Chapter 21

0Shares

“என்னடா சொல்ற..?” ரமணன் அவசரமாக நாற்காலியை விட்டு எழுந்தான்…

“ஆமாண்ணே.. அண்ணி உங்களைத் தேடி வந்திருக்காங்க…” என்றான் தாமஸ்

“இங்கே வந்திருக்கிறாளா..? மாளவிகாவா..?”

தடதடவென்று மாடிப்படிகளில் இறங்கியவன் ஹாலில் அமர்ந்திருந்த மாளவிகாவின் முன்னால் போய் நின்றான்…

அறியாத இடத்திற்கு வந்திருக்கும் சங்கடத்துடன்.. கைவிரல்களின் மீது பார்வையைப் பதித்து விரல்கள் பின்ன அமர்ந்திருந்த மாளவிகா அவனைக் கண்டதும் பதட்டத்துடன் எழுந்து நின்றாள்…

“மாலு.. நீயா..” சந்தோசம் கொப்புளிக்க கேட்டான் ரமணன்..

“ம்ம்ம்..” மாளவிகா மிரண்ட பார்வையுடன் அந்த வீட்டைச் சுற்றிப் பார்த்தாள்..

“என்ன பார்க்கிற… இது நம்ம வீடுதான்.. உட்கார்..” ரமணன் சோபாவில் அமர்ந்து அருகில் கை காட்டினான்…

நீண்டிருந்த அந்த சோபாவில் இடைவெளி விட்டு தயக்கத்துடன் விலகி அமர்ந்தாள் மாளவிகா.. அவளுடன் பேசுவதற்கு வசதியாக ஒரு பக்கமாக சாய்ந்து அமர்ந்து கொண்ட ரமணன்..

“இங்கே நீ வருவேன்னு நான் எதிர்பார்க்கவே இல்லியா.. திடிர்ன்னு உன்னைக் கண்டதும் சந்தோசக் கூத்தாடனும் போல இருக்கு.. என்ன சாப்பிடற மாலு..” என்றான்..

“ஒன்னும் வேணாம்…”

“இதானே வேணாம்கிறது.. ஓகே.. நீ சொல்லலைன்னா என்ன.. என் சாய்ஸ் காபிதான்.. தாமஸ்..”

“அண்ணே..”

“சமையல்கார ராமையாகிட்ட இரண்டு கப் காப்பி கலந்து கொண்டு வரச் சொல்லு…”

“இதோ.. சொல்றேண்ணே…”

ஏறக்குறைய உள்ளே ஓடினான் தாமஸ்…

“அப்புறம்.. எப்படி வீட்டைக் கண்டு பிடிச்சே..” மாளவிகாவின் பக்கம் திரும்பிக் கேட்டான் ரமணன்..

“நேத்து பேசிக்கிட்டு இருந்தப்ப நீங்க இந்த ஏரியாவோட பெயரைச் சொன்னீங்க.. உங்க பெயரைச் சொன்னா ஊருக்கே தெரிஞ்சிருக்கு.. உங்க வீட்டைச் சொன்னா உங்க ஏரியா மக்கள் தெரியலைன்னு சொல்லிரு வாங்களா..?” கேலியாகத் தலையை சாய்த்துக் கேட்டாள் மாளவிகா…

“இன்ட்ரெஸ்டிங்..” ரசித்தான் ரமணன்…

மாளவிகா அதற்கு மேல் பேசாமல் யோசனையுடன் விரல்களைக் கோர்த்துப் பிரித்தபடி அமர்ந்திருந்தாள்..

“அண்ணே.. காபி..”

காபிக் கோப்பைகளுடன் வந்தவர்தான் சமையல்கார ராமையாவாக இருக்கக் கூடும் என்று யூகித்தாள் மாளவிகா..

“இதான் அண்ணிங்களா..? அந்த மகாலட்சுமியையே நேரில பார்க்கிறதைப் போல இருக்காங்க..” ராமையா வாத்சல்யத்துடன் மாளவிகாவைப் பார்த்தார்…

அவளைப் பார்ப்பதற்காகவே தாமஸிடம் காபியைக் கொடுத்து விடாமல் வேலை மெனக்கெட்டு அவரே காபிக் கோப்பைகளை எடுத்து வந்திருக்கிறார் என்று நினைத்துக் கொண்டாள் மாளவிகா..

அந்த நினைவு அவளுக்கு சங்கடத்தைக் கொடுத்தது.. என்னதான் ரமணனை அவளுக்குப் பிடித்திருந்தாலும்.. அவள் அவனைத் திருமணம் பண்ணிக் கொள்ளப் போவதில்லை.. என்றிருக்கும் போது.. இப்படிப் பட்ட பாசப் பார்வைகளை எதிர் கொள்வதில் உள்ள சங்கடத்தை அனுபவித்தாள் மாளவிகா..

“இவதான் உங்க அண்ணி ராமையா…”

உல்லாசச் சிரிப்போடு காபிக் கோப்பையை வாங்கி அவளிடம் ரமணன் நீட்டிய போது நீ சொல்வது தவறு என்று ஆட்சேபிக்க அவளால் முடியவில்லை..

பார்த்தது போதுமென்று ராமையா போய்விட.. ரமணன் மாளவிகாவையே சந்தோசத்துடன் பார்த்தபடி காபியை உறிஞ்சிக் கொண்டிருந்தான்.. அவன் பார்வையில் கன்னம் சிவந்தவளாய் பார்வையை தழைத்துக் கொண்டு காபியை உறிஞ்ச ஆரம்பித்தாள் மாளவிகா… திடிரென்று எதையோ நினைத்துக் கொண்டவளாக ரமணனைப் பார்த்தாள்.. அவன் புருவங்களை உயர்த்தினான்…

“கேளு..”

“எதை..?”

“நீ எதைக் கேட்க நினைக்கிறயோ.. அதை..”

“உங்களைவிட வயசில் மூத்தவங்ககூட உங்களை அண்ணன்னு கூப்பிடறாங்களே..”

மாளவிகாவின் சந்தேகத்தைக் கேட்டவன் வரிசைப் பற்கள் தெரிய சிரித்தான்..

‘இவன் சிரிக்கறப்போ அழகா இருக்கறான்..’

மாளவிகாவுக்கு முழுமனதாக அவனை ரசிக்கவும் முடியவில்லை.. ரசிக்காமல் இருக்கவும் முடியவில்லை..

“அது அப்படித்தான்..”

ரமணன் சிரித்து முடித்து விட்டு.. நிமிர்ந்து அமர்ந்தான்..

“இப்பச் சொல்லு.. எதுக்காக என்னைத் தேடிவந்த..? ஏதாவது அவசர காரியம் இல்லைன்னா நான் இருக்கிற இந்த வீட்டுக்கே நீ தேடி வந்திருக்க மாட்ட.. என்ன விசயம் மாளவிகா..?”

பிரச்னையுடன் தான் அவள் அவனைத் தேடி வந்திருக்கிறாள் என்பதை அவன் இனம் கண்டு கொண்டு விட்ட நன்றியுணர்வில் பொலபொலவென்று கண்ணீரை உகுத்துவிட்டாள் மாளவிகா..

“ஏய்ய்.. மாளவிகா.. அழுகிறயா..?” அவன் பதறிப் போனவனாக அவளை நெருங்கி அமர்ந்தான்…

அவளுக்கு இருந்த துயரத்தில் அது அவளின் கவனத்தில் படவில்லை.. கண்ணீர் வழிய.. பூமிகாவின் பிரச்னையை சொல்லி முடித்தாள்..

“ஒவ்வொரு தடவையும் உயிர்தப்பி வந்து சேர்றா.. இப்படியே இருந்துருன்னு சொல்லலாமுன்னா.. அந்த ராட்சசன் அவகிட்டேயிருந்து பிள்ளைகளைப் பிடுங்கி வைச்சுக்கிட்டுத்தான் துரத்தி விடறான்.. அப்பாவைத் துன்பப் படுத்தறோமேங்கிற குற்ற உணர்வு அவளுக்கும் இருக்கத்தான் செய்யுது.. ஆனா பிள்ளை பாசம் அவளை திரும்பவும் அந்த ராட்சசன் கிட்டேயே இழுக்குது…”

“ம்ம்ம்..”

“அவளுக்கு கல்யாணத்தப்போ கேட்ட நகை.. சீர்வரிசையைவிட.. நூறு மடங்கு அதிகமா.. மாசாமாசம் அப்பா அவனுக்கு கப்பம் கட்டிக்கிட்டு இருக்காரு.. 

மிச்ச மிருந்தது இந்த பழைய வீடுதான் அதையும் இப்ப எழுதி வாங்கிட்டு வான்னு அக்காவை துரத்தி விட்டிருக்கான்..”

மாளவிகா சொன்னதையெல்லாம் பொறுமையாக கேட்டுவிட்டு ரமணன் பேசினான்..

“தப்பு அவன் மேல இல்லை.. உன் அப்பா மேலயும் உன் அக்கா மேலயும்தான் தப்பு…”

“என்ன நீங்க..? இப்படிச் சொல்றிங்க..? விடிய விடிய ராமாயணம் கேட்டுட்டு.. விடிஞ்ச பின்னாலே கௌசல்யைக்கு மகன் அனுமான்னு சொன்ன மாதிரியில்ல இருக்கு.. அவன் செய்கிற அட்டூழியத்துக்கு அவங்க ரெண்டு பேரும் என்ன செய்வாங்க..?”

“எதுத்து நின்னிருக்க வேணாமா..? அவன் முதன் முறையாய் உங்க அக்காவை அடிச்சு விரட்டினப்பவே உன் அப்பா ஊரைக் கூட்டி நியாயம் கேட்டிருக்கனும்.. உன் அக்கா அவன்கூட வாழ முடியாதுன்னு சத்யாக்கிரகம் பண்ணியிருக்கனும்..”

“அவன் பிள்ளைகளை பிடிச்சு வைச்சிருந்தானே..”

“நாள் பூராவும் அவன் குழந்தைககூடவா உட்கார்ந்திருக்கப் போறான்..? பிள்ளைகளை ஸ்கூலுக்கு அனுப்ப மாட்டானா..? அங்கேயிருந்து உங்க அக்கா பிள்ளைகளை கூப்பிட்டுக்கிட்டு வந்துட்டா அவனால என்ன செய்ய முடியும்..?”

“வீட்டுக்கு வந்து பிள்ளைகளை அனுப்பி வைன்னு தகராறு பண்ணினா என்ன செய்றது..?”

“அனுப்ப முடியாதுன்னு சொல்றது.. அவன் போலிஸீக்குப் போனா வரதட்சனை கேட்டுக் கொடுமை பண்றான்னு அவன் மேல நீங்க கம்ப்ளெயிண்ட் கொடுக்க வேண்டியதுதானே..? பிள்ளைகளை அவன்கிட்ட வளர விடுவது பாதுகாப்பில்லைன்னு சொல்ல வேண்டியது தானே..”

அவன் சொல்லச் சொல்ல.. இதையெல்லாம் ஏன் செய்யாமல் போனோமென்று திகைத்து விட்டாள் மாளவிகா…

0Shares

Reviews — Kaithotta Kalvane / கைத்தொட்ட கள்வனே

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link