Chapter 08
“செய்யேன்..” மதுரா மகளின் உதவியை ஏற்றுக் கொண்டாள்..
“என்ன செய்யட்டும்..?” மாளவிகா தயாரானாள்…
“இந்தக் காயைக் கழுவி நறுக்கிக் கொடு..”
மாளவிகா மளமளவென்று காய்களை கழுவி நறுக்கிக் கொடுத்தாள்.. மதுரா கொடுத்ததை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொடுத்தாள்.. அவள் ஊற்றித் தந்த காபித் தம்ளர்களை சிதம்பரத்திடமும்.. அஸ்வினிடமும் கொடுத்து விட்டு வந்தாள்…
“தேங்க்ஸ்டி.. உன்னால என்வேலை சீக்கிரமா முடிஞ்சிருச்சு..” மதுரா சொன்னபோது மனதுக்குள் நிறைவாக உணர்ந்தாள் மாளவிகா..
குளித்து.. உடைமாற்றி கல்லூரிக்குப் போகத் தயாரானவள் சாப்பாட்டு மேஜைக்கு வந்த போது.. அங்கே புதிதாக ஒருவன் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பதைக் கண்டதும் தயங்கி நின்றாள்..
“ஹேய்.. மாளவிகா.. ஆளே அடையாளம் தெரியலை.. வளர்ந்துட்ட..” அவன் ஆர்வமாக அவளைப் பார்த்து வரிசைப் பற்களைக் காட்டிச் சிரித்தான்…
‘யார் இவன்..?’ அறிமுகமற்ற பார்வை பார்த்தாள் மாளவிகா..
அவளைத் தெரிந்தவனைப் போலப் பேசியவன் யாரென்று அவளுக்குத் தெரியவில்லை..
“நம்ம கார்த்திக்தான் மாளவிகா.. உனக்குத் தெரியலையா..?” மதுரா கேட்டாள்..
“கார்த்திக்கா..!” விழி விரித்தாள் மாளவிகா..
சின்னவயதில் பார்த்த மதுராவின் ஒன்றுவிட்ட அண்ணன் மகனை மீசை வளர்ந்த முரட்டு ஆண்மகனாக அவள் பார்த்ததில் அவளுக்கு அவனை அடையாளம் தெரியவில்லைதான்..
“கார்த்திக்கேதான்.. உட்காரு..” அவன் சுவாதீனமாக எதிரே இருந்த நாற்காலியைக் காண்பித்தான்..
“என் வீட்டுக்குள்ளே வந்து எனக்கே உபசாரமா..?” மாளவிகா கேட்டு விட்டுத்தான் உட்கார்ந்தாள்..
“உன் வீடா..? இது என் அத்தை வீடாக்கும்..” உரிமையுடன் சொன்னான் கார்த்திக்..
‘விட்டால் என்னையும்.. அஸ்வினையும் வீட்டை விட்டே ஓட்டி விடுவான் போல இருக்கே..’ எரிச்சலுடன் நினைத்துக் கொண்டாள் மாளவிகா…
‘இவன் மாறலை..’
கார்த்திக்கின் குணாதிசயம் அப்படிப்பட்டது.. அவன் எந்த வீட்டுக்குப் போனாலும்.. அந்த வீட்டைச் சேர்ந்தவர்களை மூன்றாம் மனிதர்களாக்கி விட்டு.. இவன் தான் அந்த வீட்டிற்கான வாரிசைப் போல உரிமை கொண்டாடுவான்..
‘ஓசூரில இருந்தவனுக்கு சென்னையில என்ன வேலை..?’
மாளவிகா தட்டைப் போட்டு.. பூரியை எடுத்து வைத்துக் கொண்டே நினைத்தாள்..
‘எதுக்கோ வந்திருப்பான்..! என்ற நினைவுடன் தட்டிலிருந்த பூரிகளைக் காலி செய்ய ஆரம்பித்த போது தான் அதை உணர்ந்தாள்..’
கார்த்திக் அவளையே ஆசையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்..
“என்னடா இது.. வம்பாப் போச்சு..” அவளுக்கு சங்கடமாக இருந்தது..
அவளுக்கும் கார்த்திக்கிற்கும் என்றுமே ஆகாது.. சிறுமியாக இருந்த மாளவிகாவை விட ஏழுவயது பெரிய வனாக இருந்த திமிரில் அவன் மாளவிகாவின் தலையில் குட்டுவான்.. மாளவிகா பெரியவர்களிடம் புகார் சொன்னால் அவள் குறும்பு செய்ததால் குட்டியதாக பொய் சொல்லி விடுவான்..
இரட்டை சடையுடன் அலையும் மாளவிகாவின் குண்டுக் கன்னங்களைக் கிள்ளி விடுவான்.. வலியால் துடித்துக் போய் அழுபவள் மதுராவிடம் முறையிடுவாள்.. அவள் கூப்பிட்டு விசாரித்தால் ‘கொஞ்சினேன் அத்தை..’ என்று பதில் சொல்லி விடுவான்..
எல்லாவிதமான போக்கிரித்தனங்களும் அவனிடம் இருக்கும்.. ஆனால் பெரியவர்களிடம் சமர்த்துப் பிள்ளை என்ற பெயர் வாங்கி விடும் சாமர்த்தியம் அவனிடம் இருந்தது..
‘அந்தச் சாமர்த்தியம் யாருக்கு வேணும்..?’
மாளவிகாவிற்குள் சின்னஞ்சிறு பருவத்தின் எரிச்சல்கள் வந்தன.. கார்த்திக் காட்டிய இரட்டை முகத்தை அவள் இன்னமும் மறக்கவில்லை..
‘அப்படிப்பட்ட சாமர்த்தியமெல்லாம் எனக்கோ.. அஸ்வினுக்கோ இல்லை பூமிகாவுக்கோ சுட்டுப் போட்டாலும் வாராது..’
அவன் முகத்தைப் பார்த்தால்தானே வம்பு என்று அவள் நிமிராமல் பூரியை உள்ளே தள்ளி விட்டு.. மதிய உணவு டப்பாவை எடுத்துக் கொண்டு நிமிர்ந்தாள்..
அதுவரை அவளையே கவனித்தபடி சிதம்பரத்திடம் பேசிக் கொண்டிருந்த கார்த்திக்..
“எங்கே கிளம்பிட்ட மாளவிகா..?” என்று கேட்டான்..
‘ஊர் சுற்ற..’ என்று வார்த்தைகள் அவளின் தொண்டை வரை வந்து விட்டன.. மதுராவின் விரோதத்திற்கு ஆளாக வேண்டுமே என்று அவற்றை விழுங்கிக் கொண்டாள்..
“காலேஜீக்கு..”
“ஓ.. நீ என்ஜினியரிங் படிக்கிறேல்ல..?”
அவன் வந்தவுடனே அதைத்தான் முதலில் சிதம்பரம் சொல்லியிருப்பார் என்று மாளவிகாவிற்கு மிக நன்றாகவே தெரியும்.. வீட்டிற்கு எந்த விருந்தினர் வந்தாலும்.. பிள்ளைகளைப் பற்றியும்.. அவர்களின் படிப்பைப் பற்றியும் ஒப்பிக்காவிட்டால் அவருக்கு பேசியதைப் போலவே இருக்காது..
அப்போதும் அதைத்தான் அவர் செய்திருப்பார் என்பதில் மாளவிகாவிற்கு எள்ளளவும் சந்தேகமில்லை.. அதை ஊர்ஜிதம் செய்வதைப் போல..
“இப்பத்தானே அதைப் பத்தி சொன்னேன் கார்த்திக்..?” என்று கேட்டு வைத்தார் சிதம்பரம்..
“ஆமாமா.. சொன்னீங்கள்ல.. மறந்தே போயிட்டேன்..” கார்த்திக் சமாளித்தான்..
“ஆமாம்பா.. அவர் இதைக் கேட்டு வருசக்கணக்காய் ஆகியிருச்சில்ல..? மறந்துதான் போயிருப்பார்..” வாய்ப்பு கிடைத்தவுடன் வாரிவிட்டாள் மாளவிகா..
கார்த்திக்கின் முகம் கருத்தது.. இதைப் போன்ற மாளவிகாவின் புத்திசாலித் தனமான பேச்சுக்களை எப்போதுமே அவன் ரசித்ததில்லை..
‘இவ அப்பயிருந்து இப்ப வரைக்கும் புத்திசாலித் தனமாவே பேசிவைக்கிறாளே..’
“எப்படிப் போகப் போற..?” அடுத்த கேள்வியை அவன் கேட்டான்..
“பஸ்ஸிலதான்..” எரிச்சலுடன் பதில் சொன்னாள் மாளவிகா..
“நான் டிராப் பண்றேனே..” அவன் எழுந்து கொண்டான்..
“நோ.. நோ.. நானே போய்க்குவேன்..” அவசரமாக மறுத்தாள் மாளவிகா..
“கமான் மாளவிகா.. டூ வீலர்ன்னு பயந்திட்டயா..? காரில்தான் வந்திருக்கேன்.. வா.. போகலாம்..”
கார்த்திக் பிடிவாதமாக வற்புறுத்த.. வேறு வழியில்லாமல் அவனைப் பின் தொடர்ந்தாள் மாளவிகா..
வாசலில் இருந்த காருக்கருகில் இரண்டு போலிஸ் காரர்கள் நின்று கொண்டிருந்தார்கள்.. கார்த்திக்கை கண்டதும் அவர்கள் சல்யூட் அடிக்க.. அதை மாளவிகா கவனிக்கிறாளா என்று ஓரக் கண்ணில் பார்த்துக் கொண்டான் கார்த்திக்..
‘அல்பம்..! இன்னும் இந்தப் புத்தி போகலியே..’ மாளவிகா அதை கண்டு கொள்ளாமல் தெருவை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்..
அவள் பார்க்கவில்லையே என்று பல்லைக் கடித்த கார்த்திக் மிதப்பாக தலையசைத்து விட்டு.. அந்தப் போலிஸ்காரர்களை அனுப்பி வைத்தான்..
“அவங்க எனக்கு எதற்காக விஷ் பண்ணினாங்கன்னு தெரியுமா..?”
‘விட மாட்டானே.. இவனுக்கு அவங்க சல்யூட் அடிச்சதை எந்த வகையிலாவது என்கிட்ட சொல்லியேதீரனும்..’ மனதுக்குள் கார்த்திக்கை அர்ச்சித்த மாளவிகா.. ஒன்றும் அறியாதவளைப் போல முகத்தை வைத்துக் கொண்டு..
“சல்யூட் அடிச்சாங்களா..? அவங்களா..? உங்களுக்கா..? நான் பார்க்கலையே..”, என்று வழி விரித்தாள்..
“அவங்க சல்யூட்தான் அடிச்சாங்க..” எரிச்சலுடன் சொன்னான் கார்த்திக்..
“அப்படியா..?” அதற்கு மேல் அதற்கு முக்கியத்துவத்தை கொடுத்து ஒருவார்த்தை கூட மாளவிகா பேசவில்லை..
அப்படியே விட்டுவிட்டால் கார்த்திக்கின் பெருமை என்ன ஆவது..?
“என்ன அப்படியான்னு ஒத்தை வார்த்தையில கேட்டுட்ட..?”
“வேற என்ன செய்யனும்..?”
“எதுக்காக அவங்க சல்யூட் வைச்சாங்கன்னு கேட்க வேணாமா..?”
“சேச்சே.. அப்படிக் கேட்டா நல்லாயிருக்குமா..?” மாளவிகா அவனின் மூக்கை உடைத்தாள்..
எந்தப் பக்கம் போனாலும் அந்தப் பக்கம் வழியை அடைக்கும் மாளவிகாவின் மீது கார்த்திக்கிற்கு ஏற்பட்டிருந்த எரிச்சல் அதிகமானது.. சின்ன வயதில் குட்டிக் கிள்ளி வைத்ததைப் போல இப்போது செய்ய முடியாமல் போனதில் அவன் வெகுவாக வருத்தப் பட்டுப் போனான்…
அவள் எதற்காக என்று கேட்க வேண்டும்.. அவன் அதற்கான விளக்கத்தைத் தர வேண்டும்.. அவள் ‘ஆ’வென்று பிரமிப்பாக அவனைப் பார்க்க வேண்டும் என்ற அவனின் எண்ணத்தை புரிந்து கொள்ளாமல் உனக்கெல்லாம் போய் எதுக்காக அவங்க சல்யூட் அடித்தாங்கன்னு கேட்டால் நன்றாயிருக்குமா என்று மூக்கை உடைப்பவளை அவன் என்னதான் செய்வது..?
Reviews — Kaithotta Kalvane / கைத்தொட்ட கள்வனே
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.