Chapter 06

0Shares

அவள் என்ன நினைத்தாள்..? அங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது..? அஸ்வினின் அருகே அமர்ந்து விசாரித்தாள்..

அஸ்வினின் கூடப் படித்த பெண்ணை ஒருவன் பின் தொடர்ந்தானாம்.. காதலிக்கச் சொல்லி வற்புறுத்-தினானாம்.. அந்தப் பெண் தோழர்களிடம் சொல்லி அழுதிருக்கிறாள்.. நியாயம் கேட்கப் போன அஸ்வினை அந்த ஒருவன் அடித்து உதைத்து அனுப்பியிருக்கிறான்..

“நல்ல வேளை.. கையைக் காலை உடைக்கலை..” ஆறுதல் பட்டாள் மதுரா..

“அம்மா..” அஸ்வின் வெறுத்துப் போய் விட்டான்..

“பின்னே என்னடா..? உனக்கு எதுக்குடா ஊர் வம்பு..? நீயென்ன சினிமாவில வர்ற ஹீரோவா..? அது சினிமாடா.. அதிலதான் ஒல்லிப் பாச்சானெல்லாம் ஊருபட்ட ஆளுகளை அடிச்சு.. உதைச்சு.. துவைச்சு காயப் போடுவாங்க.. இது வாழ்க்கைடா.. இதிலயெல்லாம் அடங்கி ஒடுங்கி.. இருக்கிற இடம் தெரியாம இருந்தாத்தான் பிழைக்க முடியும்.. ஓங்கி ஒரு போடு போட்டிருக்கான்.. உடனே மண்டை உடைஞ்சு.. தலையில.. உன் தலையை விடப் பெரிசா கட்டுப் போட்டுக்கிட்டு வந்து படுத்திருக்கே.. தேவையாடா உனக்கு..?”

பிடி.. பிடியென்று பிடித்து விட்டு மதுரா அவளின் ஆஸ்தான இடமான சமையலறைக்குள் போய் விட.. மாளவிகா தம்பியின் கையை ஆதரவாகப் பிடித்தாள்…

“அவனுக கூட்டமா இருந்தானுகளாடா..?”

“இல்லக்கா.. அவன் தனியாத்தான் இருந்தான்.. நாங்கதான் கூட்டமா போனோம்..”

தம்பியின் பதிலில் அவள் திகைத்து விட்டாள்.. கூட்டமாக பாதுகாப்பாக போனவன் எப்படித் தலையில் அடிவாங்கினான்..?

“நான் எங்கேக்கா.. அவன்கிட்டத் தலையைக் கொடுத்தேன்..? என்கூடவே வந்த எட்டப்பன் ஒருத்தன் பிடிச்சுத் தள்ளிட்டான்க்கா.. வகையாய் மாட்டிக்கிட்டேனா.. அவன் தலையிலேயே அடிச்சுட்டான்..”

“அவனுகளுக்கெதுக்குடா உன்மேல அவ்வளவு காண்டு..?”

“அது அக்கா.. ஹி.. ஹி..” அஸ்வின் வழிந்தான்..

“என்னன்னு சொல்லித் தொலைடா..” 

“அந்த சீனியர் சைட் அடிச்ச அந்தப் பெண்ணை நானும் சைட் அடிக்கிறேன்.. என்னைப் பிடிச்சு அவன் கிட்டத் தள்ளின என்னோட கிளாஸ் மேட்டும் சைட்டடிக் கிறான்..”

“ஓ.. எதிரிக்கு எதிரி நண்பனா..? ஆமா.. அந்த சீனியர் யாருடா..?”

அஸ்வின் சொன்ன பெயரைக் கேட்டதும் மாளவிகா நொந்தே போய் விட்டாள்.. அவன் மதுரா சொன்னதைப் போல.. அப்படியொன்றும் பலசாலியான பயில் வானில்லை.. ஒல்லியாக அஸ்வினை விட பலம் குறைந்த வனாகத்தான் இருப்பான்..

‘அவன்கிட்டப் போய் இவன் அடிவாங்கிட்டு வந்திருக்கானே..’

அதற்குப் பின்னால் ரமணனின் பின்தொடரலைப் பற்றி அஸ்வினிடம் மாளவிகா வாயே திறக்கவில்லை.. அலுவலகத்திலிருந்து வந்த சிதம்பரம் மகனின் நிலையைக் கண்டதும் பண்ணிய உபதேசங்களில் அவரிடமும் அதைப் பற்றி வாயைத் திறக்கக் கூடாதென்ற தீர்க்கமான முடிவிற்கு அவள் வந்தாள்..

“இதையெல்லாம் தள்ளி நின்னு வேடிக்கை பார்க்கக் கூட நீ யோசிக்கனும்.. என்னையே எடுத்துக்க.. இந்தத் தெருவில போனவாரம் கூட ஒருத்தன துரத்தித்துரத்தி வெட்டினாங்க.. நான் ஜன்னல்கிட்டக் கூடப் போகலையே.. நான் பாட்டுக்கு ஜன்னலில் தலையைக் காட்டி வைக்க.. வெட்டறவன் என் முகத்தைப் பார்த்துட்டு சாட்சியை விட்டு வைக்கக் கூடாதுன்னு என்னையும் சேர்த்துப் போட்டுட்டா என்ன பண்றது..?”

அவர் அப்போது மட்டுமல்ல.. எப்போதுமே ஜன்னலின் கதவுகளைத் திறக்காமல் இறுக்கி சாத்தி வைத்திருக்கிறவர் தான் என்பதை நினைவு கூர்ந்தாள் மாளவிகா..

“துஷ்டனை கண்டா தூர விலகுன்னு பெரியவங்க எதுக்கு சொல்லி வைச்சிருக்காங்க..? இதுக்குத்தான் சொல்லி வைச்சிருக்காங்க.. ம்ம்ம்.. இப்ப என்ன செய்யலாம்..? வேற காலேஜீக்கு மாத்திரலாமா..?”

“அப்பா.. இதையே பேமண்டில வாங்கிக் கொடுத்திருக்கீங்க.. திரும்பவும் பணத்தைப் புரட்ட உங்களால் முடியுமா..?”

“நான் உன்ன வேற காலேஜீக்கு போகச் சொன்னது இன்ஜினியரிங் காலேஜ்ங்கிற அர்த்தத்தில இல்ல.. ஏதாச்சும் ஒரு டிகிரியப் படியேன்..”

“படிச்சுட்டு..?”

“பெட்டிக்கடை வைச்சாவது பொழச்சுக்க..”

சாப்ட்வேர் என்ஜினியராகும் கனவுகளோடு இருக்கும் மகனையே ஒரு அடிதடிக்கார மாணவனுக்கு பயந்து படிப்பை விட்டுவிட்டு பெட்டிக் கடை வைத்துப் பிழைத்துக் கொள்ளச் சொல்லும் சிதம்பரம்.. மாளவிகாவின் கதையை அறிந்தால் என்ன சொல்லுவார்..?

“என்னது..? ரமணா உன்னைக் காதலிக்கிறேன்னு சொல்றானா..? கடவுளே..! அவன் நினச்சத முடிக்காம விட மாட்டானே.. மதுரா அந்த விசபாட்டிலை எடுடி.. குடும்பத் தோட பரலோகம் போயிரலாம்..”

இதைத்தான் அவர் சொல்லி வைப்பார் என்று தெரிந்த பின்னால்.. அவரிடம் வாயைத் திறக்க மாளவிகா நினைப்பாளா..? அடுத்த நாள் காலையில் பூமிகா.. கண்ணீரும்.. கம்பலையுமாக வந்து நின்ற போது அவளின் முடிவு இரும்பாக இறுகியது..

‘இப்படிப்பட்ட புருசன்கூட வாழனும்கிற தலைவிதி எதுக்காக இவளுக்கு வந்து வாய்ச்சிருக்கு..? அப்பா சொன்னாரேன்னு.. படிப்பை பாதியிலேயே விட்டுட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டுப் போனதினால்தானே.. நான் அப்படியிருக்க மாட்டேன்.. என் காலில் நான் நிற்க.. எனக்கு படிப்பு அத்தியாவசியம்..’

அந்த வார இறுதிவரை வாக்குக் கொடுத்தபடி அவள் கண்களில் ரமணன் தென்படவில்லை.. அந்த வார இறுதியில் சொன்னதைப் போலவே அவன் வந்து குதித்தான்..

“மாலு..” கண்ணும் முகமும் பிரகாசிக்க அவன் வந்து நின்றபோத அவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை…

“ஏண்டா அஸ்வின்.. எப்படிடா அந்தப் பொண்ணு மேல உனக்கு காதல் வந்திருக்குன்னு சொல்ற..?” தம்பியின் காதல் கதையை விசாரித்தாள்..

“அதுவாக்கா.. அது அப்படித்தான்.. மனசுக்குள்ள ஒரு பூப்பூக்கும்..” அஸ்வின் கண்களை செறுகிய போது அவளுக்கு தூக்கிவாரிப் போட்டது..

‘இதென்ன.. இவனும் இப்படிச் சொல்றான்.. மனசென்ன பயிர் நிலமா..? விதை விதைச்சு.. செடியாகி.. பூப்பூக்க..?’

அவளுடைய சந்தேகத்தை யாரிடம் நிவர்த்தி செய்து  கொள்வது என்று அவளுக்குத் தெரியவில்லை.. ரமணன் அவளுடைய குழப்பத்தைப் பற்றியெல்லாம் கண்டு கொள்கிறவனாகத் தெரியவில்லை..

நினைத்தால் வந்து அவள் முன்னால் நிற்பான்.. கனிவாக பேசுவான்.. காதலுடன் பார்ப்பான்.. போய் விடுவான்..

‘உபத்திரவமில்லாத காதல்..’ மாளவிகாவிற்கு கவலை விட்டது.. ஹாசினியோ அதைப் பற்றி அதிசயித்தாள்..

“எப்படி டீ.. அவன் இப்படி சைவக் காதலனா இருக்கான்..?”

மாளவிகாவின் முறைப்பைப் பற்றிக் கவலைப் பட்டுக் கொள்ளாமல் அவள் சிரித்தாள்.. அது குறித்த பெருமையும்.. கர்வமும் மாளவிகாவுக்குள்ளேயும் உண்டு..

அன்றும் அதைப் போல வந்து நின்றவன்.. அவளை டாடா சுமோவில் கொண்டு போய் விடுவதாக சொல்லியபோது.. அவள் முறைப்புடன் திரும்பி நின்று கொண்டாள்…

“வா மாலு..” அவன் மிக லேசாக வற்புறுத்தினான்..

“ஹலோ உங்க வேலையைப் பார்த்துக்கிட்டுப் போறிங்களா..?”

“எவ்வளவு நேரமா நிற்ப..? நானும் அப்போதிருந்து உன்னை வாட்ச் பண்ணிக்கிட்டுத்தான் இருக்கேன்.. நீ டென்சன் தாங்கமா நகத்தைக் கடிச்சுத் துப்பி.. 

அதைக் காலி பண்ணிட்டு விரலைக் கடிக்க கிளம்பிட்ட.. இதுக்கும் மேல பொறுக்க முடியாமத்தான் நேரில வந்தேன்..”

‘இத்தனை நேரமா இவன் என்னையே பார்த்துக்கிட்டு இருந்தானா..?’

எங்கிருந்து பார்த்தான் என்று யோசித்தாள் மாளவிகா.. அவனிடம் அதைக் கேட்டு வைத்தால்.. அவனை அவள் தேடுவதாக தப்பர்த்தம் பண்ணிக் கொள்வானோ என்ற பயத்துடன் வாயை இறுக்கமாக மூடிக் கொண்டாள்..

“நம்மகிட்ட ஆயிரம் கார் இருக்கு..”

‘போடா.. டேய்.. என்கிட்ட ஓட்டைசைக்கிள் கூட இல்ல…’

“நீ எதுக்காக கால் கடுக்க பஸ் ஸ்டாப்பில நிற்கனும்..?”

‘என் கால்..! நான் நிற்கிறேன்.. உனக்கென்ன வந்தது..?’

“நிற்கிறது நீயாய் இருந்தாலும்.. வலிக்கிறது எனக்குத்தானே மாலு..?”

அவள் மனத்தைப் படித்தவனாக அவன் பேசியதில் அவள் திகைத்துப் போய் விட்டாள்.. அவன் மிருதுவாக அவளைப் பார்த்து புன்னகைத்தான்..

“உன் மனசில என்ன நினைக்கிறேன்னு எனக்குத் தெரியாதா மாலும்மா..?”

அவன் பேச்சில் அவளுக்குள் என்னவோ செய்தது.. அவளுக்காக அவன் யோசிப்பதில் ஏதோ ஒரு இனம் விளங்காத ஆறுதல் அவளுக்குள் ஏற்படுவதை உணர்ந்தாள் மாளவிகா..

‘ஊஹீம்.. இதை வளர விடக் கூடாது.. ஆரம்பத்திலேயே கிள்ளி எறிஞ்சிரனும்..’

நினைத்தவளுக்கு.. வந்து நின்ற பஸ்ஸில் ஏறும்போது அவனைத் திரும்பிப் பார்க்காமலிருக்க முடியவில்லை.. அப்போது தான் என்று இல்லை.. அதற்கு முன்னாலேயும்.. அவன் வந்து நிற்கும் போது அவள் கிளம்ப நேர்ந்தால் அவனை ஒரு முறை திரும்பிப் பார்த்து விட்டுத்தான் போவாள்..

அந்த நொடிப் பொழுதிற்காக காத்திருப்பனின் கண்களில் அவள் கண்களைச் சந்திக்கும் போது ஏற்படுமே ஒரு மின்னல்..! அது மாளவிகாவைத் தாக்கும்..

0Shares

Reviews — Kaithotta Kalvane / கைத்தொட்ட கள்வனே

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link