்ந்ததில்லை என்றான்..

‘இது என்னடா வம்பாப் போச்சு..’ மாளவிகாவிற்கு என்ன செய்வதென்று தெரியவில்லை..

“அந்த மாதிரிப் பூவெல்லாம் என் மனசில மலரலை சார்..” என்றாள்..

அவளின் அந்த இயல்பான அப்பாவித்தனத்தை அவன் வெகுவாக ரசித்தான்..

“ஐ லவ் யு மாளவிகா..”

“சார் ஃப்ளீஸ்.. யாராச்சும் பார்த்துறப் போறாங்க..”

“பார்க்கட்டுமே.. நான் தள்ளி நின்னுதானே பேசறேன்..?”

‘இது வேறயா..?’ மாளவிகாவுக்கு எரிச்சல் வந்தது..

“தப்பா நினைச்சுக்குவாங்க சார்..”

“மத்தவங்க நினைப்பைப் பத்தி எனக்கு கவலையில்லை.. உன் நினைப்பை பத்தி மட்டும்தான் எனக்குக் கவலை..”

“நான் உங்களைக் காதலிக்கலை..”

“நான் உன்னைக் காதலிக்கிறேனே..”

“எனக்கு உங்க மேல காதல் வராது சார்…”

“பொய் சொல்லாதே.. என்னைப் பார்த்த முதல் பார்வையிலேயே நான் செம ஹேண்ட்சம்மா.. ஹீரோ மாதிரி இருக்கேன்னு உன் பிரண்ட்கிட்டச் சொன்னியே.. உனக்கா என்மேல் காதல் வராது..?”

‘கடவுளே..! ஹாசினிகிட்ட நான் பேசினதை இவன் கேட்டுட்டான் போல இருக்கே..’ மாளவிகா டென்சன் ஆனாள்..

அவளது டென்சனை அவள்முகம் பிரதிபலிக்க.. அவள் முகத்தையே ஊன்றிப் பார்த்துக் கொண்டிருந்த ரமணனின் பார்வை மிருதுவானது..

“ஏன் பயப்படற மாளவிகா..? உன் காதலை நீ ஒப்புக் கொள்ளற வரைக்கும் நான் காத்திருக்கேன்..” என்றான்..

சொன்னபடி அதற்குப் பின்னால் அவளிடம் காதலைச் சொல்லி அவன் வற்புறுத்தவில்லை.. ஆனால்.. அவளைப் பின் தொடர்வதையும் அவன் நிறுத்தவில்லை..

விடாமல் அவன் பின்தொடர்ந்து கொண்டிருந்ததில் மாளவிகா சங்கடப்பட்டுப் போனாள்.. ஊரறிந்த தாதா.. அவளைப் பின் தொடர்வதை சிதம்பரம் அறிந்தால் அவள் படிப்பையே நிறுத்தி விடமாட்டாரா..?

“தயவு செய்து என்னை ஃபாலோ பண்ணாதீங்க..” கெஞ்சுதலாக ஒருநாள் அவளிடம் சொன்னான்..

அவன் என்ன நினைத்தானோ.. அவள் முகத்தையே பரிவுடன் பார்த்தான்..

“எனக்கு உன்னைப் பார்த்தாகனுமே மாலு..”

அவன் செல்லப் பெயர் சொல்லியதில் நொந்து போனாள் மாளவிகா.. அதைச் சொன்னால் அவன் கோபப் பட்டு பின் தொடர்வதை நிறுத்த மாட்டேன் என்று 

சொல்லி விட்டால் என்ன செய்வது என்ற எண்ணத்துடன் அதைக் கண்டு கொள்ளாதவளாக அவன் போக்கிலேயே தன்மையாகப் பேசினாள்…

“தினமும் என்னை நீங்க ஃபாலோ பண்ணினீங்கன்னா நாலு பேர் நாலு விதமா பேசுவாங்க சார்…”

“அப்ப நாம கல்யாணம் பண்ணிக்கலாமா..?” ஆவலுடன் அவன் கேட்டபோது..

‘அதற்குத்தானே காத்திருக்கேன்..’ என்று சொல்லத் தோன்றியது அவளுக்கு..

பொறுமையை இழுத்துப் பிடித்துக் கொண்டு.. ஏறக்குறைய அவனிடம் அவள் கெஞ்சினாள்…

“தடாலடியாய் எல்லாம் என்னால முடிவு சொல்ல முடியாது.. பட்.. என் பின்னாலேயே தினமும் வராதீங்க.. அதனால என் படிப்பே கெட்டுரும்..”

அந்த வார்த்தையைக் கேட்டவுடன் அவன் யோசனையுடன் தாடையைத் தடவினான்.. வானத்தைப் பார்த்தான்.. பூமியைப் பார்த்தான்…

ஏற்கனெவே யோசனை வந்தால் இந்த மக்கள் தாடையை ஏன் தடவுகிறார்கள் என்ற யோசனையிலிருந்த மாளவிகா அவன் வானத்தையும்.. பூமியையும் பார்த்ததும்.. ‘இது என்னத்துக்காக..’ என்ற நினைவில் மண்டை காய்ந்து போனாள்…

பூமியைப் பார்த்தவன் ஒரு முடிவுக்கு வந்தவனாக மாளவிகாவைப் பார்த்தான்.. அவன் என்ன சொல்லப் போகிறானோ என்ற பதட்டத்துடன் அவளும் அவனைப் பார்த்தாள்…

ரமணனுடைய தாடிக்கும்.. கதாநாயகனைப் போன்ற தோற்றத்திற்கும்.. அவன் வானத்தையும்.. பூமியையும் ஆராய்ச்சியாய் பார்ப்பது கூடாது என்ற கவலை அவளுக்குள் எழுந்தது.. அவள் பார்த்த ஒரு திரைப்படத்தின் கதாநாயகன் பாடி வைத்த பாடல் ஒன்று.. நேரம் கெட்ட நேரத்தில் அவளுக்கு நினைவுக்கு வந்து தொலைத்தது…

‘வானத்தைப் பார்த்தேன்..

பூமியைப் பார்த்தேன்..

மனுசனை எங்கும் காணலியே…’

அந்தப் பாடலை இவனும் பாடிவிட்டால் என்ன செய்வது என்ற கலவரம் மனதுக்குள் படபடக்க.. இமைகளை பட்டாம் பூச்சிகளைப் போல படபடக்க வைத்தபடி ரமணனை ஏறிட்டாள் மாளவிகா..

அவளின் இமைகளின் படபடப்பையும்.. அந்தப் பயந்த பார்வையையும் அவன் ரசித்துப் பார்க்கவும் அவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை…

“உன் பார்வை மானின் பார்வையைப் போல இருக்கு மாலு..” அவன் கவிதையாகப் பேசினான்..

“அது பாட்டுக்கு இருந்துட்டுப் போகட்டும் சார்.. என் ஆப்ளிகேஷனை கொஞ்சம் கன்சிடர் பண்ணுங்களேன்..” மாளவிகா கெஞ்சினாள்…

“உன் இமைகள் ரெண்டும் படபடன்னு அடிச்சிக் கிறதைப் பார்த்தா பட்டாம்பூச்சிக பறக்கறதைப் போலவே இருக்கு மாலு..” கண்கள் ஒளிர ரமணன் பேசினான்…

அவன் அதிலிருந்து வெளியே வருவதாகவே இல்லையென்று தெரிந்து போனதில்.. அதற்கு மேல் பேசி தொண்டைத் தண்ணீரையும்.. நேரத்தையும் வீணடித்துக் கொள்ள வேண்டாமென்ற எண்ணத்துடன் மாளவிகா நடக்கப் போனாள்..

“நில்…” என்றான் ரமணன்..

‘நில்லென்று சொன்னால்..

மனம் நின்றா போகும்…?’

மாளவிகாவின் மனதில்தான் உடனுக்குடன் பாடல் தோன்றித் தொலைக்குமே.. அது வழக்கப்படி மனதில் எதிரொலித்து வைத்தது..

மாளவிகா நின்றாள்.. ரமணன் அவளருகில் வந்தான்.. மென்மையான குரலில்..

“இனித் தினமும் உன்னை ஃபாலோ பண்ண மாட்டேன்..” என்று சொன்னான்..

‘அப்பாடி.. இம்சை விட்டது..’ மாளவிகா உற்சாகமான போது…

“ஆனா உனக்குத் தெரியாம.. ஏன் மத்தவங்களுக்கும் தெரியாம உன்னைப் பார்த்துக்கிட்டேதான் இருப்பேன்..” என்று குண்டைத் தூக்கிப் போட்டான் ரமணன்..

‘ஏண்டா இம்சை பண்ற..? தானிக்கு பேரு ஏமி..?’ மனதுக்குள் நொந்து.. நொந்து.. நூலாகிப் போனாள் மாளவிகா.. அது போதாது என்று..

“உன்னை நேருக்கு நேரா பார்க்கணும்னு தோணினா மட்டும் வாரத்துக்கு ஒருதரம் உன் முன்னால் வருவேன்..” என்று அடுத்த வெடி குண்டைத் தூக்கிப் போட்டான் ரமணன்..

“அது என்ன தேவைக்கு..?” மாளவிகா பொறுமையை காற்றில் பறக்க விட்டாள்..

வீட்டுக்கு ஒரு பூமிகா போதும் என்ற நினைவு அவளுக்கு..

“அப்பத்தானே என் முகம் உன் மனசில மறையாம இருக்கும்..?” அவன் நியாயம் கேட்டான்..

“அதுவும்தான் என்ன தேவைக்குண்ணேன்..?” மாளவிகா படபடத்தாள்.. 

“எனக்கு நீ தேவை..” அவன் அழுத்தமான முகத்துடன்.. அதைவிட அழுத்தமான.. உறுதியான குரலில் சொன்னபோது.. மாளவிகா உறைந்து நின்று விட்டாள்…

‘இவன் சொன்னதைச் செய்கிறவன்னு ஹாசினி சொல்லியிருக்காளே..’

அவளின் மனநிலையைப் பற்றிக் கவலைப் படாதவனாக அவன் அங்கிருந்து அகன்று விட்டான்..

பேசாமல் வீட்டில் சொல்லி விடலாமா என்று நினைத்தாள்.. சிதம்பரத்தின் கவலை படர்ந்த முகம் நினைவுக்கு வர.. அவசரமாக அந்த நினைவை அழித்தாள்..

‘ம்ஹீம்.. அப்பாவாலே என்ன செய்ய முடியும்..? இன்னும் கொஞ்சம் சேர்த்துக் கவலைப் படுவார்.. அவசரமா என் படிப்பை நிறுத்திட்டு மாப்பிள்ளை தேட ஆரம்பிப்பார்.. அதுக்கு பணமில்லாம குடியிருக்கிற இந்த வீட்டையும் விற்று வைப்பார்…’

அஸ்வினிடம் சொல்லி விடலாமா என்ற அடுத்த யோசனை வந்தது.. அவள் சொல்லலாம் என்ற நினைவில் வீட்டுக்குப் போனபோது அவன் தலையில் கட்டுடன் படுத்துக் கொண்டிருந்தான்..

“என்னடா..?” மாளவிகா பதறினாள்…

“அதை என்னைக் கேளு சொல்றேன்.. காலேஜீக்குப் போனா.. நாம உண்டு.. படிப்பு உண்டுன்னு இருக்கனும்.. அதை விட்டுட்டு கூடப் படிக்கிற பொண்ணுகளுக்கு சப்போர்ட் பண்றேன் பேர்வழின்னு ரௌடிப் பையன்ககிட்ட சண்டைக்கு போகக் கூடாது..” என்று சொல்லியபடி மதுரா கையில் காபியுடன் அறைக்குள் வந்தாள்..

மாளவிகாவிற்கு பேச நா அசையவில்லை…

0Shares

Reviews — Kaithotta Kalvane / கைத்தொட்ட கள்வனே

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link