Chapter 15
எதற்காக அவள் அப்படிப் பார்க்கிறாள்.. யாரைத் தேடுகிறாள்.. என்ற விவரம் சுத்தமாக ரமணனுக்குத் தெரியவில்லை…
“என்ன..?” என்று புருவங்களை உயர்த்தினான்..
‘இவன் ஒருத்தன்.. இந்த மேனரிஸத்தை வைச்சே மயக்கிருவான்..’ மாளவிகா கவனமாக அவனைப் பார்ப்பதை தவிர்த்தாள்..
“என்னன்னு கேட்டேன்..”
“இல்ல.. உங்ககூட ஒரு வண்டி நிறைய ஆளுக கோந்து போட்டு ஒட்டினதப் போலக் கூடவே வருவாங்களே.. அவங்களையும் கூட வைச்சுக்கிட்டு என்னைக் காபி சாப்பிடக் கூப்பிட்டிங்களோன்னு பார்த்தேன்.. எங்கே அவங்க..?”
அவள் கேள்வியில் அவன் முகம் மாறிப் போனது..
“அவங்க இன்னைக்கு என்கூட வரலை..” என்றான்.
“ஓ.. எப்படி உங்களை விட்டு இவ்வளவு நேரமா பிரிஞ்சிருக்காங்க..” மாளவிகா விடவில்லை..
“ஏய்ய்.. உன்னைப் பார்க்க வர்றப்ப வண்டி நிறைய ஆளுகளோட வந்தது என் தப்புத்தான் மாலு.. அப்பல்லாம் வேற வேலையா போவேன்.. போற வழியில உன்னைப் பார்த்துட்டுப் போவேன்.. இன்னைக்கு அப்படியில்ல.. உன்னைப் பார்க்கன்னே கிளம்பி வந்தேன்.. அதான் தனியா வந்தேன்..”
“ம்ம்ம்…”
“இப்பவாவது காரில் ஏறு..”
மாளவிகா யோசித்தாள்.. பிறவிப் பகைவனாக நினைக்கும் கார்த்திக்கின் காரில் ஏறலாம்.. ரமணனின் காரில் ஏறக்கூடாதா.. என்று தோன்றவும்.. அதற்கு மேல் மறுக்காமல் காரில் ஏறினாள்..
“இன்னைக்கு மட்டும்தான்..” என்றவளிடம்..
“பார்க்கலாம்..” என்று மிதப்பாக பதில் சொல்லிவிட்டு காரை ஓட்ட ஆரம்பித்தான் ரமணன்..
பயங்கரவாதி என்று ஊராலும்.. உலகாலும்.. அழைக்கப்படும் ஒருவனுடன் எந்த பயமுமின்றி பேசிக் கொண்டே காரில் போவதை நினைத்துப் பார்த்த மாளவிகாவிற்கு தன்மனநிலை குறித்து யோசனையாக இருந்தது…
“என்னை விட்டு..
ஓடிப் போக முடியுமா..?
அது முடியுமா..?
நாம் இருவரல்ல ஒருவர்..
அது தெரியுமா..? தெரியுமா..?”
காருக்குள் பாடல் ஒலித்ததும்.. மாளவிகாவிற்கு சிரிப்பு வந்தது…
“இந்த சிடியை தேடிக் கண்டு பிடிச்சு வாங்கினீங்களா..?”
“எப்படி கண்டு பிடிச்ச..?”
வரிசைப் பற்கள் தெரிய சிரித்து வைத்தான் அவன்.. மயங்கிய மனதை இழுத்துப் பிடித்தபடி.. மாளவிகா சாலையின் பக்கம் பார்வையைத் திருப்பிக் கொண்டாள்…
“கொடி அசைந்ததும்…
காற்று வந்ததா..?
காற்று வந்ததும்..
கொடி அசைந்ததா..?”
அவன் பாடலுடன் சேர்ந்து பாடியதை வியப்புடன் பார்த்தாள் மாளவிகா.. அவனுடைய ‘தாதா’ என்ற இமேஜிற்கும்.. அப்போது அவன் ரசித்துப் பாடிக் கொண்டிருந்த தோற்றத்திற்கும் யாதொரு சம்பந்தமுமில்லை யென்று அவளுக்குத் தோன்றியது…
“பழைய பாட்டுன்னா இஷ்டமா..?”
“என் அம்மாவுக்கு இஷ்டம்..”
“ஓ.. உங்களுக்கு அம்மா இருக்காங்களா..?”
இப்படிக் கேட்டவளை விசித்திரமாகப் பார்த்தான் ரமணன்…
“அம்மா இல்லாம யாராச்சும் பிறக்க முடியுமா..?”
“ஐ ஆம் ஸாரி.. ஸாரி.. தெரியாம கேட்டுட்டேன்..”
“என்னைச் சொல்லிட்டு நீ ஸாரி கேட்கலாமா..?”
அவன் காரை ஓட்டிக் கொண்டே திரும்பிப் பார்த்துக் கேட்டபோது அவள் சொன்னதை அவன் நினைவில் வைத்திருக்கிறான் என்ற நினைவில் அவளுக்குள் தென்றலடித்தது…
“அதெல்லாம் நான் உங்ககிட்டக் கேட்கலாம்.. நீங்கதான் என்கிட்டக் கேட்கக் கூடாது..”
“ஏன்..?”
“அது அப்படித்தான்.. காரணமெல்லாம் கேட்கக் கூடாது…”
“அடேங்கப்பா.. பலமாத்தான் மிரட்டற..?”
அவன் பயந்து போன பாவனை காட்ட.. அவர்கள் இருவரும் சேர்ந்து சிரித்தார்கள்.. சிரித்து முடித்ததும் அவள் கேட்டாள்..
“உங்க அம்மா உங்க கூட இருக்காங்களா..?”
“ஊஹீம்.. சாமிகிட்ட போயிட்டாங்க…”
அவன் பதிலில் அவள் முகத்தில் அதிர்ச்சி ஏற்பட்டது.. காருக்குள் கனத்த மௌனம் இரும்புப் போர்வையாக கவிந்தது..
“ஐ ஆம் ஸாரி..” அவள் வருத்தத்துடன் சொன்னாள்..
“இன்னைக்கு திரும்பத்திரும்ப ஸாரி கேட்கனும்னு நேர்த்திக் கடன் வைச்சிருக்கியா..? தெரியாம கேட்டதுக்கு எதுக்காக ஸாரி கேட்கிற..?”
“இது அந்த ஸாரி இல்லை.. வருத்தம்..”
மாளவிகாவின் இரக்கத்தை அங்கீகரிக்கும் பார்வையொன்றை மின்னல் வெட்டும் நேரத்துக்கு அவள் மேல் செழுத்தியவன்..
“விட்டு விடு..” என்றான்…
திரும்பவும் காரில் மௌனம் சூழ்ந்தது…
“இரவு வந்ததால்…
நிலவு வந்ததா..?
நிலவு வந்ததால்..
இரவு வந்ததா..?”
மொனத்தை லட்சியம் செய்யாமல் பி.சுசிலாவின் குரல் ஒலித்துக் கொண்டிருக்க.. தனக்குத் தானே பேசிக் கொள்வதைப்போல சொல்லிக் கொண்டான் ரமணன்…
“இந்தப் பாட்டை ரசிக்கக் கத்துக் கொடுத்தது என் அம்மாதான்… ஒன்னோடடொன்னு பின்னிப் பிணைஞ்சிருக்கிற அற்புதமான வரிகள்.. இதை அனுபவிச்சுப் பாடச் சொல்லிக் கொடுத்தாங்க…”
“உங்க அப்பா..?”
அதைக் கேட்டவனின் முகம் இறுகியது.. கண்கள் சிவக்க.. சற்று நேரத்துக்கு மௌனம் சாதித்தான்…
“யாரோ ஒரு பொம்பளை.. அவளுக்கும் அந்த ஆளுக்கும் எப்படித் தொடர்பு ஏற்பட்டுச்சுன்னு தெரியலை.. ஒருநாள் அந்தப் பொம்பளையோட ஊரை விட்டே ஓடிட்டான் அந்த ஆளு.. அம்மா அப்பவே மனசுக்குள்ள பொடிப் பொடியா நொறுங்கிப் போயிருக்கனும்.. அதை மறைச்சுக்கிட்டு எனக்காக வாழ்ந்தாங்க.. என்னோட பதினாலாவது வயசில என்னை விட்டுட்டுப் போயிட்டாங்க.. கேன்சராம்.. என்கிட்டச் சொல்லாம கடைசி வரைக்கும் மறைச்சிட்டாங்க…”
மாளவிகா அழுது விட்டாள்.. அவளின் கண்ணீரை உனர்ந்தவன் அவளைத் திரும்பிப் பார்த்தான்.. அவன் முகம் மிருதுவானது..
“எனக்காகவும் கண்ணீர்விட.. கவலைப்பட ஒரு இதயமிருக்கு.. உன்னைப் பார்க்கிற வரைக்கும் நான் சபிக்கப் பட்டவன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன் மாலு.. உன்னைப் பார்த்த பின்னால்தான் தெரியுது.. நான் ஆசிர்வதிக்கப் பட்டவன்னு…”
“காதல் வந்தால் சேயாவேன்…
கருணைவந்தால் தாயாவேன்..
கண்ணா உந்தன் நிழலாவேன்..
உனக்கென நான் வாழ்வேன்…”
சிடியில் பாடிக் கொண்டிருந்த பி.சுசிலாவின் பாடலை பாடி ரமணனின் முடி கோத ஆசைப்பட்டாள் மாளவிகா…
‘உனக்காக நான் இருக்கிறேன்.. அழாதே..’ என்று சொல்லத்தான் நினைத்தாள்.. அவளால் அது முடியவில்லை..
‘வேண்டாம் மாளவிகா.. நிரந்தரமில்லாத நம்பிக்கையை இவனுக்கு கொடுத்து விடாதே.. இவனை உனக்குப் பிடித்திருக்கலாம்.. ஆனால்.. இவன் கூட வாழ்வதென்பது உன்னால் இயலாத ஒன்றாகும்.. இவன் பாதை வேறு.. உன் பாதை வேறு.. இரண்டு பாதைகளும் ஒருநாளும் இணையவே முடியாது..’
அவளின் அறிவு அவளை எச்சரித்தது.. மனம் தவித்தது.. எதிர் மறைத் துருவங்களுக்கு இடையில் அவள் சிக்கித் தவித்தாள்…
Reviews — Kaithotta Kalvane / கைத்தொட்ட கள்வனே
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.