Chapter 03
கண் பார்க்க முடியாமல் போனாலும் – உன்னைக்
காதலித்து விடக் கனாக் கண்டேன்…
சின்னஞ்சிறு வயதில் மனதில் செதுக்கப்பட்ட ஓவியமாய் அவனது உருவம் மீராவின் மனதில் பதிந்து விட்டது.
வாழ்க்கையில் நாம் பலரைச் சந்திக்கலாம்.. அதில் சிலரைத் திரும்பவும் சந்திக்கவே முடியாமல் போகலாம்.. ஆனால் இந்த வாழ்க்கை அறிமுகப்படுத்துகிற கோடானு கோடி முகங்களில்.. ஒரு முகம் மட்டும்.. உள்ளத்திலே பதியக் காரணம் என்ன…?
விளங்காமல் பரிதவித்தாள் மீரா.. தன் கையில் கிடைத்த அரிய பொருள் காணாமல் போய்விட்டதைப் போல் தவித்தாள். பெண்ணென்று மலர்ந்த பின் இன்று வாழ்க்கை..! தொலைதூர தொடுவானாய்.. அவளது கைக்கெட்டாமல் விலகிப் போய் விட்டதா..?
“தொடுவானின் நிழலொன்றும்
தொட்டு விடும் தூரம்மில்லை – அதை
எட்டி விரல் தொட்டுவிட்டால்
என் மனதில் பாரமில்லை…”
ஏங்கித் தவித்த இதயம் கவிதை எழுதியது.. இயலாமையால் மனம் சுருங்கித் துவண்டது.. பாரம் சுமந்த மனம்.. பாரத்தை இறக்க வழி தெரியாமல் தவித்தது.. துடித்தது..
‘ஓடும் நதியினிலே…
ஒருத்தி மட்டும் கரையினிலே…
உடலை விட்டு… உயிர் பிரிந்து..
பறக்குதம்மா… வெளியினிலே…’
முன்னறையிலிருந்து திரைப்படப்பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.. ஏன் அழுகிறோம் என்று தெரியாமல் அவள் அழுதாள்.. சொல்லத் தெரியாமல்.. சொல்ல வழியில்லாமல் அவள் அழுதாள்..
‘பிஞ்சாக நானிருந்தேனே…
பெண்ணாக மாற்றி விட்டானே…’
முன்னொருமுறை அவள் கேட்ட பாடலுக்கு அர்த்தம் அன்று விளங்கவில்லை.. இன்று அவளுக்கு விளங்கியது.
நெடுநாள்கள் அந்த சோகம்… மீராவின் மனதை ஆக்ரமித்துக் கொண்டிருந்தது. அடிக்கடி, அவள் பத்திரப்படுத்தி வைத்திருந்த பேப்பரில் இருந்த அவனது புகைப்படத்தை எடுத்துப் பார்ப்பாள். அதிலேயே மனநிறைவு அடைந்துவிட்டவளாக ஒரு பெருமூச்சுடன் அதைப் பழையபடி துணிகளுக்கு அடியில் வைத்துவிட்டு.. நடைமுறை வாழ்வுக்கு திரும்பி விடுவாள்..
மேல் நிலைப்பள்ளியில் இரண்டாம் ஆண்டு முடித்த பின்பு மீரா.. கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸை முக்கிய பாடமாக எடுத்து பட்டப்படிப்பை படிக்க ஆரம்பித்த போது.. கோகுல் வெளிநாட்டில் வியாபாரத்தை விஸ்தரிக்க.. பறந்து போய் விட்டான்.
‘கோகுல்…’
அவனது பெயரை மீரா உச்சரிக்காத நாளே இல்லை.. ஆனால்.. இப்படியொருத்தி அவனுக்காக உருகுவதை அறியாமல் அவன் தன் தொழில் சாம்ராஜ்யத்தை விஸ்தீரணப்படுத்துவதில் மும்முரமாய் மூழ்கி விட்டான்.
எஸ்டேட் பங்களாவிற்கு கோகுலின் தந்தை ராம்நாத்தும் அவனுடைய தாய் சாரதாவும் வரும்போதெல்லாம்.. மீராவின் மனம் எதிர்பார்ப்பில் படபடக்கும்.
“அம்மா.. அப்பாவுக்கு சாப்பாடு கொண்டு போகவா..?”
“உனக்கு ஏன் வீண் வேலை..? அவரே வந்து விடுகிறேன்னு சொல்லியிருக்கிறார்.. நீ படிப்பைக் கவனி..”
“நேரமாகிவிட்டதே…”
“அதெல்லாம் நேரமாகவில்லை.. இப்ப என்ன சாப்பாட்டு நேரம் தாண்டியா போய்விட்டது…?”
“நான் கொண்டு போகிறேன்ம்மா…”
“இது என்னடி.. புதிதாய் பிடிவாதம் பிடிக்கிறாய்…?”
இந்திரா கொடுக்கும் சாப்பாட்டுக் கூடையை வாங்கிக் கொண்டு போகும்போது.. மீராவின் மனம் படபடக்கும்.
‘அவன் வந்திருப்பானா..? அவனை நான் பார்த்து விடுவேனா…?’
வாசவனிடம் சாப்பாட்டுக் கூடையைக் கொடுக்கும் மீராவிடம் சாரதா கனிவுடன் புன்னகைப்பாள். அருகே அழைத்து அவளின் படிப்பு பற்றி விசாரிப்பாள்.
தான் கோகுலின் தாயிடம் பேசிக் கொண்டிருக்கிறோம் என்ற நினைவில் புல்லரித்துப் போவாள் மீரா.. அவனுடைய தாய் என்பதால் சாரதாவின் மேல் அவளுக்குள் அன்பு ஊற்று பெருக்கெடுக்கும்.
இது மனித இயல்பு.. இன்னும் சொல்லப் போனால் இது காதலின் முக்கிய இயல்பும்கூட…
ஒருவரை நேசிக்க ஆரம்பித்துவிட்டால்.. அவர் சார்ந்த அனைத்து விசயங்களையும் நேசிப்பது.. ஆராதிப்பது…
‘உன் சுற்றம்.. இனி என் சுற்றம்…’
என்ன மாதிரியான உணர்வு இது.. மீராவுக்குள் அந்த உணர்வு பொங்கிப் பிரவாகமாய் எழுந்தது…
கோகுல் அதற்குப்பின் அங்கு வந்ததே இல்லை.. ஒரு முறை ரிஷி.. கோகுலின் பெற்றோருக்குத் துணையாக வந்திருந்தான். வளர்ந்து.. இளம் பெண்ணாக நின்ற மீராவைப் பார்த்து ஆச்சரியப்பட்டான்.
“ஏய்.. நீ அந்த குட்டிப் பெண்ணில்லை…?”
“நானொன்றும் குட்டிப் பெண்ணில்லை.. மீரா…”
ரோசத்துடன் அவள் கூற.. பலமாய் சிரித்தான்.
“இதைப் பாருடா கோபம் வருவதை.. ஆமாம்.. என்ன படிக்கிறாய்…?”
“பி.எஸ்.ஸி. கம்ப்யூட்டர் சயின்ஸ்…”
“பரவாயில்லையே.. கோகுலின் கம்ப்யூட்டர் கம்பெனியிலேயே வேலைக்கு சேர்ந்துவிடு.. மேற்கொண்டு எம்.சி.ஏ. படித்துக் கொண்டே வேலையும் செய்யலாம்..”
அவன் இயல்பாகக் கூற.. மீராவின் மூளையில் மின்னலாய் அந்த யோசனை பளிச்சிட்டது.
“இப்படியும் ஒரு வழி இருக்கிறதா…?”
அவள் உற்சாகத்துடன் நிமிர்ந்தாள். அவளுக்குத் தேவை வேலையில்லை. அதன் மூலம் வரும் சம்பளமுமில்லை. அவனது நிழலில் அவள் வாழ வேண்டும். அது போதும் அவளுக்கு..
“எனக்கு சென்னையில் வேலை கிடைக்குமா…?” மீரா ஆவலாய் ரிஷியைக் கேட்டாள்.
“ஏன் கிடைக்காது..? உன் அப்பா.. காலம்காலமாய் இந்த எஸ்டேட்டில் வேலை செய்கிறவர்.. உனக்கு கோகுலின் கம்பெனியில் வேலை கிடைக்காவிட்டால் வேறு யாருக்குக் கிடைக்கும்…?”
“ப்ளீஸ்.. எனக்காக நீங்கள் உங்கள் ஃபிரண்டிடம் பேசுகிறீர்களா..?”
“அவனே வெளிநாட்டில் இருக்கிறான். அவனிடம் என்ன பேச வேண்டியிருக்கிறது..? இதோ அவனுடைய அம்மாவே உன் முன்னால் வந்திருக்கிறாங்க. இவங்க கிட்ட வேலை கேளு.. அவன் தாய் சொல்லைத் தட்டாத தனயன்.. அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரில் கையெழுத்துப் போட்டு.. வெளிநாட்டிலிருந்தே அனுப்பி வைப்பான். கைக்குள் வெண்ணெயே இருக்கிறது.. நீயேன் நெய்யைத் தேடி அலைகிறாய்…?”
ஏதுமறியாமல் ரிஷி விளையாட்டாக வழிகாட்டி விட்டான்..
மீரா தயக்கத்துடன் சாரதாவை நெருங்கினாள்..
அவளுடைய முகத்தைப் பார்த்தே அவள் எதையோ கேட்க விரும்புவதை யூகித்துக் கொண்டாள் சாரதா…
“என்னம்மா.. என்ன விஷயம்…?”
“மேடம்.. அது வந்து.. வந்து…”
“அதுதான் வந்துவிட்டாயே.. விசயத்தைச் சொல்லு..”
“எனக்கு இந்த வருடம்படிப்பு முடிகிறது மேடம்..”
“ஓ.. அப்படியா..? மேலே என்ன செய்யப் போகிறாய்..?”
சாரதா கேட்க.. மீரா சாரதாவின் முதுகிற்குப் பின்னால் நின்று கொண்டிருந்த ரிஷியைப் பார்த்தாள். அவன்,
“கேளு.. கேளு…” என்பது போல் சைகை செய்தான்.
“எனக்கு வேலை பார்த்துக் கொண்டே மேலே படிக்கணும்னு ஆசை மேடம்..”
“பரவாயில்லையே.. வாசவனின் கஷ்டத்தை உணர்ந்த பெண்ணாக இருக்கிறாயே…”
சாரதா பாராட்ட.. மீரா மனத்திற்குள் குற்ற உணர்வை அனுபவித்தாள்.
அவள் வேலை செய்து கொண்டே படிக்க ஆசைப்படுவது தகப்பனாரின் குடும்பச் சுமையைக் குறைப்பதற்காக இல்லையே.. கோகுலின் அருகினில் இருக்க வேண்டும் என்ற ஆவலால்தானே அவள் வேலைக்குச் செல்ல அலை பாய்கிறாள்..
“ம்ம்.. உன் படிப்பு எப்போது முடியும்…?” சாரதா யோசனையுடன் கேட்க..
“அடுத்த மாதமே முடிந்து விடும் மேடம்…” என்று மீரா அவசரமாகக் கூறினாள்.
“ஓஹோ.. நீ எதற்கும், நாளைக்கு என்னை வந்து பாரு..” சாரதா எழுந்து சென்று விட்டாள்.
“என்ன.. இப்படிச் சொல்லிவிட்டுப் போகிறாங்க..?” மீரா கலக்கத்துடன் ரிஷியைப் பார்த்துக் கேட்டாள்.
“எப்படிச் சொல்லிவிட்டுப் போகிறாங்க…?” ரிஷி அவளைப் போலவே கையை ஆட்டிக் கவலையுடன் கேட்டுவிட்டுச் சிரித்தான். மீராவிற்கு வெட்கமாகி விட்டது.
“இல்லை.. நாளைக்கு வரச் சொல்கிறாங்களே.. அதுதான்..”
“அதனால் என்ன..? இன்றைக்கு நைட் அவங்க மகனுடன் பேசுவாங்க.. நாளைக்கு உனக்கு குட் நியூஸ் சொல்லுவாங்க…”
“குட் நியூஸ்தான் வரும்ன்னு எப்படிச் சொல்கிறீங்க..?”
“உனக்கு அம்மாவைப் பற்றித் தெரியாது.. அவங்க ஒரு விசயம் முடியும்ன்னு நினைத்தால்தான்.. பொறுமையாய் பேசுவாங்க.. முடியாதுன்னு நினைத்து விட்டால்.. பட்டுன்னு முகத்தில் அடித்தது போல் சொல்லி விடுவாங்க..”
“நிஜமாகவா…?”
“நிஜமாகத்தான்.. நீ கவலைப்படாமல் போ…”
“தேங்க்ஸ்.. உங்களால்தான் எனக்கு இப்படி ஒரு யோசனையே தோன்றியது..”
மீரா உண்மையான நன்றியுணர்வுடன் கூற.. ரிஷி அவளை ஆழமாகப் பார்த்தான்..
கள்ளமில்லாத முகமும்.. அகமும்.. கொண்ட அந்த இளந்தளிரின் மேல் அவனுக்கு ஒரு ஈர்ப்பு தோன்றியது..
“வெறும் தேங்க்ஸ் மட்டும்தானா…?”
“ஹெல்ப் பண்ணினால் தேங்க்ஸ்தானே சொல்லுவாங்க.. வேறு என்ன…?”
“வேறு என்னவென்று சொல்வது..?” ரிஷி புன்னகைத்தான். ‘இந்தப் பெண் மிகவும் அறியாமையுடன் இருக்கிறாள். என்று அவனுக்குத் தோன்றியது.’ ‘சென்னைப் பெண்கள் இப்படி இருக்க மாட்டார்கள். சிறு பார்வையிலேயே வித்தியாசத்தைக் கண்டுபிடித்து விடுவார்கள். இவள் இப்படி வெகுளியாய் சிரிக்கிறாளே..’ என்ற நினைவுடன் அவளைப் பார்த்தான்.
“வேறு எதுவுமில்லை….”
“நிச்சயமாய் இல்லைதானே..”
‘அதை எப்படி நிச்சயமாய் சொல்ல முடியும்..?’ என்ற நினைவுடன் அவன் சிரித்தான்.
“ஏன் சிரிக்கிறீங்க…?”
“சும்ம்ம்ம்மாh..”
ஆனால்.. அவன் சும்மா சிரிக்கவில்லை என்று மீராவிற்கு தோன்றியது. அவள் யோசனையுடன் அவனைப் பார்த்தாள்.
Reviews – Kana Kanden / கனாக் கண்டேன்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.