Chapter 17

0Shares

“இது லதா ரஜனிகாந்த் பாடின பாட்டு…”

எதையோ சொல்ல வேண்டுமென்பதற்காகப் பேசினாள் மாளவிகா.. ‘அப்படியா..’ என்ற பாவனையில் தலையை அசைத்தான் ரமணன்…

“இந்த ஒரு பாட்டுக்கு அப்புறமாய் அவங்க பாடலைன்னு நினைக்கறேன்..”

அவன் பார்வையின் தீட்சண்மம் தாங்க முடியாதவளாய் தலையைக் குனிந்து கொண்டாள் மாளவிகா.. ரமணனின் முகத்தில் மெல்லிய சிரிப்பு படர்ந்திருந்தது…

“என்ன சாப்பிடற..?” மென்மையாக வினவினான்…

“காபி..” அவள் கேள்வியாகப் பார்த்தாள்..

“காபி சாப்பிடத்தான் கூப்பிட்டேன்.. இல்லைங்கள.. அப்படிச் சொன்னாத்தான் நீ வருவ.. நீ உன் எக்ஸாமை நல்லபடியா எழுதி முடிச்சதுக்கான ட்ரீட்டுன்னு சொன்னா வர மாட்டேன்னு அடம் பிடிப்பியேன்னு நான் அப்படிச் சொன்னேன்…”

“ட்ரீட்டா..?”

“யெஸ்..”

“பார்த்தீங்களா.. கடைசியில்.. நீங்க.. உடான்ஸ் விட்டிருக்கீங்க..”

“எதையும் விடல.. உன்கூட இன்னைக்கு லன்ச் சாப்பிடனும்னு ஆசைப்பட்டேன்.. தட்ஸ் ஆல்.. சொல்லு.. உனக்கு என்ன பிடிக்கும்..?”

‘உன்னைப் பிடிக்கும்..’ என்று சொல்லத் தோன்றியது.. அவள் அதைச் சொல்லவில்லை..

“உங்களுக்குப் பிடிச்சதை ஆர்டர் பண்ணுங்க..” என்றாள்..

“எனக்குப் பிடிச்சது உனக்குப் பிடிக்க வேணாமா..?” அழமான பார்வையுடன் அவன் கேட்டான்…

“அதெல்லாம் பிடிக்கும்..” இயல்பாக அவள் பதில் சொன்னாள்.. 

ரமணனின் முகத்தில் படர்ந்த உணர்வினை மாளவிகாவினால் உணர்ந்து கொள்ள முடிந்தது.. அவளையுமறியாமல் அவளது பதிலின் மூலம் அவனுக்குள் இதம் பரவச் செய்து விட்டதை உணர்ந்து கொண்டவளின் மனதில் இதம் பரவியது..

வேண்டிய உணவு வகைகளைச் சொல்லி விட்டு.. காத்திருந்த நேரத்தில் அவளைப் பார்த்து மென்மையாகச் சிரித்தான் ரமணன்..

“என்ன படிச்சிருக்கீங்க..?”

அவனின் பேச்சில் விரவிக்கிடந்த ஆங்கிலத்தில் ஆர்வம் கொண்டவள்.. கேட்டாள்..

“எம்.ஈ முடிச்சுட்டு.. எம்.பி.ஏ பண்ணினேன்..” என்ற அவனின் பதிலில் அவளுக்குத் தூக்கி வாரிப் போட்டது..

“வாட்..?”

ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் பாய்ந்ததைப் போன்ற அதிர்வுடன் அவள் கேட்டதை எந்தவிதச் சலனமுமில்லாமல் அவன் முகத்தில் தவழ்ந்து கொண்டிருந்த புன்சிரிப்புடன் அவன் எதிர் கொண்டான்..

“எதுக்கு இந்த அதிர்ச்சி..? ஊம்..?” 

“ஷாக்காத்தான இருக்கும்..? இவ்வளவு படிச்சுட்டு ஏன்.. நீங்க..?” மேலே பேச முடியாமல் ஊமையானாள் மாளவிகா…

“துப்பாக்கியைத் தூக்கினேன்னு கேட்கறியா..?” அதே சலனமில்லாத முகத்துடன் அவன் கேட்டான்..

“அது.. அது.. வந்து..” மாளவிகா திணறினாள்…

“ரிலாக்ஸ்.. எதுக்கு இந்த தடுமாற்றம்..? என்கிட்ட எந்தக் கேள்வியையும் தைரியமா.. நீ கேட்கலாம்.. அதுக்கான உரிமை உன் ஒருத்திக்கு மட்டும்தான் இருக்கு..”

‘கடவுளே..! நான் இதைக் கேட்டேனா..’ மாளவிகா மனதுக்குள் புலம்பினாள்..

ஆனாலும்.. அவனைப் பற்றி அறியும் ஆர்வம் அவளுக்குள் கிளர்ந்து எழத்தான் செய்தது..

“அப்பான்னு சொல்கிறவன் ஒருத்தியை இழுத்துக்கிட்டு ஓடிட்டான்.. அவனோட துரோகத்தில பாதி செத்துப் போன என் அம்மா என்னோட பதினாலு வயசில முழுசா செத்துப் போயிட்டாங்க.. அதுக்கப்புறம் நான் அனாதையா நின்னேன்.. அப்ப என்னைத் தத்து எடுத்துக் கிட்டது அண்ணாச்சிதான்..” அவன் நெற்றியில் ரேகைகள் வந்தன…

“அண்ணாச்சின்னா..?” சந்தேகம் கேட்டாள் மாளவிகா…

“அப்படித்தான் எங்க ஏரியாவில இருக்கிறவங்க அவரைக் கூப்பிடுவாங்க.. அவர் பேச்சுக்கு எதிர் பேச்சு பேச மாட்டாங்க.. எல்லாப் பஞ்சாயத்தும் அவர்கிட்டத்தான் வரும்.. கல்யாணம் பண்ணிக்காம.. அவரைச் சுத்தி ஆளுகளை கூட்டமா வைச்சுக்கிட்டு வாழ்ந்தவர்.. என் நிலைமையைப் பார்த்து இரக்கப்பட்டு அவர்கூட கூப்பிட்டுக் கிட்டுப் போயிட்டாரு…”

“ஓ…”

“என்னைப் படிக்க வைச்சாரு.. அவரோட தொழிலின் நிழல்கூட என்மேல படாமத்தான் வளர்த்தாரு…”

“அப்புறம் எப்படி.. இப்படி..?” மாளவிகா சட்டென்று கேட்டு விட்டாள்..

ரமணனின் முகத்தில் லேசான வேதனையின் நிழல் படர்ந்தது…

“விதி..! வேறென்ன சொல்ல..? காலேஜில் நான் தான் பர்ஸ்ட்.. கோல்ட் மெடல் வாங்கினேன்.. எம்.ஈ. படிச்சேன்.. எம்.பி.ஏ.. படிக்கனும்னு நான் சொன்னதும் புனேவுக்கு அனுப்பி படிக்க வைச்சாரு அண்ணாச்சி.. உனக்கு இப்ப கேம்பஸ் இன்டர்வியூவில வேலை கிடைச்சிருக்கிறதைப் போலத்தான் எனக்கும் வேலை கிடைச்சுச்சு.. கனடாவில் வேலை.. படிப்பை முடிச்சதும் நாட்டை விட்டு பறக்க விசாவெல்லாம் ரெடியாகிருச்சு.. அண்ணாச்சிகிட்ட சொல்லிட்டுப் போக சென்னைக்கு வந்தேன்..”

“ம்ம்ம்..”

“அவர் பாசமா கட்டிப் பிடிச்சுக்கிட்டாரு.. நான் வெளிநாட்டில வேலை பார்க்கப் போகிறதுக்காக விருந்துக்கு ஏற்பாடு பண்ணியிருந்தார்.. ஆட்டம்.. பாட்டம்.. கொண்டாட்டம்ன்னு அந்த ராத்திரி அமர்க்களமா இருந்துச்சு.. விருந்து முடிஞ்ச அலுப்பில எல்லோரும் கண்ணசந்திருந்த சமயத்தில. ‘டூமீல் காத்தவராயன்..’ வீடு புகுந்து அண்ணாச்சியை வெட்டிட்டான்…”

“டுமீல் காத்தவராயனா..?”

“அவனை அப்படித்தான் கூப்பிடுவாங்க..”

“அவன் எதுக்காக அவரை வெட்டனும்..?”

கேள்வி கேட்ட மாளவிகாவைப் பார்த்த ரமணனின் இதழோரமாக விரக்திப் புன்சிரிப்பு நெளிந்தோடியது…

“குட் கொஸ்டின்.. எதுக்காக வெட்டனும்..? ஆனா அவன் அண்ணாச்சியை வெட்டினான்.. அதிகாரப் போட்டி.. அண்ணாச்சியை போட்டுத் தள்ளினாத்தான் அவன் பெரிய ஆளா வர முடியும்.. பக்கத்து ரூமில் படுத்திருந்த நான் அண்ணாச்சியோட சத்தம் கேட்டு எழுந்திருச்சு ஓடினேன்.. கையில கத்தியோட அவன் என் கண்முன்னாலேயே தப்பிச்சு ஓடிட்டான்.. என் மடியில அண்ணாச்சி உயிரை விட்டுட்டார்..”

அதற்கு மேல் என்ன ஆகியிருக்கும் என்று அவன் சொல்லாமலே மாளவிகாவிற்குத் தெரிந்து விட்டது…

வளர்ந்த இடம் வன்முறையாளனின் இடம் என்பதால்.. தங்கப் பதக்கம் வாங்கி வெளிநாட்டில் வேலை கிடைத்திருந்த இளைஞன் வன்முறையாளனாகி நிற்கிறான்.. இதற்கு யாரைக் குற்றம் சொல்வது..? அவனே சொல்வதைப் போல.. விதியைத்தானே குற்றம் சொல்ல முடியும்..?

‘விதி வலியது..!’

மாளவிகாவின் தூண்டுகோல் இல்லாமலே மளமளவென்று மனதிலிருந்த கடந்த காலத்தை கொட்ட ஆரம்பித்து விட்டான் ரமணன்..

“யோசிச்சுப் பாரு.. தகப்பன் சரியில்லை.. தாய் செத்துவிட்டாங்க.. அண்ணாச்சி மட்டும் இல்லைன்னா என் நிலைமை என்னவாகியிருக்கும்..? அவர் தாய்க்குத் தாயா.. தகப்பனுக்குத் தகப்பனா எனக்கு பாசம் காட்டி.. நிழல் கொடுத்து வளர்த்தாரு.. நான் கேட்ட படிப்பை படிக்க வைச்சாரு.. அவரை என் கண் முன்னாலேயே ஒருத்தன் வெட்டிக் கொன்னான்.. நான் அவனை விட்டு வைக்கலாமா..?”

‘விட்டு வைக்காமல் போனதினால உன் வாழ்க்கைப் பாதையே மாறிருச்சே…’ அனுதாபத்துடன் அவனைப் பார்த்தாள் மாளவிகா…

“நான் வெளிநாட்டை மறந்தேன்.. என் வேலையை மறந்தேன்.. அவன் ஓடி ஒளிஞ்சுக்கிட்டான்.. அவனைத் தேடி அலைஞ்சேன்.. ஒருவருசம்..! ஒரு வருசமா அவன் என் கண்ணிலேயே சிக்காம தண்ணி காட்டினான்.. எந்த அதிகாரத்தை அண்ணாச்சிகிட்ட இருந்து பிடுங்கணும்னு அவரை அவன் போட்டுத் தள்ளினானோ.. அந்த அதிகார பலத்தை அதிகப் படுத்தினேன்.. அண்ணாச்சியின் கோட்டையை பலமாக்கினேன்.. அவரோட விசுவாசமான வேலையாள்கள் சிதறிப் போய் விடாம நான் தலைமைப் பொறுப்பை எடுத்துக்கிட்டேன்.. ஒளிஞ்சிருந்தவனைத் தேடிக் கண்டு பிடிச்சு.. ஒருவருசம் கழிச்சு போட்டுத் தள்ளினேன்…”

ரமணனின் கண்களில் தெரிந்த வெறியில் மாளவிகா உறைந்து போனாள்..

0Shares

Reviews — Kaithotta Kalvane / கைத்தொட்ட கள்வனே

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link