Chapter 41
“என்ன சொல்ற கிருஷ்ணா..?” ரமணனின் முகம் இறுகியது..
“ஆமாண்ணே.. அந்த கார்த்திக்.. அண்ணியோட குடும்பத்தில இருக்கிற அத்தனை பேரையும் விசாரனைங்கிற பேரில ஸ்டேசனில உட்கார வைச்சிட்டான்…,” செல் போனில் சொன்னான் கிருஷ்ணன்….
“எதுக்காம்..?”, ரமணன் கோபத்துடன் கேட்டான்…
“தாம்பரத்தில நடந்த குண்டு வெடிப்பில.. நீங்க சம்பந்தப் பட்டிருக்கீங்களாம்.. அண்ணி உங்களோட காதலிங்கிறதினால.. அவங்களுக்கும் இதில சம்பந்த மிருக்காம்.. அண்ணியோட குடும்பமும் இதில சம்பந்த பட்டிருக்குமோன்னு போலிஸ் துப்புத் துலக்குதாம்..” கிருஷ்ணன் விலாவாரியாக எடுத்து சொன்னான்..
“இப்படியெல்லாம் கதை கட்டினது யாருடா..?”
“அந்த கார்த்திக்தாண்ணே…”
“அவனுக்கு அவ்வளவு தைரியம் எங்கிருந்து வந்துச்சு..?”
“தைரியமில்ல அண்ணே.. பணம் வந்திருக்கு..”
“பணமா..?”
“ஆமாண்ணே.. ரெண்டு கோடி கைமாறியிருக்காம்..”
“ஓ… எனக்கு விலை வைச்சிருக்கானுகளா..? எவன்.. அவன்…?”
“மணி..!”
“நினைச்சேன்.. அவன்தான் இந்த குள்ள நரி வேலையைப் பண்ணுவான்னு.. இன்னும் அவன் அடங்கலையா..?”
“அடங்க மாட்டான்ணே.. உங்களை உள்ளே தள்ளி போட்டுத் தள்ளிரலாம்ன்னு பிளான் பண்ணியிருக்கானாம்.. அவனைப் போட்டுத் தள்ளிரனும்னு நம்ம பசங்க துடிக்கிறானுக அண்ணே.. செஞ்சிரலாமான்னு கேட்கத்தான் போன் போட்டேன்…”
“செஞ்சிருங்க..” ரமணன் போனை அணைத்து விட்டான்…
சுழித்தோடிக் கொண்டிருந்த காட்டாற்றைப் பார்த்தவனின் விழிகளில் துயரம் அப்பியிருந்தது..
‘கடைசி வரைக்கும் புலியிலதான் சவாரி செய்தாகனுமா..?’ கசப்புடன் நினைத்துக் கொண்டான்…
ஒரு பெருமூச்சுடன்.. ஆற்றங்கரையிலிருந்து வீட்டை நோக்கி நடந்தான்.. வீட்டுக்குள் நுழையும் போதே.. குழம்பு தாளிக்கும் வாசனை அவன் மூக்கில் நுழைந்தது.. சமையலறையிலிருந்து எட்டிப் பார்த்த மாளவிகா அவனைப் பார்தததும் கண்சிமிட்டிச்
சிரித்தாள்..
‘இவளின் குடும்பமே என்னால் ஸ்டேசனில் உட்கார்ந்திருக்குன்னு தெரிய வந்தா.. இவ என்னைப் பத்தி என்ன நினைப்பா..?’ அவன் மனம் வலித்தது…
‘வெறுத்திருவாளோ..’ அவன் கண்மூடி.. தலையைப் பிடித்தபடி சோபாவில் சரிந்தான்…
சொல்லாமல் மறைத்து விடலாம்.. மாளவிகாவை அவன் கடத்திக் கொண்டு வந்து ஆறுமாதங்களகி விட்டன.. முதல் நாளுக்குப் பின்னால்.. அதைப்பற்றி மாளவிகா அவனிடம் பேசியதேயில்லை.. திரும்பிப் போகும் எண்ணமில்லாதவளாக.. அவனுடன் அந்த வாழ்க்கையில் அவள் ஐக்கியமாகி விட்டாள்.. அவனுடன் கழிக்கும் ஒவ்வொரு வினாடியையும் அனுபவித்து.. ரசித்துக் கழித்தாள்.. அவனும்.. அவளும் மட்டும் வசிக்கும் அந்த வீடும்.. அந்த வாழ்வும்தான் நிரந்தரம் என்பது போல வாழ்ந்து வந்தாள்…
அவளிடம் ரமணன் அந்த விவரத்தை சொல்லாமல் விட்டுவிட்டால்.. அவளுக்காய் எதுவும் தெரியப் போவதில்லை.. அவனை விட்டுச் செல்லும் எண்ணமில்லாமல் வாழ்ந்து கொண்டிருப்பவளிடம் அந்த விவரத்தைச் சொல்ல வேண்டாம் என்றுதான் ரமணனின் அறிவு அவனை எச்சரித்தது.. ஆனால் அவனின் மனம்அதை மறுத்தது..
அவளைப் பெற்றவர்களும்… கூடப் பிறந்தவனும்.. ரமணனுடன் அவள் சம்பந்தப் பட்டு விட்ட ஒரே காரணத்துக்காக துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.. அதையறியாமல் பூவாய் சிரித்து.. மகிழ்வுடன் அவனுக்காக அவள் சமைத்துக் கொண்டிருக்கிறாள்..
அப்படிப்பட்ட நேசம் கொண்டவளிடம் அவளின் குடும்பத்திற்கு நடந்து கொண்டிருக்கும் கொடுமையை மறைத்து வாழ்வதென்பது ரமணன் செய்யும் காரியம் அல்லவே..
ரமணன் பெருமூச்சுடன் விட்டத்தைப் பார்த்தான்… அவனுக்குத் தெரியும்.. அந்த விவரத்தை அவன் சொல்லிய அடுத்த நொடியிலேயே.. அவனை விட்டு அவள் பிரிந்து விடுவாள் என்பது…
‘நான் சொன்னேன் பார்த்தீங்களா..’ என்று கேட்பாள்.. எங்களைப் போன்ற வாழ்க்கை முறையை உடையவர்கள் உன்னைப் போன்ற வாழ்க்கை முறையை உடையவனுடன் சகவாசம் வைத்துக் கொண்டால் இதுதான் நடக்கும் என்று பொங்குவாள்.. உன்கூடப் பழகிய பாவத்திற்கே என் குடும்பத்தை ஸ்டேசனில்
கொண்டு போய் உட்கார வைத்து விட்டார்கள்.. இன்னும் உன்னைக் கல்யாணம் செய்து கொண்டால் என்குடும்பம் என்ன கதிக்கெல்லாம் ஆளாகுமோ என்று கேள்வி கேட்பாள்…
அது அத்தனையையும் ரமணன் தாங்கிக் கொண்டுதான் ஆக வேண்டும்.. அவள் பிரிவைக் கேட்டால் அதையும் கொடுத்துத்தான் ஆக வேண்டும்..
‘இது எனக்கான சாபம்..’ கண் சிவந்தான் ரமணன்..
‘எனக்கு எதுவும் நிலைக்காது.. முதலில் அம்மா.. அடுத்து அண்ணாச்சி.. இப்ப உயிரோட இவ பிரியப் போறா.. இத்தனையையும் தாங்கிக்கிட்டு நான் வாழனும்..’ தலையில் கைவைத்து மனதுக்குள் அவன் குமுறினான்…
“சாப்பாடு ரெடி.. சாப்பிட வரலாம்…”
தட்டில் கரண்டியை வைத்து அடித்தபடி சமையலறையிலிருந்து வெளியே வந்த மாளவிகா அவன் அமர்ந்திருந்த கோலத்தைக் கண்டதும் தட்டை நழுவ விட்டாள்…
“ரமணன்..” அவனருகில் பாய்ந்து ஓடி.. மண்டியிட்டு அமர்ந்து அவன் முகம் பார்த்தாள்…
கலங்கிச் சிவந்திருந்த அவனின் கண்களும்.. கலைந்திருந்த அவனின் தலைமுடியும்.. நடக்கக் கூடாத ஏதோ ஒன்று நடந்து விட்டதை அவளுக்கு உணர்த்தின..
“என்ன ஆச்சு ரமணன்..?” அவன் தோள் பிடித்து உலுக்கினாள்…
“மாலு..” தன்னை திடப் படுத்திக் கொண்ட ரமணன் முழுவிவரத்தையும் சொல்லி விட்டான்…
‘இதோ விலகப் போறா.. இப்ப வெளியில ஓடிருவா.. என்னை வீட்டில கொண்டு போய் விடுடான்னு கத்தப்போறா…’
ரமணன் அவளின் முகம் பார்க்கும் தெம்பில்லாமல் எழுந்துநின்று விட்டான்.. அவளை சென்னையில் கொண்டு போய் விட்டு விட வேண்டும் என்ற நினைவோடு வெளியே பார்த்தான்…
மாளவிகாவிடமிருந்து எந்தப் பேச்சும் வராமலிருக்கவும்.. மயங்கி விட்டாளோ என்ற பதட்டத்துடன் அவளைப் பார்த்தான்.. அவன் மயங்கியிருக்கவில்லை.. முழங்கால் களைக்
கட்டித் தரையில் அமர்ந்து.. தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தாள்…
“மாளவிகா..” ரமணனின் குரல் நடுங்கியது…
“என்ன செய்யலாம்..? இதைப் பத்தி நீங்க என்ன யோசிச்சிருக்கீங்க..” என்று அவள் கேட்டதும்.. அவனுக்கு திகைப்பாகி விட்டது…
“இதைச் செய்ததது கார்த்திக்.. செய்யவைத்தது மணி.. அவனை போட்டுத்தள்ளப் போறதா கிருஷ்ணன் சொன்னான்..”
“எந்த அடிப்படையில உங்க பேரை இதில இன்வால்ப் பண்ணியிருக்காங்கன்னு கேட்டிங்களா..?”
அவள் அவளுடைய குடும்பத்தைப் பற்றி விசாரிக்காமல் அவனைப் பற்றி விசாரித்ததில் அவனின் ஆச்சரியம் அதிகமானது..
“இன்னும் அதைப் பத்தி எதையும் கேட்கலை…”
“முதல்ல அதைத் தானே நீங்க செய்திருக்கனும்..?”
“மாளவிகா.. அங்கே மாட்டிக்கிட்டு இருக்கிறது உன் குடும்பம்..”
“நம்ம குடும்பம்ன்னு சொல்லுங்க…”
மாளவிகாவின் தீர்க்கமான குரலில் ரமணனின் உடலில் புதுரத்தம் பாய்ந்தது.. நம்ப முடியாத பிரமிப்புடன் அவன் மாளவிகாவைப் பார்த்தான்…
‘மாளவிகாவா இப்படிச் சொல்கிறாள்…?’
“என்ன அப்படிப் பார்க்கறீங்க.. சந்தோசம் வந்தா கூடச் சேர்ந்து சிரிக்கிறதுக்குப் பெயர்தான் காதலா..? கஷ்டம் வந்தா கூடச் சேர்ந்து நிற்கிறதுக்குப் பெயர்தான் காதல்…”
“மாலு..” ரமணன் நாத்தழுதழுத்தான்..
“அப்பா.. அம்மா.. அஸ்வின்னு.. நம்ம குடும்பத்து ஆளுக கஷ்டப்படறாங்கதான்.. ஆனா.. அதைப் பார்த்துக் கிட்டு நீங்க சும்மா இருப்பீங்களா..? அதில இருந்து அவங்களை வெளியே கொண்டு வந்திர மாட்டிங்களா..?”
“செய்வேண்டி.. கட்டாயம் செய்வேன்..”
“எனக்கு அந்த நம்பிக்கையிருக்கு..”
“நீ என்ன சொல்வியோன்னுதான் கலங்கிப் போயிருந்தேன்…”
“எதையும் சொல்ல மாட்டேன்.. அங்கே கஷ்டப் படறது உங்க மாமனார்.. மாமியார்.. மச்சினன்.. உங்க குடும்பம்.. எதைச் செய்து அவங்களைக் காப்பாத்தனுமோ.. அதைச் செய்ங்க.. அதை விட்டுட்டு கலங்கிப் போய் நிற்காதீங்க.. என் ரமணன் அஞ்சா நெஞ்சன்.. கலங்கி நிற்க மாட்டார்…”
ரமணன் உணர்ச்சி வசப்பட்டவனாக அவளை இழுத்து அணைத்துக் கொண்டான்…
‘நன்றி தெய்வமே.. இவள் என்னை விட்டுப் போகமாட்டான்னு நிருபிச்சுட்டா.. இவளோட அன்பையும்.. காதலையும் எனக்கு நிலைக்க வைச்சே.. அதுக்கு உனக்கு.. என் நன்றி…’
அவளை இறுக்கியிருந்த கைகளுக்குள் சொந்தத்துடன் பிணைந்து நின்ற மாளவிகாவைப்
பார்க்கப் பார்க்க அவனுக்குள் புது ரத்தம் பாய்ந்தது..
அதற்குப் பின்னால் ரமணன் மிக வேகமாக செயல்பட்டான்.. சென்னையிலிருந்த அவனின் நெருங்கிய நண்பர்களுக்குத் தகவல் போனது.. மாளவிகாவின் குடும்பத்தைக் காக்க வக்கீல் கார்த்திக்கைத் தேடிப் போனார்…
“நான் அட்வகேட் பரந்தாமன்..”
கார்த்திக் அரண்டு விட்டான்.. வந்திருப்பது சென்னையில் கலக்கிக் கொண்டிருக்கும் கிரிமினல் லாயர் என்பதில் அவனுக்குள் உதறலெடுத்தது.. இருந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் கெத்தாக இருக்க முயன்றான்..
“ஸோ.. வாட்..?”
“நிறைய இருக்கு சார்.. எதுக்காக இவங்களை ஸ்டேசனுக்கு கொண்டு வந்திருக்கீங்க..?”
சிதம்பரத்தின் குடும்பத்தைக் காட்டி பரந்தாமன் கேட்ட போது.. அவரை அனுப்பியது யாராக இருக்கக் கூடும் என்ற கேள்வியுடன் அவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்..
“வந்திருக்கது.. டாப் மோஸ்டில இருக்கிற லீடிங் லாயர்ப்பா…”
“அவரு எப்படிடா நமக்காக வந்தாரு..?”
“வேணும்னா.. அவரை வேணாம்ன்னு திருப்பி அனுப்பிருங்க…”
“எதுக்காகடா கோபிச்சுக்கறே..?”
“பின்னே என்னப்பா..? இப்ப இருக்கிற நெருக்கடியில இவரை யார் அனுப்பினாங்கங்கிற ஆராய்ச்சி நமக்கு அவசியமா..?”
“அதானே.. உங்கப்பாவுக்கு வாயைத்திறக்கறதுக்கு முன்னாலே யோசிக்கனும்கிற எண்ணமே கிடையாதுடா அஸ்வின்…”
அவர்கள் தாழ்ந்த குரலில் வழக்கடித்துக் கொண்டிருக்க.. கார்த்திக் அசிரத்தையாக முகத்தை வைத்துக் கொண்டு..
“எண்கொயரி பண்ணக் கூப்பிட்டுக்கிட்டு வந்திருக்கோம்..” என்று சொன்னான்…
“கூப்பிட்டுக்கிட்டு வந்திருக்கேன்னு சொல்லுங்க..”
“வாட் டு யு மீன்..?”
“நீங்க இதை சொந்தப் பகைக்காக செய்கிறீங்கன்னு சொல்கிறேன்..”
“அதை கோர்ட்டில வந்து சொல்லுங்க…”
“அது எதுக்கு வேஸ்டா..? இப்பவே இதை பேசித் தீர்த்துக்கலாம்.. இவங்க பெண்ணை நீங்க மேரேஜ் பண்ணிக்க நினைச்சீங்க.. அது முடியலைங்கிறதினால இவங்களை இங்கே கொண்டு வந்து உட்கார வைச்சிருக்கீங்க…”
“வார்த்தைகளை அளந்து பேசுங்க மிஸ்டர் பரந்தாமன்..”
“ஏன் சார்..? அதைக் கொட்டிட்டா.. சூட்கேஸில் அள்ள முடியாதா..?” பரந்தாமன் இடக்காக வினவ…
‘இந்த ஆளுக்கு எப்படி சூட்கேஸைப் பற்றித் தெரியும்..?’ என்று மிரண்டு போனான் கார்த்திக்…
“ஊருக்கே தெரியும் கார்த்திக்.. விஜிலென்சில் உங்க வீட்டில நுழைஞ்சு.. சூட்கேஸில இருக்கிற ரெண்டு கோடியை கைப் பத்திட்டாங்க…” என்றார் பரந்தாமன்…
“என்னது..”
அடிமேல் அடிவாங்கினாலும்.. அந்த நிலைமையில் குற்றத்தை ஒப்புக் கொண்டால்.. பின் விளைவுகள் மோசமானதாக இருக்கும் என்ற நினைவில்..
“அந்த ரௌடி வேலையைக் காட்டிட்டானா..? என் வீட்டில் சூட்கேஸை வைச்சு.. விஜிலெஸீக்கு தகவல் கொடுத்தா.. அந்தப் பணத்தை நான்தான் யார்கிட்ட- யிருந்தோ வாங்கினேன்னு ஆகிருமா.. இதை கோர்ட்டில் பார்த்துக்குவேன்.. நீங்க இப்ப கிளம்புங்க..
இந்தக் குடும்பத்துப் பெண்.. பயங்கரவாதி ரமணன் கூட தொடர்பா இருந்திருக்கா.. அவளுக்கும் குண்டு வெடிப்பில சம்பந்தமிருக்கு.. அதனால.. இவங்களுக்கும் அதில சம்பந்தமிருக்க சான்ஸிருக்குங்கிற சந்தேகத்தின் பேரில விசாரிச்சுக்கிட்டு இருக்கோம்..” என்று கதை பிணைந்தான் கார்த்திக்…
பொறுமையாக அவன் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த பரந்தாமன்.. தோள்களைக் குலுக்கி…
“நீங்க பேசாம கதை எழுதப் போகலாம்..” என்றார்..
“மைன்ட் யுவர் வெர்டுஸ்..”
“பர்ஸ்ட்.. மைண்ட் யுவர் பிஹேவியர்.. நீங்க சொல்கிற ரமணன் பயங்கரவாதியில்லை.. சொஸைட்டியில மதிப்பும்.. மரியாதையுமா இருக்கிற வி.ஐ.பி. அப்புறம் மாளவிகா அவரோட தொடர்பில இருக்கிறவங்க இல்ல.. அவரோட மனைவி.. அதுக்கப் புறமா.. நீங்க சொல்கிற குண்டு வெடிப்புக்கும் அவங்களுக்கும் சம்பந்தமில்ல.. அந்தச் சம்பவம் நடந்தப்ப.. மிஸ்டர் ரமணன் டெல்லியில் இருக்கிற தொழில் துறை மந்திரிகூட பேசிக்கிட்டு இருந்தார்.. அதுக்கான வீடியோ கேசட்டே எங்ககிட்ட இருக்கு..”
“வாட்..?”
“யெஸ்.. ரமணன் மாஜிஸ்ட்ரேட் முன்னாலே ஆஜராகி அவருக்கும்.. மாளவிகாவுக்கும் முன்ஜாமின் வாங்கிட்டார்.. அவர் மேல இருக்கிற குற்றச்சாட்டு பொய்ன்னு கோர்ட்டில நாங்க புரூவ் பண்ணுவோம்.. இப்பவாவது இவங்களை என்கூட அனுப்பி வைக்-கறீங்களா..?”
பரந்தாமன் கேட்டுக் கொண்டிருந்த போதே.. கார்த்திக்கின் செல்போன் அலறியது.. எடுத்துப் பேசியவன் முகம் வியர்த்தான்.. பேசி முடித்தவனிடம்…
“கமிஷனர் கொடுத்துக் கட்டினாரா..?” என்று கிண்டலாகக் கேட்டார் பரந்தாமன்…
பல்லைக் கடித்தபடி.. பதில் பேசாமல் சிதம்பரத்தின் குடும்பத்தை அனுப்பி வைத்து விட்டான் கார்த்திக்.. அவர்கள் வெளியேறிக் கொண்டிருந்த போது.. விஜிலென்ஸைச் சேர்ந்தவர்கள் உள்ளே வந்தார்கள்..
“உங்க கறை படியாத கையை கோர்ட்டில் புரூவ் பண்ணுங்க..” பரந்தாமன் விஜிலென்ஸை கைகாட்டி விட்டு கிளம்பினார்…
‘பணமும் போய்.. விஜிலென்ஸீக்கும் பதில் சொல்லியாகனுமா..?’ கார்த்திக்கிற்கு நெஞ்சு வலி வந்துவிட்டது…
அவனைக் குடைந்து விட்டு விஜிலென்ஸ் கிளம்பிய போது.. மணியின் பிணம் கூவத்தில் மிதப்பதாக அவனுக்கு தகவல் வந்தது…
‘அடுத்தது நானா..?’ கார்த்திக் நடுங்கிப் போனான்..
“அறிவிருக்கவன் அந்த ரமணனைப் பகைச்சுக்கு வானா..?” கோதாவரி கொதித்து விட்டாள்..
உப்பைத் தின்றவன் தண்ணீரைக் குடித்து தப்பிக்கலாம்.. உப்பு மூட்டையையே முழுங்கினவனுக்கு.. குடிக்கக் கிடைத்த ஒரு துளி தண்ணீரும் கடல் தண்ணீராக இருந்தால் என்ன பண்ணுவான்..?
கார்த்திக் மார்பை பிடித்துக் கொண்டு சரிய.. அவனை மருத்துவ மனையில் சேர்த்தார்கள்..
“இந்த சின்ன வயசிலேயே ஹார்ட் அட்டாக்காம்..” என்று சொன்னார் சிதம்பர…
“அவனுக்கு ஹார்ட் இருக்கா..?” சந்தேகம் கேட்டான் அஸ்வின்..
அவர்கள் பேசிக் கொண்டிருந்த போது.. அவர்கள் வீட்டு வாசலில் வெளிநாட்டுக் கார் ஒன்று வந்து நின்றது.. ரமணனுடன் மாளவிகா காரிலிருந்து இறங்கி நின்றாள்…
Reviews — Kaithotta Kalvane / கைத்தொட்ட கள்வனே
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.