Chapter 18

0Shares

ரமணன் சொல்லிய உணவுப் பதார்த்தங்கள் வந்து விட்டன… எதுவும் நடக்காததைப் போல மாளவிகாவின் முன்னால் தட்டுக்களை நகர்த்தி வைத்த ரமணன்…

“சாப்பிடு..” என்றான்…

மாளவிகாவினால் சாப்பிட முடியவில்லை.. துக்கம் அவள் தொண்டையை அடைத்தது.. சாப்பாட்டில் கவனம் போக மறுத்தது…

“மேய்ப்பன் இல்லாத ஆடு..

வழி மாறுமே…”

அவள் கேட்டிருந்த திரைஇசைப் பாடல் அவள் நெஞ்சத்தில் ஒலித்தது…

இதோ.. அவள் முன்னால் மேய்ப்பன் இல்லாத ஆடு வழி மாறியதைப் போல.. வழி மாறியவனாக அவன் உட்கார்ந்திருக்கிறான்.. அவன் மெத்தப் படித்தவன்.. உயர்ந்த வேலை அவனுக்காக காத்திருந்தது.. பார்வைக்கு பெண்களை வசீகரிக்கும் ஆண்மை மிகுந்த கம்பீரமான அழகோடு இருப்பவன்..

அவன் அவளைக் காதலிக்கிறான்.. அவளைக் காதலிப்பதற்கான கல்வித்தகுதியும்.. வேலைத்தகுதியும் அவனிடம் இருக்கின்றன.. கூடுதலாக.. அவனை அவளுக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால்.. அவனின் காதலை.. அவளால் ஏற்றுக்கொள்ள முடியாது..

ஏன்..?

அவன் வழி மாறிப் போனவன்..!

மாளவிகாவின் கண்கள் கலங்கின.. கண்ணீர் துளிகள் மேஜையில் சிதறி விடாமல் இமை கொட்டி அவள் தடுத்தாள்…

“ப்ளீஸ்.. இது சந்தோசமான நிமிசம்.. இப்பப் போய் நீ வருத்தப்படக் கூடாது.. சாப்பிடு..” என்றான் ரமணன்..

“என்னால முடியலையே..” துக்கத்துடன் சொன்னாள் மாளவிகா..

“முடியனும்.. என்னால முடியறப்போ உன்னாலேயும் அது முடியனும்.. சில நிமிசங்கள் நமக்கு பொக்கிச மானவை.. இந்த நிமிசமும் அது போலத்தான்.. இந்த நிமிசத்தை நினைக்கும் போது நம் மனசில சந்தோசம் மட்டுமே நிலைச்சிருக்கனும். எனக்காக இந்த சந்தோசத்தை நிலைக்க விடு.. அழுகாம சாப்பிடு..” பிரியத்துடன் பேசினான் ரமணன்..

அவனது பேச்சிலும்.. செயல்களிலும் இயல்பாக படிந்திருந்த நாகரிகத்தின் சாயல் அவனது படிப்பின் மூலமும்.. குடும்பப் பிண்ணனியின் மூலமும் அவனிடத்தில் வந்திருக்கிறது என்று நினைத்துக் கொண்டாள் மாளவிகா..

“அவன் செத்ததும் என்னாச்சு..?”

“ஒன்னுமே ஆகலை.. அண்ணாச்சியின் கொலையைக் கண்டுக்காம விட்டதைப் போல.. டுமில் காத்தவராயனின் கொலையையும் கண்டுக்காம விட்டுட்டாங்க.. அவங்களைப் பொறுத்தவரை இரண்டு ரவுடிகளை என்கவுண்டர் பண்ண வேண்டிய வேலை மிச்சமாகியிருச்சு..”

“நீங்க அதுக்குப் பின்னாலேயாவது பாரின் போயிருக்கலாமே…”

“போயிருக்கலாம்தான்.. என்கூடப் படிச்ச பிரண்ட்ஸ் அங்கே வேலையில இருக்காங்க.. நான் போயிருந்தா எனக்கும் வேலை வாங்கித் தந்திருப்பாங்க.. பட்.. இது புலிமேல சவாரி.. இறங்க முடியாது…”

“நீங்க இறங்க விரும்பலைன்னு சொல்லுங்க..”

மாளவிகாவின் கோபத்தைக் கண்ட ரமணன் அவளைச் சமாதானப் படுத்துவதைப் போலச் சிரித்தான்..

“இதை ஒன்னை கண்டுபிடிச்சு வைச்சிருக்கீங்க..” மனத்தாங்கலுடன் சொன்னாள் மாளவிகா..

“எதை..?” புன்னகையுடன் கேட்டான் ரமணன்…

“இந்தச் சிரிப்பைத்தான்.. எதைச் சொன்னாலும் சிரிச்சே தப்பிச்சிடுறீங்க..”

“ஹா… ஹா…”

“இதுக்கும் சிரிப்பா..?”

மாளவிகா குனிந்த தலையுடன் விழிகளை உயர்த்திக் கேட்ட விதத்தில் அவள் மீதான அவனின் பிரியம் அதிகரித்தது…

“துப்பாக்கியை எடுத்தவன் அவ்வளவு சீக்கிரமா அதை கீழே போட்டுற முடியாது மாலும்மா…”

“ஏனாம்..?”

“அது அப்படித்தான்.. சொன்னா உனக்குப் புரியாது..”

“ஆமாமாம்.. நான் ஃபீடிங் பாட்டிலோட இருக்கிற குழந்தை பாருங்க.. எனக்குச் சொன்னாப் புரியாதுதான்..” அவள் சிணுங்கினாள்..

“இல்லேங்கறியா..?” அவன் குறும்புடன் சிரித்தான்..

“அப்ப.. அமுல் பேபியைத்தான் நீங்க காபி சாப்பிடக் கூப்பிட்டிங்களாக்கும்..?”

“இது வெறும் காபியா..? ட்ரீட்ம்மா…”

பேச்சு திசை மாற.. மாளவிகா ரமணனின் கடந்த காலத்தை மறந்து உற்சாகமாக அவனிடம் பேசியபடி சாப்பிட ஆரம்பித்தாள்.. அவளின் குடும்பத்தைப் பற்றிச் சொன்னாள்..

“தெரியுமே..” என்றான் அவன்..

“தெரியாமல் இருந்தாத்தான் அதிசயம்..”

தலைசாய்த்து அவள் சிரித்த போது…

‘இவள்தான் அதிசயம்..’ என்று நினைத்துக் கொண்டான் ரமணன்..

சிரிப்பும்.. கேலியுமாக.. சாப்பாடு முடிந்தது.. காரில் ஏறியபோது..

“தேங்க்ஸ்..” என்றான் ரமணன்..

“அதை நான் சொல்லனும்..” என்றாள் மாளவிகா..

அவளின் வீட்டிற்குப் போகும் வழியில் அவள் இறங்கிக் கொண்டபோது ரமணனின் முகம் வாடி விட்டது..

“திரும்பவும் எப்பப் பார்க்கிறது..?” என்று கேட்டான்..

இனிப் பார்க்கவே முடியாது என்று எப்படி அவனிடம் சொல்வது என்று புரியாதவளாகத் தடுமாறிப் போனாள் மாளவிகா..

“தினமும் காலேஜிக்குப் போவ.. நீ பார்க்காதப்போ நான் மறைஞ்சிருந்து பார்த்துட்டுப் போயிடுவேன்.. இனி அது முடியாது.. நாளைக்கு என்னை பார்க்க வருவியா..?” ஏக்கத்துடன் கேட்டவனிடம்..

“நோ.. சான்ஸ்..” என்று மறுத்தாள் மாளவிகா…

அப்போது அவளுக்குத் தெரியாது.. மறுநாள் விடிந்தவுடன் அவனைத் தேடித்தான் அவள் ஓடப் போகிறாள் என்பது…

அதுபுரியாமல் தலையசைத்து விடைபெற்று விட்டு வீட்டைநோக்கி நடந்தாள்.. 

“எங்கேடி போயிட்டு வர்ற..? உனக்கு அப்பவே பரிட்சை முடிஞ்சிருக்கனுமே..” என்று கேட்டாள் மதுரா..

“பிரண்டோட சாப்பிடப் போனேம்மா..” பொய் சொல்லாமல் உண்மையைத்தான் சொன்னாள் மாளவிகா..

“ஓஹோ..” என்றதோடு அதற்கு மேல் கேள்வி கேட்காமல் விட்டுவிட்டாள் மதுரா…

அவள் மட்டும்.. ‘யார் அந்த பிரண்ட்..?’ என்ற கேள்வியைக் கேட்டிருந்தால் பதில் சொல்ல முடியாமல் திணறிப் போயிருப்பாள் மாளவிகா..

உடைமாற்றி முகம் கழுவியவளுக்கு.. தூக்கம் கண்களைச் சுழற்றியது.. ரமணனைப் பற்றிய நினைவுகளுடன் கட்டிலில் விழுந்தவள் மெல்லத் தூங்கிப் போனாள்…

சாயாங்காலம் கண் விழித்தபோது.. உடலில் அயர்வு மறைந்து சுறுசுறுப்பு திரும்பியிருந்தது.. முகம் கழுவி.. தலை வாரிப் பின்னலிட்டவள்.. மதுரா கொடுத்த பூவை வாங்கித் தலையில் வைத்துக் கொண்டு வாசல் பக்கமாக போனாள்.. மனதிலிருந்த உற்சாகத்தில் வாய்க்கு வந்தபடி பாடலைப் பாடியபடி தெருவைப் பார்த்தாள்..

தாடி மீசையுடன்.. வேட்டி சட்டை அணிந்து முண்டாசு கட்டி.. மஞ்சள் பையை கக்கத்தில் இடுக்கியிருந்த அந்த கிராமத்து வாசியின் முகம் அவளுக்குப் பரிச்சயமானதாகத் தோன்றியது..

‘யாரா இருக்கும்..?’ ஊன்றிப் பார்த்தவள் திகைத்துப் போனாள்..

அவன்.. ரமணன்..!

அவள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே லேசாக கண்சிமிட்டி விட்டு அவன் நடந்து தெரு முனையில் திரும்பிவிட்டான்..

‘கள்ளன்..’ அவள் முகம் சிவந்து விட்டது..

“ஹாய் அக்கா.. என்ன.. வாசலிலே ஹாயா நிக்கிற..?” அஸ்வின் வந்து விட்டான்…

தம்பியுடன பேசியபடி வீட்டுக்குள் நடந்தவள் திரும்பிப் பார்த்தாள்.. தெருமுனையில் அவன் இல்லை…

0Shares

Reviews — Kaithotta Kalvane / கைத்தொட்ட கள்வனே

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link