Chapter 28
“அப்பா..”
“என்னம்மா…”
“நம்ம பூமிகா வாழற வாழ்க்கையைப் பார்த்ததில இருந்து எனக்கு கல்யாணம்ன்னாலே அலர்ஜியா கிருச்சுப்பா…”
அடுத்த காரணத்தைக் கண்டுபிடித்தாள் மாளவிகா..
“அவளுக் கென்னம்மா.. ராணியைப் போல இருக்காளே.. மாப்பிள்ளை ஆரம்பத்தில அப்படி.. இப்படி இருந்தாலும் இப்ப மனசு மாறி பூமிகாவை தாங்கு.. தாங்குன்னு தாங்கறாரே.. இதைச் செய்ய வைத்தது யாரும்மா..?”
‘ரமணன்…’
“அந்த நல்ல மனுசனுக்கு வாழ்க்கைப்பட உனக்கு வாய்ப்பு கிடைச்சிருக்கப்ப கண்டதையும் நினைச்சு மனசை குழப்பிக்கலாமா..?”
‘அப்படியா..? நான் ரமணனைக் கல்யாணம் பண்ணிக்கவா..?’
“கார்த்திக் மட்டும் இல்லைன்னா பூமிகாவோட புருசன் திருந்தியிருப்பாரா..?”
‘ஐயோ அப்பா.. அவனைத் திருத்தினது இந்த பொய் சொல்லியில்லை.. ரமணன்..’
“கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு முன்னாலேயே நம்ம குடும்பத்து மேலே இத்தனை அக்கறையும்.. பரிவும்.. பாசமுமா இருக்கிறவர் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்ட பின்னாலே எப்படியெல்லாம் இருப்பார்..?”
‘கடைஞ்செடுத்த அயோக்கியனா இருப்பான்.. இவனுக்கு பூமிகாவோட புருசனே தேவலைன்னு நினைக்க வைச்சிருவான்…’
“இவரைப் போல நல்லவங்க பூமியிலே இருக்கிறதாலே தான் கொஞ்சமாவது மழை பெய்யுது…”
‘இவன் வில்லாதி வில்லன்ப்பா.. அது தெரியாம பேசறிங்களே..’
“போம்மா.. போய் மனதைக் குழப்பிக்காம தயாராகு..”
“எதுக்குப்பா..?” அதுவரை தகப்பன் பேசியதற் கெல்லாம் மனதுக்குள் பதிலளித்துக் கொண்டிருந்த மாளவிகா கேட்டாள்..
“என்னம்மா இப்படிக் கேட்டுட்ட.. உனக்கு விசயமே தெரியாதா..?”
“என்ன விசயம்..?”
“இன்னும் கொஞ்ச நேரத்தில.. கார்த்திக் பெத்தவங் களோட முறைப்படி உன்னைப் பெண் கேட்டு வரப் போகிறாரும்மா…”
“அப்பா…”
மாளவிகாவின் திகைப்பை கவனிக்காமல் வீட்டை ஒழுங்கு பண்ணக் கிளம்பி விட்டார் சிதம்பரம்.. சமையலறையில் விதம்.. விதமான பதார்த்தங்களை செய்து தள்ளி கொண்டிருந்த மதுரா.. ஊடே கிடைத்த நேரத்தில் மகளை அதட்டி உடை மாற்றிக் கொள்ள வைத்து.. ஒப்பனை செய்து விட்டாள்..
‘அந்த கார்த்திக் சும்மாவே என்கிட்ட கெத்து காட்டுவான் இப்ப பெண் பார்க்கன்னு வந்தா என்ன திமிர் காட்டப் போறானோ…’ மாளவிகா தலையில் கை வைத்துக் கொண்டாள்..
அவள் நினைத்தபடிதான் நடந்தது.. கார்த்திக் தோரணையாய் கால் மேல் கால் போட்டுக் கொண்டு அமர்ந்து மாளவிகா அத்தனை நாள்களாய் அவனைப் பார்த்த இகழ்ச்சிப் பார்வையை அவளை நோக்கி பார்த்து வைத்தான்.. அவனைப் பெற்ற கோதாவரியோ மதுராவை ‘எனக்கு நீ இணையா..?’ என்று கேட்கும் பார்வையை பார்த்து வைத்தாள்.. இவை எதையும் செய்யாமல் பொம்மை போல வந்து அமர்ந்தது தண்டபாணி மட்டும்தான்..
சம்பிரதாய பேச்சு வார்த்தைகள் தேவையில்லாத சொந்தக்காரர்களாக அவர்கள் இருந்து விட்டதினால் ஒருவரையொருவர் நலம் விசாரித்துக் கொண்டார்கள்.. மாளவிகாவை அழைத்தபோது வர மாட்டேன் என்று சொல்ல முடியாமல் அவளும் அவர்களுடன் சேர்ந்து அமர்ந்து பேசி வைத்தாள்..
“வளர்ந்துட்டா..” மகனைப் பார்த்துச் சொன்னாள் கோதாவரி…
“யெஸ்..” என்ற கார்த்திக்கின் பார்வை.. உரிமையுடன் மாளவிகாவை உச்சிமுதல்.. உள்ளங்கால் வரை மேய்ந்தது..
அத்தனை நாள்களாக கடைபிடித்து வந்த நல்லவன் வேடத்தை கடைபிடிக்க வேண்டிய அவசியமில்லாத அவனின் அந்த துச்சாதனப் பார்வையில் அருவெறுத்து விட்டாள் மாளவிகா…
“சின்னப் பிள்ளையில பார்த்தது..” என்ற கோதாவரியிடம்…
“இல்லையே.. ஊடே ஒருநாள் கோவிலில் உங்களைப் பார்த்தேனே…” என்று கேட்டு கடுப்படித்தாள் மாளவிகா..
‘திமிர்..’ தாயும்.. மகனும் ஒன்று போல நினைத்தவர்களாய் பல்லைக் கடித்தனர்..
கோதாவரி அதைக் கண்டு கொள்வேனா என்று இயல்பாக முகத்தை வைத்துக் கொண்டு பேச்சைத் தொடர்ந்தாள்..
“அப்பறம் அண்ணா.. என் தங்கை வீட்டிலே பெண்ணெடுத்துத்தான் ஆகனுமுன்னு இவர் கட்டாயப் படுத்திட்டாரு.. நம்ம கார்த்திக்கோ ஐ பி எஸ் ஆபிசர்..
எங்க தகுதிக்கும்.. கார்த்திக்கோட பதவிக்கும்.. உங்க வீட்டிலே சம்பந்தம் பண்றது சரிவராதுதான்.. என்ன செய்யறது..? கார்த்திக்கோட அப்பாதான் பாசமழையை கொட்டறாரே.. சரி.. அவரோட ஆசையைக் கெடுப்பானேன்னு அவரு தங்கச்சி மகளைப் பெண் கேட்டு வந்திருக்கோம்…”
“அதுக்கென்னம்மா.. கார்த்திக்கிற்கு மாளவிகாவைக் கொடுக்க நான் கொடுத்தில்ல வைச்சிருக்கனும்..?”
“தெரிஞ்சா சரி.. இவனுக்கு ஜட்ஜ் வீட்டிலே தான் பெண் எடுக்கிறதா இருந்தோம்… அந்தப் பொண்ணு வீட்டுக்கு ஒரே வாரிசு.. அவருக்கு சென்னையிலேயே நாலு பங்களா இருக்கு…”
“நாங்களும் மாளவிகாவை வெறும் கழுத்தா அனுப்ப மாட்டோம்.. சீர் வரிசையை குறைக்க மாட்டோம்…”
“கல்யாணத்துக்கான தாலியையும்.. முகூர்த்தப் புடவையையும் நாங்க எடுத்துருவோம்.. கல்யாணத்தை நீங்க நடத்தி வச்சிரனும்…”
மறுக்க முடியாத சிதம்பரம் ஜபிஎஸ் மாப்பிள்ளையின் மீதிருந்த மோகத்தினால் அதை ஒப்புக் கொண்டார்…
“பொண்ணு வேலைக்குப் போகிறா.. சரி.. கல்யாணத்துக்கு அப்புறம் இவ எங்க வீட்டுப் பொண்ணா ஆகிருவா..”
“நிஜம்தானேம்மா…”
“அதுக்கப்புறமா பிறந்த வீட்டுக்கு அதைச் செஞ்சேன்.. இதைச் செஞ்சேன்னு ஆரம்பிச்சா நல்லாயிருக்காது அண்னா.. எதையும் தெளிவா முன்னால பேசிடறது நல்லதில்லையா…?”
“மாளவிகாவோட கையை எதிர்பார்த்து இந்தக் குடும்பம் இல்லைம்மா…”
“அப்புறம்.. இன்னொரு விசயம்.. எங்க வீட்டிலே ஆம்பளைகளுக்கு கட்டுப்பட்டுத்தான் பொம்பளைக இருக்கனுமுன்னு நினைப்போம்…”
அதுவரை கணவனை வாய் திறக்க விடாமல் பேசிக் கொண்டிருந்த கோதாவரி இப்படிச் சொன்னதும்.. அப்பாவியான சிதம்பரத்துக்கே சிரிப்பு வந்து விட்டது.. மகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு சிரிப்பை அடக்கிக் கொண்டார்.. அதற்கு அவசியமில்லாத அஸ்வின் வாய் விட்டுச் சிரித்து வைக்க.. மதுரா.. சமையலறைக்குள் சிரிப்பதற்காகவே சென்று விட்டு வந்தாள்..
“எங்க வீட்டிலேயும் அப்படித்தான்ம்மா…”
“எதுக்குச் சொல்றேன்னா.. கல்யாணத்துக்கு அப்புறமா.. அவளோட சம்பள கவரை புள்ளி விவரத்தோட கார்த்திக் கையில கொடுத்துரனும்.. இதை கட் அன்ட் ரைட்டா மனசில பதிய வைச்சுக்கங்க…”
“இப்ப என்கிட்ட கொடுக்கிற கவரை கல்யாணத்துக்கு அப்புறமா மாப்பிள்ளை கையில கொடுக்கப் போறா.. அவ்வளவுதானே…”
அவ்வளவுதானா என்று துயரத்துடன் நினைத்துக் கொண்டாள் மாளவிகா.. அவள் சம்பள கவரை பெற்றவரின் கையில் கொடுத்தது அவளைப் பெற்று வளர்த்து.. படிக்க வைத்து ஆளாக்கியவரின் நன்றிக்கடனை கழிப்பதற்காக.. அதை கார்த்திக்கிடம் கொடுக்க வேண்டியது எந்தக் கடனைக் கழிப்பதற்காக..?
Reviews — Kaithotta Kalvane / கைத்தொட்ட கள்வனே
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.