Chapter 04

0Shares

எனை நீ அறியாமல் போனாலும் – உனை நான்

அறிந்துவிடக் கனாக் கண்டேன்.

“சும்மா.. சும்மா.. இப்படிக் காரணமில்லாமல் சிரிக்காதீங்க அண்ணா.. வேறு மாதிரி சொல்லிவிடப் போகிறாங்க…”

“என்னது.. அண்ணாவா…?”

“ஆமாம்.. நீங்கள் என் அண்ணன்தானே.. வேறு என்னவென்று நினைத்தீங்க..”

“பிழைத்துக் கொள்வாய்ம்மா..”

ரிஷி விளக்கெண்ணெய் குடித்தவன் போல் முகத்தை வைத்துக் கொண்டு சொல்ல, மீரா அவனை சொந்தமில்லாத பார்வையொன்றை பார்த்தபடி இறங்கிச் சென்றுவிட்டாள்.

‘இவள் அப்படியொன்றும் அறியாப்பெண்ணில்லை’ என்று நினைத்துக் கொண்டவனின் இதழ்களில் புன்னகை மலர்ந்தது.

‘அண்ணா..!ம்ம்.. கெட்டிக்காரிதான்…’ தலையை ஆட்டி ரசித்துச் சிரித்தான்.

“என்ன ரிஷி.. உனக்கு நீயே பேசிக்கறே.. உனக்கு நீயே சிரிச்சுக்கறே.. உனக்கு என்னப்பா ஆகிவிட்டது..?”

அருகில் வந்து சாரதா விசித்திரமாய் அவனை மேலும் கீழும் பார்க்க.. ரிஷியின் சிரிப்பு வலுத்தது..

“எனக்கு என்ன  ஆகிவிட்டதுன்னு நினைத்தீங்கம்மா..?”

“போடா அரட்டை.. பைத்தியம்னு நினைப்பாங்க.. வேறு என்ன…?”

“அதைத்தான் அந்தப் பெண் மறைமுகமாய் சொல்லிவிட்டுப் போகிறாள்..”

“எந்தப் பெண்ணைச் சொல்கிறாய்…?”

“இங்கே எத்தனை பெண்கள் இருக்கிறார்கள்…?”

“அதையும் நீயே சொல்லு..”

“ஊட்டியில் ஊர் சுற்றப் போனால்தான் கண்ணுக்கு குளிர்ச்சியாய் நான்கு பெண்களைப் பார்க்க முடியும். இங்கே எஸ்டேட் பங்களாவில் ஒரு பெண் வாசனை உண்டா..? ஒரே வறட்சி.. ம்ஹூம்.. சமையல்காரன் கூட ஆண்பிள்ளை தான்.. ஆம்பளை சமைச்சு சாப்பிட்டால் உடம்புக்கு ஆகுமாம்மா…?”

“எல்லாம் ஆகும்.. அடிக்கடி உன்னைக் கூப்பிட்டுக் கொண்டு வர வேண்டுமே.. அதனால்தான் நல்ல சமையல்காரனாய்.. நல்லாக் கவனி.. நல்ல சமையல்காரனாய் பார்த்துப் போடச் சொன்னேன்…”

“ஆனாலும் உங்களுக்கு என்மேல் இவ்வளவு நம்பிக்கை இருக்கக் கூடாதும்மா…”

“என்னப்பா செய்வது..? உன் குண விசேஷம் அப்படி…”

“நான் உங்களுக்கு ‘பெற்ற பிள்ளை போல’ன்னு அடிக்கடி சொல்வீங்களே.. அது பொய்யா…?”

“இல்லைப்பா.. மெய்தான்.. தங்கக் குத்தூசி என்பதற்காக அதைக் கையில் குத்திக் கொள்வாங்களா…”

“அது என்னவோ எனக்குத் தெரியவில்லையம்மா.. இந்தப் பெண்கள் மட்டும் ஆறிலிருந்து அறுபதுவரை இவ்வளவு விவரமானவங்களாய் இருக்கீங்களே.. அது எப்படிம்மா…?”

ஒன்றுமறியாத அப்பாவி போல் முகத்தை வைத்துக் கொண்டு ரிஷி கேட்க.. சாரதா சிரித்துக் கொண்டே அவன் தலையில் குட்டினாள்.

“அது அப்படித்தாண்டா.. பெண்களுக்குன்னு ஒரு பிரத்யேக எச்சரிக்கை உணர்வு இருக்கும். அது எல்லாவற்றையும் கண்டு பிடித்து விடும்.. ஆமாம்.. இப்போது என்ன திடீர்ன்னு பெண்களைப் பற்றி இவ்வளவு ஆராய்ச்சி பண்ணுகிறாய்…?”

“அதுதானம்மா.. இப்போது இங்கே வந்து விட்டுப் போச்சே அந்தப் பொண்ணு.. அது இருக்கே…”

“யார்? மீராவைச் சொல்கிறாயா…?”

“ம்ம்.. அவள் என்னிடம் நல்லாத்தான் பேசிக் கொண்டிருந்தாள்…”

“ஏன்.. இப்போது உன்னுடன் பேசுவதில்லையா..?”

“அதெல்லாம் பேசத்தான் செய்கிறாள்…?”

“அப்புறம் என்னடா…?”

“அவள் என்னைப் பார்த்து ஒரு வார்த்தை சொல்லிவிட்டாள்ம்மா.. என் நெஞ்சே வெடித்து விடும் போல ஆகிவிட்டது…”

“அடப்பாவமே.. அப்படியென்ன வார்த்தை சொல்லி உன்னைத் திட்டினாள்..? அப்படி உன்னைத் திட்டுமளவிற்கு நீதான் அந்தப் பெண்ணிற்கு என்ன தொல்லை கொடுத்தாய்…?”

“அதுதானே பார்த்தேன். என்னிடம் குற்றம் கண்டுபிடிக்காவிட்டால் உங்களுக்கு தூக்கமே வராதே..”

“போடா.. எனக்கு உன்னையும் தெரியும். அந்தப் பெண்ணையும் தெரியும்..”

“அந்தப் பெண்ணுக்கு நான் ஒன்றும் தொல்லை கொடுக்கவில்லையம்மா.. நன்மைதான் பண்ணினேன்…”

“இதை என்ன நம்பச் சொல்கிறாயா…?”

“நம்பித்தான் ஆகவேண்டும். ஏன்னா.. அந்தப் பெண் என்னிடம் தேங்க்ஸ் சொன்னாள்..”

“இதைப்பாருடா.. ஒரு பெண் உன்னிடம் வந்து.. தேங்க்ஸ் சொன்னாளா.. இதையும் என்னால் நம்பமுடியவில்லையே.. ம்ம்.. அப்புறம் என்ன நடந்தது…?”

“நான் வெறும் தேங்க்ஸ் மட்டும்தானா..?”ன்னு கேட்டேன்..

“உன் புத்தி வேறு எப்படிப் போகும்..? அதுதான் அவள் உன்னைக் கண்டபடி திட்டிவிட்டுப் போயிருக்கிறாள்.. அவள் மேல் குற்றமே இல்லை…”

“இங்கே யார் மீதும் குற்றமில்லை.. அவசரப்படாமல் நான் சொல்வதை முழுதாகக் கேளுங்கம்மா.. நான் சிரித்ததைப் பார்த்து விட்டு அந்தப் பெண் “சும்மா.. சும்மா சிரிக்காதீங்க.. வேறு மாதிரி சொல்லிவிடப் போகிறாங்க..”ன்னு சொல்லி விட்டுப் போகிறாள்ம்மா…”

“வேறு மாதிரின்னா… ஓ.. உன்னைப் பைத்தியம்ன்னு சொல்லி விட்டுப் போகிறாளா.. ஹி.. ஹி…”

சாரதா வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிக்க ஆரம்பிக்க.. ரிஷி சிரிப்பேயில்லாமல் அதைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு வழியாய் சிரித்து ஓய்ந்த சாரதா செல்லமாக ரிஷியை ஓர் அடி அடித்தாள்.

“போடா..  உன்கூட வந்தால் இப்படித்தான் சிரித்துச் சிரித்தே வயிறு புண்ணாகிவிடும். ஆமாம் அவள் பைத்தியம்ன்னு சொன்னதற்காகவா.. நெஞ்சே வெடித்து விட்டதுன்னு ஃபீல் பண்ணுகிறாய்…?”

“அதற்குப் போய் யாரும்மா வருத்தப்படப் போகிறாங்க..? அவள் கூடவே வேறு ஒரு வார்த்தையைச் சொல்லி விட்டாள். அதைத்தான் என் நெஞ்சம் தாங்கிக் கொள்ள வில்லையம்மா…”

“உன் மனசு புண்ணாகும்படி அப்படி என்னதாண்டா அந்தப் பெண் சொன்னாள்..? சொல்லித் தொலை…”

“என்னைப் பார்த்து ‘அண்ணா..’ன்னு சொல்லி விட்டாளம்மா.. என் மனசு தாங்குமா..? நீங்களே சொல்லுங்க…”

ரிஷி நெஞ்சைப் பிடித்துக் கொண்டு வினவிய தினுசில் சாரதா.. சிரிப்பை அடக்க முடியாதவளாய்.. அங்கிருந்த கூடைச்சேரில் அமர்ந்து சிரிக்க ஆரம்பித்தாள்.. 

அவள் சிரிப்பதைக் கனிவுடன் பார்த்தபடி அருகிலிருந்த இன்னொரு சேரில் அமர்ந்தான் ரிஷி..

“ரிஷி.. இப்படி ஒரு வார்த்தையை உன்னைப் பார்த்து ஒரு பெண் சொன்னால்.. உன் மனது தாங்காது தான்.. பரவாயில்லை.. அந்தப் பெண் மீரா புத்திசாலிதான்.. பிழைத்துக் கொள்வாள்..”

“நானும்.. இதைச் சொல்லித்தான் அவளை வழியனுப்பி வைத்தேன்.. ஆனாலும் அம்மா.. ஆள் பார்க்க அப்பாவியாய் தெரிகிறாள்.. மனதுக்குள் இவ்வளவு சூட்சும புத்தியா…?”

“யாரையும் வெளித் தோற்றத்தை வைத்து எடை போட்டு விடாதே.. வெறும் கண் பார்வைக்கு என்ன தெரியும்..? ஒருவரிடம் இருக்கும் திறமையை பார்வையால் எடை போட்டு விட முடியுமா..? வாய்ப்புக் கிடைத்தால்.. அதுதானாக வெளிப்படும்.. வாய்ப்பு கொடுக்காமல்.. தள்ளி வைத்தால் இழப்பது.. திறமைசாலி மட்டுமல்ல.. வாய்ப்புக் கொடுக்க மறுப்பவர்களும்தான்..”

“ஸோ.. நீங்கள் கோகுலிடம் சொல்லி.. இந்தப் பெண்ணிற்கு வாய்ப்புக் கொடுக்கச் சொல்லப் போகிறீங்க..”

“நிச்சயமாய்.. வாசவன் நல்ல மனிதர்.. நம்மை அண்டிப் பிழைப்பவர்.. அவர் குடும்பத்திலிருந்து ஒரு பெண் மேலேற கை கொடுக்க வேண்டியது நம் கடமையில்லையா…?”

சாரதா மனப்பூர்வமாக இதைச் சொன்னாள். ஆனால் கோகுல் வன்மையாக அதை எதிர்த்தான்..

“அம்மா தினமும் நீங்க செல்ஃபோனில் என்னிடம் பேசுவதே கொஞ்ச நேரம்தான். இதில் ஏன் தேவையில்லாத விசயங்களைப் பேசுகிறீங்க…”

“ஏண்டா.. நம்மிடம் விசுவாசமாய் வேலை செய்கிறவரின் பெண்ணிற்கு வேலை கொடுன்னு நான் கேட்பது.. உனக்குத் தேவையில்லாத பேச்சா…?”

“ஆமாம்.. தொழில் வேறு.. வாழ்க்கை வேறு.. அந்தப் பெண் மேல் உங்களுக்கு சாஃப்ட் கார்னர் இருந்தால்.. அதை வேறுவழியில் உதவி செய்து சரி பண்ணிக்கங்க.. என் தொழில் விசயத்தில் தலையிடாதீங்க…”

“கோகுல்.. உன் தொழிலுக்கு ஏற்ற படிப்பு அவளிடம் இருப்பதினாலதான் நான் உன்னிடம் அவளுக்காக 

வேலை கேட்கிறேன்.. வேறு படிப்புன்னா.. நான் உன்னிடம் பேசுவேனாடா…”

கோகுல்.. மறுமுனையில் ஒரு நொடி மௌனம் சாதித்தான்.. பின்னர் பேசினான்..

“என்ன படித்திருக்கிறாள்…?”

“பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துக் கொண்டிருக்கிறாள்..”

கோகுல் மீண்டும் மலையேறினான்.. காச்.. மூச்சென்று.. சாரதாவிடம் கத்த ஆரம்பித்து விட்டான்.

“என்னது.. படித்துக்கொண்டிருக்கிற பெண்ணா.. அம்மா.. கொஞ்சமாவது யோசனையுடன் பேசுகிறீங்களா..? என்னிடம் வேலை செய்பவர்கள் எல்லாம் என்ஜினீயர்ஸ்.. பல வருஷ அனுபவம் இருக்கிறவங்க.. இதில் அனுபவமில்லாத டிகிரி படித்துக் கொண்டிருக்கிற பெண்ணை வேலைக்குச் சேர்ப்பதா…?”

“என்னடா கோகுல்.. நான் என்ன இப்போதேவா.. அந்தப் பெண்ணுக்கு வேலை கொடுன்னு கேட்கிறேன் அவளுடைய படிப்பு இன்னும் இரண்டு மாதத்தில் முடிந்து விடும். அதற்குப் பின்னால் வேலை கொடு…”

“ரிஸல்ட் வர வேண்டாமா…?”

“அவ நன்றாகப் படிக்கும் பொண்ணுடா…”

“அதை நீங்கள் சொல்லக் கூடாது. அவளுடைய மார்க் சீட் சொல்ல வேண்டும்..”

“அது வரைக்கும் அவளைக் காத்திருக்கச் சொல்கிறாயா..? என் வார்த்தைக்கு இவ்வளவுதான் மதிப்புத் தருவாயா….?”

“அடடா.. அம்மா இது என்னம்மா இப்படிப் பிடிவாதம் பிடிக்கறீங்க.. சரி ஒன்று செய்கிறேன். நம் கம்பெனி ரிஸப்சனிஸ்ட் இரண்டு மாதம் கழித்து.. மெட்டர்னிட்டி லீவில் போகிறாங்க. அவங்க திரும்பி வந்து வேலையில் ஜாயின் பண்ண நான்கு மாதங்கள் ஆகும். இந்தப் பெண் தற்காலிகமாய் அந்த வேலையைப் பார்க்கட்டும்..”

“அதற்குப் பின்னால்…”

“அவளுடைய ரிசல்ட் வந்த பின்னால் மார்க் சீட்டைப் பார்த்துவிட்டு முடிவு சொல்கிறேன்…”

“அவளுடைய ரிசல்ட்டும் நன்றாகத்தான் வரும்.. நீ சொல்லும் ரிசல்ட்டும் நன்றாகத்தான் இருக்கும்..”

“என்ன ஒரு நம்பிக்கை…”

“நாளை விடியும் விடியல்.. நன்றாக.. நமக்காக.. விடியும் என்பதில் தான் வாழ்க்கையே இருக்கிறது கோகுல்..”

சாரதாவின் வார்த்தைகளைக் கேட்ட கோகுல்.. நெகிழ்ந்தான். “இதுதான் அம்மா.. எதிலும் ஒரு நம்பிக்கையோடு.. இறுதிவரை போராடுபவள்.. ஒரு முடிவு எடுத்து விட்டால்.. அதிலிருந்து பின் வாங்குவதில்லை…”

0Shares

Reviews – Kana Kanden / கனாக் கண்டேன்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link