Chapter 13

0Shares

உற்சாகமாக விசிலடித்தபடி காரை ஓட்டிக் கொண்டிருந்தான் ரமணன்.. வண்டிக்குள் அமர்ந்திருந்தவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கண் சிமிட்டிக் கொண்டார்கள்..

“அண்ணன் செம மூட்ல இருக்கார்டா..” தாமஸ் கிசுகிசுத்தான்…

“அண்ணி கிரின் சிக்னல் கொடுத்தாட்டாங்களோ..” என்றான் ஒருவன்..

“யாருக்குத் தெரியும்..? அவங்க என்ன பேசினாங்கன்னு நமக்கு எப்படிடா தெரியும்..? நாமதான் தள்ளி நின்னோமே..” தாமஸ் சொன்னான்..

“அதில உனக்கு ரொம்ப வருத்தம் போல இருக்கேலே.. வேணும்னா உன்னோட இந்த மனக்குறையை அண்ணன் காதிலே போட்டு வைக்கட்டு மாலே..?” கிருஷ்ணன் முணுமுணுத்தான்…

அவன் ‘போட்டு வைக்கவா..’ என்று சொன்னதை என்னவோ ‘வேட்டு வைக்கவா..’ என்று அவன் கேட்டு விட்டதைப் போல தாமஸ் அரண்டே போனான்…

“ஏண்டா உனக்கு இத்தனை நல்லெண்ணம்..?”

“என்னலே தாமஸீ.. இப்படிச் சொல்லிப்புட்ட.. நான் உன் நண்பேன்ல..”

“ம்ஹீம்.. உன்னப்போல நண்பன் கிடைக்க கொடுத்து வைச்சிருக்கனும்டா..”

“எதைலே..?” கிருஷ்ணன் தாமஸின் சட்டைப் பையைப் பார்த்தபடி கேட்டான்..

“இதுக்குத்தானே அடி போடற..?” தாமஸ் சட்டைப் பையிலிருந்த ஆயிரம் ரூபாய் நோட்டை எடுத்து அவனிடம் நீட்டினான்..

“யாருக்குலே வேணும் உன் பணம்..?”

“உனக்குத்தான்.. வேற யாருக்கு..?”

“அப்படிங்கிற..” என்றபடி பணத்தை வாங்கிய கிருஷ்ணன் அதை தாமஸின் சட்டைப் பையிலே வைத்து விட்டான்…

“அவ்வளவு நல்லவனாடா நீ..?”

“ஏய்ய்.. அடங்குலே.. அண்ணன் என்னமோ சந்தோசம் அதிகமாகிப் போகி தானே காரை ஓட்டறேன்னு உன்ன ஓரமா உட்காரச் சொல்லிட்டாரு.. நீ உடனே சொகுசா வேலையில்லாம உட்கார்ந்துக்கிட்டு வெட்டிக் கதையப் பேசற.. இருலே.. உனக்கு ஒருநாள் இருக்கு..”

“அடப்பாவி.. அப்படியெந்தத் திருநாளைக் கொண்டு வந்துராதேடா…”

“பாக்கலாம்..”

“அப்படியெல்லாம் சொல்லிப் புடாதேடா மச்சான்.. நீ திருநெல்வேலி சீமைக்காரன்..”

“எட்டப்பன் பொறந்த தூத்துக்குடியும் அந்தச் சீமையிலதான்லே இருக்கு…”

என்னதான் தாமஸ் வெள்ளைக் கொடியை அசைத்து சமாதானப் புறாவை பறக்க விட்டாலும்.. விடுவேனா என்று சமாதானத்திற்கு வராமல் பீதியைக் கரைத்து தாமஸின் வயிற்றுக்குள் ஊற்றுவதே குறிக்கோளாக இருந்தான் கிருஷ்ணன்…

கார் ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்குள் போனது.. திரும்பிப் பார்த்த அவனின் ஆள்கள் திகைத்துப் போனார்கள்…

“என்ன தாமஸ்..? அண்ணன் நம்மள இங்கே கூப்பிட்டுகிட்டு வந்திருக்காரு..” வீரபாகு முணு முணுத்தான்..

“நானும் உன் கூடத்தானே வர்றேன்.. உனக்குத் தெரியாதது எனக்கு மட்டும் தெரிஞ்சிருமா..?” தாமஸ் பதிலுக்கு முணுமுணுத்தான்…

“கிருஷ்ணன்கிட்டக் கேளு…”

“ஏன்..? அதை நீயே கேளு..”

“அட.. அவன் விவகாரம் பிடிச்ச ஆளுப்பா..”

“தெரியுதில்ல.. அப்ப அடக்கி வாசி.. நானே அவன்கிட்ட வாளைக் கொடுத்திட்டு வம்பாடு பட்டுக்கிட்டு இருக்கேன்.. இப்பத்தான் பேச்சை நிப்பாட்டினான்.. புதுசா ஆரம்பிச்சேன்னு வைய்யி.. இன்னைக்குப் பூரா… லே.. லேன்னு.. என்ன ஓட்டிக்கிட்டே இருப்பான்.. தேவையா எனக்கு..?”

“அதைச் சொல்லு..” என்ற வீரபாகு மதுரைப் பக்கமிருக்கும் கிராமத்தைச் சேர்ந்தவன்..

“என்னத்தச் சொல்லச் சொல்றேலே..” கிருஷ்ணன் புருவங்களை உயர்த்தினான்..

“ஏம்ப்பா.. ஏய்ய்.. நானும் அவனும் நாலு நல்லது கெட்டதை பேசுவோம்.. உனக்கெதுக்குப்பா அது..?” வீரபாகு மூக்கை விடைத்தான்…

“கெட்டத மட்டும் பேசுவீங்கன்னு சொல்லுலே.. எதுக்காக நல்லதையும் கட்டி இழுக்கற..?” கிண்டலாகக் கேட்டான் கிருஷ்ணன்..

“இந்தா பாரு.. இந்த விகடப் பேச்சையெல்லாம் வேற பக்கம் வைச்சுக்க.. யாரப் பார்த்து என்ன வார்த்தை சொன்ன..? நானு மதுரைக்காரண்டி.. என் கிட்ட வைச்சுக்கிட்ட பிரிச்சு மேய்ஞ்சிருவேன்..” வீரபாகு மீசையின் மேல் கைபோட.. தாமஸ் குதூகலமானான்..

“என்னலே தாமஸ்.. தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறயாலே.. இவன் மதுரைக்காரன்னா.. நான் திருநெல் வேலிக்காரன்.. இவன் பிரிச்சு மேயறதை நானு பிரிச்சு மேய மாட்டேனாலே..”, கிருஷ்ணன் கேட்டான்..

காரை விட்டு இறங்கிய ரமணன் அவர்களைத் திரும்பிப் பார்த்ததும் அங்கே சுவிட்ச் போட்டதைப் போல அமைதி நிலவியது…

“என்ன..? எல்லோரும் காரிலேயே உட்கார்ந்துட்டா எப்படி..? வாங்க.. சாப்பிடப் போகலாம்..” ரமணன் உற்சாகமாக அழைத்தான்..

“அட்ரா சக்கை.. அண்ணி இன்னைக்கு கிரின் சிக்னல்தான் கொடுத்துட்டாங்க போல இருக்குடா.. அதான் அண்ணன் அத்தனை பேருக்கும் நட்சத்திர ஓட்டல்ல விருந்து கொடுக்கறாரு..” தாமஸ் உற்சாகமானான்..

“சரியாச் சொன்னேலே..” கிருஷ்ணன் ஆச்சரியப் பட்டான்..

“அதச் சொல்லுப்பா.. ஆயிரம் தான் இருந்தாலும்.. பொண்ணு புள்ளைக நல்லதா ஒருவார்த்தை சொல்லனும்ப்பா.. அப்பத்தான் நம்ம மனசும் நிறைஞ்சிருக்கும்.. என்னப்பா கிருஷ்ணா.. நான் சொல்றது சரியாப்பா..” வீரபாகு கேட்டான்..

“நீ எப்பலே தப்பாச் சொல்லியிருக்கே..” கிருஷ்ணன் வீரபாகுவின் தோள்மேல் கை போட்டுக் கொண்டான்…

சற்று நேரத்திற்கு முன்னால் அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலின் வாசலிலே ஒருவரையொருவர் வீடு கட்டி அடித்துக் கொள்ளும் உத்தேசத்துடனிருந்த அந்த இரண்டு பேரும்.. நட்புக்கு ஒரு எடுத்துக்காட்டாய் மாறிவிடும் உத்தேசத்தோடு கட்டியணைத்துக் கொள்ளாத குறையாக காரை விட்டு இறங்கினார்கள்…

மெல்லிய விளக்கொளியில் ஏஸி ஹாலில் அவர்கள் அமர்ந்தார்கள்.. வேண்டியதைக் கேட்டு வாங்கிச் சாப்பிட்டுக் கொள்ளும்படி மற்றவர்களிடம் கூறிவிட்டு உற்சாகமாக பேசிச் சிரித்துக் கொண்டிருந்தான் ரமணன்..

சாப்பிட்டு முடித்து வெளியே வந்தவர்கள் ரமணனின் வீடு போய் சேர்ந்தார்கள்.. வீட்டுப் படியில் கால் வைத்தவன் அவனுடைய ஆள்களைத் திரும்பிப் பார்த்தான்…

“இன்னும் என்னலே..” கிருஷ்ணன் கிசுகிசுத்தான்…

“அதை அங்கே கேளு..” என்றான் தாமஸ்…

அடுத்த சண்டைக்கு அங்கே அச்சாரம் ஆரம்பமாகிக் கொண்டிருக்க விரிந்த புன்னகையுடன் அவர்களின் அருகே திரும்பி வந்தான் ரமணன்…

“கிருஷ்ணா..”

“அண்ணே..”

“எல்லோரும் ஆளுக்கு பத்தாயிரம் எடுத்துக்கங்க..”

“அண்ணே..?”

“இன்னைக்கு நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன்.. நீங்களும் என்ஜாய் பண்ணுங்க..”

ரமணன் இரண்டிரண்டு படிகளாய் தாவிக் கடந்து அவனுடைய வீட்டுக்குள் போய் விட்டான்…

“ஏன்ப்பா.. அப்படியொன்னும் அண்ணனப் பார்த்து அண்ணி அதிகமா பேசினதா தெரியலியேப்பா..” வீரபாகு நெற்றியில் ஒற்றை விரலை வைத்து தட்டினான்…

“அதிகமா யோசிக்காதேலே.. அது என்னைக்குமே ஆபத்து.. அதிகமா பேசினா என்ன.. கொறைச்சு பேசினா என்ன.. அண்ணனப் பார்த்து அண்ணி பேசினாங்கள்ல..? அதுக்குத்தான் இந்த சந்தோசம்.. புரியுதாலே..” கிருஷ்ணன் கோபப் பட்டான்..

“ஊஹீம்..” வீரபாகு தலையை ஆட்டினான்..

“அது புரியனும்னா உனக்கும் காதல் வரனும்லே..” என்ற கிருஷ்ணன் வீரபாகுவின் முகத்தை ஒரு கையால் பிடித்து இப்படியும்.. அப்படியுமாகத் திருப்பிப் பார்த்து விட்டு..

“ஏன்லே தாமஸீ.. இந்த மூஞ்சிக்கு காதல் வரும்ன்னு நீ நினைக்கிற..?” என்று கேட்டான்..

“நோ.. சான்ஸ்..” நிர்தாட்சண்யமாக மறுத்தான் தாமஸ்..

“விடுங்கப்பா..” கோபத்துடன் கிருஷ்ணனின் கையைத் தட்டி விட்டான் வீரபாகு..

அவர்கள் சளசளத்தபடி போய் விட்டார்கள்.. மாடியறையின் தனிமையில் அறையின் ஒரு பக்க சுவர் முழுவதும்.. மறைக்கும்படி மாட்டப் பட்டிருந்த மாளவிகாவின் மிகப் பெரிய புகைப்படத்தையே ஆசையுடன் பார்த்தான் ரமணன்..

‘என்கிட்டக் கூட நீங்க மன்னிப்புக் கேட்கக் கூடாது..’

புகைப்படத்தில் இருந்த மாளவிகா உதட்டைக் குவித்துச் சொன்னதைப் போல உணர்ந்தவன்.. ஆசையுடன் படத்தில் இருந்தவளின் உதட்டை விரல்களால் தடவினான்…

“உனக்குத்தான் என்மேல எவ்வளவு காதல்டி.. ஆனா அதை புரிஞ்சுக்காம இருக்கியே மாலு..”

தாபத்துடன் புகைப் படத்திலிருந்தவளின் இதழ்களில் முத்தமிட்டான் ரமணன்..

0Shares

Reviews — Kaithotta Kalvane / கைத்தொட்ட கள்வனே

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link