Chapter 30
முதல் முறையாக அவள் கை தொட்டு அவன் இழுத்ததில் உடலில் மின்சாரம் பாய்ந்ததைப் போன்ற உணர்வை உணர்ந்தாள் மாளவிகா.. அதுவரை அதுபோன்ற நூதன உணர்வுகளை அவள் உணர்ந்த தில்லை.. ஆண்களிடம் எட்டி நின்று பேசும் சூழ்நிலையில் அவள் வளரவில்லை.. கூடப் படித்த நண்பர்களைத் தொட்டுப் பேசும் பழக்கமுள்ளவள்தான் அவள்.. அவளின் நட்பு வட்டாரத்தில்.. ஆணும்.. பெண்ணும் சரிசமமான எண்ணிக்கையில் இருப்பார்கள்…
அவர்களைத் தொட்டுப் பேசும் போது.. சக மனித ஜீவனிடம் பேசிக் கொண்டிருக்கும் உணர்வுதான் அவளுக்கு வரும்.. ஒரு ஆணிடம் தொட்டுப் பேசிக் கொண்டிருக்கும் உணர்வு அவளுக்குள் வந்ததில்லை.. அவர்களில் யாரின் தொடுகையும் பெண்ணென்று அவளை உணர வைத்ததில்லை…
அன்று அவளைப் பெண்ணென்று உணர வைத்தான் ரமணன்.. அவனின் இறுக்கமான பிடியில் வலித்த அவளின் கை.. இதமான இம்சையை அவள் மனதுக்கு உணர்த்தியது…
“இது வரை
இல்லாத உணர்விது..
இதயத்தில் உண்டான அதிர்விது..”
ரெஸ்டா ரென்டின் மூலையில் ஒலித்துக் கொண்டிருந்த பாடல் அவள் மனதை படம் பிடித்துக் காட்டியது..
ரமணனின் இறுக்கமான பிடியிலிருந்து விடுபட முடியாதவளாய் அவள் உட்கார்ந்தாள்..
“உன் மனசில என்னடி நினைச்சுக்கிட்டு இருக்கிற..? நான் உன்னைக் காதலிக்கிறேன்னு உனக்குத் தெரியுமா.. தெரியாதா..?”
“தெரியும்..”
“அப்புறமும் ஏண்டி நீ கல்யாணத்தைப் பத்தி என்கிட்டப் பேசலை…”
“ரமணன்.. நீங்க உங்க பக்கத்தையே பேசறிங்க.. என்பக்கமும் கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க…”
“என்னத்தைடி யோசிக்கச் சொல்ற..?”
“என் குடும்பம் மிடில் கிளாஸ் குடும்பம்.. நான் தனி மனுஷியில்லை.. என் கூடப் பிறந்தவங்க.. பெத்தவங்க.. இவங்களையும் நான் பார்க்கனும்.. உங்களைக் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு இவங்ககிட்ட நான் சொல்ல முடியுமா..?” மாளவிகா கேட்டு விட்டாள்…
ரமணன் அவளைப் பார்த்த பார்வையை ஆயுளுக்கும் மறக்க முடியாது என மாளவிகா துயரம் கொண்டாள்..
அடிபட்ட பறவையின் ஆக்ரோசத்தை அந்தப் பார்வையில் அவள் கண்டாள்.. அவனுடைய ரௌத்திரம் அதிகரித்தது…
“ஆமாண்டி.. என்னைக் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு உன்னால சொல்ல முடியாதுதான்.. கட்டின பெண்டாட்டின்னு பாக்காம.. பேடித்தனமா பொம்பளையை அடிச்சு.. மண்டையை உடைச்சு.. பணம் கேட்டு துரத்தி விட்டானே உன் அக்கா புருசன் கங்காதரன்.. அவனைக் கல்யாணம் பண்ணிக்கப் போகிறேன்னு உன் அக்கா சொல்லலாம்.. என்னைக் கல்யாணம் பண்ணிக்கப் போகிறேன்னு நீ சொல்லிர முடியாது தான்.. இல்லையா..?”
அவன் கேள்வியில் தாக்கப்பட்டாள் மாளவிகா..
“ஆக்சுவலா.. அவன் மேல கொலை முயற்சி.. பிளாக் மெயில்ன்னு.. ஆயிரம் கம்ப்ளெயிண்ட்களை கொடுக்கலாம்.. ஆனா நீங்க அதைச் செய்ய மாட்டிங்க.. ஏன்னா.. இந்த சொஸைட்டியிலே அவன் மேல ரௌடின்னு முத்திரை குத்தி வைக்கலியே.. அதையெல்லாம் செய்யாம.. கொலைகாரன்களைத் துரத்திக் கொன்ன என்மேலதானே அந்த முத்திரை குத்தப் பட்டிருக்கு..?”
அவனின் வார்த்தைகளில் வெளிப்பட்ட மனவேதனையை தாங்க முடியாதவளாக கண்மூடிக் கொண்டாள் மாளவிகா…
“ஏய்ய்.. இந்த சொஸைட்டியில நல்லவன்னு முத்திரை குத்தப் பட்டிருக்க ஒவ்வொருத்தனோட பொய் முகத்துக்குப் பின்னாலே ஒரு அயோக்கிய முகம் ஒளிஞ்சிருக்குடி.. அது உனக்குத் தெரியாது.. எனக்குத் தெரியும்.. நான் ரௌடியாகனும்னு ஆசைப்பட்டா ரௌடியானேன்..? உனக்கு கிடைச்சதைப் போல
நல்ல தகப்பன் எனக்குக் கிடைக்கலியே.. உங்க அம்மா உன் பக்கத்திலேயே இருந்து பார்த்துக்கிறாங்க.. எனக்கு அந்தக் குடுப்பினை இல்லையே..”
அவனின் வார்த்தைகளில் துடித்துப் போனாள் மாளவிகா…
‘உன் கண்ணில் நீர்வழிந்தால்..
என் நெஞ்சில்..
உதிரம் கொட்டுதடி…’
என்று ஆண்தான் சொல்ல வேண்டுமா.. பெண் அதைச் சொல்லக் கூடாதா…?
‘என் கண்ணில் பாவையன்றோ..
கண்ணப்பா…
என்னுயிர் நின்னதன்றோ…’
என்று அவன் சாய்ந்து கொள்ள தோள் கொடுக்கக் கூடாதா…?
அவள் கொடுக்கத்தான் நினைத்தாள்.. தாயின் மடியாய் தன் மடியைக் கொடுத்து அவனைத் தாங்கிக் கொள்ளத்தான் நினைத்தாள்.. உனக்காக நான் இருக்கிறேன் என்று தேற்றத்தான் நினைத்தாள்.. உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என்று கேட்கத்தான் நினைத்தாள்..
நினைப்பதையெல்லாம் சொல்ல முடியும் வரம் இந்த மனித ஜீவன்களுக்கு வாய்க்கவில்லையே…
அந்த வரம் கிடைக்காத மாளவிகாவும் துக்கத்துடன் தன் நினைவை ரமணனிடம் சொல்ல முடியாமல் மனதுக்குள்ளேயே புதைத்தாள்…
“ஓடிப்போன தகப்பன்.. செத்துப் போன அம்மா.. இவங்களுக்கு பிள்ளையாய் பிறந்தவன் ஒண்ட இடம் கிடைச்சா.. அது முள் மரமா இருந்தாலும் அதை ஆலமர நிழலாத்தான நினைப்பான்..? நானும் அப்படித்தாண்டி நினைச்சேன்…”
ரமணன் அழவில்லை.. அவன் கண்களில் கண்ணீரின் சாயல் துளிக்கூட இல்லை.. ஆனால் அவனின் வார்த்தைகள் துயரத்தில் தோய்ந்து வெளிவந்தன..
“ஓடி போன என் தகப்பன்.. ஊருக்கு முன்னாலே உத்தமனாத்தான் வேசம் போட்டான்.. ஒதுக்கப்பட்ட மகனா நான் தெருவில் நின்னப்ப ஆதரவு கொடுத்த அண்ணாச்சியை இந்த ஊரும்.. உலகமும்.. அயோக்கியன்னுதான் சொல்லுச்சு.. ஆனா.. கடவுளுக்குத் தெரியும்டி.. நல்லவன் யாரு… கெட்டவன் யாருன்னு…”
ரமணனிடமிருந்து தீக்கங்குகளாய் தெறிந்து விழுந்த வார்த்தைகள்… அவனின் அவலத்தை வெளிப்படுத்தின…
“அண்ணாச்சி மனுசன்டி.. அண்டி வந்தவருக்கு நிழல் கொடுத்த ஆலமரம்.. அவர் செய்த வேலை தப்பாயிருக்கலாம்.. அவர் தப்பான மனுசனில்ல.. அனாதையா தெருவில நின்ன சின்னப் பையனை தத்தெடுத்துக்கனும்னு எந்த மனுசனுக்குடி தோணும்..?
நீ சொல்றியே.. இந்த வொயிட் காலர் உத்தமன்கள்.. அவனுகளில யாராவது ஒரு ஆளுக்கு அது தோணுமா..? அவருக்கு தோணுச்சேடி.. அவர்தான் மனுசன்டி..”
மாளவிகா உதட்டைக் கடித்துக் கொண்டு தலை குனிந்தாள்.. ரமணனின் கேள்விக் கணைகளுக்கான பதில் அவளிடத்தில் இல்லை..
“அவரை ரௌடின்னு இந்த உலகம் சொல்லுச்சு.. அவர் வளர்த்த எனக்கும் அந்தப் பெயர் வந்திரக்கூடாதுன்னு அவர் அரும்பாடு பட்டாருடி.. அவரோட நிழலில்தான் வளர்ந்தேன்.. ஆனா.. என்னை படிக்க வைச்சு.. வேலை பார்க்கிறதுக்கான தகுதியைக் கொடுத்து.. உயரத்தில உட்கார வைச்சார்.. என்ன செஞ்சு என்ன பண்ண..? த்ச்சு.. நீ கேட்டியே ஒரு கேள்வி.. உன்னை மாப்பிள்ளைன்னு என் வீட்டுக்கு எப்படி அடையாளம் காட்ட முடியும்ன்னு.. இந்த ஜென்மத்துக்கும் அந்த ஒரு கேள்வி போதும்டி.. மறக்க முடியாதுடி..”
ஏன் இந்த ஜென்மத்தை எடுத்தோமென்று அந்த நொடியில் வெறுத்துப் போனாள் மாளவிகா. அப்படிப்பட்ட வார்த்தைகளைச் சொல்லி காதலித்தவனின் மனதை சல்லடையாக்கி விட்ட துக்கத்தில் நொந்து போனாள்…
Reviews — Kaithotta Kalvane / கைத்தொட்ட கள்வனே
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.