Chapter 05

0Shares

என்றேனும் ஓர் விடியலிலே – நீ

எனைத் தேடிவிடக் கனாக் கண்டேன்…

“எதற்காக அம்மா.. அந்தப் பெண்ணிற்காக இவ்வளவு தூரம் வாதாடுகிறீங்க..”

“வாசன் நமக்காக உழைக்கிறவர்டா.. நீதான்.. எதையும் தராசு போட்டு நிறுத்துப் பார்ப்பவனாயிற்றே.. இங்கே எஸ்டேட்டின் கணக்கு வழக்கிற்கு.. அவர்தான் ஆணிவேர்.. அவர் பார்க்கும் வேலைக்கு.. நாம் எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் கட்டுப்படி ஆகாது…”

“ஏன்ம்மா.. மேனேஜர் இருக்கிறாரே…”

“நீ ஒரு முறைதானே இங்கே வந்து போயிருக்கிறாய்.. அதனால் உனக்கு எஸ்டேட் நிலவரம் தெரியவில்லை…”

“அம்மா.. எனக்கு இன்ட்ரெஸ்ட் என் கம்பெனியின் மீதுதான்.. அதுதான்.. அப்பா எஸ்டேட்டைப் பார்த்துக் கொள்கிறாரே…”

“அதனால்தான் எனக்கு இந்த எஸ்டேட்டைப் பற்றித் தெரிகிறது.. இங்கே அடிக்கடி மேனேஜர்கள் மாறுவார்கள் கோகுல்.. அதனால் எஸ்டேட்டின் நிர்வாகம் துளிக்கூட பாதிப்படையாது.. ஏனென்றால் இங்கே மாறாமல் வேலை செய்வது வாசவன்தான்.. இந்த எஸ்டேட்டின் கணக்கு வழக்குகளை.. அவர் விரல் நுனியில் வைத்திருப்பார்..”

“ஓ… அது எனக்குத் தெரியுமே…”

“அதனால்தான் அவருடைய பெண்ணுக்கு நான் சிபாரிசு செய்கிறேன்..”

“ஆனால் அம்மா.. என் கம்பெனி வேலைக்கு.. அவளுடைய இந்தப் படிப்பு மட்டும் போதாதே…”

“அவள் மேலே எம்.ஸி.ஏ படிக்க நினைக்கிறாடா…”

“ம்.. அதை வேண்டுமானால் செய்யட்டும்… படித்துக் கொண்டே வேலை பார்க்கட்டும்..”

“வேலை பார்த்துக் கொண்டே, படிக்கட்டும்ன்னு சொல்லுடா..”

“ம்ம்.. ஆரியக் கூடித்தாடினாலும்… காரியத்தில் கண்ணாயிருப்பதைப் பற்றி ஒரு பழமொழி சொல்லுவீங்களேம்மா.. அது.. உங்களுக்குத்தான் இப்போது பொருந்தும்.. பேச்சு பேச்சாக இருந்தாலும்.. அந்தப் பெண்ணின் வேலையை உறுதி செய்து கொள்வதில் குறியாய் இருக்கீங்களே..”

“நீ அமெரிக்காவில் இருந்து கொண்டு.. நம்ம ஊர் பழமொழியைச் சொல்லு.. எப்போது திரும்பி வருவாய் கோகுல்…?”

“அது ஆகும் ஆறுமாதம்…”

“சீக்கிரம் வந்து விடுடா…”

“அவ்வளவுதான்ம்மா.. ஆறு மாதத்தில் என் வேலை முடிந்து விடும்.. அங்கே ரிஷி உங்கள்கூட இருக்கிறானில்லையா…?”

“அவனுக்கென்ன.. சென்னையிலும் தினசரி வந்து பேசி விட்டுத்தான் போவான்.. ஊட்டிக்கும்.. கூடவே வந்திருக்கிறான்.. நல்ல பையன்..”

மேற்கொண்டு சற்று நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு சாரதா.. ஃபோனை அணைத்து விட.. கோகுல்.. ரிஷியை ஃபோனில் அழைத்தான்.

“ஏன்டா.. உனக்குப் பகல்ன்னால்.. எனக்கு இங்கே ராத்திரி.. அர்த்த ராத்திரியில் என்னை எழுப்புவதில் உனக்கு என்னடா அவ்வளவு சந்தோஷம்..”

தூக்கம் கலைந்தும்.. கலையாமல் ரிஷி பேச.. மறுமுனையில் கோகுல் சிரித்தான்.

“இது அர்த்த ஜாமமா…?”

“ஊட்டிக் குளிரில்.. ஆறு மணிக்கெல்லாம் அர்த்தஜாமம் ஆரம்பமாகிவிடும்..”

“உனக்கு அப்படித்தான் இருக்கும்.. அம்மாவே தூங்காமல் என்னுடன் இவ்வளவு நேரமாய் ஃபோனில் பேசிக்கிட்டு இருந்தாங்க.. உனக்கு என்னடா…?”

“அவங்க உனக்கு அம்மா…”

“நீ எனக்கு ‘நண்பேன்டா..'”

“இதைச் சொல்லியே என்னைக் கவிழ்த்து விடு..”

“இல்லாவிட்டாலும் நீ கவிழாத ஆசாமிதான்.. இதை வேறு யார்கிட்டயாவது சொல்லு.. என்னிடம் சொல்லாதே..”

“ஏய்ய்.. நீ எனக்கும் ‘நண்பேன்டா..'”

“சொன்ன டயலாக்கை திருப்பி விடுகிறாயா..? ஆமாம்.. அம்மா ஒரு பெண்ணிற்கு இந்த அளவு ரெகமண்டேஷன் செய்கிறாங்களே.. என்ன விசயம்…?”

“என்ன விசயம்ன்னா…? எனக்குப் புரியவில்லையே..?”

“அந்தப் பெண் தினமும் வந்து அம்மாவிற்கு குல்லாய் போடுதா..? இந்த காக்காய் பிடித்து காரியம் சாதிக்க நினைக்கிறவங்களை எனக்குப் பிடிக்காது ரிஷி..”

“சீச்சீ.. அந்தப் பெண் அப்படிப்பட்ட டைப் இல்லைடா.. நல்ல பெண்…”

“நம்பலாமா…?”

“தாராளமாய் நம்பலாம்..”

“அது எப்படி.. அவ்வளவு நிச்சயமாய் சொல்கிறாய்..?”

“வேறு என்னடா செய்வது..? அந்தப் பெண் ‘அண்ணா’ன்னு ஒரு வார்த்தை சொல்லி.. என் நெஞ்சை ‘டச்’ பண்ணி விட்டாளே..”

“அடடா.. உன்னைப் பார்த்து ஒரு பெண் ‘அண்ணா’ன்னு கூப்பிட்டு விட்டாளா.. ச்..ச்..ச்..ச்.. எப்படிடா.. உன் மனம் இதைத் தாங்கிக் கொண்டது…?”

“உனக்கு இது தெரிகின்றது.. அம்மாவிற்கு தெரியலையே…”

“அவங்ககிட்டப் போய் இதைச் சொல்லிப் புலம்பினாயா..?”

“மனசு ஆறவில்லைடா.. அதுதான்.. ஆறுதல் தேடி அவங்ககிட்ட சொன்னேன்..”

“ஆறுதல் சொன்னாங்களா…?”

“விழுந்து விழுந்து சிரிச்சாங்க…”

மறுமுனையில் கோகுலும் சிரித்தான்.

“உன்னை அண்ணான்னு அந்தப் பெண் கூப்பிட்டு விட்டதால் அம்மாவிற்கு அந்தப் பெண்ணைப் பிடித்து  விட்டதோ என்னவோ..”

“இருக்கும்.. இருக்கும்.. ஒரு பெண்ணின் மன ஆழம் கடலின் ஆழத்தை விட.. அதிக ஆழமானது.. கடலின் ஆழத்தைக்கூட கண்டு விடலாம். பெண் மனதின் ஆழத்தை யாராலும் கண்டு பிடித்து விட முடியாது…”

“ஹலோ.. ரிஷிதானே என்கூடப் பேசிக் கொண்டிருப்பது…?”

“நானேதான்.. இது என்னடா.. உனக்கு இப்படியொரு சந்தேகம் வந்துவிட்டது…?”

“வராமல் என்ன செய்யும்..? உன் வாய்மொழி இது போன்ற வார்த்தைகளை உதிர்த்து இதற்கு முன்னால் நான் கேட்டதில்லையே.. இதையெல்லாம் எங்கேயிருந்துடா.. பிடிச்சுக்கிட்டு வருகிற…?”

“எங்கே போய் வலைவீசிப் பிடிப்பது..? எல்லாம் தானாய் வருவதுதான்…”

“நம்ப முடியவில்லை…”

“அம்மாவைப் போல்தானே அவங்க மகனும் இருப்பான்.. அவங்களைப் போல் நீயும் என்னை நம்பாதே..”

“எது எப்படியோ.. ரிஷி.. இதுவரை எந்த பொண்ணும் உன்னைப் பார்த்து சொல்லாத ஒரு வார்த்தையை.. இவள் உன்னிடம் சொல்லி விட்டாள். அதற்காகவே அவளுக்கு என் கம்பெனியில் வேலை நிச்சயம்டா…”

“அடப்பாவி.. அந்தப் பெண் என்னைப் பார்த்து ‘அண்ணா’ன்னு சொல்லிவிட்டதில் உனக்கு இவ்வளவு சந்தோஷமாடா…?”

“பின்னே.. இதுநாள் வரை உன் காதல் கேட்காத வார்த்தையை.. கேட்க வைத்து விட்டாளே.. அதற்கு அவளுக்கு ‘கிப்ட்’ தர வேண்டாமா…?”

ரிஷி சிரித்துக் கொண்டே ஃபோனை அணைத்துவிட்டுத் தூக்கத்தை தொடர்ந்தான்.

மறுநாள் மாலையில் கல்லூரி விட்டு வந்த மீரா அவசரமாய் எஸ்டேட் பங்காளவிற்கு கிளம்பினாள்.

“எங்கேடி கிளம்பிட்ட…?”

“எஸ்டேட் பங்களாவிற்கும்மா…!”

“இப்போதுதான் காலேஜிலிருந்து வந்தாய்…?”

“முதலாளியின் வொய்ஃப் என்னை வரச் சொல்லி இருக்காங்கம்மா…”

“என்னது.. முதலாளியம்மா வரச் சொன்னாங்களா..?”

“ஆமாம்.. நான்தான் தினமும் போய் அவங்ககூட பேசிக் கொண்டிருக்கிறேனே..”

“அப்படியா.. அப்போ.. போய்விட்டு வா…”

ஒருவழியாய் இந்திரா அனுமதி கொடுத்துவிட.. மீரா ஓட்டமும் நடையுமாய் எஸ்டேட் பங்களாவை நோக்கி விரைந்தாள்..

தோட்டத்தில் நின்று யாருடனோ செல்ஃபோனில் பேசிக் கொண்டிருந்த ரிஷி.. அவளைத் திரும்பிப் பார்த்தான்.

“வாம்மா.. மீரா.. உனக்கு நடக்கவே தெரியாதா…?”

“ஏன் அப்படிக் கேட்கறீங்க…?”

“நான் எப்போது பார்த்தாலும்… ஓடி வருகிறாய்.. இல்லை ஓட்டமாய் போகிறாய்.. அதனால் கேட்டேன்..”

“நீங்க கூடத்தான்.. நான் எப்போது பார்த்தாலும் தோட்டத்தில் நின்றுகொண்டு சும்மா செல்ஃபோனைக் காதில் வைத்துக் கொண்டு.. ரோட்டில் போகிறவங்களை சைட் அடிக்கறீங்க.. அதை நான் ஏன்னு கேட்டேனா…?”

ரிஷி அயர்ந்தே போய்விட்டான்.. மீராவா இப்படிப் பேசுவது..? வாயைத் திறக்காமல் வந்து போவதால் அமைதியான சுபாவமுள்ள பெண்ணென்று நினைத்தால்.. இப்படி அலைகடலாய் அள்ளி வீசுகிறாளே..

“இதைப்பாருடா.. சைட் அடிப்பது கூட உனக்குத் தெரியுமா…?”

“சைட் அடிப்பவர்களைப் பற்றித் தெரியும்.. சைட் அடிக்கத் தெரியாது…”

மீராவின் மனம்.. “பொய்..” என்றது..

‘உனக்கா சைட் அடிக்கத் தெரியாது..? பத்தாம் வகுப்பிலிருந்து.. நீ பத்திரப்படுத்தி வைத்திருக்கிற பேப்பரில் இருப்பவனின் படத்தை தினமும் நீ பார்த்து.. அதில் முத்தம் கொடுக்கிறாயே.. அதற்குப் பெயர் என்ன..? ‘சைட்’ இல்லையா..? இப்போது வேலை வேண்டுமென்று சாரதா அம்மாவிடம் ஓடி வந்திருக்கிறாயே.. இது எதற்கு..? அங்கே போவது வேலை பார்ப்பதற்காக..? அவனை.. உன் மனதில் தினமும் பூஜித்து.. ஆராதனை செய்து கொண்டிருப்பவனை.. அருகிலிருந்து பார்க்க வேண்டும் என்ற ஆவலில் தானே..? அவனை சைட் அடிக்கத்தானே நீ அவனிடம் வேலை கேட்கிறாய்..? இதே வேலையை வேறு ஒரு கம்பெனியில் சாரதாம்மா வாங்கித் தந்தால் நீ போவாயா…?’

தன் நெஞ்சறிய பொய்யுரைப்பது தவறுதான்.. ஆனால் என்ன செய்வது..? அதே வள்ளுவர்தானே.. பொய்மையும் வாய்மையிடத்து.. புரை தீர்த்த நன்மை பயக்குமெனில்.. என்று வழி காட்டியிருக்கிறார்..? அதனால்.. வேறு வழியின்றி மீரா பட்டென்று ரிஷியின் கேள்விக்கு பதில் சொல்லி விட்டாள்.

“ம்ம்.. இதை சென்னைக்கு நீ வந்த பின்னால்.. உன்னை நன்றாக கவனித்து விட்டு.. அப்புறமாய் நம்புகிறேன்…”

“என்னை நம்பாமல்.. வேறு யாரை நீங்கள் நம்புவீர்கள் அண்ணா..?”

“போதும்மா.. நேற்று நீ சொன்ன வார்த்தையைக் கேட்டு நெஞ்சுவலி வந்து படுத்தவன்.. இப்போதுதான் எழுந்து உட்கார்ந்திருக்கிறேன்.. திரும்பவும் நெடுமரமாய் என்னை விழுக வைத்துவிடாதே.. உள்ளே போ.. அம்மா உனக்காகத்தான் காத்திருக்கிறாங்க…”

0Shares

Reviews – Kana Kanden / கனாக் கண்டேன்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link