Chapter 20

0Shares

இந்த நேரத்தில் ரமணனைப் பற்றிய நினைவு எதற்காக வருகிறது என்று கலவரப் பட்டுப் போனாள் மாளவிகா…

‘இது கூடாதே…’ மனதிலிருக்கும் நினைவை அடித்து விரட்ட அவள் போராடிக் கொண்டிருந்த போது..

“தந்தை மகற்காற்றும் உதவி – சபையில்

முன்னிருக்கச் செயல்..”  என்றபடி காபியை

சிதம்பரத்தின் கையில் திணித்தாள் மதுரா…

“அப்படின்னா என்னம்மா…”

திடிரென்று தமிழ் ஆர்வலராக மாறினான் அஸ்வின்..

“வேற என்ன.. தகப்பன் மகனுக்கு செய்கிற உதவி எதுன்னா.. சபையில முன்னாலே நிற்க வைக்கிறதாம்.. அதாவது அவனை எதற்கும் ஏங்க விடாம.. கவனி அஸ்வின்.. பஸ்ஸில போக முடியலைன்னு சொன்னா டூவீலரை வாங்கிக் கொடுத்து மனசு கோணாம வார்க்கிறதாம்..” மகனுக்கு எடுத்துக் கொடுத்தாள் மதுரா..

“ஏண்டி.. வள்ளுவர் அப்படியா சொல்லியிருக்கார்..?”

“அதில அர்த்தம் தேடினா.. இந்த அர்த்தமும் சேர்ந்து தான் வரும்.. எப்பப்பாரு.. வள்ளுவரையே பஞ்சாயத்துக்கு கூப்பிடறது..”

“இதுக ரெண்டும் என்ன செஞ்சுகிட்டு இருந்தது கன்னு உனக்குத் தெரியுமா..?”

“தெரியாம என்ன..? மல்லுக் கட்டிக்கிட்டு இருந்துச்சுக..”

“தெரிஞ்சும் கிச்சனுக்குள்ள போய் ஒளிஞ்சுக் கிட்டியா..?”

“ஆமாம் சாமி.. அங்கே ஊஞ்சல் கட்டித் தொங்க விட்டிருக்கீங்க.. அதில நான் உக்காந்து ஒயிலா ஆடிக்கிட்டு இருக்கப் போறேன்.. எனக்கு பத்திக்கிட்டு வருது.. பேசாம இருங்க.. இங்கேயே உக்காந்து பஞ்சாயத்து பண்ணி.. பையடி வாங்க நான் ஆளில்ல..”

“அப்ப நான் பையால அடிவாங்கினது உனக்குத் தெரியும்..?”

“தெரியும்.. வேலையைப் பாருங்க..”

மதுரா உள்ளே போய் விட்டாள்.. வீட்டில் தனக்கான அதிகார நிலவரத்தைக் குறித்த அவசர ஆலோசனையில் ஆழ்ந்தார் சிதம்பரம்.. திருமணத்தை நினைத்தால் ரமணனின் நினைவு எதற்காக வருகிறது என்ற கவலையுடன் தனிமையைத் தேடி அவளுடைய அறைக்குள் போய் விட்டாள் மாளவிகா.. கிடைத்த வாய்ப்பை பயன் படுத்திக் கொண்டு சிதம்பரத்தின் உபதேசத்திலிருந்து தப்பித்து விட்டான் அஸ்வின்…

இரவு உணவு நேரம் வந்தது.. எல்லோரும் ஒன்று கூடிச் சாப்பிட்டார்கள்..

“எப்பம்மா வேலையில சேரனும்..?” மகளிடம் கனிவாகக் கேட்டார் சிதம்பரம்..

“நெக்ஸ்ட் வீக்ப்பா..” என்றாள் மாளவிகா…

“நீ வேலைக்குப் போறதில எனக்கு எவ்வளவு தெம்பாயிருக்குன்னு உனக்குத் தெரியாது மாளவிகா…”

“தெரியும்ப்பா..”

“பார்த்துப் பத்திரமா நடந்துக்கனும்..”

“ஆகட்டும்ப்பா..”

“நம்ம குடும்பத்தை நீயாவது முன்னுக்கு கொண்டு வரனும்..”

சிதம்பரம் நடிகர் திலகமாகி.. நாத்தழுதழுத்துக் கொண்டிருக்கும் போதே..

“ஆமாம் அக்கா.. நீ முன்னுக்கு கொண்டு வா.. பூமிகாக்கா பின்னுக்கு கொண்டு வரட்டும்..” என்று கடுப்படித்தான் அஸ்வின்…

“இந்த நேரத்தில எதுக்குடா அவ பேச்சை இழுக்கற..? நானே இந்த ஒரு மாசமா அவளை பிறந்த வீட்டுக்கு ஒட்டி விடாம குடும்பம் நடத்தற மாப்பிள்ளை.. எந்த நேரத்தில துரத்தி வைப்பாரோன்னு பக்கு.. பக்குன்னு பயந்துக்கிட்டு இருக்கேன்.. இதில 

நீ வேற பீதியைக் கிளப்பற..” என்று நெஞ்சை பிடித்துக் கொண்டாள் மதுரா..

“ம்ஹீம்.. அக்கா பேய்க்கு வாழ்க்கைப் பட்டா.. இங்கே அவ பிறந்த வீடே புளியமரத்தில தொங்குது..” மாளவிகா அலுத்துக் கொண்டே எழுந்து கை கழுவப் போனாள்…

மதுரா எந்த நேரத்தில் அந்த வார்த்தைகளைச் சொன்னாளோ.. விடியும் போதே.. தலையில் ரத்தம் வழிய கைக்குட்டையால் அதைக் கட்டுப் போட்டு தடுத்து நிறுத்தியபடி.. கண்ணீரும் கம்பலையுமாக ஆட்டோவில் வந்து இறங்கினாள் பூமிகா…

“அம்மா..” அவள் விம்மியழுத போது.. மதுராவின் பெற்ற வயிறு பற்றி எரிந்தது..

“மாசாமாசம்.. தீவட்டிக் கொள்ளைக்காரனைப் போல கழுத்தில கத்திய வைக்காத குறையாய் பொண்ண கொடும பண்ணி பொறந்த வீட்டுக்கு துரத்தி பணம் பறிக்கறான்.. இன்னும் அவனுக்கு திருப்தி வர மாட்டேங்குது.. இனிமே கொடுக்கிறதுக்கு எங்க கிட்ட என்ன இருக்கு..?” மகளைத் தோளில் சாய்த்துக் கொண்டு பொருமினாள் மதுரா..

“இந்த வீடு இருக்காம்மா..” வீட்டில் உள்ளவர்களின் தலையில் இடியை இறக்கினாள் பூமிகா…

“என்னது..?” அனைவரும் ஒருமித்த குரலில் அலறினார்கள்..

“ஆமாம்மா.. இந்த வீட்டை அவர் பேருக்கு எழுதிக் கொடுக்கனுமாம்.. நான் கேட்க மாட்டேன்னு சொன்னதுக்கு என்னை அடிச்சு சுவரிலயே தலையை பிடிச்சு மோதினாரும்மா…” கொட்டிக் கொண்டிருந்த ரத்தத்திற்கான காரணத்தைச் சொன்னாள் பூமிகா…

“இதென்னங்க அநியாயமா இருக்கு..? குடியிருக்கிற வீட்டையும் குடுத்துட்டா நாம எங்கே போவோம்..?” மதுரா பரிதவித்தாள்..

“ஊம்..? நடுத்தெருவில நிப்போம்..” அஸ்வின் வெடித்தான்..

“டேய் அஸ்வின்.. பொறுமையா இருடா..”

“என்னத்தம்மா.. பொறுக்கிறது..? அந்த ஆள் கேட்கிறப்ப எல்லாம் படியளந்தீங்கள்ல.. அதான் ஆட்டைக் கடிச்சு.. மாட்டைக் கடிச்சு.. கடைசியில ஆளையே கடிக்க வந்துட்டான்…”

அஸ்வின் கோபப்பட்டுக் கொண்டிருக்க.. அந்த நேரத்திலும் திருக்குறளைத் தெரியாதவனுக்கு இதுமட்டும் எப்படித் தெரிந்தது என்று குழம்பிப் போனார் சிதம்பரம்…

“எதுவா இருந்தாலும்.. அப்புறமாய் பேசலாம் அஸ்வின்.. இப்ப அக்காவ ஹாஸ்பிடலுக்கு கூப்பிட்டுக்கிட்டுப் போகனும்.. அதுதான் முக்கியம்..” அவசரத்திற்கு சுற்றப்பட்ட கைக்குட்டையின் மீது தனது சுடிதாரின் துப்பட்டாவை இறுகக் கட்டியபடி பேசினாள் மாளவிகா..

“அதைச் சொல்லு.. அந்த ஆளு மண்டையைப் பிளப்பான்.. நாம அதுக்கும் செலவு பண்ணி ட்ரீட்மென்ட் கொடுத்து இந்தாடா சாமி.. திரும்பவும் மண்டையை உடைடான்னு திருப்பி அனுப்பி வைக்கனும்.. என்ன கொடுமைடா சாமி இது…” அஸ்வின் வெறுத்துப் போய் பேசினான்..

மதுரா மௌனமாக கழுத்தில் தாலிக் கொடியுடன் கிடந்த ஒற்றைமெல்லிய தங்கச் சங்கிலியை அவிழ்த்து கணவனிடம் கொடுத்தாள்.. மனம் வலிக்க அதை வாங்கிக் கொண்டார் சிதம்பரம்..

“அடுத்து தாலிச் செயினா..?” ஏளனமாக கேட்டான் அஸ்வின்..

இரண்டு பிள்ளைகளைப் பெறாமல் இருந்திருந்தால் பிறந்த வீட்டை இந்தக் கதிக்கு ஆளாக்காமல் செத்துத் தொலைத்திருக்கலாமே என்று பரிதவித்துப் போனாள் பூமிகா…

அதை உனர்ந்து கொண்டவளாக தமக்கையின் தோள் மீது இதமாக விரல் அழுத்தி மௌனமாக ஆறுதலை உணர்த்தினாள் மாளவிகா..

“அடி இன்னும் கொஞ்சம் ஆழமா பதிஞ்சிருந்தாக் கூட உயிர் போயிருக்கும்.. வாட் இஸ் திஸ்..?” டாக்டர் கோபப் பட்டார்..

“மாடிப் படியில் கால் தடுக்கி..” மென்று விழுங்கினார் சிதம்பரம்..

“இந்தக் கதை இங்கே வேணாம்.. எத்தனை தடவைதான் இந்தப் பெண் மாடிப்படியில இருந்து உருண்டு விழுகும்..? எனக்கே கேட்டுக் கேட்டு அலுத்துப் போச்சு.. ரத்தம் கொதிக்குது.. மிஸ்டர் சிதம்பரம்.. ஒன்னு போலிஸ்கிட்ட உதவி கேளுங்க.. இல்லைன்னா இதைத் தட்டி கேட்கிற யாரிடமாவது பிரச்னையை கொண்டு போங்க..”

டாக்டர் சொல்லிக் கொண்டிருந்தபோது தான் மாளவிகாவுக்குள் அந்த மின்னல் வெட்டியது…

0Shares

Reviews — Kaithotta Kalvane / கைத்தொட்ட கள்வனே

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link