Chapter 16

0Shares

எப்போதுமே அறிவு… உணர்வு இரண்டுமே எதிர் மறைத் துருவங்களாகத்தான் இருக்கும்.. அறிவு சொல்லும் பாதையில் உணர்வு பயணிக்காது.. இந்த இரண்டில் எதைக் கேட்பது என்று புரியாமல் பாவம்.. மனம் தான் கிடந்து போராடும்…

மனம் என்றுமே உணர்வு பூர்வமானது.. அறிவைச் சார்ந்து செயல்பட அது மிகவும் சிரமப்படும்.. உணர்விலிருந்து விலக நேரிட்டால் உயிர் போவதைப் போன்ற துன்பம் கொள்ளும்.. உணர்வுடன் சேர்ந்த மனத்தை நிம்மதியாக இருக்க விடாமல் அறிவு அதை எச்சரித்துக் கொண்டேயிருப்பது அதைவிட அதிகமான துன்பத்தை அதற்குத் தரும்.. பாவம்.. மனம்தான் என்ன செய்யும்..?

“மௌனத்தில் விளையாடும்

மனச் சாட்சியே…!

ஆயிரம் நினைவாகி..

ஆனந்தக் கனவாகி..

காரியம் தவறானால்..

கண்களில் நீராகி..

மௌனத்தில் விளையாடும்..

மனச்சாட்சியே…!”

காருக்குள் பாடல் தவழ்ந்து வந்தது.. மௌனத்தில் ஆழ்ந்திருந்த மாளவிகாவின் மனம் தாளமுடியாமல் ரகசியக் கண்ணீரை உகுத்தது…

அவளின் மனப் போராட்டத்தை அறியாதவனாய் அவள் அருகிலிருந்தால் போதுமென்ற நிம்மதியுடன் காரை ஓட்டிக் கொண்டிருந்த ரமணனைப் பார்க்கும் போது அவள் மனதை துக்கம் பிசைந்தது..

‘என் அருகாமை நிலைக்காது என்பதை இவன் அறிவானா..?’

எந்த நிச்சயத்தில் அவன் நிச்சிந்தையான போக்குடன் செயல்படுகிறான் என்று அவளுக்குப் புரியவில்லை..

‘இவன் காதல் நிறைவேறும்ன்னு எந்த அடிப்படையில் இவன் நம்பறான்..?’

தனது அடையாளம் குறித்தான கவலையில்லாமல் அவள்மீது காதல் கொண்டிருக்கும் ரமணனின் மீது மாளவிகாவுக்கு கோபம் வந்திருக்க வேண்டும்… ஆனால் அவள் என்னதான் தலையால் தண்ணீரைக் குடித்து விட்டு தலைகீழாக நின்று முயற்சி செய்தாலும் அவன் மீது துளிக்கூட அவளுக்கு கோபம் வந்து தொலைக்கவில்லை…

அது ஏன் என்பதை அவள் நன்கறிவாள்..

அவளுக்கு அவனைப் பிடித்திருந்தது.. மிக.. மிக.. அதிகமாக பிடித்திருந்தது.. ஊருக்கு முன்னால் வன்முறையாளனாக தோற்றமளிப்பவன் அவள் முன்னால் மென்மையே வடிவானவனாக மாறி நின்று காதலை யாசிப்பதில் அவள் பெண்மை கர்வம் கொண்டது.. யாருக்கும் அடங்காதவன் அவளின் ஒரு சிறு பார்வையிலே அடங்குவதில் அவள் பெருமிதம் கொண்டாள்.. இத்தனைக்கும் மேலாக.. அவன் அவளின் பிரியத்தை மட்டுமே யாசித்து.. விரல் நகம்கூடப் படாமல் விலகி நின்று கண்ணியம் காத்ததில் அவளின் கௌரவம் உயிர்த்தது..

“இறங்கலாமா மாலு..?”

ரமணன் கேட்ட போதுதான் அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலின் வளாகத்திற்குள் அவனின் கார் நிற்பதை உணர்ந்தாள் மாளவிகா.. இறங்கி நின்றவள் அழகிய பூங்காவைப் போன்ற ஹோட்டலின் வெளிப்புறத் தோற்றத்தை ரசித்துப் பார்த்தாள்..

“என்ன அப்படிப் பார்க்கிற..?”

அவளின் பார்வையில் தெரிந்த மின்னலையும்.. பரபரப்புக் கலந்த சந்தோசத்தையும் கவனித்தபடி ரமணன் கேட்டான்…

“வாவ்..! இந்த சிச்சுவேஷனே பெண்டாஸ்டிக்கா இருக்கில்ல..? ஐ லைக் திஸ்…”

“ஊம்..? இதைத்தான் நீ லைக் பண்ணுவியா..? என்னை லவ் பண்ண மாட்டியா..?” ரமணன் அவனின் துளைக்கும் பார்வையோடு கேட்டான்…

பதில் சொல்ல முடியாதவளாக மாளவிகா உதட்டைக் கடித்துக் கொண்டாள்.. அவளின் அந்த மௌனத்தில் மறுப்பில்லாததை கெட்டிக்கார ரமணன் உடனடியாக புரிந்து கொண்டான்.. அவன் கண்களில் மின்னல் வந்தது..

“நீ இதுக்கு முன்னாலே இங்கேயெல்லாம் வந்திருக்கியா..?”

“ம்ம்ம்.. சம் டைம்.. பிரண்ட்ஸோட வந்திருக்கேன்.. பட்.. அடிக்கடி வந்ததில்ல…”

பேச்சு மாறிய நிம்மதியில் பேசியவள் அவன் முகத்தைப் பார்த்ததும் திகைத்தாள்.. அவன் முகத்தில் ஏதோ ஒர் உணர்வு தெரிந்தது…

‘என்னவாம்..?’ அவள் மீண்டும் உதட்டைக் கடித்தாள்…

அடிக்கடி அவள் அப்படிச் செய்வதை ரசனையோடு உணர்ந்தவன் ஏதும் பேசாமல் சிரித்துக் கொண்டான்…

அவனின் முரட்டுத்தனமான முகத்தில் தோன்றும் மென்சிரிப்பு அவனின் அழகை அதிகரிப்பதை அவன் உணர்வானா என்ற நினைவில் அவளையுமறியாமல்

“நீங்க சிரிக்கும் போது அழகாயிருக்கீங்க..” என்று சொல்லி விட்டாள் மாளவிகா…

அவன் சட்டென்று திரும்பி அவளின் முகத்தைப் பார்த்தான்.. அதில் விரவிக் கிடந்த உணர்வினை மாளவிகாவினால் அனுமானிக்க முடியவில்லை..

“ஈஸ்.. இட்..?” என்றவனின் சிரிப்பு விரிந்தது…

அவனுடன் சேர்ந்து படியில் ஏறியபோது.. முன்பின் தெரியாத ஒருவனுடன் காபி சாப்பிட வந்திருப்பதைப் போல அவளுக்குத் தோன்றவில்லை..

மெல்லிய இசை பரவியிருந்த ஹாலில் அவர்கள் பிரவேசித்தார்கள்…

‘ரிஸர்வ்டு..’ என்ற சிறிய எழுத்துப்பலகை சாய்த்து வைக்கப்பட்டிருந்த மேஜைக்கு அவன் அழைத்துச் சென்ற போது…

“ஏற்கனெவே டேபிளை ரிசர்வ் பண்ணிட்டிங்களா..?” என்று வியப்புடன் கேட்டாள் மாளவிகா…

பதில் சொல்லாமல் சிரித்தவன் சிரிப்பில்.. ‘ஆமாம்’ என்ற பதில் அடங்கியிருந்தது…

அவள் அமர்வதற்கான நாற்காலியை அவன் இழுத்து விட்ட போது ஒரு இளவரசியைப் போல மனதுக்குள் அவள் உணர்ந்தாள்…

அவள் உட்கார்ந்த பின்னால்தான் அவளுக்கு எதிரே அவன் அமர்ந்தான்.. அவளையே பருகுவதைப் போலப் பார்த்துக் கொண்டிருந்த அவன் பார்வையில் ஒரு கோடி செய்திகள் ஒளிந்திருப்பதை மாளவிகாவினால் உணர்ந்து கொள்ள முடிந்தது…

அவன் பார்வையின் வீச்சைத் தாங்க முடியாமல் அவளின் கன்னி மனம் தத்தளித்தது…

“நேற்று இந்த நேரம்…

ஆற்றங்கரை யோரம்..

தென்றல் வந்து..

உன்னைத் தொட்டு

என்னைத் தொட்டு

பாடும் ராகங்கள்…

கோலங்கள்.. ஆஹா..”

மெலிதான பாடல் அறையை நிரப்பியிருந்தது.. அந்தச் சூழலில் அந்தப் பாடல் ஒர்விதமான ரம்யத்தை மனதுக்குள் திணித்ததில் மாளவிகா சிலிர்த்துப் போனாள்..

அவர்களைச் சுற்றிப் படர்ந்திருந்த இசையின் வெள்ளத்தில் அவர்கள் இருவருமே மூழ்கிப் போனவர்களாக.. பேச மறந்து ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி சிலையாக அமர்ந்திருந்தார்கள்…

0Shares

Reviews — Kaithotta Kalvane / கைத்தொட்ட கள்வனே

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link